சிலரின் கைகளில் விமர்சனம்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

ரிஷி



வெண்டைக்காய்த் துவையல் செய்வது எப்படி என்று
தான் கற்றுக் கொண்ட விதத்தை
சுருக்கமாக விவரித்தவாறே
தனது விமர்சனத்தைத் தொடங்குவார் அவர்-
பெரும்பாலும் ‘தேறாது’ என்ற
பிள்ளையார்சுழியோடு.
கையிலுள்ள கவிதைத் தொகுப்பிலிருந்து
அங்கொன்றும், இங்கொன்றுமாய் நாலைந்து வரிகளை
கைபோன போக்கில் கிள்ளியெடுத்து,
கால்பார்வையில் எடைபோட்டு,
“கடைவிரிக்கலாம்” என்று அனுமதி கொடுத்து
கூடவே “கொள்வாரிருக்க மாட்டார்” என்றும்
ஒரு மிதி மிதித்து
“நிச்சயமாய் நல்லாத் தான் எழுதியிருக்கார்” எனச் சொல்லி
உடனே
‘கவிஞன் நிம்மதிப் பெருமூச்சு விடலாகுமோ வென
“கடனே யென்று எழுதிய கவிதைகள் சில,
சிவனே யென்று எழுதிய கவிதைகள் சில,
மாத்திரம் இல்லாதிருந்தால்-
மூத்திரம் என்ற சொல் மட்டும் சிறுநீர்
எனத் தரப்பட்டிருந்தால்,
காத்திரம் கூடியிருக்கும்”, என்று
மீண்டும் தன் கூண்டுக்குள்ளிருந்து
காலத்தால் கந்தலான கவிதையொன்றை
ஞாலத்தினும் சாலப் பெரிதாய் எடுத்துக் காட்டுவார்.

“வடித்தால் சிற்பம்-
பொடித்தால் பல்பம்-
மடித்தால் பொட்டலம்-
விரித்தால் வரைபடம்-
என் எட்டாவது வகுப்பிலேயே கற்றுக் கொண்ட
வாழ்க்கைப்பாடம் இது”வென
அபசுரத்தில் ஆலாபனை செய்து
பல்லவி, அனுபல்லவி, சரணம் பாடி
நாத விற்பன்னர் ஆவார் நமது விமர்சகர்!

காதலோ, சாதலோ, பெண்ணியமோ, விண்ணியமோ-
ஆதலினால் அனைத்துக் கூட்டங்களிலும் முதல் வரிசையில்
நெஞ்சுயர்த்தி யமர்ந்தவாறு மேடையைக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார் இன்னொரு விமர்சகர்.
அவர் கடைக்கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.
அதி முக்கியமாக, பணம் பதவியுள்ள படைப்பாளிகள்.

அதற்கும் மேல், இருக்கவே இருக்கிறது தொலைபேசி!
சக கவிகள் சொல்லாத சேதிகள் பலவற்றை
வீடு வீடாய், அரங்கு அரங்காய்ப் போய்த் திரட்டியெடுத்து,
தேவையான, தனதேயான
மேலதிகக் குறிப்புகளோடு தருவதற்கென்றே உண்டு
சில நீக்குபோக்கு மேம்போக்குக் கவிஞர்,கவிதாயினிகள்.
வேண்டும்போது அவற்றில் ஏழெட்டை
வெட்டி யொட்டி
விமர்சனமாய் சுட்டு வினியோகிப்பார்
வேறொரு விமர்சகர்.

வெகுண்டெழுவார் இன்னொருவர்:
“கப்பம் கட்டச் சொல்பவனும்
கவிதை கட்டச் சொல்வானோ..?
வெல்வானோ இக்கவிஞன்?
சொல்வேனோ நானும் இவனைக் கவியென…
நான் காணா வரியிடை வரிகளைக் காணும் கண்கள்
அவிந்து போகக் கடவது
அவனிவனென ஆயிரம் கவிஞர்கள்
யாரைச் சொன்னால் எனக்குப் பயனுண்டோ
அவர் பேர் கண்டிப்பாக இடம்பெறும்
என்றும் மாறியவாறிருக்கும் என்
தரநிர்ணயப்பட்டியலில்”.

“பாரீஸ் இலக்கிய விழாவுக்குப் போகக் கிடைப்பது முதல்
பாரீஸ் கார்னரில் அலைந்து திரிந்து ஆரஞ்சுப் பழங்கள்
வாங்கித் தருவது வரை,
பெட்டி தூக்குவது முதல்
போற்றிப் பரவுவது வரை
பயனென்றால் ஒன்றா, இரண்டா – எடுத்துச் சொல்ல…?
திறனாய்வுப் பேராசானாய் நான் துதிக்கப்பட
தொண்டரடிப்பொடியார்கள் அதிகம் தேவை.
கவிதையெழுதுபவன் கவிஞன் எனில்
அவனையே எழுதுபவன் நான்;
அவன் கவிதை கவிதையாவதும் என்னால் தான்.
கோர்வையாய் நான்கு வார்த்தைகள் கிடைத்தாலும் போதும்
நாவாட சொல்லியா தர வேண்டும்…
ஆடுவேன், பாடுவேன், சுயங்கூடிய கவிஞர்களை
அடங்காப்பிடாரிகளென ஓட ஓட விரட்டுவேன்.
தடுக்கி விழுந்தாலும் பரவாயில்லை-
தாமதமில்லாமல் சாமரம் வீச ஆள் சேர்க்க வேண்டும்…”

கவிதையில் பூடகத்தன்மை யிருந்தால்
“அது கச்சடா” என்பார்.
அட கஷ்ட காலமே_
கருத்துரீதியாய் பொருதும் கதியற்று
இஷ்டதெய்வத்தைத் துணைக்கழைத்தவாறிருப்பார்
இன்னொரு விமர்சகர்.
மூலமே சூன்யமென்று ஞானம் பெற்றார் நம்
முன்னோர்கள் பலர்.
ஞானமே சூன்யமாகிப் போய் விட்டால்
நற்கதியேது ஆன்மாவுக்கு?

கொட்டு முரசே,திக்கெட்டும் கொட்டு முரசே!
தன்முனைப்புத் திறனாய்வாளர்கள் கொட்டம் அடங்கவே!
விட்டு விடுதலையாவோம் எனக் கொட்டு முரசே!
ஒற்றைக் குரல் விமர்சனம் ஒழிக ஒழிகவே!!


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி