சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
‘இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது ‘
டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]
‘பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்! ‘
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]
முன்னுரை: 2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டி யுள்ளது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாஸா ஏவிய காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்துள்ளது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுக்கப் போகிறது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாஸா, ஈஸா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!
1979 ஆண்டில் பயனீயர்-11 [Pioneer-11] விண்வெளிக் கப்பல் உளவி சனிக்கோளுக்கு 13,000 மைல் அருகே பயணம் செய்து படங்களையும், தகவல்களை அனுப்பி யுள்ளது! 1980-1981 ஆண்டுகளில் வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1 & Voyager-2] சனி வளையங்களின் ஊடே நுழைந்து சென்று, வளையங்களைப் பற்றியும், ஆறு புதிய துணைக்கோள்களைப் பற்றியும் தகவல்களைக் குறிப்பாக அனுப்பின. 2000 ஆண்டுத் தகவல்படி சனிக்கோளின் பதினெட்டுத் துணைக்கோள்கள் நிச்சயப் படுத்தப்பட்டு, மற்றும் 12 சந்திரன்கள் இருப்பதாக அறியப்படினும் உறுதிப்படுத்தப் படாமல் ஐயப்பாடில் உள்ளன. தற்போது சனிக்கோளை முதன்முறைச் சுற்றி வரும் காஸ்ஸினி தாய்க்கப்பல் இன்னும் நான்கு வருடங்கள் பல கோணங்களில் 70 முறை வலம்வந்து, ஐயப்பாடில் உள்ள துணைக்கோள்களின் மெய்ப்பாடுகளைத் தெளிவாக உறுதிப் படுத்தும்! அத்துடன் சனிக்கோள் வளையங்களின் புரியாத பல புதிர்களையும் விடுவிக்கும்!
சனிக்கோளை ஆராய்ந்த காலிலியோ, ஹியூஜென்ஸ், காஸ்ஸினி
சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712]. 350 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை! கால வேறுபாட்டால் சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்! 1655 இல் ஹியூஜென்ஸ் முதலில் டிடான் துணைக்கோளைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்று கூறிய தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்! 1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டம் இல்லை என்றும் அறிந்து கொண்டார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடவத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.
அதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கிய ஆக்கிய பிரென்ச் கணித ஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது! சில மாதங்கள் சென்று கோணக் காட்சி [Angle of View] மாறும் போது, மறுபடியும் வளையங்கள் பல்வேறு சாய்வில் பூமியில் நோக்குபவருக்குத் தெரிகின்றன. காலிலியோ காலத்திற்குப் பிறகு தொலைநோக்கிகளின் பொறிநுணுக்கம் பன்முறை மேன்மைப் பட்டிருந்தாலும், இன்னும் சனிக்கோளின் பல புதிர்கள் விடுவிக்கப் படாமலே உள்ளன!
பரிதி மண்டலத் தோற்றத்தில் உண்டான வாயுக் கோளம்
நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூதக்கோள் வியாழனைப் போல் ஒரு வாயுக் கோளமாக சூரிய மண்டலத்திலே தோன்றியது, சனிக்கோள்! நீர்த்திணிவை விட இலேசான [Less dense than water] வாயு உருண்டை கொண்டது, சனி. பிரம்மாண்டமான ஒரு நீர்த்தடாகத்தில் சனிக்கோளை மூழ்க்கினால், அது குமிழிபோல் மிதக்கும்! மாபெரும் காந்தக் கூண்டையும், மத்திய ரேகைப் பகுதியில் மணிக்கு 1000 மைலுக்கு மேல் வேகத்தில் அடிக்கும் சூறாவளிச் சூழ்வெளியையும் அது கொண்டுள்ளது! பரிதியச் சுற்றிவரும் அண்ட கோளங்களில், கோடிக் கணக்கான ஒளி வளையல்களை அணிந்திருக்கும் சனிக்கோள் தனித்துவமும், நூதனமும் மிக்க ஒரு விந்தைக் கோளாகும்! பூதக்கோள் வியாழனைப் போல் வாயுக் கோளமான சனி, அதைவிடச் சற்று சிறியது. சனிக்கோளைச் சுற்றி வரும் இருபதுக்கும் மேற்பட்ட [31 துணைக் கோள்கள் ?] சந்திரன்களில் வியப்பான, புதிரான, எல்லாவற்றுக்கும் பெரிய துணைக்கோள், டிடான் [Titan] எனப்படுவது! பரிதியை வலம்வரும் அண்ட கோளங்களில் பூமியைப் போல் சூழ்வெளி வாயு மண்டலத்தால் பாதுகாக்கப்படும் மற்ற ஓர் அண்டம், டிடான்! புதன் கோளை விடவும், பூமியின் நிலவை விடவும் துணைக்கோள் டிடான் சற்று பெரியது!
