சிந்திக்க ஒரு நொடி : தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

வாஸந்தி


சர்வாதிகாரமே வலுவான கட்சியின் அடையாளம்

தமிழகத்துப் பிரதான திராவிடக் கட்சிகளுக்குள் ஜனநாயகம் சாத்தியமில்லை

‘அரசியலில் பாமரமக்கள் பங்கேற்பதற்கும் சர்வாதிகார தலைமை உருவாவதற்கும் தொடர்பு

இருக்கிறதா ? ‘ என்கிற கேள்வியை அமெரிக்க அரசியல் ஆய்வாளர் மார்கரெட் கனொவன் எழுப்புகிறார்.

சமதர்மம், சம நீதி சம உரிமை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஜன நாயகமும் வாக்குரிமையும் உண்மையில் தனி நபர் உயர்வுக்கும் அவருக்கு மண்டியிட்டு ஆராதிக்கும் கூட்டத்தை உருவாக்கவுமே வழி அமைப்பதாகச் சொல்கிறார். ஜன ரஞ்சக அரசியல் பற்றின விவாதத்தின் போதெல்லாம் உலக அரங்கில் இந்தக் கேள்வி எழுப்பபடுகிறது. ஜனநாயகம் என்ற சித்தாந்தத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவர்களால் நிராகரிக்கப்படுகிறது. அதிகபட்ச மக்களின் அரசியல் பங்கேற்பு ஜனநாயக விரோத தலைவர்களை, இயக்கங்களை, கவிழ்க்கும் சக்திகொண்டவை என்று வாதாடப்படுகிறது.

ஜனநாயகத்தைப்பற்றி நம்பிக்கையற்று கேள்வி எழுப்புபவர்கள் தமிழ் நாட்டு திராவிடக் கட்சிகளின்

தலைமையைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கக் கூடும்.உலகத்து மிகப் பெரிய ஜனநாயகம் என்று பீற்றிக்கொள்ளப்படும் இந்திய அரசியல் அமைப்பின் மிக விசித்திரமான முரண்பாடு என்று இந்திய ஆய்வாளர் அட்டுல் கோஹ்லி குறிப்பிடுவது தமிழ் நாட்டுக்கே மிகச் சரியாகப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஜனநாயக அரசியல் அமைப்பின் கோபுரம் அதிக பட்ச மக்களைத் தொடும்படியாகக் கீழே விரிந்துகொண்டு போனாலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தனி நபர் தலைவர்களின் தன்னிச்சையான, சுயநல முடிவுகளே நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிப்பதாக கோஹ்லி குறிப்பிடுகிறார். இந்த ‘முரண்பாட்டின் ‘ விசேஷம் என்னவென்றால், அரசியல் சமத்துவத்தைப் பற்றின விழிப்புணர்வும் அறிவார்த்த புரிதலும் அதிகரிக்க அதிகரிக்க, தனி நபர் ஆளுமையும், வழிபாடும், தலைமையின் சர்வாதிகாரத்துக்கு அடிபணிதலும்

கூடுகிறது.இதற்கு திராவிடக் கட்சிகளைவிட சிறந்த உதாரணம் எங்கு கிடைக்கும் ? தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் துணையுடன் கட்சித் தொண்டர்களின் விசுவாசத்தை சம்பாதித்துக் கொண்ட நமது தலைவர் தலைவிகளின் சாமர்த்தியம் வேறு எந்த மாநிலத்தவருக்கு வரும் ? நில ஆதிக்க மரபுச் சிந்தனை விலகாத, விமர்சிக்கும் எண்ணம் வராத தமிழர்கள் கட்சித் தொண்டர்கள். அவர்களை உணர்வுபூர்வமாக உசுப்பிவிடுவது சுலபம். ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்று பேரன்பு பொங்க தி.மு.க.தலைவர் அழைத்தால் அவருக்காகத் தமது ரத்தத்தைச் சிந்தத் துடித்து எழும் உணர்வின் உச்சத்துக்கு ஆட்படும்

மனோபாவம் கொண்ட மண் இது. தமிழ் மண்.அதன் குணமே அலாதி. அதனால் ‘உங்கள் அண்ணன் நான் சொல்கிறேன் தம்பி, உனது நலனுக்காக ‘ என்று தனது நலனைக் கருத்தில் கொண்டு சொன்னாலும் , தம்பிமார்கள், ‘ தலைவா கட்டளை இடு, நீ கட்டிக்கொண்டுவரச் சொன்னால் நாங்கள் வெட்டிக்கொண்டுவரத் தயாராயிருக்கிறோம் ‘ என்பார்கள் விசுவாசத்துடன். கட்சிக்குப் பெண் தலைவி என்றால் இன்னும் விசேஷம். சுலபமாகத் தாய் ஸ்தானத்தை அடையலாம். ‘தாயே ‘ என்று அழைப்பது புனித உணர்வின் வெளிப்பாடு. தமிழ் மறக்குடி மக்களின் சரித்திரத்தில் தாய்க்காகச் செய்யப்பட்டிருக்கும் தியாகங்கள் காவியப்

