சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

இகாரஸ் பிரகாஷ்


முன்னுரை

—-

சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவும் அதன் எளிமைக்காகவும் தான் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன், என்றால், சுந்தர.ராமசாமியை, வேறு தளத்தில் வைத்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், என் நோக்கம் அதிர்ச்சி ஏற்படுத்துவது அல்ல.

நகைச்சுவையும் இன்னொன்றும்

—-

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, முதன் முதலாக ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நாவலை வாசித்த போது ( அப்போது அந்த நாவல் பற்றி சுஜாதா எழுதிய ஒரே ஒரு விமர்சனக் குறிப்பை மட்டும் வாசித்திருந்தேன்), அந்த நாவலின் கட்டுமானமும், செய்நேர்த்தியும், என்னை ரொம்பவே பரவசப்படுத்தியது. மீள் வாசிப்புகளின் போதுதான், அது ஒரு நாவல் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான கார்ட்டூன் சித்திரம் என்று புரிந்தது. என்னுடைய இந்த கண்டுபிடிப்பினை, சுந்தர.ராமசாமியை, பீடத்தில் வைத்து தொழுது கொண்டிருக்கும் ஆருயிர் நண்பர்கள் சிலரிடம் சொல்லி செமர்த்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு. சுந்தர.ராமசாமியை வாசிப்பது, மனமகிழ்ச்சி கொள்வதற்காக மட்டும் தான் என்பது, பஞ்சாபில் வாஷிங் மெஷினை, லஸ்ஸி அடிக்க உபயோகப்படுத்துவதற்கு ஈடான ஒரு பொருத்தமற்ற காரியம் என்பது அவர்களது கணிப்பு. சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களை, லாகிரி வஸ்துக்களின் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்பது அவர்களின் திட்டவட்டமான முடிவு.

ஜே.ஜே யில், நீரில் வாழும் பிராணி படியேறி மாடிக்கு எப்படி வந்தது என்று வியக்கும் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட், உக்கிரப்பெருவழுதி, சிவகாமியம்மாள் சபதம் பற்றிக் கவலைப்படும் ஜே.ஜே, ஜே.ஜே வை சே சே என்றுதான் போடுவேன் என்று அடம்பிடிக்கும் தமிழ்த் தீவிரவாதி-தாளிகை ஆசிரியர் ஆகிய நால்வர் பற்றி எப்போது வாசிக்க நேர்ந்தாலும், வாய்விட்டு சிரிப்பதுண்டு. அந்த சமயத்தில் அந்த ஆருயிர் நண்பர்கள் கூட இருந்தால், என்னைக் கடுமையாகப் பார்த்து, என் கையில் இருக்கும் புத்தகத்தை பிடுங்கிவிட்டு, ‘ மாணவர் தலைவர் அப்புசாமி ‘ அல்லது வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தை என் கையில் திணிப்பார்கள்.

நான் வாசிக்க வேண்டிய புத்தகத்தை எப்போதுமே மற்றவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்ற முடிவுக்கு நான் வந்ததற்கு அந்தச் சம்பவம் தான் முதல் காரணம். இரண்டாம், மூன்றாம், நான்காம் காரணங்களும் இருக்கின்றன. அவை பிறகு.

