பி.கே. சிவகுமார்
திண்ணையின் சென்ற இதழில் மு. சுந்தரமூர்த்தியின் கடிதத்தைக் கண்டேன். மலர் மன்னனுக்கு முக்கியக் குத்துகளையும் சைடு குத்துகளை திண்ணை ஆசிரியர் ராஜாராமுக்கும், எனக்கும் வாரி வழங்கியிருந்தார். எதற்குச் சிவகுமாரைக் குத்துகிறாய் என்று யாரும் கேட்டுவிட்டால் என்ன செய்வது ? ‘சிவகுமாரைக் குறிப்பிட்டு எழுதக் காரணம், பெரியார் பற்றி எழுதச் சொல்லி பெரியார் ஆதரவாளர்கள் கேட்க வேண்டியதைத் தான் கேட்கவேண்டியிருப்பதாக மலர் மன்னன் எழுத வந்தபோது எழுதியவர் ‘ என்று ஒரு காரணமும் அடுக்கியிருந்தார். சரி பெரியார் ஆதரவாளர்கள் எழுதாதபோது அவர்கள் சார்பாக சிவகுமார் எழுதினார். இப்போது காந்தி ஆதரவாளரான சிவகுமார் எழுதாதபோது சுந்தரமூர்த்தி மலர் மன்னனின் காந்தி – கோட்ஸே பற்றிய கட்டுரைகளுக்குத் தானே எதிர்வினை எழுதலாமே. அதைவிட்டுவிட்டு சிவகுமார் எழுதவில்லை என்று ஏன் அழவேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை. சுந்தரமூர்த்தியால் எழுத முடியும் என்றால் அப்புறம் எதற்கு ராஜாராமோ சிவகுமாரோ எழுதவில்லை என்று கவலைப்படப் போகிறார் ?
‘காங்கிரஸ் இயக்கத்தின் மீதும், காந்தியின் மீதும் பற்றுவைத்த தேசியவாதியான பி.கே. சிவகுமாரிடமிருந்து கடுமையான எதிர்வினை வருமென்று எதிர்பார்த்திருந்தேன். ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட வெளியிடவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது ‘ என்று என் ‘ஆதர்ச வாசகர் ‘ மாதிரி கவலைப்படுகிற சுந்தரமூர்த்திக்கு விரிவான பதிலைச் சொல்லும்முன், அந்த வரிகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் – எதிராளிமீது வெறுப்பும் வன்மமும் தெறிக்கும் – அவர் முகத்தை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் இணையத்தில் நடக்கிற உள்குத்து அரசியல்களைப் புரிந்து கொள்ளாதவர்க்கு அது உதவும். நீங்கள் திண்ணைக்கு சீரியஸான விஷயங்களையும், நல்ல விஷயங்களையும் மட்டுமே படிக்க வருகிறீர்கள் என்றால் தயவுசெய்து இந்தக் கடிதத்தை இத்துடன் தாண்டிப் போகவும். உங்களுக்கு உதவக்கூடிய உருப்படியான விஷயங்கள் எதுவும் இதில் இல்லை. உங்களுக்கு என் மன்னிப்புகள். டிராகன்களுடன் சண்டை போடுகிறவர்கள் டிராகனாகிவிடுவார்கள் என்று சொன்னவர் பெயர் நினைவில்லை. ஆனால், காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்ற மாதிரி, நான் அமைதியாக இருந்தும், புறக்கணித்துப் போயும், பதில் சொல்லாமல் தவிர்த்தும், என்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிற சுந்தரமூர்த்திகளை அம்பலப்படுத்துகிற விஷயத்தில், பாம்பின் கடி பெற்றாலும் பரவாயில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்..
சுந்தரமூர்த்திக்கும் எனக்குமான விவாதம் எப்படித் தொடங்கியது என்று பார்ப்போம். இப்படி ஆரம்பிப்பதன்மூலம் பழைய விவாதங்கள், சுந்தரமூர்த்தி வலைப்பதிவுகளில் எனக்கெதிராக உதிர்த்த கருத்துகள் ஆகிய எதையும் மீண்டும் கிளறுவது நோக்கமில்லை. பொதுவில் எழுத வந்துவிட்டப்பின் விமர்சனங்களை மட்டுமில்லாமல் தனிமனித காழ்ப்புணர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே நான் அறிந்திருக்கிறேன். ஆனால், அத்தகையத் தனிமனிதக் காழ்ப்புணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பும்போது அதைச் செய்கிற உரிமை எனக்கு இருக்கிறது. எனவே, பழைய விவாதங்களைக் கிளறி மீன்பிடிக்கப் பார்க்கிறார் என்றோ, அப்போது பதில் சொல்லாதவர் இப்போது ஏன் பதில் சொல்கிறார் என்றோ இதைத் திரிக்க நினைப்பவர்களுக்காக இந்த விளக்கம். இந்த விஷயங்களில் பலவும் தமிழ் வலைப்பதிவுகளில் நடந்தன. வலைப்பதிவுகளைப் படிக்காதவர்களுக்கு இது புரியவில்லை என்றால், மன்னிக்கவும்.
