சிலந்தி

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

பசுபதி


தினமும் தியானம் தனியறையில் — ஒரு
. . சீடன் செய்யத் தொடங்கியதும்
மனதிற் கச்சம் தருமுறையில் — ஒரு
. . மர்மப் பூச்சி தோன்றியது. (1)

கரிய உருவில் சிலந்தியொன்று — அவன்
. . கண்முன் தொங்கும் உணர்வடைந்தான்.
சிறிய தென்று தோன்றிடினும் — அதன்
. . தேகம் தினமும் பெருத்ததுவே. (2)

இடிதன் தலைமேல் விழுந்ததென — குரு
. . எதிரில் சீடன் போய்ப்பகர்ந்தான்:
‘மடியில் கத்தி மறைத்திருந்து — சிலந்தி
. . வந்தால் வெட்டி வதைத்திடுவேன். ‘ (3)

‘இந்தா ‘ என்று சாக்கட்டி — குரு
. . எடுத்துக் கொடுத்தார் சீடனிடம்.
வந்தால் வெட்டிக் கொல்லாமல் — அதன்மேல்
. . வட்டக் குறியை இடச்சொன்னார். (4)

நிட்டை குலைத்த பூச்சியின்மேல் — என்றும்
. . நிலைக்கும் படிசாக் கட்டியினால்
வட்டக் குறியை வயிற்றிலிட்டு — சீடன்
. . மறுநாள் குருவைப் போய்ப்பார்த்தான். (5)

சட்டை கழற்றக் குருசொல்ல — சீடன்
. . தயக்கம் இன்றி அடிபணிந்தான்.
வட்ட வெள்ளைக் குறியொன்று — சீடன்
. . வயிற்றின் நடுவில் மின்னியது ! (6)

[ ஆதாரம்: ஒரு திபேத்தியக் கதை.]

~*~o0o~*~

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி