சீரணி அரங்கத்தில் பேரணி

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

மதுரபாரதி


பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று
லாரியில் ஏறிப் பட்டணம் போய்
முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப்
போகிற வழியெல்லாம்
யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு
கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின் ஜம்பரில்
அண்ணன் ரூபாய் சொருகக் கைதட்டி
புலியாட்டம் சிலம்பாட்டம் ஆடி
மலைத்து நின்ற பஸ் வரிசை பார்த்து
ஜன்னலோரப் பெண்ணுக்குக் கண்ணடித்து
அவள் முகந்திருப்ப இளித்து
அண்ணாசாலையில் வேர்வை தெளித்து
தொடை தெரிய வேட்டி மடித்துக் கட்டி
உலகத்தை உலுக்குவதாய்த்
தலைவர்கள் பேசுகையில் கொட்டாவி விட்டபடி
விஜயைப் பார்க்கமுடிந்தல் நன்றாக இருக்கும்
அஜித்தானாலும் பரவாயில்லை என நினைத்து
கூட்டம் முடிந்து ராவோடு ராவாய்ப்
புறப்பட்டு ஊர் வந்து இறங்கியதும்
அண்ணாச்சியிடம் சொன்னது
அடுத்தவாரம் எந்தக் கட்சிக்கு அண்ணே
என்னை மறந்துறாதே.

—-

Series Navigation

மதுரபாரதி

மதுரபாரதி