பரிதியின் மற்ற அண்டங்களிலிருந்து சனிக்கோளைத் தனித்து நூதனமாய்க் காட்டுவது, சனியின் எண்ணற்ற ஒளிமயமான வளையங்கள். தூசி, துணுக்குகள், கோடிக் கணக்கான பனிப்பாறைகள், பனித்துகள்கள் பல்வேறு வேகத்தில், பல்வேறு ஆரத் தூரங்களில் சீராகச் சனிக்கோளைச் சுற்றி வருகின்றன. உடைந்து தூளான வால் விண்மீன்கள் [Comets], விண்கற்கள் [Astroids] அல்லது சந்திரன்கள் [Moons] ஆகியவற்றின் துண்டுத் தூசிகளே, சனியின் ஈர்ப்பு வலைக்குள் கவர்ந்திழுக்கப் பட்டுச் சீராகச் சுற்றி வருகின்றன. சனிக்கோளின் நீண்ட வளையங்கள், பூமிக்கும் நிலவுக்கும் உள்ள 240,000 மைல் இடைவெளியை நிரப்பும், மாபெரும் பரிமாணம் கொண்டவை! பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடியாக வடிவம் படைத்த வாயுக்கோள் சனி, பூமியைவிட சுமார் 10 மடங்கு நீண்ட ஆரம் உடையது! பளு நிறையில் பூமியை விட 95 மடங்கு கனமானது! சனிக் கோளத்தின் திணிவு 687 kg/cu meter [Density]. சனிக்கோளுக்கு 30 மேற்பட்ட சந்திரன்கள் இருப்பதாக அறியப் பட்டாலும், உறுதிப் படுத்தப்பட்டுப் பெயரிடப் பட்டவை 18 [2000 தகவல்]!
காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளுக்கு ஏவப்பட்டது
விண்கப்பலில் காஸ்ஸினி சுற்றுச் சிமிழும் [Orbiter], ஹியூஜென்ஸ் டிடான் உளவியும் [Probe] இணைக்கப் பட்டுள்ளன. 1997 அக்டோபர் 15 இல் பிளாரிடா கெனாவரல் முனையில் ஏவப்பட்ட டிடான் சென்டர் ராக்கெட் [Titan IVB Centaur Rocket] இதுவரை விண்வெளிக்குச் சுமந்து செல்லாத பேரளவுப் பளுவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பலைத் தூக்கிக் கொண்டு செங்குத்தாக ஏறிச் சென்றது! பூமியிலிருந்து கிளம்பி விண்கப்பல், ராக்கெட் முனையிலிருந்து விடுதலை அடைந்ததும், வெள்ளிக் கோளை இருமுறைச் சுற்றி, பூதக்கோள் வியாழனைத் தாண்டி, அக்கோள்களின் ஈர்ப்பு ஆற்றலில் வேகம் முடுக்கப் பட்டு மிகையாகிச் [Venus, Venus, Earth, Jupitar Gravity Assist Flyby Swings] சனிக்கோளை விரைவாக நெருங்கத் திட்டமிடப் பட்டது! இந்த முறை முதலில் சென்ற இரண்டு வாயேஜர் பயணங்களில் பூமியிலிருக்கும் ஆட்சி அரங்கிலிருந்து ஆணையிடப் பட்டு, வெற்றிகரமாக நிறைவேறியது.
சனிக்கோளை நெருங்கிய காஸ்ஸினி விண்கப்பலின் ராக்கெட் எஞ்சின்கள் பூமியிலிருந்து தூண்டப் பட்டு, 96 நிமிடங்கள் இயங்கி வேகம் தடைப்பட்டுத் தணிந்து, 2004 ஜூலை முதல் தேதியில் சனி மண்டல ஈர்ப்பாற்றலில் இழுக்கப்பட்டு [Saturn Orbit Insertion (SOI)], விண்கப்பல் நீள்வட்டச் சுழல்வீதியில் சனியைச் சுற்றத் துவங்கியது. சனியின் அகண்ட வளையங்களில் அடிபட்டு விடாதபடி, இடைவெளித் துளையில் நுழைந்து சுற்றிவரும் காஸ்ஸினி பாதுகாப்பாகப் பயணம் செய்தது! அதற்கு உதவி புரிவது காஸ்ஸினியின் முனையில் உளவு செய்யும் ஏரியல் சாதனம்! விண்கப்பல் வளையத்தில் வேகமாய் ஓடும் துணுக்குகள், பாறைக் கற்கள் மீது மோதாதவாறு பாதுகாப்பவை இரு நீண்ட ஏரியல் கம்பிகள். விண்கப்பல் சுற்றும் முதல் சுழல்வீதி சனியின் முகில் மண்டலத்துக்கு மேல் 12,000 மைல் உயரத்தில் அமையத் தூண்டப்பட்டது. அந்த நீள் பாதையில் பயணம் செய்யும் போது, திட்டமிட்ட மற்ற பாதைகளை விட வளையங்களுக்கு 10 மடங்கு அருகில் காஸ்ஸினி பறக்க ஏதுவாகிறது. காஸ்ஸினியின் கடைசிச் சனிக்கோள் சுற்று 2008 ஆண்டு ஜூலையில் முடிவடையும்!
காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் உளவிகளின் குறிப்பணிகள்
காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளை நான்கு வருடங்கள் பல்வேறு கோணங்களில் 70 தடவைகளுக்கும் மேலாக வலம்வந்து ஆய்வு செய்யத் தகுதி பெற்றது. சுழல்வீதியில் நகர்ந்து வரும் காஸ்ஸினி 27 வித உளவுகள் செய்யும், சுய இயக்கக் கருவிகளைக் கொண்டது. பூத வடிவான காஸ்ஸினிக் கப்பலின் உயரம்: 22 அடி, அகலம்: 13 அடி. 36 அடி நீளமுள்ள இரண்டு ஏரியல் கம்பங்கள் காந்தமானியைக் [Magnetometer] கொண்டுள்ளன. பரிதியைக் கடந்து பல மில்லியன் மைலுக்கு அப்பால் புறக்கோளாகச் சுற்றும் சனிக்கோளுக்கு அருகே சூரியசக்தி மின்கலன்கள் [Solar Batteries] வெப்பம் போதாமையால் இயங்கமாட்டா! புளுடோனியம்-238 ஏகமூலத்தின் கதிரியக்கத் தேய்வால் எழும் வெப்பசக்தியை மின்சாரமாக மாற்றும் ஜனனிகள் [Plutonium-238 Powered Radioisotope Thermoelectric Generators (RTG)] மூன்றைக் பெற்றுள்ளது. பதினெட்டு விதக் கருவிகள் சனிக்கோளம், வளையங்கள், துணைக்கோள்கள், காந்த கோளம் ஆகியவற்றை ஆராயக் காஸ்ஸினியில் அமைக்கப் பட்டுள்ளன. காஸ்ஸினிச் சாதனங்களைத் தயாரித்துச் சோதனை செய்தது, நாஸாவின் பாஸடானா காலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்து ஆய்வகம் [Jet Propulsion Laboratory (JPL), C.I.T].
காஸ்ஸினி ஹியூஜென்ஸ் உளவுக் கருவிகள் மனிதரின் ஐம்புலன்களை விடக் கூர்ந்து உணர்ந்து அறிவிக்கும் தன்மை கொண்டவை! மனிதக் கண்களுக்குத் தெரியாத ஒளி அலைகள், சக்தி அலைகள் ஆகியவற்றைக் காணும் பண்புகள் பெற்றவை! மனிதக் கரங்கள் பிடிக்க முடியாத காந்த தளங்கள், நுண்ணிய துகள்கள் போன்றவற்றை உளவுக் கரங்கள் பற்றி அறிவிக்கும் பண்பு உடையவை! உளவுக் கருவிகள் அனைத்தும் பனி மண்டலத்தில் இயங்கும் வல்லமை படைத்தவை! சனி மண்டலத்தைச் சூழ்ந்திருக்கும் காந்த கோளம், அணுக்களின் நிறை, திணிவு, மின்கொடை [Mass, Density, Electrical Charges of Atomic Particles] ஆகியவற்றை அளக்கும் தன்மை உள்ளவை. மேலும் ரேடியோ அலைகள், பிளாஸ்மா மின்னேற்ற வாயுவின் வல்லமை [Strength of Plasma (Electrically Charged Gas)], தூசிகளின் உள்ளடக்கத் துகள், கொள்ளளவு [Quantity, Composition of Dust Particles] ஆகியவற்றை அளக்கும் பண்பு பெற்றவை.
காஸ்ஸினின் தலையான பணி, ஹியூஜென்ஸ் உளவியைச் சுமந்து கொண்டு சனிக்கோளை அண்டி, அதைச் சுற்றி வருவது. சனிக்கோளைச் சுற்றும் போது, அதன் நூதன வளையங்களின் அமைப்பு, பரிமாணம், போக்கு, இடைவெளிகள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்வது. அடுத்து சனியின் சந்திரன்களை நெருங்கி அவற்றையும் ஆராய்ந்து புதுத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பும். ‘இதுவரைக் குருடர் தடவிப் பார்த்த யானையைப் போன்றுதான், சனிக்கோளின் காந்த கோளத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டிருந்தனர்! இப்போதுதான் யானைப் பார்க்கப் போகிறோம் ‘ என்று டாக்டர் டாம் கிரிமிகிஸ் [Dr. Tom Krimigis John Hopkins Applied Physics Lab, Laurel Maryland] கூறுகிறார். பரிதியின் மேனியிலிருந்து வெளியேற்றப் பட்ட பரமாணுக்களின் புயல் வெள்ளம் சூழ்ந்த, சக்தி மிக்க துகள்கள் உருவாக்கியக் குமிழ்க் காந்த கோளமே, சனிக்கோள் சுற்றிப் போர்த்தி யுள்ளது.
700 பவுண்டு எடையுடைய ஹியூஜென்ஸ் டிடான் உளவியைத் தயாரித்தது ஈஸா எனப்படும் ‘ஈரோப்பிய விண்வெளி ஆணையகம் ‘ [European Space Agency (ESA)]. ஆறு உளவுக் கருவிகளைக் கொண்டது, ஹியூஜென்ஸ் விண்சிமிழ். டிடான் உளவியின் கருவிகளை இயக்கும் மின்கலன்கள் [Batteries] 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றது. சனிக்கோளின் மிகப் பெரிய சந்திரனான டிடானில் 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் இறங்கப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது. 22 நாட்கள் டிடான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து நெருங்கி, 45 நிமிடங்கள் அதன் சுய இயக்கிக் கருவிகள் வாயு அழுத்தம், உஷ்ணம், திணிவு ஆகியவற்றைப் பதிவு செய்யும்.
சனிமண்டலத்தில் அடித்த இரண்டு சூறாவளிப் பேய்ப் புயல்கள்
2004 மார்ச் 20 ஆம் தேதி யன்று சனியை நெருங்கும் காஸ்ஸினி விண்கப்பல் இரண்டு சூறாவளிப் புயல்கள் சனி மண்டலத்தில் எழுவதையும், இரண்டும் முடிவில் ஒன்றாய் இணைந்து பூதப் புயலாய் ஆவதையும் நோக்கியுள்ளது! இது இரண்டாம் தடவை சனிக்கோளில் நிகழும் விந்தைச் சம்பவம்! பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி சூறாவளிகள் அடிக்கும் ஓரண்டம், சனிக்கோள்! புயல் இணைப்புகளைப் பற்றிக் காஸ்ஸினி திட்ட படத்திரட்டுக் குழு உறுப்பினரும், சி.ஐ.டி அண்டக்கோள் விஞ்ஞானப் பேராசிரியருமான டாக்டர் ஆன்டிரூ இங்கர்ஸால் [Dr. Andrew Ingersoll, Cassini Imaging Team & Porfessor of Planetary Science C.I.T.] கூறுகிறார்: ‘பூதக்கோள்களில் புணர்ந்து கொள்வது, புயல்களின் ஒரு தனித்துவப்
பண்பு! பூதளத்தில் புயல் வீச்சுகள் ஓரிரு வாரங்களே நீடிக்கும்! ஆனால் சனிக்கோள் மற்றும் பிற பூதக்கோள்களில் அடிக்கும் அசுரப் புயல்கள் மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் நீடிக்கின்றன! சில சமயம் ஒரு நூற்றாண்டு கூடப் புயல் வீச்சுகள் தொடர்கின்றன!
பிறகு சூழ்வெளியில் சக்தியை உறிஞ்சும் தன்மை இழக்கப் படுவதால், சூறாவளிகள் முதிர்ச்சி நிலை எய்தி தேய்ந்து மறைகின்றன! அப்போது தேய்ந்து கரைந்து போகாது, பல புயல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கின்றன! வடதிசைப் புயல் மணிக்கு 25 மைல் வேகத்திலும், தென்திசைப் புயல் மணிக்கு 13 மைல் வேகத்திலும் மோதிச் சுருள் உண்டாக்கி, எதிர்க் கடிகாரத் திசையில் [Anti-Clockwise Direction] அவை ஒன்றாய்ச் சுழன்றன! பூமியில் ஹரிக்கேன் புயல்கள் அப்படிச் சுழலாது எதிராகச் சுற்றுகின்றன. 620 மைல் விட்டமுள்ள சனிக்கோளத் தளத்தில் இரண்டு சூறாவளிப் புயல்களும் மேற்கு நோக்கி ஒரு மாதமாக நகர்ந்து, மார்ச் [19-20] தினங்களில் அவை சேர்ந்து கொண்டன! சனியின் மத்திரேகை அரங்குகளில் எழும் புயல்கள், மணிக்கு 1000 மைல் உச்ச வேகத்தில் அடிக்கின்றன! மற்ற பகுதிகளில் மெதுவான வேகத்தில் மோதிகின்றன! ‘எவ்விதம் சூறாவளிகள் பூதக் கோள்களில் எழுகின்றன என்பது ஒரு புதிராகவே இருக்கிறது! அப்புதிரை விடுவிக்கும் காலம் இப்போது நெருங்கி வருகிறது! ‘ என்று நாஸா விஞ்ஞானி ஒருவர் கூறினார்.
டிடான் துணைக்கோளில் தடம் வைக்கும் ஹியூஜென்ஸ் உளவி
சூரிய மண்டலத்திலே பேரளவு முகிலடர்த்தி [Dense Atmosphere] சூழ்ந்து தனித்துவம் மிக்க ஓரண்டம், டிடான்! பூமண்டல வாயு அழுத்தத்தை விட 50% மிகையான அழுத்தம் [22 psi] கொண்டது, டிடான்! பூகோள வாயுச் சூழ்வெளியை விட, டிடான் வாயு மண்டலம் பன்மடங்கு மிகுந்ததாய், சுமார் 370 மைல் உயரம் வரைப் பரவி யுள்ளது! வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் மங்கலாகத் தோன்றும் டிடான் முகிலில் இருப்பவை, ஈதேன், அஸெடிலின் [Ethane, Acetylene] போன்ற ஹைடிரோ கார்பன் வாயுக்கள்! அதன் வாயுச் சூழ்வெளியில் முக்கியமாக உள்ளவை 90%-95% நைடிரஜன் வாயு! 5% மிதேன் வாயு [Methane Gas]! டிடான் தள உஷ்ணம்: (-178 C).
ரேடார் கருவிகள் டிடான் பகுதிகளைத் திடவ அண்டமாகக் காட்டினாலும், சில பரப்புகளில் ஈதேன் கடல்கள், மீதேன் கடல்கள் இருக்கலாம் என்று கருதப் படுகிறது! சனியின் மிகப் பெரிய துணைக்கோளாக 3200 மைல் விட்டம் கொண்டது, டிடான். பூமியின் நிலவை விடவும், புதன் கோளை விடவும் பெரியது, டிடான்! சனிக்கோளைச் சுற்றினாலும் சனியைப் போன்று வாயுக் கோளாக இன்றி, பூமியின் நிலவைப் போன்று கரடு முரடான, குழிகள் நிரம்பிய தளப் பகுதிகளைக் கொண்டது, டிடான். டிடான் துணைக்கோள் பளுநிறை மேவி ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளதால், காஸ்ஸினி விண்கப்பல் அதனைப் பயன்படுத்தி [Gravity Assist Flyby] அருகில் பயணம் செய்து, ஆய்வுகள் புரிந்து படமெடுக்க எளிதாக இருக்கும்.
2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென் உளவி, 36,000 மைல் உயரத்தில் பவனி வரும் காஸ்ஸினித் தாய்க்கப்பலிலிருந்து பிரிக்கப்பட்டு 22 நாட்கள் கடந்து டிடான் சூழ்வெளியை நெருங்கும். டிடான் வாயு மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் [6 கி.மீடர்] வேகத்தில் இறங்கி 2005 ஜனவரி 15 ஆம் தேதி யன்று 27 அடி விட்டமுள்ள குடை விரித்து நுழைய ஆரம்பிக்கும். உச்சத் தளர்வேகம் [Deceleration (10g-25g)] அடைந்து, இரண்டு அல்லது இரண்டரை மணியளவில் வினாடிக்கு 5 மீடர் மோது வேகத்தில் [Impact Speed: 5m/sec] டிடான் தளத்தில் விழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! வாயு மண்டலத்தில் விரைவாக விழும் உளவி, வெப்பத்தினால் எரிந்து விடாதபடி, ‘கும்பக் கலசம் ‘ கவசம் போன்று பாதுகாப்பு அளிக்கிறது. ஹியூஜென்ஸ் 350 கி.மீடரிலிருந்து 220 கி.மீ. வரை இறங்கும் போது உச்ச வெப்பத் தாக்குதலை உணரும்! அந்த இடைவெளியைக் கடந்து வரும் இரண்டு நிமிடத்தில், உளவியின் வேகம் மணிக்கு 21,600 கி.மீடரிலிருந்து, மணிக்கு 1440 கி.மீடருக்குக் குறைகிறது!
ஹியூஜென்ஸ் உளவி இறங்கி வரும்போது, அதன் வண்ணக் காமிரா சுமார் 1100 படங்களை எடுத்தனுப்பும்! உளவியின் மற்ற ஐந்து கருவிகள் டிடான் வாயு மண்டலத்தின் மாதிரிகளை உறிஞ்சி என்ன என்ன இரசாயனக் கலவையில் உள்ளன வென்று சோதிக்கும்! மேலும் டிடான் சூழ்வெளியின் உஷ்ணம், அழுத்தம், வாயுக்களின் திணிவு, சக்திச் சமன்பாடு [Energy Balance] ஆகியவற்றைப் பதிவு செய்யும். டிடான் தளத்தில் மோதிய ஹியூஜென்ஸ் உளவியின் மின்கலன்களில் உயிருள்ள வரை, அது தகவலைத் திரட்டும். தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் தாய்க்கப்பல் காஸ்ஸினி, ஹியூஜென்ஸ் அனுப்பும் வண்ணப் படங்களையும் மற்ற தகவல்களையும் சேமித்து வைத்து, அவற்றைப் பூமியின் ஆட்சி அரங்கிற்குப் பரிமாறும். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் ஈஸாவின் மகத்தான ஹியூஜென்ஸ் உளவி டிடான் துணைக்கோளில் வெற்றிகரமாகத் தடம் வைத்தால், அண்டவெளிச் சரிதையில் அச்சாதனை அடுத்த பெரும் மைல் கல்லாக இடம்பெறும்!
பூமியில் உயிரினங்கள் தோன்ற மூலக் காரணமான எளிய ஆர்கானிக் கலவைகள் [Simple Organic Compounds] டிடான் துணைக்கோளில் பனிமூடிக் கிடக்கலாம் என்னும் கருத்து விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது! உயிரினம் வாழத் தகுதியற்ற, மிகக் குளிர்ந்த அண்டமான டிடானில் உள்ள பனிமூடிய புதையல்கள் பூர்வீகப் பூமி எப்படி இருந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க நிச்சயமாகப் பயன்படும், ஹியூஜென்ஸ் உளவி!
தகவல்கள்:
1. Unfolding Our Universe By: Iain Nicholson [1999]
2. Saturn By: Garry Hunt & Patrick Moore [1982]
3. National Geographic Picture & Atlas of Our Universe By: Roy Gallant [1986]
4. Book of the Universe By: Ian Ridpath [1991]
5. The Golden Book of Astronomy By: Colin Ronan [1984]
6. Two Storms Caught in the Act on Saturn By: JPL www.jpl.nasa.gov/ [April 8, 2004]
7. Cassini-Huygens will Unlock Saturn ‘s Secrets By: JPL [June 3, 2004]
8. Cassini-Huygens Mission Status Report By: JPL [June 17, 2004]
9 Cassini Spacecraft Arrives at Saturn By: JPL [June 30, 2004]
10 Fresh Cassini Pictures Show Majesty of Saturn ‘s Rings [July1, 2004]
11 Cassini Provides New Views of Titan, Saturn ‘s Largest Moon By: Jet Propulsion Lab. (JPL), Pasadena, California [July 3, 2004]
12 Cassini-Huygens Spaceship Approaching Saturn [www.thinnai.com/science/sc0815035.html] (August 14, 2003) By: The Author
13 Astronomer Giovanni Cassini [http://www.thinnai.com/science/sc0822031.html] (August 21, 2003) By: The Author
****
jayabar@bmts.com [S. Jayabarathan]
- கடிதம் – ஜூலை 8, 2004
- அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn
- வெள்ளைப் புலாவ்
- மெய்மையின் மயக்கம்-7
- குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- ஓரம் போ – பாராட்டு வருது
- நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்
- Spellbound (2003)
- ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘
- பூச்சிகளின் மிமிக்ரி
- கடிதம் ஜூலை 8 , 2004
- கடிதம் ஜூலை 8,2004
- கடிதங்கள் ஜூலை 8, 2004
- நேரடி ஜனநாயகம்
- சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்
- தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
- கருக்கலைப்பு
- வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)
- மயிற்பீலிகள்
- என் காதல் இராட்சதா …!!!!
- அக்கினிகாரியம்
- மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )
- விழிப்பு
- ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
- நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்
- கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2
- சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?
- திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!
- நீலக்கடல் – (தொடர்) – 27
- கறியாடுகள்
- மரபணு மாறிய.
- கற்பின் கசிவு
- மனம்
- கோடிமணி நிலை
- கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்
- உழைப்பாளர் சிலையோரம்….
- என்னைப்போலவே
- மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்