சமரசமன்று : சதியென்று காண் !

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

ஞாநி


அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் காஞ்சி சங்கர மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திருப்பதை சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது. காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப்படுவோர் எல்லாருக்கும் பிரதிநிதியாக மாட்டார்.

இதை ஏதோ புதிதாக இப்போது நான் சொல்லவில்லை. சுமார் 60,70 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடியான பேராசிரியர் கல்கி சொல்லியிருக்கிறார். தீண்டப்படாதோரின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை காந்தி ஆதரித்தபோது அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தார் அன்றைய காஞ்சி சங்கர மடாதிபதி ( காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சுவாமிகள்). இதற்காக அப்போது ‘ஆனந்த விகடன் ‘ இதழில் சுவாமிகளைக் கண்டித்து ஒரு தலையங்கமே எழுதினார் கல்கி.

சுவாமிகளை நேரடியாக விளித்து எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில் கல்கி என்ன சொன்னார் தெரியுமா ? நீங்கள் லோக குரு அல்ல. உலகத்தில் உள்ல பல மதங்களில் ஒரு மதமான இந்து மதம் முழுமைக்குமான தலைவரும் அல்ல. இந்து மதத்தில் உள்ள ஒரு சாதிக்கு மட்டுமான முழுத் தலைவரும் அல்ல. நீங்கள் ஒரு மடத்தின் நிர்வாகத் தலைவர். அவ்வளவுதான். மட நிர்வாக வேலைகளை விட்டுவிட்டு, வெளியே வந்து இத்தகைய சமூகப் பிரச்சினைகளில் அனாவசியமாக தலையிட வேண்டாம் என்ற பொருள்படத் தெளிவாக எழுதினார் கல்கி.

அன்று கல்கி சொன்னது இன்றைக்கும் காஞ்சி மடத்துக்கு மட்டுமல்ல, எந்த மடத்துக்கும் பொருந்தும்.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதென்பது எல்லா இந்துக்களுக்கும் அபிலாஷை என்று சங்க பரிவாரங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றன. அதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டால், இதில் கருத்து சொல்ல எல்லா இந்துகளுக்கும் உரிமை உண்டு. எல்லா இந்துக்களுக்கும் யார் பிரதிநிதி ? விஸ்வ ஹிந்து பரிஷத்தா ?காஞ்சி மடமா ?

பிரதமருக்கு ஆலோசனை சொல்லவும் சமரசம செய்யவும் இவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றால், குன்றக்குடி சைவ மடாதிபதியையும், மேல்மருவத்தூர் சக்தி பீடாதிபதி பங்காருவையும், மதுரை ஆதீனம் அருணகிரியையும் பிரதமர் அழைக்க வேண்டாமா ? இது வட இந்தியப் பிரச்சினை என்பதால் இவர்களை அழைக்க முடியாது என்றால், காஞ்சிபுரத்தார் மட்டும் பங்கேற்கலாமா ? இதே போல முஸ்லீம்கள் சார்பில் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வோரும் எல்லா முஸ்லீம்களுக்குமான பிரதிநிதிகள் ஆகமாட்டார்கள்.

தவிர அயோத்திப் பிரச்சினை இந்து- முஸ்லீம் பிரச்சினை மட்டும் அல்ல; அப்படி மட்டுமே என்று சொல்லப்படுகிறது. அது உண்மையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. அயோத்தியில் ராமர் கோயில் தேவை என்றே கருதாத, அதே சமயம் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடைய கோடிக்கணக்கான இந்துக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பாபர் மசூதிப் பிரச்சினைதான் தன் வாழ்க்கைப் பிரச்சினை என்று ஏற்காத, அதே சமயம் கடவுள் நம்பிக்கை உடைய கோடிக்கணக்கான முஸ்லீம்கள் இருக்கிறார்கள். வேறு வகையான இறை நம்பிக்கை உடையவர்களும், எந்த இறை நம்பிக்கையும் இல்லாதவர்களும் இங்கே வாழ்கிறார்கள்.

எந்த நகரத்தில் நடக்கும் மதக் கலவரமும் இவர்கள் எல்லாருடைய வாழ்க்கையையும்தான் சீர்குலைக்கிறது. பாதிக்கிறது. இவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய அரசு இயந்திரம் திசை திருப்பப்படுகிறது. எனவே இவர்களுக்கும், இந்தப் பிரச்சினையில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. இதை சில சாமியார்கள்- மெளல்விகள் வசம் மட்டும் விட்டுவிடக் கூடாது என்று எதிர்க்கவும் உரிமை உண்டு.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினையான இதை நாட்டின் எல்லா மக்களுக்கும் பிரதிநிதியான நாடாளுமன்றமும், அரசியல் சட்ட அமைப்பான நீதிமன்றமும்தான் சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆட்டை என்ன செய்வது என்பதை ஓநாய்களிடம் கேட்க முடியாது.

மதத்தலைவர்கள் எனப்படுபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்கள்மீது தம்மைத் தாமே திணித்துக் கொண்டவர்கள்தான். அரசின், நீதி மன்றத்தின் பணியை அவர்களிடம் விட்டுவிடுவது என்பது மதச்சார்பினமையை மட்டும் பாதிக்கவில்லை; ஜனநாயக அமைப்பையே பாதிக்கக் கூடியதாகும்.

எப்படியாவது தீர்வு வந்து மக்கள் மடிவது நின்றால் சரி என்று ஆற்றாமையின் உச்சத்தில் இதையெல்லாம் சகித்துக் கொள்வதாயிருந்தால் கூட,காஞ்சிபுரத்தார் செய்துள்ள பஞ்சாயத்தின் சாரம் என்ன ? நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பிரச்சினைக்குரிய இடத்துக்கு வெளியே இருக்கும் ‘பிரச்சினை இல்லாத ‘ நிலத்தில் மட்டுமாக இப்போது ராமர் கோவில் கட்டிக் கொள்கிறோம். வழக்கின் தீர்ப்பு வரும்வரை பிரச்சினைக்குரிய நிலத்தில் எதுவும் செய்ய மாட்டோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தும் ராமஜன்ம பூமி அறக்கட்டளையும் சம்மதிப்பதாக ஜயேந்திரர் தெரிவிக்கிறார்.

மசூதிக் கட்டடம் இருந்த இடத்தில்தான் கோசலைக்கு பிரசவம் பார்க்கப்பட்டது; அதனால் அங்கேயேதான் ராமர் கோவில் கட்டப்பட்டாகவேண்டும் என்று அதிரடியாக அடித்துச் சொல்லி வந்தவர்கள் இப்போது அந்த இடத்துக்கு வெளியே கோவில் கட்டிக் கொள்ள சம்மதிப்பது எப்படி ? அப்படியானால் ஏற்கனவேதான் அயோத்தி முழுக்க நிறைய ராமர் கோயில்கள் இருக்கின்றனவே. இன்னொன்று எதற்கு ?

சமரசம் என்ற பெயரால் அரசாங்கத்தையும் நீதி மன்றத்தையும்படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிற திட்டத்தின் முக்கியமான பகுதியே ‘பிரச்சினை இல்லாத ‘ நிலத்தை இப்போது சங்க பரிவாரங்களிடம் கொடுத்து விட வேண்டும் என்பதுதான்.

இந்த நிலப்பகுதி எது ? சர்ச்சைக்குரிய பகுதி என்று சொல்லப்படும் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடத்தை சூழ்ந்து நிற்கும் பகுதி. அதாவது சுற்றிலும் அக்கினி வளையம் நடுவே கற்பூரம் பத்திரமாக இருக்குமாம்.

இந்த சமரச திட்டம் உண்மையில் ஒரு யுத்த வியூகம்- முதலில் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டு, பிறகு மீதி இடத்தையும் எடுத்துக் கொண்டு விடுவது. பிரதான கதவைப் பூட்டினாலும் கூட கோவில் தூண், சிற்ப வேலைகள் இடையறாது நடக்கும் என்று பகிரங்கமாக கூறுகிற கும்பலிடம் இடித்த மசூதியை சூழ்ந்திருக்கும் இடத்தை ஒப்படைத்தால், அந்த இடம் எத்தனை நாளைக்கு தனியே மிஞ்சியிருக்கும் ?

தவிர சமரசம் என்று சொன்னால் அது இரு தரப்பும் எதையாவது விட்டுக் கொடுத்து வேறெதையாவது பெற்றுக் கொள்வது என்றல்லவோ இருக்க வேண்டும் ? காஞ்சிபுரத்தார் பஞ்சாயத்து என்ன சொல்லுகிறது ? மசூதி இருந்த இடத்துக்கு வெளியே ராமர் கோயில் கட்டிக் கொள்ள மீதி நிலத்தை இப்போதைக்குக் கொடுத்து விடுங்கள். சரி. இதனால் இந்து மத அடிப்படைவாதிகளின் கோரிக்கையில் ஒரு பகுதி நிறைவேறிவிடுகிறது.

மறு தரப்பில் மசூதியை இழந்த முஸ்லீம்கள் பெறுவது என்ன ? இடித்த இடத்தில் இன்னொரு மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் என்று பஞ்சாயத்து இல்லை. அந்தப் பகுதி விஷயத்தை மட்டும் நீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் காஞ்சிபுரத்தார். இது எப்படி சமரசத் தீர்வு ஆகும் ?

‘சூத்திரற்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண் ‘ என்றான் பாரதி. ‘இஸ்லாமியருக்கொரு நீதி; விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு வேறொரு நீதி , சங்கர மடம் சொல்லிடுமாயின் அது சமரசமன்று சதியென்று காண் ‘ என்பதல்லவா இந்த நிலைமை.

சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்பார்கள். சண்டைக்காரனே சாட்சிக்காரனாக வேடமிட்டு வந்திருக்கிறான் இப்போது. இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்டால் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்துக்கும் ஒரே சமயத்தில் சமாதி கட்டுவதாகத்தான் அர்த்தம்.

Series Navigation

ஞாநி

ஞாநி