சில‌ ம‌ழை இர‌வுக‌ள்…

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

சீதா பாரதி



ஒரு மழை இரவில்
எதிரெதிர் திசைகளிலிருந்து
புறப்பட்டு
பயணிக்கிறோம்
தேற்ற விதிகளின்படி
ஏதோ ஒரு புள்ளியில்
சந்திக்க‌ வேண்டிய‌து
நிதர்சனங்களில்
ந‌ட‌க்காமலே
பயணம் தொடர‌
இரவெல்லாம் அடித்து
பெய்து கொண்டிருக்கிறது
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

அந்த‌ ம‌ழை இர‌வில்
ஜன்னல்கள் இல்லாத
‌அறையை
சபித்தபடியே
போர்வைக்குள்
சுருள்கிறேன்
நீ இருந்த‌ இர‌வுக‌ளின்
நினைவுகள் வருடியபடி
மெல்ல‌ தொட‌த்துவ‌ங்குகிற‌து
சாரல்

-0-0-0-0-0-0-0-0-0-0-

எதுவுமில்லை இனி
எனக் கூறி
பிரிந்துசென்ற
அன்றொரு இரவில்
ஜன்னல் வழி
கிழித்தெறிந்த‌
நினைவுத்துண்டங்களை
நனைத்து
புயலாய் முகத்தில்
அறைந்துபோகிறது
முடிவில்லாமல் நீளும்
இந்த இரவின்
மழை

-0-0-0-0-0-0-0-0-0-0-

மழை இரவுகளுக்கும்
உன‌க்கும் சில
‌ஓற்றுமைக‌ள்
உண்டு
அவையும்
பிரத்யேகமாய்
ஒரு நிறம்
ஒரு மணம்
ஒரு இசை
ஒரு மிதமான குளிர்
கொண்டிருக்கின்றன
நீ அருகில் இருக்கும்
சூழல்களைப்
போலவே

Series Navigation

சீதா பாரதி

சீதா பாரதி