தர்க்கமும் குதர்க்கமும் சில நண்பர்களும்

—-

சுந்தர.ராமசாமியை, நான் அவருடைய எளிமைக்காகவும், அலங்காரமற்ற நடைக்காகவும், நகைச்சுவை மதிப்புக்காகவும் தான் வாசிக்கிறேன் என்பதை, அவர்களால் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. எனக்கு விளங்காமல் இருக்கும் பல விஷயங்களில் மேற்படி சமாசாரமும் ஒன்று. இது போலவே ஜெயமோகனின் ஆக்கங்களில் என்னைப் பெருமளவு கவர்ந்தது, அவர் எழுதிய ‘நான்காவது கொலை ‘ என்ற தொடர்கதைதான் என்று ஒருமுறை சொல்லி, ஜெயமோகனின் தீவிர விசிறி ஒருவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட கதை பிறகு எப்பொழுதாவது. சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களில், சிலாகிக்கப் படவேண்டிய சமாசாரங்கள் எவ்வளவோ உண்டு என்றும், அதிலே பொழுது போக்கு அம்சத்தை மட்டும் தேடிப் படிப்பது தகாத செயல் என்பதை ஆரம்பமாகக் கொண்டு எங்கள் விவாதம் துவங்கும். மேற்கண்ட அறிக்கையை தாக்கல் செய்தவன் ஒரு லட்சியவாதி. நான் ஒரு அலட்சியவாதி. அவனுக்கு சமூகத்தைப் பற்றி பல நல்ல கருத்துக்கள் இருந்தன. wishful thinking என்பார்களே அது மாதிரி. சுந்தர.ராமசாமிக்கும் சமூகத்தின் மீதான அக்கறை இருந்தது ஆகவே, அவரும் ஒரு லட்சியவாதி என்று சொல்லி, அதை நிரூபிக்க முயல்வான். தீபம்.நா.பார்த்தசாரதியும் சு.ராவும் நண்பர்கள் என்பதாலேயே, அவரை லட்சியவாதம் பழகும் ஒரு எழுத்தாளர் என்று சொல்வது அபாண்டமாகத் தோன்றும் எனக்கு. ‘ எனக்கு நா.பாவின் எழுத்துப் போக்கு ஏற்புடையது அல்ல ‘ என்று சு.ராவே ஒரு முறை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் என்று விளக்க முயற்சி செய்வேன். நவீன இலக்கியத்தில் அழுத்தமான தடத்தை பதித்த யதார்த்தவாதியான சு.ரா அவர்களை, லட்சியவாத எழுத்தாளர் சட்டகத்தில் அடைத்து விவரம் புரியாமல் பேசும் போது, மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பேன்.

விவாதம் சூடுபிடித்து, பின் கீழ்க்கண்டவாறு செல்லும்.

1. புளிய மரத்தின் கதையை வாசித்திருக்கிறேனா ?

2. குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என்ற நாவலை வாசித்திருக்கிறேனா ?

3. காற்றில் கலந்த பேரோசை, விரிவும் ஆழமும் தேடி என்ற இரண்டு கட்டுரை நூல்களையும் வாசித்திருக்கிறேனா ?

இதற்கு என் பதில்களாக, முறையே, இல்லை, இல்லை, இல்லை என்றுதான் இருக்கும். அப்படியானால் சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களைபற்றிய கருத்து சொல்லத் தேவைப்படுகின்ற குறைந்த பட்ச தகுதி கூட எனக்கில்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் அனைவரும் வருவார்கள்.

சுஜாதாவின் எழுத்துக்கள் அனைத்தையும் உருப்போடுபவன் என்ற ஒரு ஊனம் என்னிடம் இருக்கின்றது. அந்த ஊனத்தை மையப்புள்ளியாக வைத்து, விவாதம் உச்சகட்டத்தை அடையும். பொதுவாக ஊனமுற்றோரை, கருணையுடன் பார்ப்பதுதான் நம் தமிழ் மரபு [அனைத்து சமூகத்துக்கும் பொருந்தக் கூடிய யதார்த்தமான ஒரு விஷயத்தை, தமிழ் மரபின் மீது சுமத்தி, நம் மரபின் ‘பின்பாரத்தை ‘ 🙂 ஏற்றிவிடுகின்ற தீயவழக்கம் என்னிடமும் உண்டு ] என்றாலும் கூட, அந்த மரபினை எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்கள் யாரும் கடைபிடிக்கவில்லை. சுந்தர.ராமசாமியின் ஒரே ஒரு படைப்பைப் பற்றி எனக்குத் தோன்றிய கருத்தை நான் சொல்ல, நான் ஏன் அவரது மற்ற படைப்புகளைப் படித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஒரு படைப்பைப் பற்றிய வாய்மொழி/எழுத்து வடிவ அபிப்ராயம் சொல்லத் தேவையான தகுதி, அவர்கள் வசம் இருந்த ‘இது காறும் படித்திருக்க வேண்டிய /தவிர்த்திருக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை ‘ அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் தீர்ப்பு.

தொடர்ந்து நடந்த இந்த விவாதங்கள் எனக்கு சலிப்பூட்டின. மனச்சோர்வு அளித்தன. இதை தவிர்க்க சில உபாயங்களை கைக்கொண்டேன்.

1.சிற்றேடுகளில், சுந்தர.ராமசாமியின் ஏதாவது ஒரு ஆக்கத்தை வாசித்தால், அதை நான் வாசித்துவிட்டேன் என்று வெளியே பறைசாற்றிக் கொள்ளாமல் இருப்பது.

2.அப்படி வாசிக்கும் நேரத்திலே கையும் களவுமாக பிடிபட்டுவிட்டால், யாரும் பார்க்குமுன்னர், அதை கீழே போட்டுவிட்டு , டாடா பிரஸ் எல்லோ பேஜஸ் என்ற மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும் புத்தகத்தை சுவாரஸ்யமாகப் படிப்பது.

3.நானே போட்ட காபியை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, அவர்களைத் துரத்தி அடித்து விட்டு, சுந்தர.ராமசாமியின் உலகில் மீண்டும் சஞ்சரிப்பது.

இந்த வழிமுறைகள் அனைத்துமே நல்ல பலனைக் கொடுத்தன என்றாலும், படித்து விட்டு, அதைப் பற்றி அசை போட முடியாமல் இருக்கும் நிலைமை என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிற்று. இனி சுந்தர.ராமசாமியின் நூல்கள் எவற்றையும் வாசிக்கவே கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தேன். தமிழ் சினிமாக்கள் பிரபலமாக்கிய ‘ பிரசவ வைராக்கியம் ‘ போலத்தான் என்னுடைய வைராக்கியமும் என்பது சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் ‘நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு ‘ சென்ற போது தெரியவந்தது.

இரண்டு நூல்கள்

—-

கன்னிமாரா வளாகத்தில் இருந்த அந்த புத்தகக் கண்காட்சி கூடம் விசாலமாக இருந்தது. காற்று வசதி குறைச்சலாக இருப்பினும், புதிய புத்தகங்களும் அவற்றின் அச்சு வாசனையும் மகிழ்ச்சியூட்டின. இரு நூல்கள் வாங்கினேன். ஒன்று, காவ்யா வெளியிட்ட. ‘ தமிழவனோடு ஒரு உரையாடல் ‘ என்ற நூல். மற்றொன்று, சுந்தர.ராமசாமி எழுதிய ‘ இறந்த காலம் பெற்ற உயிர் ‘.

[தமிழவனின் நூல்கள் எதையுமே படிக்காதிருந்த நான், காவ்யா வெளியிட்ட அந்த நூலைத் தேர்ந்தெடுக்க காரணம், தமிழவன், எனக்குப் பிடித்த அறிவுஜீவி பிம்பத்தை அணிந்திருந்தார் என்பதுதான். தமிழவனின் பல விமர்சனக் கட்டுரைகளை நான் சிற்றேடுகளில் வாசித்திருக்கிறேன். அறிவுஜீவிகளிடம் – எல்லோரையும் போல – எனக்கும் அபிமானம் உண்டு. புத்தகங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தொடர்பு கொள்ள மிகவும் பிரயாசைப் படுவதுண்டு. ஆனால் என்ன காரணத்தாலோ, அறிவு ஜீவிகள், அறிவு குறைந்த ஜீவிகளிடம் பழக்கம் வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டினார்கள் என்பதால், நேர்த்தொடர்பு கொள்ளும் என் ஆசை, நிராசையாகவே முடிந்துவிடும். , பின்நவீனத்துவம் என்ற சொல்லை அடிக்கடி பயன் படுத்தினார் என்ற காரணத்தாலோ, அல்லது, படிகள் பத்திரிக்கைக்கு காரணமானவர்களில் ஒருத்தர் என்ற காரணத்தாலோ, தமிழவனை ஒரு அறிவுஜீவி என்று நம்பி, அவரது மற்ற புத்தகங்களான, ஜிகே எழுதிய மர்மநாவல், ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் போன்ற நாவல்களை வாசிப்பதற்கான முன்னேற்பாடாகத்தான், இந்த நூலை வாங்கினேன்.]

சுந்தர.ராமசாமியின் புத்தகத்தை நான் வாங்கியதற்குக்கு என் கெட்ட நேரம் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, அதில் இன்பம் காணும் ஒரு மசோக்கிஸ்ட்டாக நான் இருந்திருக்கலாம். காரணங்கள் என்னவாக இருந்தாலும், அந்த நூலை நான் வாங்கினேன் என்பதிலும், எழும்பூரில் இருந்து வடபழனிக்குச் செல்லும் மாநகரப் பேருந்து போக்குவரத்தில் பயணம் செய்கையில் முழுமையாக படித்து முடித்தேன் என்பதிலும் உள்ளார்ந்த தத்துவம் ஒன்று இருக்கிறது. அதாவது, நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை. அனைத்திற்கும் நாம் தான் காரணம்.

இறந்த காலம் பெற்ற உயிர்

—-

இறந்தகாலம் பெற்ற உயிர் என்பது ஒரு கட்டுரைத் தொகுதி. சமீபகாலங்களில் வெளிவரும் கட்டுரைத் தொகுதிகளின் இலக்கணத்தை – எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்கள், நூலின் முன்னுரைகள் மேம்பாட்டை வலியுறுத்தும் கட்டுரைகள், திரைப்பட விமர்சனம், நினைவு அஞ்சலிக் கட்டுரைகள் – ஒட்டி அமைந்த நூல்.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளை, மூன்று அல்லது நான்கு வகையாகப் பிரிக்கலாம். சுயவரலாற்றில் இருந்து கிழிக்கப்பட்ட ஓரு சில பக்கங்கள், நெருங்கிப் பழகிய எழுத்தாளர் பற்றிய நினைவோடை நடைச்சித்திரங்கள், நூல் முன்னுரைகள், மற்றும் தன்னிலை விளக்கக் கட்டுரைகள். புதினங்களில் இல்லாத வசதி, இக்கட்டுரைத் தொகுதிகளில் உண்டு. அத்தியாயங்களை மாற்றிப் போட்டால், அல்லது எடுத்து விட்டால், அல்லது புதிதாக ஒன்றைச் சேர்த்தால், யாரும் கண்டு பிடிக்க முடியாது.

சுந்தர.ராமசாமி அவர்கள் காலத்தில் பழகிய எழுத்தாளர்கள் பற்றிய பதிவும் சில கட்டுரைகளாக இருக்கின்றது. எழுத்தாளர் பற்றிய நினைவுக் கட்டுரைகளில், ரகுநாதன் பற்றிய இரு கட்டுரைகள் இருக்கின்றன ( ‘ ரகுநாதன் : ஒரு சந்திப்பு ‘ பக்கம் 21, ‘ரகுநாதன் : காலத்தில் கரையாத அத்தியாயம் ‘, பக்கம் 137). ந.பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் இடம் பெற்றிருக்கின்றன. ( ந.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும், பக்கம் 15 & புதுமைப்பித்தன் : தமிழுக்கு நவீனப் பார்வை தந்தவர், பக்கம் 37).

