சாம்பல்நிறப் பூனை

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

கோகுலன்


ஒரு சனிக்கிழமை காலை வேளையில்தான் அந்தப்பூனை முதன் முதலாக என் கண்ணில் பட்டது. அடர் சாம்பல் நிறம். சப்பையான முகம். நீளமான மீசை முடிகள். . உடம்பு முழுவதும் பொசுபொசுவென முடிக்கற்றைகள். கத்தி போன்று கூர்மையான கண்கள். வழக்கமாகக் காணும் பூனைகளை விட சற்று தடித்த உருவத்துடன் இருந்தது. தொலைவிலிருந்து பார்ப்பவர்கள் அதை நாய்க்குட்டி என்றே நினைப்பார்கள்.

அதற்குத் தாகம் எடுத்திருக்கும் போலும். முன்னங்கால் இரண்டையும் நீச்சல்குளத்தின் விளிம்பில் கவனமாய்ப் பற்றிக்கொண்டு, உடல் முழுவதையும் பின்னுக்கு இழுத்து தலையைத் தாழ்த்தி தண்ணீர் குடிக்க முயன்றுகொண்டிருந்தது. ஆனால் எவ்வளவுதான் தாழ்ந்தும் அதற்குத் தண்ணீர் எட்டவில்லை. அது நின்று கொண்டிருந்த இடம் தண்ணீர் குடிப்பதற்கு வசதியான இடமில்லை.

தண்ணீர் குடிக்க வசதியான இடங்களைப் பறவைகள் தெரிந்து வைத்திருக்கின்றன. சுற்றியுள்ள வீட்டுக் கூரைகளில் கூடு கட்டியிருக்கும் அநேக புறாக்களும் குருவிகளும் இங்குதான் வந்து தண்ணீர் குடிக்கும். எதிர்ப்பக்கம் இருக்கிற கருங்கல் பதித்த சரிவில் குதித்துக் குதித்து இறங்கிவந்து தண்ணீர் குடித்துவிட்டு விருட்டென பறந்து செல்லும்.

பின்புற பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மனது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. குளத்தின் நீர் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் கிருமிகளைக் கொல்வதற்கும் மாதாமாதம் உள்ளங்கையளவு குளோரின் மாத்திரைகளையும் வேறு சில மருந்துப்பொருட்களையும் நான் தான் குளத்தில் கரைக்கிறேன். பறவைகள் குடிப்பதற்கென்று தனியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தாலும் ஒரு பறவை கூட அதைச் சீண்டுவதில்லை. பூனையும்கூட பாத்திரத்தில் இருந்த நீரை கண்டுகொள்ளவேயில்லை.

தண்ணீர் குடிக்க முடியாமல் போனதும், பின்னங்கால்களை மடக்கி அமர்ந்துகொண்டு குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. பாத்திரத்தில் இருந்த நீரை எடுத்து அதன் அருகில் வைக்கலாம் என்று கீழே இறங்கிச் சென்று கதவைத் திறந்தபொழுது, சத்தம் கேட்டு ஓடிப்போய் மதில் சுவரின்மேல் ஏறிக்கொண்டது.

யார் வீட்டிலாவது ராஜ வாழ்க்கை வாழ்ந்திருந்து வழிதவறி இங்கே வந்திருக்க வேண்டும். மேல் மற்றும் கீழ் வீட்டுக்காரர்கள் மெக்ஸிகோ நாட்டவர்கள். இரு வீடுகளிலும் நாய் உண்டே தவிர பூனை இருந்ததாகத் தெரியவில்லை. பின்பக்கத் தெருவில் யாருடைய வீட்டிலிருந்தாவது வந்திருக்கலாம். பூனையைப் பற்றி நான்தான் கவலைப்பட்டேனே தவிர, அது மதிற்சுவரின் மேல் ஊர்ந்து கொண்டிருந்த பல்லியை துரத்துவதாகவும் விளையாடுவதாகவும் இருந்தது.

” ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதுடா.. ”

அண்ணன் கொஞ்சம் கோபமாகத்தான் சொன்னான். இருக்காதா பின்னே, பலமுறை சொல்லியும் கேட்காமல் திரும்பத் திரும்ப பாலை ஊற்றிக்கொண்டுபோய் வைத்தால் கோபம் வராமல் என்ன செய்யும். அவனும் பூனைக்குச் சாப்பாடு வைக்க வேண்டாம், அது வந்த மாதிரியே போய்விடும் என்று சொல்லிக்கொண்டு தான் இருந்தான். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.

பூனையோ யாரோ ஒருவருக்குச் சொந்தமானது. அங்கு அது செல்லமாக வளர்ந்திருக்கும். திடீரென பூனைக்குச் சொந்தக்காரர் ஒருநாள் வந்து நான் கொடுத்த உணவால்தான் பூனைக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, இல்லை இறந்து விட்டது என்று சொன்னால் என்ன செய்வது. அத்தோடு விட்டால்கூட பரவாயில்லை, அதற்கு நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இதுபோன்ற வழக்குகளை இந்த நாட்டில் சர்வ சாதாரணம் என்றாலும் கூட யாருக்கும் தெரியாமல் நான் சாப்பாடு வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு முறையும் அக்கம்பக்கத்தில் யாரேனும் பார்க்கிறார்களா என்று மட்டும் ஒரு பார்வை பார்த்துக்கொள்வேன்.

அண்ணன் பூனை பற்றிய தகவலை கம்யூனிட்டி ஆஃபீஸில் தெரியப்படுத்தினான். போஸ்ட் பாக்ஸ் முதலான முக்கியப் பகுதிகளில் நோட்டீஸ் எழுதி ஒட்டினான். இருந்தும் பலனில்லை. பூனையைத் தேடி யாரும் வரவில்லை.

ப்ளூ க்ராஸிலும்கூட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பூனையை வந்து பிடித்துச் செல்ல மறுத்துவிட்டார்கள். அவர்கள் கவனத்தில் பூனைகளைக் காட்டிலும் நாய்களே முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒருவேளை பூனையை நாமே பிடித்துச்சென்று அவர்களிடம் ஒப்படைத்தால் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் பூனையைப் பிடிப்பதில் எங்களுக்கு இருந்த தயக்கம் அதன்பின்பு சோம்பேறித்தனமாக மாறிப்போனது.

ஒரு மாதத்தில் எல்லாம் பூனை நன்றாகப் பழகியிருந்தது. வாசற்கதவைத் திறக்கும் போது ஓடிவந்து காலைச் சுற்றும். தரையில் விழுந்து புரளும். கராஜிலிருந்து காரை வெளியில் எடுப்பதும் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. கதவைத் திறந்தவுடன் ஆரவாரத்துடன் அங்குமிங்கும் ஓடும் பூனை கார்ச் சக்கரத்தில் அகப்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கும். பெரும்பாலும் அண்ணன் காரை பின்னால் எடுக்கும்போது நான் என் கால்களுக்கிடையில் பூனையைக் கிடுக்கிக்கொண்டு நிற்பேன். அதுபோல் வீட்டிற்குள் நுழையும்போதும் காலைச் சுற்றிக்கொண்டு நம்முடனே வர முயற்சிக்கும். அதை வெளியிலேயே தடுத்து நிறுத்திவிட்டு கதவை மூடுவதும் மனதுக்கு கஷ்டமான விஷயம்.

” இத என் ரூம்ல வச்சு வளத்துக்கட்டுமா.. ” அண்ணன் எப்படியும் சம்மதிக்கப்போவதில்லை எனத் தெரிந்தும் ஒருநாள் கேட்டேன்.

கூண்டுக்குள் அடைத்துவைத்து கிளி வளர்ப்பதற்கே மறுத்துவிட்ட அண்ணி ” வேணவே வேணாம் ” என்று முந்திக்கொண்டு பதிலளித்தார்கள்.

அண்ணிக்கு நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமில்லை என்பதைக் காட்டிலும் வீட்டில் சுத்தம் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பூனையின் முடி விஷம் என்றும் அது சாப்பாட்டில் விழுந்துவிடும் என்றும் அடிக்கடி சொல்வார்கள்.

ஒரு நாள் அண்ணி முன்கதவைத் திறந்தபோது பூனை வேகமாக ஓடிவந்து காலைச் சுற்றியதும் பயந்து அலறிவிட்டார்கள். அது என்னால்தான் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது என்று எனக்கு கொஞ்சம் திட்டும் கிடைத்தது. மற்றொரு நாள் கதவைத் திறந்தபொழுது அது வீட்டிற்குள்ளேயே ஓடி வந்துவிட்டது. அண்ணியின் சத்தத்தில் பயந்துபோய் அங்குமிங்கும் ஓடி படியேறி மாடிக்குச் சென்றுவிட்டது. நான் தான் அதைப் பிடித்து வெளியில் கொண்டுபோய் விட்டேன். அதன்பின் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் கழுவிச் சுத்தம் செய்த பிறகுதான் அண்ணிக்கு நிம்மதி.

சிறிது நாட்களில் அண்ணனுக்கும் கூட பூனையைப் பிடித்துவிட்டது. நான் வைக்கிற பால் ஊற்றிய சாதத்தையோ, சமைத்த இறைச்சித் துண்டுகளையோ பல நேரங்களில் அது முகர்ந்து மட்டும் பார்த்துவிட்டுச் சாப்பிடாமல் சென்றுவிடுவதால், அதற்கெனவே கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அண்ணன் வாங்கி வந்தான். இதற்கு முன்பிருந்த வீட்டிலும் இதுபோன்ற தீவனங்களைத் தான் சாப்பிட்டு வளர்ந்திருக்கும் போலும். பாலுடன் கலந்து வைக்கப்பட்ட அந்தத் தீவனத்தை ஒவ்வொரு முறையும் மீதம் வைக்காமல் நன்றாகச் சாப்பிட்டது.

கடுங்குளிர் காலமும் வந்துபோய் விட்டது. குளிர் காலத்திலும் சரி, அதன்பின்னும் சரி, பூனை வேறு எங்கும் செல்லவில்லை. பின்புறத்தோட்டத்தில் மதில் சுவரின் மேல் என இங்குதான் சுற்றிக்கொண்டிருந்தது. மேற்குப் பக்கத்தில் மதிற்சுவர் ஆரம்பிக்கும் இடம் தூண் போன்று இருக்கும். அதன் உச்சிப்பகுதி தட்டையாக அகலமாக இருந்ததால் பூனை வழக்கமாக அங்கேயே படுத்துக்கொண்டது. முன்னால் இருந்த மரத்தின் கிளைகள் நன்றாக மூடியிருந்ததால் அந்த இடம் பாதுகாப்பாகவும் இருந்தது. மேலும் அந்த இடம் மாடியிலிருக்கும் எனது அறை ஜன்னலிலிருந்து கைக்கு எட்டுகின்ற தொலைவிலேயே இருந்தது.

நான் எழுத்து மேசையில் அமர்ந்து திரைச்சீலையை விலக்கும் போதெல்லாம் அங்கே படுத்திருக்கும் பூனை, முன்பக்கத்துச் சரிந்த கூரைக்குத் தாவி ஜன்னலுக்கு அருகில் வந்துவிடும். பக்கவாட்டில் உருளும் கண்ணாடிக் கதவுக்குப் பின்னே உருண்டு புரண்டு விளையாடிக்கொண்டிருக்கும்.

வீட்டின் ஜன்னல் கதவுகள் எப்பொழுதும் பூட்டியே இருக்கும். முன்னாலிருக்கும் மரம் பூக்கும் காலத்தில் மட்டும் சிலநேரம் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பேன். வேப்பம் பூக்கள் போன்றிருக்கும் அந்தப் பூக்களின் நறுமணம் அறைக்குள் இதமாகப் பரவுவது எனக்குப் பிடிக்கும்.

பூனையுடன் விளையாடுவதற்காகவும் சில நேரங்களில் ஜன்னல் கதவுகளைத் திறப்பதுண்டு. சிறிய அளவிலேயே திறந்திருக்கும் அந்த ஜன்னலின் வழியே பூனை அடிக்கடி உள்ளே வர முயற்சிக்கும். அப்பொழுதெல்லாம் நான் சட்டென கைகளை மறித்துத் தடுத்துவிடுவேன். அப்படித் தடுக்கும்போது அது ஜன்னலின் வெளிப்புறத் திண்டைப் பற்றிக்கொண்டு லாவகமாக அமர்ந்துகொள்ளும்.

ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. உள்ளே நுழைந்த பூனையை சட்டெனத் தடுத்தபோது அது நிலை தடுமாறி முன்பக்கத் தாழ்வான கூரையில் விழுந்தது. மேலும் அது சரிவான கூரை என்பதால் வலப்பக்கமாக உருண்டு தரையில்போய் தொப்பென விழுந்தது.

நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. அது உள்ளே வந்திருந்தால்தான் என்ன? அதிகபட்சமாக வீடு முழுவதும் ஓடியிருந்தால்தான் என்ன, அண்ணி கொஞ்சம் கோபப்பட்டிருப்பார்கள். பரவாயில்லை, வீட்டை ஒருமுறை கழுவித்துடைத்து விட்டால் சரியாகிப் போயிருக்கும். என்னை அறியாமல் நடந்துவிட்டபொழுதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனது கொஞ்சம்கூட சமாதனம் ஆகவில்லை.

பூனை எந்த உயரத்தில் இருந்து எந்த நிலையில் விழுந்தாலும் தரையைத் தொடும்போது நான்கு கால்களையும் ஊன்றி நிற்குமென்று அறிந்திருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அப்பொழுது அந்தப் பூனை எப்படி விழுந்தது என்று என் கண்களுக்குத் தெரியவில்லை.

கீழே சென்று பார்த்தபொழுது விழுந்த இடத்திலேயே நின்றிருந்தது. அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். உடம்பில் அடி பட்டது போன்று எதுவும் தெரியவில்லை. அதன் முடிக்கற்றைக்குள் விரல்களை நுழைத்து வருடிக்கொடுத்தேன். அப்பொழுது அது என் காலைச் சுற்றவோ தரையில் உருண்டு புரளவோ இல்லை.

சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு சாலையைக் கடந்து எதிர்வீட்டுப் புல்வெளிக்குச் சென்று அங்கே கிடந்த ஒரு கருங்கல்லில் படுத்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து தானாகவே திரும்பி வந்துவிடும் என்று நினைத்து வீட்டிற்குள் வந்துவிட்டேன். இருந்தாலும் அன்றைய நாள்முழுவதும் குற்ற உணர்வுடன் ஜன்னலின் வழியே பூனையை கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.

மாலை வரையிலும் எதிர்வீட்டுப் புல்வெளியிலும் தோட்டத்திலும் சுற்றிக்கொண்டிருந்த பூனை அதன்பின் என் கண்களில் படவேயில்லை. பல பகுதிகளில் ” காணவில்லை ” என நோட்டீஸ் ஒட்டியும் இன்று வரைக்கும் எந்தத் தகவலும் இல்லை.


gokulankannan@gmail.com

Series Navigation

கோகுலன்

கோகுலன்