கருணாநிதி இலக்கியவாதியா என்பதைப் பற்றி ஜெயமோகன் பேசியதை வைத்துத் தமிழகத்திலும் திண்ணையிலும் சர்ச்சை நடந்தது. அப்போது அண்ணாதுரை இறந்தபோது ஜெயகாந்தன் பேசிய பேச்சை நான் திண்ணைக்கு அனுப்பினேன். திண்ணையும் பிரசுரித்தது. அண்ணாதுரை இறந்தது 1969-இல். அப்போது அண்ணாதுரைக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அண்ணாதுரையைக் கடுமையாக விமர்சித்து ஜெயகாந்தன் பேசிய பேச்சு அது. தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கான சூழலும், மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையும் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக அப்போது இருந்தன என்பது ஜெயகாந்தனின் அந்தப் பேச்சு எந்தக் கலவரத்திலும் முடியாமல் நிகழ்ந்ததற்கு உதாரணம். 2003-இல் எழுத்தாளர் ஜெயமோகன், உயிரோடு இருக்கிற ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இலக்கியவாதி இல்லை என்று சொன்னதற்கு எழுந்த கூக்குரல்களைப் பார்த்தபின், தமிழகத்தில் இத்தகைய சகிப்பின்மை என்கிற மாற்றம் ஏற்படுத்திய காரணிகள் என்ன என்பதை ஜெயகாந்தனின் அந்தப் பேச்சைக் கேட்கிற புத்திசாலி வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்பி எடுத்து இட்ட பேச்சு அது. எந்தப் படைப்பிலும் sub-text பார்க்கிற, அல்லது படைப்புக்கு அப்பால் படைப்பை வைத்துச் சிந்திக்கிற மனம், மிகச்சுலபமாக இத்தகைய கேள்வி ஒன்றை – இந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தமிழ்ச்சூழல் அடைந்திருக்கிற மாற்றத்திற்குக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கும். பலருக்கு ஜெயகாந்தனின் அந்தப் பேச்சை நான் எடுத்துப் போட்டதுமே, இந்த விஷயம் புரிந்தது. உதாரணமாக, அந்தச் சமயத்தில் வாஸந்தி எழுதிய கட்டுரையொன்றில் ‘ஜெயகாந்தன் அன்று அப்படிப் பேச முடிந்தது இப்போது முடியுமா என்று தெரியவில்லை ‘ என்ற பொருளில் எழுதியிருந்த ஞாபகம். இலக்கியமும் அதற்கான நுண்ணுணர்வுகளும் காணாமல் போய்த் தன்னுடைய அரசியல் கருத்தாக்கங்களுக்கு அப்பாற்பட்டு இலக்கியம், கலை எதையும் பார்ப்பதில் எந்தத் தேர்ச்சியும் இல்லாத சுந்தரமூர்த்திகளுக்கு ஜெயகாந்தனின் அந்தப் பேச்சை நான் எடுத்துப் போட்டது கோபத்தை உண்டாக்கியதில் வியப்பில்லை.
உடனடியாக திண்ணைக்கு ஒரு கடிதத்தைத் தட்டிவிட்டார் சுந்தரமூர்த்தி. அந்தக் கடிதம் http://www.thinnai.com/pl1030031.html என்ற முகவரியில் இருக்கிறது. அண்ணாதுரைமீது அவருக்கு இருந்த மரியாதையைச் சொல்லி, ஜெயகாந்தன் இந்திராகாந்தி கொலை நடந்ததும் டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறாரா, ஜெயகாந்தன் மனதில் இருப்பது சராசரி கட்சி ஊழியன் மனதில் இருக்கிற அழுக்கா, சுந்தரமூர்த்தி கேட்டிருக்கிற விஷயங்கள் பற்றி ஜெயகாந்தன் சொல்லியிருந்தால் அதைச் சிவகுமார் தட்டச்சு செய்து போடுவாரா என்றெல்லாம் சம்பந்தமே இல்லாமல் கேட்டு ஒரு கடிதம். ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறவர் எல்லா விஷயங்களைப் பற்றியோ அல்லது தனக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றியோ பேசியிருக்கிறாரா என்ற கேள்வி கேட்பது விவாதத்தின் அல்லது விமர்சனத்தின் அடிப்படை தெரியாத அபத்தம். இந்த அபத்தத்திலிருந்து அன்றிலிருந்து இன்றுவரை சுந்தரமூர்த்தி வெளிவந்து வளரவே இல்லை. பாருங்கள், இன்றைக்குக்கூட, சிவகுமார் ஏன் மலர்மன்னனுக்குப் பதில் எழுதவில்லை என்று உளறிக் கொண்டிருக்கிறார். சரி, இப்போதைய விஷயத்திற்குப் பிறகு வருவோம்.
சுந்தரமூர்த்தியுடன் சேர்ந்து அவர் நண்பர் சங்கர பாண்டியும் அப்போது திண்ணையில் இதைப் பற்றி எழுதினார். இவர்களின் நிஜசொரூபம் தெரியாமல் – நான் அதற்குப் பதில் எழுதியும் தொலைத்தேன். ஜெயகாந்தன் பற்றிய அவர்களின் கருத்துகளுக்கான அந்தப் பதில் திண்ணையில் http://www.thinnai.com/pl1106031.html என்ற முகவரியில் இருக்கிறது. அந்தப் பேச்சை எடுத்துப் போட்டதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் ஜெயகாந்தன் மீதான விமர்சனங்களை வைத்துத் திரித்தபோது அந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்கிப் பதில் சொன்னது தவறோ என்று இப்போது தோன்றுகிறது. அந்தக் கடிதத்தைப் பின்வருமாறு முடித்திருந்தேன். ‘சுந்தரமூர்த்திக்கு பிடித்த/ஏதுவான கருத்துகளை – நான் கேட்டோ தேடியோ பெற்றுப் பின் தட்டச்சு செய்து போட்டால், மற்றவர் மனதில் இருப்பது அழுக்கா இல்லை டிட்டர்ஜெண்ட் போட்டுத் துவைத்த மின்னலடிக்கும் வெண்மையா என்று அவர் கண்டுபிடிப்பாராம். மற்றவர் மனதில் இருப்பது ஒரு சராசரி கட்சி ஊழியனின் மனதில் இறுகிய அரசியல் அழுக்கென்று அவர் நம்பினால், அதற்கான ஆதாரங்களை என்னைத் தேடிப்பிடிக்கச் சொல்லாமல் அவரே தேடிப்பிடித்து தட்டச்சு செய்து தரட்டும். நானும் மற்றவர்களும் அதைப் படிக்கவும், விருப்பமுள்ளவர்கள் ஆரோக்யமாக விவாதிக்கவும் அது வழிவகுக்கும். இன்னொரு கோணம் காட்டுகிறது என்றும் விவாதத்திற்குரியது என்றும் நான் நம்புகிறவற்றையே நான் தட்டச்சு செய்துதர இயலும். ‘
இதற்குப் பின் சுந்தரமூர்த்தி பேசாமல் சங்கரபாண்டி தொடர்ந்து பதில் எழுதினார். சங்கரபாண்டியுடன் நான் தொடர்ந்து நடத்திய விவாதம் திண்ணை கோப்புகளில் இன்றளவும் உள்ளன. விரும்புவோர் தேடிப் படித்துக் கொள்ளலாம். அல்லது அதை இன்னும் மறக்காமல் இணையத்தில் எங்கு எழுதினாலும் அதைப் பற்றி எழுதுவதுடன், அந்த விவாதம் மூலம் என்மீது வளர்த்துக் கொண்ட வன்மத்தைக் கொட்டும்விதமாக இணையத்தில் என்மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை வீசிவரும் சங்கரபாண்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சுந்தரமூர்த்தி அதற்கப்புறம் பேசவில்லை என்றாலும், உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தட்டச்சு செய்து போடுங்கள் என்ற பதில் அவரைப் போன்ற egomaniac-களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்தேன். திண்ணையில் சங்கரபாண்டியுடன் நான் நடத்திய விவாதத்தின் தர்க்கத் திறன் சுந்தரமூர்த்தி சொல்வது போன்றதுதானா என்பதை அந்த விவாதத்தைத் தேடிப் படிப்பவர்களின் முடிவுக்கே விடுகிறேன். எந்தப் பழைய விவாதத்தையும் கிளறுவதற்கு எனக்கு நேரமில்லை. விருப்பமும் இல்லை.
மாலனைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவுக்கும், ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது, மாலனின் ஜெயகாந்தன் பதிவைப் பற்றி நான் எழுதிய பதில் பதிவுக்கும் கோபித்துக் கொண்டு மாலன் வலைப்பதிவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது நான் எழுதிய அந்தப் பதிவுகள் pksivakumar.blogspot.com என்ற என் வலைப்பதிவின் கோப்புகளில் இருக்கின்றன. மாலனின் ஜெயகாந்தன் பற்றிய பதிவுக்கான என் பதில், என்னுடைய அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகத்திலும் தொகுக்கப்பட்டுள்ளது. மாலன் இன்றுவரை அந்தக் கட்டுரைக்குப் பதில் சொல்லவில்லை. ஆனால், அந்தக் கட்டுரையில் நான் மாலன் மீது அவதூறு சொன்னதாக அப்போது பலரால் நான் குற்றமும் சாட்டப்பட்டேன். ஆனால், என் புத்தகத்துக்கு இதுவரை வந்துள்ள விமர்சனம் எதுவும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரை அவதூறாக உள்ளது என்று சொல்லவில்லை. ‘மாலன், அரவிந்தன் ஆகியோர் ஜெயகாந்தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு இவர் அவர்களை விவாதத்துக்கு அழைக்கும் பாங்கு அறிவு சார்ந்து இருக்கிறது. ‘ என்று இந்திரா பார்த்தசாரதி என் புத்தக விமர்சனத்தில் எழுதியிருப்பதையும் இங்கு வாசகர் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
அப்போது சுந்தர மூர்த்தி மாலனின் பதிவில் என் மீது இருக்கிற பழைய வன்மத்தை ஒரு பெரிய பின்னூட்டம் எழுதித் தீர்த்துக் கொண்டார். அதைப் பற்றி இப்போது மட்டுமே நான் பேசுகிறேன். இதுவரை இதைப் பற்றி எங்கும் நான் எழுதியதில்லை. சுந்தரமூர்த்தியும் அவர் கும்பலும் இப்படி என்மீது தொடர்ந்து காட்டி வந்திருக்கிற வன்மத்திற்கு அமைதியாக இருந்திருக்கிறேன். பொருட்படுத்தாமல் போயிருக்கிறேன். புறக்கணித்திருக்கிறேன். சிலநேரம் கேள்விகளுக்கேற்ற பதிலைத் தந்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் புரிந்துகொள்கிற நுண்ணுணர்வு சுந்தரமூர்த்திக்கோ அவர் கும்பலுக்கோ இல்லை. நாம் ஒன்றும் சொல்லவில்லை என்றால், நாம் தோற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு இன்னமும் சீண்டுவார்கள். நாம் பதில் சொன்னாலோ, சூழல் சாதகமாக இருக்கும்போது பேசுகிறாய் இல்லையென்றால் ஓடிவிடுகிறாய் என்று கொக்கரிப்பார்கள். இதுதான் சுந்தரமூர்த்தி கும்பலின் வக்கிரபுத்தி. இந்த முடிந்துபோன விஷயங்களை எல்லாம் சுந்தரமூர்த்தியின் வன்மத்துக்கும் காழ்ப்புணர்வுக்கும் உதாரணமாகவே காட்டுகிறேன். மற்றபடிக்கு அவையெல்லாம் வன்மம் இல்லை என்றும் விமர்சனம் என்றும், அதைச் சொல்கிற உரிமை தனக்கிருக்கிறது என்றுமெல்லாம் சுந்தரமூர்த்தி ஜல்லியடிக்க அவருக்கு உரிமையுண்டு. இந்த முந்தைய உதாரணங்களைப் படிக்கிற வாசகர், அந்த விவாதத்தின் பொருளை மீறிச் சுந்தரமூர்த்தி என்மீது சொல்லியிருக்கிற கருத்துகளில் பொதிந்திருக்கும் காழ்ப்புணர்வை உணர்வார்கள் என்ற நம்பிக்கை யிருக்கிறது. சுந்தரமூர்த்தியின் இந்தப் பழைய கருத்துகளுக்கு இவ்வளவு நாள் நான் பதில் சொல்லாமல் இருந்தது, என் பதிலைக் கோரிப் பெறுகிற தகுதி அவற்றுக்கு இல்லை என்பதாலேயே. இப்போது அதைப் பற்றி எழுதுவது, அவரை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே.
சுந்தரமூர்த்தி ஜெயகாந்தன் மீதும், என் மீதும் தனக்கிருந்த அரிப்பைத் தீர்த்துக் கொண்ட மாலனின் பதிவின் முகவரி பின்வருமாறு. http://maalans.blogspot.com/2005/04/blog-post_11.html. அதில் சுந்தரமூர்த்தி எழுதியதிலிருந்து எடுத்தது பின்வருமாறு: ‘எனக்கும் சிவகுமாரிடம் ஒரு சிறு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவரிடம் இருந்துதான் ஒதுங்கியிருக்கிறேனே தவிர பொதுக் களத்திருந்தல்ல. ‘திண்ணை ‘யில் கலைஞர்-ஜெயமோகன் சர்ச்சையின்போது சந்தடிச் சாக்கில் இடையில் புகுந்து சம்பந்தமேயில்லாமல் அண்ணா மறைந்தபோது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் பேசியதை தட்டச்சு செய்துப் போட்டு திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் அரிப்புக்கு அவல் போட முயன்றார். நானும், நண்பர் சங்கரபாண்டியும் அதை எதிர்கொண்ட போது அவருடைய தர்க்கத் திறனைப் பார்த்து மலைத்துபோய் ஒதுங்கிக்கொண்டேன். சங்கரபாண்டி சிலவாரங்கள் முயற்சித்து பிறகு விட்டுவிட்டார். பிறகு சிவகுமாரையும், என்னையும் அறிந்த பொது நண்பர் தனிப்பேச்சில், ஜெயகாந்தன் சிவகுமாரின் குடும்ப நண்பர் என்பதால் தான் இந்த தாங்கு தாங்கிறார் என்று சொல்லி அவருடைய ‘ஜெயகாந்த பக்தி ‘யை விளக்கினார். ஜெயகாந்தனை குல தெய்வமாக வழிபடும் ஒருவருக்கு இப்படி ஆவேசம் பொத்துக்கொண்டு வருவது இயற்கை. ‘
அண்ணாதுரை மறைந்தபோது ஜெயகாந்தன் பேசிய பேச்சை கருணாநிதி – ஜெயமோகன் சர்ச்சையின்போது நான் எடுத்துப் போட்டது சுந்தரமூர்த்திக்கு சம்பந்தமே இல்லாத விஷயம் என்று தோன்றலாம். சுந்தரமூர்த்தி சங்கரபாண்டி என்று சிலரைத் தவிர அந்த உரையை அமைதியாகப் படித்துவிட்டு இருந்த திண்ணை வாசகர்கள் அனைவரும் அப்போது இரண்டு விஷயங்களும் சொல்கிற இன்னொரு விஷயத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், இந்த இடத்தில் சுந்தரமூர்த்தி தன் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கிறார் பாருங்கள். ஜெயகாந்தன் பக்தியாம், அதனால் எனக்கு ஆவேசம் வருகிறதாம். சுந்தரமூர்த்தியின் பக்தி யாரிடம் என்று தெரிந்தால்தான் அவை கடவுள்களா அல்லது சாத்தான்களா என்று சொல்ல முடியும். சும்மா பேச்சுக்கு, யாரையும் பீடமாக நினைப்பதில்லை என்று டயலாக் வெளிவேஷத்திற்கு விடுவார் அவர். சிவகுமாரிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்று மாலன் பதிவில் எழுதிவிட்டு என்னைத் தொடர்ந்து வந்து தன் வெறுப்பையும் வன்மத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறாரே – அந்த மாதிரி. எனக்குப் பிடித்தவர்களை நான் புகழ்கிறேன் மற்றவர்கள் மீது சேறு வாரி இறைக்கிறேன் என்று என்னைச் சொன்ன சுந்தரமூர்த்திதான் இன்றுவரை ஒரு அடியாள் மாதிரி என்னைத் தொடர்ந்து வந்து தாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் எழுதியது மாதிரி அவர் என்னைவிட்டு ஒதுங்கி யிருப்பதாகத் தெரியவில்லை.
எனக்கிருக்கிற ஜெயகாந்தன் பக்தியை நான் என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய ஜெயகாந்த பக்தி என்ன என்று மோப்பம் பார்த்துத் துப்பறிய சுந்தரமூர்த்தி இருவருக்கும் பொதுவான நண்பர்களை நாட வேண்டியதில்லை. என்னுடைய ஜெயகாந்த பக்தியை நானே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன். அதற்காக, நான் எழுதுகிற எல்லாவற்றிலும் அதையே முகர்ந்து பார்க்க சுந்தர மூர்த்தி விரும்பினால், அவர் மோப்ப சக்தியில் ஏதோ பிரச்னை என்று விரைவிலேயே வெட்ட வெளிச்சமாகிவிடும். ஜெயகாந்தன்மீது விமர்சனங்கள் உள்ள பலருடன் எனக்கு இருக்கிற நட்பும் உலகம் அறிந்தது. ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்றதற்கு அவரின் பதிப்பாளர்கள் நடத்திய பாராட்டுவிழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஏ.எம். கோபுவும் ஜெயகாந்தனை வாழ்த்திப் பேசினார். பேச்சினூடே அவர் ஜெயகாந்தனைப் பற்றி விமர்சனங்களையும் வைத்துவிட்டு வாழ்த்தினார். கூட்டம் முடிந்ததும், வலைப்பதிவு நண்பர் சுரேஷ் கண்ணன் தோழர் கோபுவிடம், ‘நீங்கள் இந்தப் பாராட்டுவிழாவில் விமர்சனம் வைத்திருக்கக் கூடாது. வாழ்த்த மட்டும் செய்திருந்தால் நன்றாக இருக்கும் ‘ என்றார். அருகிலிருந்த நான் உடனே தோழர் கோபுவிடம், ‘உங்கள் மனதிலிருந்ததை அப்படியே பேசினீர்கள். ஒரு காம்ரேட் அப்படித்தான் இருக்க வேண்டும். ஜெயகாந்தன் இதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்பவர் இல்லை. நீங்கள் ஒன்றும் தவறாகப் பேசவில்லை. ‘ என்றேன். ஜெயகாந்தன் மீது பக்தி இருந்தாலும் அவர் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் எப்படி வரவேற்கிறேன் என்பதற்கு இது உதாரணம். ஆனால், ஜெயகாந்தன் இன்றுவரை திராவிட இயக்கங்களை அங்கீகரிக்கவில்லை என்ற கடுப்பிலும், தாங்கள் முன்னிறுத்துகிற இயக்கங்களுக்கும் ஜெயகாந்தன் எதிரானவர் என்ற கோபத்திலும், ஜெயகாந்தன்மீது மட்டுமில்லாமல், அத்தகைய கருத்துகளை உடைய எவர் மீதும் வன்மத்தையும் வெறுப்பையும் இணையத்தில் வளர்த்துக் கொண்டிருப்பது எந்தக் கும்பல் என்று அனைவரும் அறிவார்கள்.
சரி, மாலன் பதிவின் பின்னூட்டத்தில், என்னிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்ன சுந்தரமூர்த்தி அப்படி ஒதுங்கியே இருந்தாரா ? இல்லை. அதற்கான ஆதாரங்கள் தமிழ் வலைப்பதிவுகளில் விரவிக் கிடக்கின்றன. இல்லை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எப்படி என்னைத் தாக்கிக் கொண்டே இருந்தார் என்பதற்குச் சில உதாரணங்கள். (இவை எதற்குமான சுட்டிகளையும் நான் தரப்போவதில்லை. என்ன சுட்டி தந்தாலும் என்ன ஆதாரம் தந்தாலும் என்னை நம்புகிறவர்கள் நம்புவார்கள், நம்பாதவர்கள் இனிமேலும் நம்பப் போவதில்லை என்று அறிந்திருப்பதால். சுந்தரமூர்த்தி இந்தக் கருத்துகளை எழுதியபோது அவற்றைப் பொருட்படுத்தாமல் நான் புறக்கணித்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)
1. நானும் நண்பர்களும் சேர்ந்து ஒரு வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கியபோது, அந்தப் பெயரைப் பெற்றி ஒரு தாக்குதல். நாங்கள் ஆரம்பிக்கிற நிறுவனத்திற்கு நாங்கள் விரும்புகிற பெயரை வைக்கிறோம் என்ற புரிதல்கூட இல்லாத சிறுபிள்ளைத்தனமான தாக்குதல். சுந்தரமூர்த்திக்குப் பிடித்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று ஏதேனும் விதியா என்ன ?
2. இன்னொரு இடத்தில் சிவகுமார் போன்றவர்களை வலிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். நாங்கள் ஆரம்பித்திருக்கிற நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பொருளில் எழுதினார். எதையும் புறக்கணிப்பதும் தேர்வு செய்வதும் அவர் விருப்பம். அதை அவர் சொல்வதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால், இன்றைக்கு காந்திக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற மனதில் இருக்கிற வன்முறையைப் பாருங்கள், வலிக்கிற இடத்தில் அடிக்க வேண்டுமாம். இவர், இன்றைக்குக் காந்தியைப் பற்றி நான் பேசவில்லையே என்று கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது. தெலுங்கு டப்பிங் பட வில்லனைப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோவுக்குத் தொல்லைத்தர அவர் வேலையிலோ தொழிலிலோ முதலில் இடைஞ்சல் செய்வார். அப்புறம், ஹீரோவின் குடும்பத்துக்கு வருவார். நல்லவேளையாகச் சுந்தரமூர்த்தி நான் செய்கிற தொழிலைப் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டிருப்பதற்கு அவருக்கு நன்றி சொல்கிறேன்.
3. திண்ணையில் என்னுடன் விவாதம் செய்த சங்கரபாண்டி வலைப்பதிவுகளில் பித்தம் தலைக்கேறி கண்டபடி என்னைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். பிற பதிவுகளில் அவர் உளறியதற்குப் பதிலளிக்காமல் புறக்கணித்த நான், என் பதிவுகளின் பின்னூட்டங்களிலும் அதேமாதிரி உளறியபோது சரியான பதிலடிகள் கொடுத்தேன். அதன் உச்சகட்டம், சூச்சூ என்ற பெயரில் எழுதியது நான் என்று அவர் குற்றம் சாட்டியது. அதை நிரூபிக்கச் சொல்லி அல்லது நிரூபிக்க முடியாவிட்டால் என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி நான் எச்சரிக்கை விடுத்தேன். அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அப்போது அதுபற்றி சுந்தரமூர்த்தி சொன்ன லாஜிக் என்ன தெரியுமா ? சிவகுமாரை அவர் சூச்சூ இல்லை என்று நிரூபிக்கச் சொல்லிக் கேட்காமல் சங்கரபாண்டி மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும் என்று எழுதியவர் சுந்தரமூர்த்தி. அதாவது, குற்றம் சாட்டியவர் குற்றத்தை நிரூபிக்க வேண்டுமா அல்லது குற்றம் சாட்டப்பட்டவரே தன் நிரபராதித் தன்மையை நிரூபித்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி வந்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தான் தன்னுடைய நிரபராதித் தன்மையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்கிற மாதிரி – எனக்காகவென்று – புதிய லாஜிக்கைக் கண்டுபிடித்த சுந்தரமூர்த்திக்கு என்மீது வன்மமும் வெறுப்பும் இல்லை என்று எப்படி நம்புவது ?
4. குட்டி ரேவதி – எஸ். ராமகிருஷ்ணன் விஷயம். அதில் பிரபஞ்சன் ராமகிருஷ்ணன் எழுத்தைப் பற்றிச் சொன்னது பற்றி மட்டுமே நான் கருத்து சொன்னேன். அதுவும், சுந்தரமூர்த்தி போன்ற திரிபுவாதிகள், என் கருத்தைத் திரிக்கிற வாய்ப்பு நிறைய உள்ளது என்பதை நன்கறிந்து, இது குட்டி ரேவதி – ராமகிருஷ்ணன் விஷயம் பற்றிய என் கருத்தல்ல, பிரபஞ்சனின் கருத்துக்குப் பதில் மட்டுமே என்ற டிஸ்க்ளெய்மருடன். ஆனால், சுந்தரமூர்த்திதான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவரா என்ன ? சிவகுமார் குட்டி ரேவதி விஷயத்தில் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு என்று வலைப்பதிவுகளில் திரிக்க ஆரம்பித்துவிட்டார். அப்புறம், நான் ஓடிச்சென்று, அதற்குப் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.
இந்த நான்கு உதாரணங்கள் போதும். இந்த நான்கு உதாரணங்களிலுமே, சுந்தரமூர்த்தி வெளிப்படுத்தியிருக்கிற கருத்துகள் என்னை அல்லது என் எழுத்தைப் பற்றிய ஆரோக்கியமான விமர்சனமா அல்லது காழ்ப்புணர்வு கொண்ட வன்மமா என்பதை வாசகர் முடிவுக்கே விடுகிறென். இப்படியாக அவர் எழுதியபோதிலும் – சுந்தரமூர்த்திகளின் வெறுப்பையும் வன்மத்தையும் பொருட்படுத்தாமல் நான் புறக்கணித்து வந்திருக்கிற போதிலும், சுந்தரமூர்த்திகளுக்கு மட்டும் ஏனோ என்னைத் தவிர வேறு பிழைப்பு இல்லை போலிருக்கிறது. என் தர்க்கத் திறனைப் பார்த்து மலைத்துப்போய் என்னைவிட்டு ஒதுங்கிவிட்டதாக பிலிம் காட்டிக் கொண்டிருக்கிற சுந்தர மூர்த்திகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னைத் தாக்கிக் கொண்டும்தான் இருக்கிறார்கள். அவர்களாகவே விரும்பினாலும் அவர்களின் மனத்திலிருந்தும் எழுத்திலிருந்தும் நீங்காத ஆளுமையாக என் எழுத்துகள் அவர்களை உறுத்திக் கொண்டிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சி தந்தாலும் அவர்களின் குறுகிய மனோபாவமும், எதிராளியை எப்பாடுபட்டேனும் வீழ்த்திவிட வேண்டும் என்ற வெறியும் அருவருப்பைத் தருகிறது. அதனாலேயே இதற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க வேண்டும் என்று இவ்வளவு விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது சுந்தரமூர்த்தியின் சென்ற வாரக் கடிதத்திற்கு வருவோம். சுந்தர மூர்த்தியின் பிரச்னை என்ன ? மலர்மன்னன் திண்ணையில் எழுதுவதா ? ஆமென்றால், அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகலாம். அப்படிச் சொன்னால், அவர் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரி என்ற பெயர் வந்துவிட்டால் என்ன செய்வது ? அதனால், தனக்குப் பிடிக்காத கருத்துகளை வெளியிடும் திண்ணை பத்திரிகையின் ஆசிரியர் ராஜாராமையும், அவருக்குப் பிடிக்காத கருத்துகளை எழுதிவரும் என்னையும் குறிவைக்கிறார். மலர் மன்னனையும் திட்டியமாதிரி ஆயிற்று. மலர் மன்னனோடு ராஜாராமையும் சிவகுமாரையும் சேர்த்து அடையாளம் காட்டுகிற திருப்பணியைச் செய்த மாதிரியும் ஆயிற்று. ஆஹா.. என்ன ஒரு திட்டம். புல்லரிக்கிறது.