ரகுநாதனுடன் நடந்த சந்திப்பு பற்றிய கட்டுரையில், ரகுநாதன், புதுமைப்பித்தன் பற்றி தருகிற, முன்பு கேள்விப்பட்டிராத சில தகவல்கள் ( பு.பி, ஆபாசபுத்தகங்களை விரும்பி வாசிப்பார் என்பது, ரஷ்ய இளவரசியின் அந்தரங்க டைரி வாசித்தது, , மனம் புண்படும்படி பேசுவது இன்ன பிற ), புதுமைப்பித்தனின் யதார்த்தமான மனித முகத்தை நமக்கு அறிமுகப் படுத்துகின்றது.

அதே கட்டுரையில், ரகுநாதன் சொன்னதாக, சில தகவல்களைப் பதிவு செய்கிறார் சுரா. பணம் விஷயமாக, புதுமைப்பித்தனின் மனைவி கமலாவுக்கும், தனக்கு ஏற்பட்ட மனத்தாங்கல் பற்றி, ரகுநாதன் , சு.ராவிடம் சொல்கிறார். புதுமைப்பித்தன், ருஷ்ய எழுத்துக்களை மொழிபெயர்த்த விதத்தில், தனக்கேதும் ராயல்ட்டி கிடைக்குமாவென, கமலா விசாரிப்பதையும், முந்தைய தினம் கமலாவுக்கு லாட்டரி பணம் அடித்ததை தன்னிடம் சொல்லாமல் மறைத்ததையும் ரகுநாதன் சு.ராவிடம் வருத்தத்துடன் சொல்கிறார். இதை எழுத்தில் பதிவு செய்ததன் மூலம், பணவிஷயத்தில் மிகக் கறாரானவர் கமலா என்ற [ நாம் அக்கறை கொள்ள வேண்டாத ] தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார் சு.ரா.

புதுமைப் பித்தன் பற்றி ரகுநாதன் சொன்ன பல அந்தரங்கமான விஷயங்களில் சிலவற்றை மட்டும் தான் இங்கே எழுதியிருப்பார் என்பது வெளிப்படை. புதுமைப் பித்தன் துணைவியார் பற்றிய செய்திகளையும், சொல்லாமல் விட வேண்டிய விஷயங்களின் பட்டியலில் சேர்த்து விட்டிருக்கலாம் என்பது என் அபிப்ராயம். ஆனால், சுந்தர.ராமசாமி அவர்களுக்கு இது போன்ற அந்தரங்க உரையாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்து தருவது புதிதல்ல என்று தான் நினைக்கிறேன். காட்டாக, சு.ரா வும், கிருஷ்ணன் நம்பியும் மெளனியை சந்தித்துப் பேசப் போன சம்பவம் நினைவுக்கு வருகிறது. ( ‘ மெளனி : தன் படைப்புகளுக்கு வெளியே ‘, கணையாழி, பிப்ரவரி 2002 இதழ்). அப்போது, லா.ச.ரா வையும், பிச்சமூர்த்தியையும் கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறார், சிதம்பரம் ரைஸ்மில்காரர். அவருடைய பேச்சும் அவருடைய எழுத்துக்கள் போலவே இருந்திருக்கிறது. இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொன்ன மெளனியை, கிருஷ்ணன் நம்பி, ‘ சும்மாச் சொல்லுங்க சார்.. நாங்க என்ன பேப்பர்லயா போடப்போறோம் ? ‘ என்று கிளறி, பாரதி பற்றியும் கருத்து சேகரம் செய்திருக்கிறார்கள். [மெளனி, பாரதி பற்றியும் அத்தனை சிலாக்கியமாகச் சொல்லவில்லை] இந்த தனிப்பட்ட உரையாடலை அப்போதே பேப்பரில் போடவில்லைதான். ஆனால், பல பத்து வருடங்கள் கழித்து, ஒரு தாளிகையில் இந்தக் கட்டுரையை எழுதுவதன் மூலம், மெளனி பற்றிய ஒரு அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ள சு.ரா. உதவி செய்திருக்கிறாரே ஒழிய, நடந்த அந்த சந்திப்பின் integrity க்கு நியாயம் சேர்க்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தன்னிலை விளக்கமாக ‘ திரு. மாலனுக்கு அளித்த பதில் ‘ , (பக்கம் 130) என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது, உண்மையில் இது ஒரு கடிதம். மாலன், சிற்றிதழ்கள் பற்றி, சுந்தர.ராமசாமி அவர்களை குறிவைத்து ( அப்படி, சு.ரா சொல்கிறார்) எழுதிய கட்டுரைக்கான மறுமொழி இது. மாலனின் மூலக் கட்டுரை கிடைக்க வில்லை. ஆயினும், சு.ராவின் மறுமொழியில் இருக்கும் மேற்கோள்கள் மூலமாக மாலன் என்ன எழுதியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.தமிழ்ச் சமூகத்துக்கு சிற்றேடுகளின் பங்களிப்பு பற்றிய மாலனின் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுக்கு, சு.ரா அவர்களின் டிஃபென்ஸ் தரப்பு வாதம் தான் இக்கட்டுரை. கலாசாரம், செவ்வியல் மரபு குறித்து மாலன் திண்ணையில் எழுப்பிய கேள்விகளுக்கு, ஜெயமோகன் அளித்த பதில்களின் சாயல் இக்கட்டுரையில் தெரிகிறது.

எழுத்தாளனுக்கு, தன் சமூகம் குறித்த அக்கறை வேண்டும் என்று திடமாக நம்புபவன் நான். சுந்தர.ராமசாமி, என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்தான் என்ற எண்ணம், நூலில் இருக்கும் ‘தமிழ் வழிக் கல்வி; ‘ உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும் ‘ ( பக்கம் : 97) என்ற கட்டுரைகளைப் படித்தால் ஏற்படுகிறது. மனோன்மணீயம் சுந்தரரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி அவர்களுடன் நடத்திய உரையாடலின் நூல்வடிவத்துக்கு, சு.ரா எழுதிய முன்னுரை தான் இக்கட்டுரை.

‘தமிழ் வழிக் கல்வி, ‘ (பக்கம் 92) கட்டுரை, தமிழ் வழியாக கல்வி கற்பதில் உள்ள நன்மைகளை அலசுகிறது. கட்டுரையின் இறுதியில் , நுட்பத் தமிழ் பற்றி மேலும் அறிந்து கொள்ள, அவர் சுஜாதாவின் உதவியைக் கோருவது, நுட்பத் தமிழின் தோற்றம், வளர்ச்சிக்கு, சுஜாதா தான் ஒட்டுமொத்த பொறுப்பு என்ற வெகுசன கருத்தின் அடிப்படையில் தானேயன்றி, உண்மை நிலவரங்களின் அடிப்படையில் அல்ல. சு.ரா, இவ்விடயங்களில் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ளவில்லை என்ற எண்ணம் மேலிடுகிறது.

சாகித்திய அகாதமி பற்றிய, ‘ சாகித்திய அகாதெமிப் பரிசும் தமிழ்ச் சூழலும் ‘ என்ற கட்டுரை, சின்னப் பயல்களின் தமிழில் சொல்வதானால், என் அறிவுக்கண்ணைத் திறந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப்பட்ட முறையில், சாகித்ய அகாதெமி பரிசுகள் பற்றி நானும் கவலைப் பட்டிருக்கிறேன். இம்முறையாவது, நான் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர் எவருக்காவது கிடைக்குமா என்று ஆவலுடன் செய்திகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவ்விதம் இல்லாமல் போனால், யாருக்குப் பரிசு கிடைக்கிறதோ, அவர்களுடைய படைப்புக்களை, நாடி ஓடியதில்லை. என் ஆர்வம், யாருக்கு பரிசு கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதுடன் முடிந்துவிடும்.

சு.ராவின் உன்னதம், சாகித்திய அகாதெமி மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் குறிப்பிடுவதில் தெரிகிறது. அவர் சொல்வது,

1. ‘ பரிசு பெற்ற படைப்புகளையும், மிகச்சிறந்த படைப்புகளையும் – அவை பரிசு பெறாதவை என்றாலுங் கூட – பிற மொழிகளில் மொழி பெயர்த்தல். 2. ஒரு மொழியைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்திய மொழிகளில் கொண்டு வருதல். 3. பெரும் இலக்கியத் தொண்டாற்றியுள்ள ஆளுமைகளைக் கெளரவப்படுத்துதல்.4. மொழிபெயர்ப்புகளை ஊக்குவித்தல். 4. எழுத்தாளர் – வாசகர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தல், இலக்கியப் பட்டறைகள் நடத்துதல்.6. இலக்கிய இதழ்கள், புத்தகங்கள் வெளியிடுதல் என்றெல்லாம் பல பணிகள் இருக்கின்றன. ‘

இவை பற்றித் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏதும் அக்கறை உண்டா ? ‘

என்றும் கேட்கிறார். தமிழ் எழுத்தாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தன்னுடைய பிறப்பு, வளர்ச்சி, தமிழ் கற்றுக் கொண்ட வருடம், முதன் முதலாக எழுதியது, தன் நம்பிக்கைகள், எழுதிய முதல் நாவல் போன்ற தகவல்கள் , ‘சுய அறிமுகம் : சில சிதறல்கள் ‘ ( பக்கம் 58), ‘என் படைப்பனுபவம் ‘ ( பக்கம் 76), ‘இலக்கியவாதிகள் மீது கற்பனை பயம் ‘ ( பக்கம் 124), ‘நவீனத்துவமும் நானும் ‘ ( பக்கம் 128) ஆகிய கட்டுரைகளில் கிடைக்கின்றன. பிரபலங்களின் சுயவரலாற்றுக் குறிப்புகள் என்று ஒதுக்கி விட முடியாத படி, அவ்வவக்காலகட்டங்களில் இருக்கும் இலக்கிய வளர்ச்சி/தேய்வும் கட்டுரைகளில் நமக்குக் கிடைக்கின்றது.

வாசகர் கடிதமாக எழுதிய சில மடல்களும் நூலின் இறுதிப்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. தீராநதிக்கு எழுதிய ஒரு கடிதத்தைப் படித்தால், ( எஸ்.ராமகிருஷ்ணனின் பாபா தரிசனம் கட்டுரைக்கான மறுமொழி) , இந்த வியாசத்தின் முதன் பகுதியில் , சுந்தர.ராமசாமியின் நகைச்சுவை உணர்வு பற்றி நான் எழுதிய அபிப்ராயத்தை அனைவருமே ஏற்றுக் கொள்ளக் கூடும்.

விமர்சனப் பார்வை என்று இல்லாமல், ஒரு வாசகனின் நோக்கில், இந்த நூல் ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது என்பதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு படைப்பில் இருக்கும் வரிகளை விடவும், அது சொல்லாமல் விட்ட, நம்மை மேற்கொண்டு சிந்திக்கத் தூண்டுகிற விஷயங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ‘ இறந்த காலம் பெற்ற உயிர் ‘ என்ற தொகுதி அப்படித்தான் இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

முடிவுரை

—-

இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்படுகின்ற ஆருயிர் நண்பர்கள் யாவருமே வெவ்வேறு கட்டங்களில் இருந்த நான் தான் என்பதை புத்திசாலிகள் புரிந்து கொள்ளக் கடவர்.

அன்புடன்

இகாரஸ் பிரகாஷ்

Series Navigation

இகாரஸ் பிரகாஷ்

இகாரஸ் பிரகாஷ்