சிலந்தி வலை சிக்கல்கள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


சிலந்தி வலையை, பெரும்பாலும் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! அதுவும் காலைப் பொழுதில், பனித்துகள்கள் படர்ந்து, சூரியக்கிரணங்கள் பட்டு, தகதகக்கும் வலைகளைக் காண, கண் கோடி வேண்டும். பொதுவாக, சிலந்தியை ‘எட்டுக்கால்பூச்சி ‘ என்று சொல்வோம். ஆனால் அப்படி சொல்வது தகாது. ஏன் தொியுமா ? எந்தவொரு கணுக்காலிக்கு, இரண்டு சோடி இறக்கைகளும், மூன்று சோடி கால்களும் இருக்கின்றதோ, அந்த கணுக்காலி மட்டுமே பூச்சி என்ற வரையறைக்குள் வரும். அது சரி, எறும்புகளுக்கும், கரையான்களுக்கும் இறக்கையா இருக்கிறது ? அப்புறம் எப்படி அவை பூச்சியாகும் ? மழைக்காலத்தில் எறும்புகளுக்கும், கரையான்களுக்கும் இறக்கை முளைக்கும். எனவே, அவையும் பூச்சியே! ஆனால் ஒருசில விதிவிலக்காக, பேன், கோழிப்பேன் போன்றவைக்கு பரிணாம வளர்ச்சியில் இறக்கை இல்லாவிடினும், அவை பூச்சியாகவே கருதப்படுகின்றன. ஆனால் சிலந்திகள் அப்படி அல்ல! அவை முற்றிலும் ஒரு புதிய இனம் !!

சிலந்திகள் வேடர்களைப் போல வலை விரித்து வேட்டையாடுவதில் மகா சமர்த்து. சிலந்திகள் தங்கள் வலைகளைப் பின்னும் முறையே மிக மிக அழகாக இருக்கும். பட்டுப்புழுக்களுக்கு இருப்பதைப் போல், சிலந்திகளுக்கும் பட்டு சுரப்பிகள் உண்டு. அவை வயிற்றின் கடைக்கோடியில் இருக்கும். இந்த பட்டு சுரப்பிகளை அழுத்தும்போது, ஜிலேபி போடும்போது, மாவை ஒரு சிறிய துணி மூட்டையில் வைத்து, முறுக்கிப் பிழிகையில், துணி மூட்டையிலுள்ள சிறிய துளை மூலம் மாவு பிதுங்கிக்கொண்டுி வெளியில் வருவதைப் போல, பட்டு இழைகள்வெளியில் வரும். அவ்வாறு வந்தவுடன், அந்த பட்டு இழைகள் வெளிக்காற்றுடன் சேர்ந்து இறுகி, வலிவான பட்டு இழைகளாக மாறும். இந்த இழைகள்தான், வலிமையான சிலந்தி வலைகளின் அடித்தளம். சரி, வலையை எப்படி பின்னும் தொியுமா ?

மேலே உள்ள படங்களைப் பாருங்கள். படம் 1 இல் உள்ளதைப் போல, முதலில் ஒரு பட்டு இழையை, இரண்டு பக்ககளில் இணைக்கும். மீண்டும் மீண்டும் அவற்றின்மீது பட்டு இழைகளைப் பரப்பி வலிமையான அடித்தளமாக்கும். அந்த அடித்தளத்திலிருந்து, படம் 2 இல் உள்ளதைப் போல, ஒரு பட்டு இழையை V வடிவில் தொங்கவிிடும். அதை பிறகு Y வடிவிற்குபடம் 3 இல் உள்ளதைப் போல மாற்றும். பிறகு படம் 4 இல் உள்ளதைப் போல, சம தூரங்களில் ஆரங்களை அமைக்கும். பிறகு அந்த ஆரங்களை, படம் 5 இல் உள்ளதைப் போல, குறுக்குவாக்கில்பட்டு இழைகளைப் பரப்பி இணைக்கும். ஆக, முழுமையான சிலந்தி வலை ரெடி!

பிறகு ஜாலியாக, வலையின் மையத்தில் ஒன்றுமே தொியாததைப் போல படுபாந்தமாய் உட்கார்ந்து இருக்கும். அப்பாவி இரை ஏதும் வலைக்குள் வந்தால் மாட்டிக்கொள்ளும். இதற்காக வலையின்மீது ஒருவித பசையை பூசி வைத்திருக்கும். ஆனால் சிலந்தியின் கால்களில் ஒருவித எண்ணை சுரப்பதால், சிலந்திகள் தங்கள் வலைகளில் மாட்டிக்கொள்ளாது! வேட்டையாடுவதால் வலை சேதமானால், மீண்டும் பட்டு இழைகளை சுரந்து சரிசெய்துவிடும்.

அது சரி, மாம்பழத்தில் துளை இல்லை…. ஆனால் உள்ளே வண்டு! அது எப்படி ? …. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்