பரிமாணங்கள் கொண்டவை. ‘எனது இனிய கழகக் கண்மணிகளே ‘ என்று தலைவி விளிப்பதில் எந்த அசம்பாவிதமும் இல்லை. அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல் வருமான ஜெயலலிதாவின் அரசு எந்த திட்டத்தை நடைமுறை படுத்தினாலும் அது ஒரு தாயின் பரிவன்புடன் செய்யப்படுவதாக

அமைச்சர்களும் கட்சித்தொண்டர்களும் மட்டுமில்லை அரசு அதிகாரிகள், நடிகர்கள், என்று கட்சிக்கு சம்பந்தமில்லாத இன்னபிற பிரஜைகள் எல்லோருமே மெய்ம் மறப்பது வழக்கமாகிவிட்டது. தலைமைக்கும்

மற்றவர்களுக்கும் சமத்துவம் இருக்கமுடியாது என்பதை ஒட்டுமொத்த சமூகமே அங்கீகரிக்கிறது.

ஆ, அதுதான் தலைவர்கள் வகுத்த வியூகம். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு கட்சிகளின் பொதுக் குழு கூட்டங்கள் நடந்த தோரணையே அதற்கு அத்தாட்சி.

சமத்துவம் என்பது அதிகாரப் பகிர்வு.சமத்துவம் என்பது கருத்துப் பரிமாற்றம். தலைவர் தொண்டர் என்ற வேறுபாடு இல்லாமல் கலந்து எடுக்கப்படும் முடிவு. அது நடைமுறைபடுத்தப்பட்டால் அனர்த்தம். கட்சி கட்டுக்குள் இருக்காது. தலைக்குத்தலை அம்பலம் என்கிற நிலை ஏற்பட்டால், தலைவர் ஒரு பூஜ்யமாக மாறும் அபாயம் உண்டு.

அதன் பிரக்ஞை இல்லாத தலைவர் தலைவராக நீடிக்கமுடியாது.ஆனால் வருடத்துக்கு ஒரு முறை பொதுக் குழு கூட்டம் கூடவேண்டியது தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் கட்டாயம். ஜனநாயக மரபைப் பேணும் கட்சி என்ற அடையாளம் தேவை. அதை உண்மை என்று மயங்கி கட்சிக்காரர்கள் தமது கருத்தை

சொன்னால் அது ரசிக்கப்படாது என்பது கடந்த முப்பது ஆண்டுகளாகக் கழகத் தொண்டர்கள் அறிந்த உண்மை. அதிமுக கூட்டத்தில், ஒருவர் கட்சிக்காரர்களின் சார்பில் அவர்களது ‘பாதிப்பை ‘ சொல்லப்

போக,தலைவி புருவத்தை உயர்த்துவதற்குமுன் ‘அம்மாவுக்கு யாரும் புத்திசொல்லவேண்டாம் ‘ என்று உட்கார்த்தி வைக்கப் படுகிறார். திமுக கூட்டத்தில் , கட்சியில் உட்கட்சி கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருவதாக, பல அணிகளாகச் செயல்படுவதாகக் கருத்து முன்வைக்கப்பட்டது. அப்படி செயல்படும் அணிகளின் வாலை ஒட்ட நறுக்குவோம் என்று தலைவர் முழங்கியதும் எல்லோரும் வாலைச் சுருட்டிக்கொண்டார்கள். கோஷ்டிப் பூசல்களுக்குக் காரணமே உமது இரு மகன்கள் அண்ணே என்று சொல்லும் தைரியம் எந்த உடன்பிறப்புக்கும் இல்லை.எதிர்க்கும் துணிச்சல் வரும்போது, கட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் அறிவார்கள். தலைவரின் ஆளுமையும் வசீகரமுமே கட்சியின் முகம் என்பதும், தொண்டர்களின் விசுவாசமே கட்சியின் பலம் என்பதும், ஒருவர் சர்வாதிகாரம் செய்ய மற்றவர் அடிபணிய அனுமதிக்கும் போக்கே பரஸ்பர லாபமளிக்கும் வியூகம் என்பதும் எழுதப்படாத விதி.

இது ஜனநாயக சித்தாந்தத்தின் கோளாறல்ல. கட்சி அரசியலின் கோளாறு.

ஆனால் ஒரு விஷயம். கட்சித் தொண்டர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்க நேர்ந்தாலும், பாமர வேட்பாளன் ‘நாமார்க்கும் குடியல்லோம் ‘ என்ற கர்வத்துடன் தனது கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.முரண்பாட்டை சரி செய்ய வாய்ப்பு.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி