சாமியின் தந்தை..

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

T.V.ராதாகிருஷ்ணன்


தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என
அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார்
அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது
செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்..

சாமியைப் பார்த்து இன்ஸ்பெக்டர்..’இதோ பாருய்யா..இப்ப எல்லாம்
அப்பா,அம்மாவைக் கவனிக்கலைன்னா கைது பண்ணிடுவோம்..நீதிமன்றத்தில உன்
பேர்ல வழக்கு போடுவோம்..சிறையில் அடைப்போம்’ என்றார்.

அதற்கு சாமி..’ஐயா..இதுநாள் வரை என் தந்தையை நான் காப்பாற்றி
வந்தேன்..ஆனால்..அவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றை அவர்
செய்யவில்லை..அதனால்..தந்தை விட்டுச் சென்ற பணியை மேற்கொள்ள வேண்டியதும்
ஒரு மகனின் கடமை என்பதால்..அக்கடமையைச் செய்துக் கொண்டிருக்கிறேன்.என்
தந்தை அவர் கடமையை ஏற்றுக் கொள்ளட்டும்..பின் நானும் என் தந்தையை
காக்கும் பணியை குறைவில்லாமல் செய்கிறேன்’ என்றான்..

‘இது என்னய்யா..புதுக்கதை’ என்ற அருணாசலம்..’உன் தந்தை செய்ய மறந்த கடமை
என்ன?’ என்றார்,

இவ்வளவு நேரம் வாசலில் நின்றுக்கொண்டிருந்த் 85 வயது முதியவரை
‘தாத்தா..உள்ள வாங்க’ என்று அழைத்தான் சாமி.

முதியவர் உள்ளே வர..சாமி அதிகாரியைப் பார்த்து..’ இவர் என்
தாத்தா..அதாவது..நான் அவரைக் கவனிக்கவில்லை என உங்களிடம் புகார்
அளித்தாரே..அவரின் தந்தை..இவரை இவர் மகன்..என் தந்தை..பல்லாண்டுகாலமாக
கவனிக்கவில்லை..இவர் இருக்கிறாரா..இல்லையா..என்பது கூட அவருக்குத்
தெரியாது..சமீபத்தில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் சென்ற நான் இவரைப் பார்த்து
பேச..அப்போதுதான் இவர் என் தந்தையின் தந்தை என்பதை அறிந்தேன்..முதலில்
என் தந்தை தன் கடமையைச் செய்யட்டும்..எனக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்’
என்றான்.

சாமியின் தந்தையை இன்ஸ்பெக்டர் பார்க்க அவர் தலை குனிந்தார்.

T.V.ராதாகிருஷ்ணன்

Series Navigation