மலர் மன்னன் என்ன, மு. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், திருமாவளவன், நல்லகண்ணு, வரதராஜன், கி.வீரமணி என்று யார் திண்ணையில் எழுதுவதையும் நான் வரவேற்கிறேன். மலர் மன்னனிடம் நான் பெரியாரைப் பற்றி நான் கேட்ட கேள்விகள் பெரியாரைத் தெரிந்து கொள்ள அல்ல. அதன்மூலம் மலர் மன்னனைத் தெரிந்து கொள்ள. இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சம்பளம் வாங்கிக் கொண்டு போர் ஆதரவுப் பிரசங்கங்கள் செய்த அண்ணாதுரையைப் பற்றி, மலர் மன்னனால் அண்ணா என்று உருக முடிகிறது, ஆனால், பெரியாரை மட்டும் அதே தராசில் வைத்துப் பார்க்க முடியவில்லை என்பதையும் நான் என் வாசக அனுபவத்தின்மூலம் உணர்ந்தே இருக்கிறேன். நான் கொள்கைகளுடன் உடன்படாத அண்ணாதுரையைப் பாராட்டி மலர்மன்னன் எழுதக்கூடாது என்று நான் எங்கும் கொடியும் பிடிக்கவில்லை. ஆனால், என் கருத்துகளை நானாகத்தான் எழுத வேண்டுமே தவிர, என்னை எழுது என்று சொல்வதற்கு எந்தச் சுந்தரமூர்த்திகளுக்கும் உரிமையில்லை. நான் மலர் மன்னனை மட்டும் படிக்கவில்லை. அவருக்குப் பதில் எழுதுகிற கற்பக விநாயகத்தையும்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களையும் திண்ணையில் படிக்கிறேன். முக்கியமாக, உண்மையென்பது மலர் மன்னன் சொல்வதற்கும், கற்பக விநாயகம் சொல்வதற்கும் இடையில் எங்கோ இருக்கிறது என்பதையும், அதையெடுத்து எழுத நாளை யாரும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் நான் திண்ணையை வாசித்து வருகிறேன். உதாரணமாக, மலர்மன்னன் – கற்பக விநாயகம் விவாதத்தின் போது தோள்சீலைப் போராட்டம் பற்றி நெல்லை நெடுமாறன் போன்ற ஆய்வாளர்கள் எழுதுகிற கட்டுரைகள் தருகிற புதிய தகவல்களையும் அவை வரலாறு குறித்து எனக்குள் எழுப்புகிற ஆர்வங்களையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நெல்லை நெடுமாறன் கட்டுரை போன்ற ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஆய்வுபூர்வமான மாற்றுப் பார்வை ஏதும் இருக்குமா, அது திண்ணையில் வெளிவருமா, அதன்மூலம் என் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமா என்றும் காத்துக் கொண்டிருக்கிறேன். சுந்தரமூர்த்திகளுக்கு ஏனோ இந்த மாதிரிக் கட்டுரைகள் கண்ணில் படவில்லை என்றால் அது என் கண்ணின் பிரச்னையில்லையே. மேலும், மலர் மன்னனின் அரசியல் சார்புகளை மீறி அவர் எழுதுகிறவற்றில் இருக்கிற நல்லவற்றைப் பொறுக்கிக் கொள்கிற ஆற்றல் எனக்கு உண்டு. அந்த ஆற்றல் சுந்தரமூர்த்திகளுக்கு இல்லையென்றால், அதற்காக என்னையோ ராஜாராமையோ ஏன் காயவேண்டும் ? எல்லாவற்றுக்கும் மேலாக, விவாதம் என்பது ரத்தம் குடிப்பதல்ல என்கிற அடிப்படை நாகரீகம் மலர்மன்னனுக்கு இருக்கிறது. அது இருந்தால் போதும், மற்றவை அந்தந்த நேரத்தில் வருமென்று நான் நம்புகிறேன். இந்த நாகரீகத்தைப், பிடிக்காதவர்களைத் தொடர்ந்து பின்சென்று தாக்கும் சுந்தரமூர்த்திகள் கற்றுக் கொள்ளும்வரை, மலர் மன்னன் திண்ணையில் தொடர்ந்து எழுதலாம்.
மலர் மன்னன் திண்ணைக்கு வந்தபோது நான் கடிதம் எழுதியதால், அவர் எழுதுகிறவற்றுக்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்பதே ஓர் அபத்தமான வாதம். உதாரணமாக சுந்தர மூர்த்தியை எடுத்துக் கொள்வோம். அவர் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணிபுரியும் விளக்கு அமைப்பு வருடம்தோறும் எழுத்தாளர்களுக்குப் பரிசு தருகிறது. அந்தப் பரிசு வாங்கிய எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்கெல்லாம் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்றால் சிரிப்பீர்களா மாட்டார்களா ? நானாவது மலர் மன்னன் கொள்கைகளுடன் உடன்பாடில்லை என்றாலும் அவர் எழுதுவதை ஆர்வத்துடன் படித்து வருகிறேன் என்று மட்டும்தான் சொன்னேன். விளக்கு அமைப்பு எழுத்தாளர்களைப் பாராட்டி விருதே வழங்குகிறதே. வார்த்தை வரவேற்பைவிட விருது பெரியது. அதனால், இனிமேல் அந்த எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்குச் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மலர் மன்னனை நான் வரவேற்றதாகவே வைத்துக் கொண்டாலும் மலர் மன்னன் எழுதுவதற்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதும். சுந்தர மூர்த்தி போன்றவர்களுக்கு எத்தகைய இலக்கிய நுண்ணுணர்வும் இல்லை என்பதால், இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி விளக்கி இழுக்க வேண்டியிருக்கிறது. 🙁 இல்லையென்றால், மலர் மன்னன் மீது சிவகுமாருக்குப் பக்தி என்று சுலபமாகத் திரித்து எழுதக் கூடியவர்தானே சுந்தரமூர்த்தி.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிக் கருத்து சொன்னால், எல்லாவற்றையும் பற்றிக் கருத்து சொல் என்கிற சுந்தர மூர்த்தி போன்றவர்கள் விவாதம் மற்றும் விமர்சனங்களின் குறைந்த பட்ச தர்க்கம்கூட தெரியாதவர்களாகவே சுந்தரமூர்த்திகள் இப்படி இன்னமும் சொற்சிலம்பாட்டம் ஆடிவருகிறார்கள் என்பதை இன்னும் என்னவெல்லாம் சொல்லி நிரூபிப்பது ?
சுந்தரமூர்த்தி போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள் ? நாதுராம் கோட்சேவைப் பற்றி மலர் மன்னன் எழுதிய உடன் காந்தியின் புனிதமும் மகத்துவமும் அறிந்தவர்களாகக் கூச்சலிடுகிறார்கள். சிவகுமார் உள்ளிட்ட காந்தியின் அருமையை ஏற்கனவே அறிந்தவர்கள் ஏன் பதில் சொல்லவில்லை என்று கூச்சலிடுகிறார்கள். காந்தியின் அருமையை ஏற்கனவே அறிந்தவர்கள் எதற்குப் பதில் சொல்ல வேண்டும் ? காந்தியைப் பற்றிப் பல விமர்சனங்கள் வைத்த எஸ்.வி. ராஜதுரை போன்றவர்கள்கூட, இந்துத்துவா வலிமை பெற்ற பின், சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் காந்தியைப் பாராட்டி எழுதிய ஞாபகம். பெரியாரின் பின்புலத்துடனும், திராவிட இயக்கத்துக்கே உரித்தான காழ்ப்புணர்வுடனும் காந்தியை அணுகியும் விமர்சித்தும் வந்தவர்களுக்கெல்லாம், காந்தியைப் பற்றிய நல்ல புத்தி மலர்மன்னன் போன்றோர் கோட்சேவைப் பற்றி எழுதுவதன் மூலம் வருமென்றால், மலர் மன்னன் தொடர்ந்து அதைச் செய்வதை நான் விரும்புகிறேன். நிழலின் அருமை சிலருக்கு வெயிலில்தான் தெரியும் என்றால் தெரியட்டுமே. ஆனால், சுந்தரமூர்த்திகள் வெயிலில் நின்று கொண்டும் நிழலின் அருமையைப் பேசுகிறவர்களாகத் தெரியவில்லை. வெயிலைப் பற்றிய குற்றங்கள் சொல்கிற அரசியலைப் பேசுகிறவர்களாகத்தானே தெரிகிறார்கள்.
என்னைப் போன்றவர்களுக்கு இந்தியாவில் வெளிவருகிற எல்லா அரசியல் கட்சிகளின் பத்திரிகைகளையும் தொடர்ந்து படிக்க முடிவதில்லை. திண்ணையைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் விஜய பாரதத்தையும், ஜன சக்தியையும், முரசொலியையும், சங்கொலியையும், தீக்கதிரையும், நமது எம்.ஜி.ஆரையும் இன்னும் பல பத்திரிகைகளையும் வாசிக்கிற மொத்த அனுபவம் ஒரே இடத்தில் கிடைக்குமென்றால், அதை நான் வரவேற்கவே செய்வேன். யாரையும் கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, எழுத அனுமதிக்கவே கூடாது என்பது பாஸிஸம். சுந்தர மூர்த்திகளால் மலர் மன்னன் போன்றோரைக் கருத்தால் எதிர்கொள்ள இயலவில்லை என்றால், ஒன்று மலர்மன்னனைப் படிக்காமல் இருக்க வேண்டும். அல்லது, அதற்குத் தாங்கள் விரும்பினால் பதில் எழுதலாம். சிவகுமார் எழுதவேண்டும் என்று சொல்கிற எந்த உரிமையும் சுந்தரமூர்த்திகளுக்கு இல்லை. சிவகுமார் சுந்தரமூர்த்திக்கு ஊழியம் செய்கிறவர் இல்லை. சுந்தரமூர்த்தி விரும்புகிறவற்றையெல்லாம் செய்வதற்கு அவர் கும்பலிலேயே ஆட்கள் இருக்கும்போது சிவகுமார் செய்யவில்லை என்று அவர் ஏன் கவலைப்பட வேண்டும் ?
சுந்தரமூர்த்தி எழுதிய இன்னொரு விஷயம். நான் காங்கிரஸ் இயக்கத்தின் மீது பற்று வைத்த தேசியவாதியாம். கேட்டால், இதை எந்தப் பொது நண்பர் சொன்னார் என்று கதையளக்கப் போகிறாரோ ? சுந்தரமூர்த்தி தேவலாம். இந்திய தேசியம் பேசுகிற எல்லாரையும் இந்துத்துவவாதிகள் என்று சொல்கிற நண்பர்களிடையே வாழ்கிற அவர் என்னைக் காங்கிரஸ் தேசியவாதி என்றாவது சொல்கிறார். இந்திய தேசியம் என்றால் ஒற்றைப்படையாகவோ இரட்டைப் படையாகவோ சிந்திப்பதன் விளைவு இது. இந்திய தேசியத்துக்குப் பல முகங்கள் உள்ளன. இந்தியாவில் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகள் கூட இந்திய தேசியம் பேசுகிறவர்கள்தான். தி.மு.க.வும் கூட இந்திய தேசியம் பேசுகிற கட்டாயத்தில் இருக்கிற காலம் இது. ஆனால், சுந்தரமூர்த்தி போன்றவர்களுக்கு எதிராளியை ஒரு குறிப்பிட்ட லேபிளுக்குள் அடைத்துவிட்டால், அவரைப் புறந்தள்ளிவிடுவது சுலபம். அதனால் என்னைக் காங்கிரஸ் தேசியவாதி என்கிறார். என்ன ஒரு கண்டுபிடிப்பு! சுந்தரமூர்த்தி எதற்கு ஆதரவு தருகிற நபர் என்று நானும் எழுத முடியும். எழுதினால், நான் காங்கிரஸ் தேசியவாதி என்று சுந்தரமூர்த்தி எழுதியதற்கு ஆதாரம் கேட்காத திண்ணைக் குழு என்னிடமும் ஆதாரம் கேட்கக்கூடாதுதான். ஆனாலும் அப்படி எழுதுவதில் அதில் நம்பிக்கையில்லை. சுந்தர மூர்த்தி என்னவாக இருந்தாலும், அவர் கருத்துகளின் மதிப்பை வைத்தே அவரை விமர்சிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இஜாஸ் அகமது தேசியம் பற்றிச் சொன்ன கருத்துகளை இதே திண்ணையில் யமுனா ராஜேந்திரன் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். யாரையும் எந்தத் தேசியவாதி என்றும் முத்திரைக் குத்துவதற்கு முன், இந்திய தேசியத்தையேகூட இடதுசாரிகள் எப்படித் தங்கள் கொள்கைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நான் அந்தக் கட்டுரையின்மூலம் உணர்ந்திருக்கிறேன். அதனால், சுந்தரமூர்த்திகள் லேபிள் ஒட்டுகிற வேலையின்கூடவே, கொஞ்சம் வாசிக்கிற வேலையும் செய்தால், இன்றில்லையென்றாலும் எதிர்காலத்தில் அடுத்தவர் உதவியை விவாதங்களில் எதிர்பாராமல் இருக்கிற வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், கடைசிவரை, அடுத்தவர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
மலர்மன்னனின் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை என் நண்பர் ஒருவர் வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார் என்று சுந்தரமூர்த்தி எழுதுகிறார். இதன்மூலம் மலர்மன்னனை ஆதரிக்கிறவர்கள் குழுவில் நானும் ஒருவன் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடலாம் என்று சுந்தரமூர்த்தி மனப்பால் குடிக்கிறார். அந்தக் கட்டுரையை வலைப்பதிவில் எடுத்து இட்டவர் டோண்டு ராகவன் என்று நம்புகிறேன். இணையத்தில் பலருடனும் அறிமுகம் உள்ளதுபோல டோண்டு ராகவன் அவர்களிடமும் இணைய அறிமுகம் மட்டுமே உண்டு. டோண்டு ராகவனின் அவர்களின் அரசியல் கருத்தாக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவருடன் சக மனிதனாக வாய்ப்பு கிடைத்தால் நட்பு வைத்துக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. கருத்தாக்கங்களை மீறி சகமனிதர்களிடம் நேசம் காட்ட விழைவதில் தவறில்லை என்று நம்புகிறவன் நான். அதைக்கூட தன் அரசியலுக்குச் சாதகமாக சுந்தரமூர்த்தி பயன்படுத்திக் கொள்வது ஆச்சரியமளிக்கவில்லை. டோண்டு அவர்கள் என் நண்பர் என்று சாயம் பூச முயற்சிக்கிற சுந்தரமூர்த்தி பணியாற்றுகிற , கோபால் ராஜாராம் தொடங்கி வைத்த விளக்கு அமைப்பில் நானும் தற்போது இணைந்திருக்கிறேன். சுந்தரமூர்த்தியுடனான இத்தகைய தொடர்பால் – அவர் வார்த்தையில் சொல்வதென்றால் நட்பால் – எனக்கு மற்றவர்கள் என்னென்ன சாயம் பூசுவார்களோ என்று சுந்தரமூர்த்தியின் லாஜிக்கை வைத்துப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. 🙂
அக்டோபர் 2003-இல் சுந்தரமூர்த்திக்குச் சொன்னதையே சற்று மாற்றி (இப்போதும் அவருக்குப் புரியும் என்று தோன்றவில்லை.) சுந்தரமூர்த்திக்குச் சுந்தர ராமசாமியின் கவிதை வரிகளினூடே செல்கிறேன்.
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னை கேட்காமலேனும் இரு.
இப்போது திண்ணை ஆசிரியர் குழுவின் சிந்தனைக்கு. சில வாரங்களுக்கு முன்னர், ‘சில சமயம் அப்படி எழுதுபவர்கள் தமிழ் விவாதத்தளத்தில் பொதுவாய் உள்ள ஒரு நசிவுப் போக்கைப் பிரதிபலிக்கும்போது அந்தப் போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும் என்பதால் அந்தப் பகுதிகளை நீக்காமலும் இருப்பதுண்டு. ‘ என்று விவாதங்களை நெறிப்படுத்துதல் குறித்து திண்ணை ஆசிரியர் எழுதியிருந்தார். எவருடைய நசிவுப் போக்கையோ திண்ணை விவாதிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தம் இல்லாத இன்னொருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும். ஆதாரமே இல்லாமல், திண்ணையில் நான் ஜாதி வெறியன் என்று ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். திண்ணை அதையும் பிரசுரித்தது. இப்போது காங்கிரஸ்வாதி என்று சுட்டப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி அல்லது மற்றவர்களின் நசிவுப் போக்கை திண்ணை ஆசிரியர்கள் விவாதிக்க விரும்பினால், ஒன்று திண்ணை ஆசிரியர்கள் அதைப் பற்றி வெளிப்படையாக எழுதலாம் அல்லது திண்ணையைப் பற்றி அல்லது திண்ணை ஆசிரியர்களைப் பற்றி மற்றவர்கள் ஆதாரம் இல்லாமல் எழுதுவதை மட்டுமே பிரசுரிக்கலாமே தவிர, மற்றவர்களைப் பலிகடா ஆக்குவது சரியா என்பது பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.
திண்ணை வாசக நண்பர்களுக்கு, இத்தகைய வீண்-சண்டைகளினூடேயும் சண்டைகளுக்கு வெளியேயும் இலக்கியமும் வாழ்க்கையும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன. அத்தகைய நல்ல பொழுதுகளில் ஒன்றில் திண்ணை வாசகர்களை மீண்டும் விரைவில் சந்திக்கிறேன். திண்ணை வாசகர்கள் இந்த மடலுக்கு என்னை மன்னிப்பார்களாக. விரைவில் சு.ரா.வுடனான உரையாடலின் தொடர்ச்சியுடன் உங்களிடம் மீண்டும் வருகிறேன். நன்றி. வணக்கம்.
– பி.கே. சிவகுமார்
pksivakumar@yahoo.com
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )