கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

அரவிந்தன் நீலகண்டன்



மிசோரம்: ரியாங்குகள்

“நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும் இல்லை என நம்புகிறோம்.” மிஸோ கிறிஸ்தவ சர்வதேச கூட்டமைப்பின் இணைய தள அறிக்கை (http://www.mcgn.org/stmfaith.html)

ரியாங்க் அமைப்பின் தலைவரான சய்பங்கா சில்சாரில் அண்மையில் கூறியது: “நாங்கள் மதமாற்றத்தினை கடுமையாக எதிர்ப்பதால் மிசோக்களால் தாக்கப்படுகிறோம். மிசோரம் கிறிஸ்தவ அதிகாரம் கொண்ட மாநிலம். அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆக வேண்டுமென விரும்புகின்றனர். சக்மாக்கள் கூட கொடுமைப்படுத்தப்படுகின்றனர். மிஸோரமில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக எங்கள் குரலை உயர்த்தியதால் விரட்டியடிக்கப்பட்டோம்” (தி ஆப்ஸர்வர், 8 பிப்ரவரி 1999)

” மிசோரத்திலிருந்து மிசோக்களின் தாக்குதலுக்கு பயந்து 15000 முதல் 50000 ரியாங்குகள் வட திரிபுராவில் தமது வாழ்விடத்தை விட்டகன்று தங்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் மிசோரம் சென்றுவிடுவார்கள் எனும் நம்பிக்கையில் திரிபுரா அரசாங்கம் அவர்களுக்கான உதவி உணவினையும் மருத்துவ சேவைகளையும் நிறுத்திவிட்டது. இதன் விளைவாக 16 பேர் (அகதிகள் முகாம்களில்) உணவின்றி பட்டினியால் இறந்தனர். குறைந்தது 260 பேர்கள் சரியான உறைவிட வசதிகள், மற்றும் குடிநீர் இல்லாமையால் இறந்தனர். 1400 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த அகதிகள் முகாம்களின் நிலைக்காக தேசிய மக்கள் உரிமை அமைப்பு மிஸோரம் அரசினை கண்டித்துள்ளது.” (தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தின் 16 மார்ச் 2001 தேதியிட்ட அறிக்கை)

“உச்ச நீதி மன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், மிஸோரம் மற்றும் திரிபுரா அரசுகளுக்கும் ஏன் ரியாங்குகள் இன்னமும் குடியேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது .” (பிடிஐ, 13 January 2005)

அருணாசல பிரதேசம்:

இதாநகர், அக்டோபர் 17: அருணாசல பிரதேச மக்கள் நாகா பயங்கரவாதம் சீனாவினைக்காட்டிலும் பெரிய அபாயம் எனக் கூறுவது வேடிக்கையானதல்ல. மாநில, மாவட்ட அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் குறைந்தது இரண்டு மாவட்டங்கள் நாகா பயங்கரவாதிகளின் -NSCN (ஐஸாக்-முயிவா) பிடியில் வந்துள்ளதாக கூறுகின்றனர். திராப் மற்றும் சாங்க்லாங் ஆகிய இருமாவட்டங்கள் நாகலாந்தையும் மியான்மாரையும் ஒட்டி அமைந்தவை. இவை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன. இம்மாவட்ட அதிகாரத்தை தம் வசப்படுத்த பயங்கரவாதிகள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதை பயன்படுத்துகின்றனர். 1991 இல் 2000 பேர் இருந்த கிறிஸ்தவர்கள் இப்போது 200000 ஆகியுள்ளனர். ரங்பேரா மத சமுதாய அமைப்பின் பொது செயலரான லத்சம் கிம்குன் இந்த மதமாற்றங்கள் கட்டாய மதமாற்றங்கள் என கூறுகிறார். நாகா பயங்கரவாதிகள் தமது சூறையாடலின் போது ரங்பேரா கோவில்களை உடைத்து அங்கு வாழும் மக்களை கிறிஸ்தவர்களாக மாறும்படி கூறினார்கள் என்கிறார் அவர். சங்லாங்கில் உள்ள தான்யாங் மற்றும் காங்கோ கிராமங்களை மே 13 மற்றும் மே 15 அன்று வந்த நாகா பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மதம் மாற கூறினார்கள். ஆனால் மக்கள் மதம் மாற மறுத்தவுடன் அவர்கள் கோவில்களை தீ வைத்து எரித்தனர் என்கிறார் கிம்குன். காவல்துறை ஐஜி கூறியதாவது பயங்கரவாதிகளின் மிரட்டலால் பொதுவாக கட்டாய மதமாற்றங்களை மக்கள் புகார் செய்வதில்லை என்றபோதிலும் இப்போது மக்கள் துணிச்சலாக புகார்கள் செய்ய ஆரம்பித்துள்ளனர் எனக் கூறினார். ஆறு மிசிநரிகள் மக்களை மதம் மாற கட்டாயப்படுத்தியமைக்காக அண்மையில் பொதுமக்களின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டனர் என அவர் கூறினார். உள்ளூர் பத்திரிகை ஆசிரியர் அவ்வாறு மிசிநரிகள் விடுவிக்கப்பட காரணம் நாகாலாந்து அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தத்தினால்தான் என தெரிவித்தார். (இண்டியன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 18, 2003)

இரண்டு சட்ட விரோதமான பயங்கரவாத நாகா அமைப்புகளான NSCN(IM) மற்றும் NSCN(K) ஆகியவை சங்லாங் மாவட்டத்தில் உள்ள ரிமா புதாக், திகாக் புதாக், மடோன்ஹ்சா மற்றும் லாங்சோங் கிராமங்களினைச் சார்ந்த பௌத்த மற்றும் சுதேச மத நம்பிக்கையாளர்களின் இடங்களைக் கோருவதுடன் கிறிஸ்தவத்திற்கு அவர்கள் மதம் மாற வேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பயங்கரவாத அமைப்புகள் கிராமவாசிகளுக்கு இரு தேர்வுகளை முன்வைக்கின்றன -ஒன்று கிறிஸ்தவத்தை தழுவுவது மற்றது மரண தண்டனை. …இந்த சட்டவிரோத அமைப்புகள் பல கிராமத்தவர்களை அஸாம் பாதுகாப்பு படையினருக்கு முக்கிய தகவல்களை அளிப்பதாக சித்திரவதை செய்கின்றனர். மறுபுறமோ பாதுகாப்பு படைகளும் உடை-உறையுள் அளிக்கும் சாக்கில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தமக்கு தெரிவிக்கக் கோரி மக்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கிராமத்து வாலிபர்கள் இந்த இரட்டை சித்திரவதையை தாங்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அண்மையில் பூர்வாஞ்சால பௌத்த பிக்குகள் சங்கமும், பூர்வாஞ்சல் பௌத்தர்கள் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த பயங்கரவாத அமைப்புகளால் அமைதி விரும்பும் பௌத்த மக்களுக்கும் இதர சுதேசிய நம்பிக்கையாளர்களுக்கும் இழைக்கப்படும் மோசமான கொடுமைகள் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. (அசாம் டிரிபியூன்- 22, ஆகஸ்ட், 2004)

அரசியல் எதிர்வினைகள்:

இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கான மதச்சார்பற்றதெனக் கூறப்படும் அரசியலின் (so called secular polity) எதிர்வினை என்ன?

மிக சுவாரசியமான விஷயமென்னவென்றால், எந்த காங்கிரஸ் கட்சியின் அரசினை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கின்றனரோ அதே காங்கிரஸ் குறிப்பாக சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் இக்கொலைகளை செய்யும் அமைப்பான NLFT இன் ஆதரவாளர்களான INPT யுடன் கை கோர்த்து செயல்படுகிறது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிகார பூர்வ பத்திரிகையில் “Congress Plays Dangerous Game In Tripura” எனும் தலைப்பில் பிரகாஷ் காரட் எழுதிய கட்டுரையிலிருந்து:

” திரிபுரா பிரதேச காங்கிரஸ் தலைவர் INPT தலைவர் பிஜோய் கிரன்காலுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஜூன் 2002 இல் சந்தித்தார். காங்கிரஸ் INPT உடன் தேர்தல் ஒப்பந்தம் வைத்துக்கொள்ளும் என தீர்மானிக்கப்பட்டது ….காங்கிரஸின் ஒரே பலமும் ஆதரவும் NLFT தான். மோசமான கொடுமையான காட்டுமிராண்டித்தனமான கொலைகளை செய்துள்ள NLFT. அண்மையில் (ஜூனிலும் ஜூலையிலும்) NLFT CPI(M) மற்றும் GMP அமைப்புகளை சார்ந்தவர்களை கொல்லுவதை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களையும் குடும்பத்திலுள்ள பெண் உறுப்பினர்களையும் கொல்வதை அதிகரித்துள்ளனர். இதில் மிகவும் மனிதத்தனமற்ற பகுதி சிறுவர்களையும் ஏன் பச்சிளம் குழந்தைகளையும் கொல்வதுதான்….NLFT கும்பலின் பலிகளுள் சிபிஐ(எம்) தலைவரின் ஒன்றரை வயது மகளும் அடக்கம்….காங்கிரஸ் வேண்டுமென்றே இந்த படுகொலைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டது.” ( People’s Democracy, 12,ஆகஸ்ட்,2002)

ஜூலை 22-26 இல் ஜெனிவாவில் நடந்த ஒரு ஐக்கிய நாடுகள் மாநாட்டில் திரிபுரா இந்தியாவின் பகுதியல்ல என்று அறிவித்தர் சோனியாவுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பிஜோய் கிரன்கால் என்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தேசவிரோத சக்திகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது என வெளிப்படுத்துகிறது ஹரிபாத தாஸ் எனும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாளரின் கட்டுரை. ” காங்கிரஸின் மௌனம் அது தேசவிரோத சக்திகளுடன் கொஞ்சிகுலாவும் குற்றத்தை செய்துதான் வருகிறது என்பதனை ஒப்புக்கொள்ளும் மௌனமாகும். இது நமது வகுப்பு ஒற்றுமை, சமுதாய இசைவு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சீர்குலைப்பதாகும்….ஜனநாயக மரபுகள், ஒழுக்க மதிப்பீடுகள் போன்றவற்றினைக் குறித்து சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ¤க்கு அதன் ஒரே நோக்கம் அதிகாரத்தை எவ்விதமேனும் கைப்பற்றுவதே ஆகும்.” (People’s Democracy, 1-செப்டம்பர் 2002)

சர்வதேச அறிக்கை:

சர்வதேச அளவில் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் -இங்குள்ள ஊடகங்களால் பிரதானப்பட்டு காட்டப்படும்- இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த அறிக்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளாகக் கூறப்படும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டும் அளவுக்கு திரிபுராவில் NLFT அமைப்பினர் நடத்தியுள்ள கொடுமைகளை விளக்குவதில்லை. ஏன் பட்டியலிடுவது கூட இல்லை.

உதாரணமாக ‘International Religious Freedom Report 2002’ எனும் அறிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.

http://www.imc-usa.org/cgi-bin/htdocs/reports/uscirf-rep071002.htm

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைகளாக அந்த அறிக்கையில் இடம் பெறும் விசயங்கள் வெறும் புள்ளிவிவரங்களும் வர்ணனைகளும் மட்டுமல்ல கூடவே சமூகவியல்-அரசியல் காரணங்களும் அலசப்படுகின்றன. உதாரணமாக, ” ஆகஸ்ட் 2000 காந்தி நகர் குஜராத்தில் ஒரு கும்பல் ஒரு கிறிஸ்தவ பாதிரி கிறிஸ்தவ இலக்கியங்களை விநியோகித்ததற்காக அவரை உதைத்தது. .செப்டம்பர் 2000 இல் ஒரு கத்தோலிக்க சர்ச் தாக்கப்பட்டது. நவம்பர் 2000 இல் குஜராத் சூரத் மாவட்டத்தில் சிந்தியா கிராமத்தில் ஒரு ஹிந்து கும்பல் ஒரு சிறு சர்ச்சை (மாற்றப்பட்ட வீடு) உடைத்தது. இந்த வீட்டிற்கு சொந்தமானவர் ஒரு வனவாசி. அவர் கிறிஸ்தவராக மாறியவர். பின்னர் ஹிந்துவாக மாற விரும்பிய அவர் அவ்வாறு உடைத்த கும்பலை ஆதரித்தார். இந்திய எவாஞ்சலிக்கல் சர்ச்சின் பிஷப் இது குறித்து குஜராத் முதலமைச்சரை காண விரும்பிய போது முதலமைச்சர் அவரை பார்க்க மறுத்துவிட்டார். அது மதப்பிரச்சனை அல்ல நிலப்பிரச்சனை என்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. தாசில் நிலை நீதிமன்றத்தில் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாகவும், அதற்கு மேல் உள்ள மாவட்ட நீதி மன்ற தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சார்பாகவும் வந்துள்ள நிலையில் கிறிஸ்தவ அமைப்புகள் குஜராத் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. ஜனவரி 2001 இல் உதய்பூரில் பஜ்ரங் தள் இயக்கத்தினர் இரு கிறிஸ்தவ மிசிநரிகளையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் ஏசுவின் வாழ்க்கைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்ததற்காக உதைத்தனர். இரு மிசிநரிகளும் வனவாசிகளை மதமாற்ற முயன்று கொண்டிருந்தவர்கள். மே 7 2001 அன்று பாதர் ஜெய தீப் எனும் கிறிஸ்தவ பாதிரி ஜாத்னி நகரில் உள்ளூர்வாசிகளால் உதைக்கப்பட்டார். அவர் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பும் பிரச்சார பிரசுரங்களை கொடுத்துக்கொண்டிருந்ததே இதன் காரணமாகும்.” இந்த ரீதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ‘வன்முறையை’ 2904 வார்த்தைகளில் இந்த அறிக்கை விளக்குகிறது.

மிசிநரி (missionary) என்கிற வார்த்தை பிரயோகம் கூட கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதாக விளக்குகிற இந்த அறிக்கையில் தப்பித்தவறிக் கூட கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சார இலக்கியங்கள் விக்கிரக ஆராதனை குறித்து என்ன கூறுகின்றன என்பது கூறப்படவில்லை. காலம் காலமாக ஹிந்துக்கள் பாரம்பரியமாக வணங்கும் விக்கிரக ஆராதனை விபச்சாரத்திற்கு சமானமான ஒரு குற்றமாக கூறும் கிறிஸ்தவ பிரசுரங்களை சர்வ சாதாரணமாக காட்டமுடியும். இத்தகைய வெறுப்பியல் பிரச்சாரங்களை ஒரு காரணியாக இந்த அறிக்கை எவ்விடத்திலும் ஆராயக்கூட முன்வரவில்லை.

கட்டாய மதமாற்றம் குறித்து இந்த அறிக்கை பின்வருமாறு மட்டுமே கூறுகிறது:

“கட்டாய மதமாற்றங்கள்: ஏப்ரல் 2002 இல் பாண்டிச்சேரி அரசாங்கம் ஆறு கைதிகளின் புகாரின் பெயரில் பாண்டிச்சேரி மத்திய சிறை உயரதிகாரி கைதிகளை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறப்பட்டதனை விசாரணை செய்ய உத்தரவிட்டது. ஆறு கைதிகள் தாம் மதமாற மறுத்தமையால் சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் மனு அனுப்பியிருந்தனர்.ஹிந்து தேசிய அமைப்புகள் அடிக்கடி கிறிஸ்தவ மிசிநரிகள் ஹிந்துக்களை -குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினரை- கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார் கூறுகின்றனர். கிறிஸ்தவர்கள் ஹிந்து அமைப்புகளின் ‘மறு-மதமாற்றமே’ (கிறிஸ்துவர்களை ஹிந்துக்களாக்குவது) கட்டாயத்தின் பெயரில் நடப்பதாக கூறுகின்றனர். ஆனால் இருபக்க குற்றச்சாட்டுகளுக்குமே ஆதாரங்களில்லை.”

சமுதாய மனநிலைகள் (Societal Attitudes) எனும் தலைப்பின் கீழ் NLFT குறித்த குறிப்பு வருகிறது. அதே தலைப்பின் கீழ் NLFT குறித்த குறிப்புக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஸன் “கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியத்தன்மையுடன் இருக்கவேண்டும்” எனக் கூறியது கிறிஸ்தவ பிஷப்புகளின் எதிர் விளக்கங்களுடன் 207 வார்த்தைகளில் விமர்சிக்கப்படுகிறது அதே அறிக்கை NLFT குறித்து கூறுவதெல்லாம் பின்வருமாறு: “கிறிஸ்தவ பெரும்பான்மை பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலசமயங்களில் தாக்குபவர்களாக உள்ளனர். திரிபுராவில் கிறிஸ்தவரல்லாதவரை NLFT எனும் எவாஞ்சலிக்கல் மனப்பாங்கு உடைய வனவாசி கிறிஸ்தவ அமைப்பினைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் இடையூறு செய்யும் (harassment) சம்பவங்கள் பல நடந்துள்ளன. உதாரணமாக NLFT அமைப்பினர் ஹிந்து மற்றும் இஸ்லாமிய திருவிழாக்களை அந்த இடங்களில் தடைசெய்துள்ளனர்; பெண்களை பாரம்பரிய ஹிந்து வனவாசி உடைகளை அணிய தடைவிதித்துள்ளனர் மற்றும் பாரம்பரிய வழிபாடுகளை தடைசெய்துள்ளனர்.” இவ்வாறு ஒட்டுமொத்த NLFT இயக்கத்தின் வன்செயல்களை 70 வார்த்தைகளில் முடித்துவிடுகிறது அறிக்கை.

“ரியாங்குகள் வந்தேறிகள்……ரியாங்குகள் ஹிந்துக்கள் இல்லை”

ரியாங்குகளுக்காக அகில இந்திய அளவில் உரத்த குரல் எழுப்பி வரும் அமைப்பு வனவாசி கல்யாண் கேந்திரமாகும். 1997-98 இல் தேசிய மனித உரிமை கமிஷன் முன்னர் ரியாங்குகளின் பிரச்சினையை வனவாசி கல்யாண் கேந்திரம் எழுப்பியது. (Violation of human Rights of Members of Reang Community of Mizoram Case No.40/16/97-98) இதனையடுத்து மனித உரிமை கமிஷன் நடத்திய ஆய்வின்படியும் மிசோரம் திரிபுரா மற்றும் அசாம் அரசுகளின் 1997 இல் 10000 இல் தொடங்கிய இந்த அகதிகள் எண்ணிக்கை 30000 எட்டியிருப்பதை மனித உரிமை கழகம் அறிவித்தது. மேலும் ரியாங்குகள் சட்டபூர்வமாக மிசோரமின் மக்கள் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது மனித உரிமை கழகம். ஆனால் ரியாங்குகள் பிரச்சனை காலத்தில் மிசோ முதலமைச்சராக இருந்த லால்தெங்க்வாலா ப்ரண்ட்லைனுக்கு அளித்த பெட்டியில் ரியாங்குகள் மிசோரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் வெளியாட்கள் எனவும் கூறினார். (ப்ரண்ட்லைன், 18 – 31 ஜூலை, 1998) ஆசிய மனித உரிமைகள் மையம் திரிபுரா அரசு அமைத்துக் கொடுத்துள்ள அகதிகள் முகாமின் நிலையை “மனிதர்கள் வாழத்தகுதியற்றது” என வர்ணித்தது. ஒரு நாளைக்கு ரூ 2.75 (இல்லை நீங்கள் தவறாக படிக்கவில்லை இரண்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாதான்) வைத்து மாதத்திற்கு நூறு ரூபாய்க்கும் குறைவாக இந்த மக்களுக்கு நிவாரண நிதி கிடைக்கிறது. (காஷ்மீரி அகதிகளுக்கு மாத நிவாரண நிதி ரூ 800. அதே அளவு நிதியாவது இம்மக்களுக்கு ஒதுக்கபப்ட வேண்டுமென்று கோரியுள்ளது வனவாசி கல்யாண் ஆசிரமம்). தங்களுக்கு கிடைக்கும் அற்ப ரேஷன் அரிசி கூட கிடைக்காது என்பதால் நிகழும் சாவுகளை கூட வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் ரியாங்குகள் உள்ளனர். ஆனால் லால்தெங்க்வாலா மே 1999 இல் அளித்த பேட்டியில் (ஓரியண்டல் டைம்ஸ்) ரியாங்குகள் ஆர்.எஸ்.எஸ். சதியால் திரிபுராவிற்கு சென்று அங்கு ஆர்.எஸ்.எஸ் ஹாஸ்டல்களில் வாழ்வதாக ஒரு பேட்டியில் கூறினார். திரிபுரா அரசோ மத்திய அரசின் அனைவருக்குமான கல்வி திட்டத்தை கூட இந்த மக்களுக்காக செயல்படுத்தவில்லை என்கிறது ஆசிய மனித உரிமை மையத்தின் அறிக்கை. இந்த சூழலில் வனவாசி கல்யாண் கேந்திரம் இம்மக்களின் குழந்தைகளின் கல்வி சேவையையும், மருத்துவ சேவையையும் தங்களால் இயன்ற அளவு பார்த்துக்கொள்கின்றனர். பூர்வாஞ்சல் வனவாசி கல்யாண் ஆசிரமம் 1999 இல் 19 இளைஞர்களை (மாத உபகார ஊதியம் ரூ 400) வைத்து இந்த அகதி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வழி வகை செய்துள்ளது. அசாமின் ஹைலாஹந்தி மாவட்டத்தில் ராமகிருஷ்ண சேவா மிஷனின் சுவாமி ஷயதானந்த மகராஜ் சேவை புரிந்து வருகிறார். (ஆப்ஸர்வர்,பிப்ரவரி 8, 1999) ஆனால் திரிபுரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு இந்த சேவைகள் கூட பிரச்சனையாகத்தான் இருக்கின்றன. ப்ரண்ட்லைனுக்கு அளித்த பேட்டியில் லால்தெங்க்வாலா “ரியாங்குகள் ஹிந்துக்கள் அல்ல” என்று அவர்களுக்காக ஆர்.எஸ்.எஸ் குரல் கொடுப்பதை கண்டிக்கிறார். இடதுசாரி பத்திரிகையான ப்ரண்ட்லைன் எழுதுகிறது: ” லால்தெங்க்வாலா ஆர்.எஸ்.எஸ். குறித்து விசனிப்பதில் காரணம் இல்லாமலில்லை. வனவாசி கல்யாண் ஆசிரமம் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அகதிகள் முகாம்களில் ‘துன்புறுவோர்களுக்கு உதவிட’ தோன்றியுள்ளது. அந்த அமைப்பு இப்பிரதேசத்துக்கு வெளியே ரியாங்குகள் பிரச்சினையை எடுத்து சென்றுள்ளது. ஜனவரி மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வனவாசி கல்யாண் ஆஸிரமத்தின் பெயரில் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனை சந்தித்து ரியாங்குகளுக்கு மிசோரமில் சுய மாவட்டம் வழங்கிட வகை செய்யுமாறு மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்க கோரிக்கை வைத்தனர்.” எனினும் ரியாங்குகளுக்காக வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தொடர் போராட்டம் சில ஒளிக்கதிர்களை ரியாங்கு சமுதாயத்திற்கு அளித்துள்ளது. 2005 இல் வனவாசி கல்யாண் கேந்திரம் சார்ந்த சூரிய நாராயண சாக்சேனா உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதி லகோதி தேர்தல் கமிஷனுக்கும், மிசோரம் மற்றும் திரிபுரா அரசுகளுக்கும் ஏன் ரியாங்கு சமுதாயத்தை மீண்டும் மிசோரமில் வாழவைக்க வகை செய்யப்படவில்லை என கேட்டுள்ளது.

ரியாங்குகள் ஹிந்து பெயர்களை வைக்கின்றனர். ஹிந்து தெய்வங்களை வழிபடுகின்றனர். தங்களை காசியபர் பிருகு போன்ற முனிவர்களின் வழியில் வந்ததாக கூறுகின்றனர். என்ற போதிலும் அவர்களை மிசோவான லால்தெங்க்வாலா ஹிந்துக்கள் அல்ல என தீர்ப்பிடுகிறார். “ரியாங்குகள் மிசோரத்தில் உள்ளவர்கள் இல்லை. அவர்கள் 1950களில் பங்களாதேஷிலிருந்து வந்தேறிகள்…. ரியாங்குகள் நாடோடிகள். அவர்கள் ஹிந்துக்கள் அல்ல அனிமிஸ்டுகள். அவர்கள் மிசோக்களை போல ஒரிடத்தில் வாழ்பவர்களல்ல ரியாங்குகள் கூறுவது போல அவர்களுக்கு கோவில்கள் கிடையாது.” ஜூலை 18 1998 ப்ரண்ட்லைன் பேட்டி. அதாவது கிறிஸ்தவ பெரும்பான்மை பிரதேசங்களில் நீங்கள் ஹிந்துவா இல்லையா என்பது கூட பிறர் தீர்மானிக்கும் விசயம்தான். இதுவும் போதாதென்று அவர்களுக்காக தேசிய அளவில் குரல் எழுப்புவது கூட தவறு அல்லது தேவையற்ற விசயம் என்பது போல காட்டப்படுகிறது. சுருக்கமாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறவும் மிசோக்களுக்கு அடங்கிப் போகவும் மறுத்த ஒரே பாவத்திற்காக இந்த சமுதாய மக்கள் கொடூரமான சாவினை ஏற்கவேண்டியதுதான். அவர்களுக்கு உதவுவதும் அவர்களுக்காக குரல் எழுப்புவதும் கூட வகுப்புவாதம்தான்.

வடகிழக்கின் கிறிஸ்தவ ஆலயங்கள் எழுப்பும் மணியோசை இன்றைக்கு ரியாங்குகளுக்கும் ஜமாத்தியாக்களுக்கும் சாவுமணியாக ஒலிக்கிறதாக இருக்கலாம். நாளை அது தமிழ்நாட்டில் விக்கிர ஆராதனை செய்யும் கடைசிக் குழந்தைக்காகவும் எழுப்பப்படும் மரணமணி ஓசையாக இருக்கலாம். ஏனெனில் விவிலியம் கூறுகிறது…

“நீங்கள் அவர்களுக்கு செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப் போடவேண்டும்.” (பைபிள்: உபாகமம் 7:5)

“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்.”
(பைபிளில் ஏசு சொன்னது: மத்தேயு 12:30) “பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, போர்வாளையே அனுப்ப வந்தேன். எப்படியெனில் மகனுக்கும் அப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.”
(பைபிளில் ஏசு சொன்னது: மத்தேயு 10: 34-35)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்தியாவில் இன்றும் தொடரும் ‘புனித விசாரணை ‘ சூழல்கள்

திரிபுரா:

தொடக்கம்:

ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பரப்ப உருவாக்கப்பட்டது. 1980 வரை மதமாற்றங்களில் எவ்வித பெரிய வெற்றியையும் அடைந்திராத இந்த கிறிஸ்தவ சபை (சர்ச்) பின்னர் இன ரீதியிலான கலவரங்களைத் தூண்டிவிடத் தயங்கவில்லை. அதன் பின்னர் மதமாற்றத்தில் அது குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது. (பி.ஜி.வர்கீஸ், ‘India ‘s North-East Resurgence: Ethnicity, Insurgency and Governance, Development ‘ 1996, பக்.175)

ஆயுத உதவி:

ஏப்ரல் 18 2000 அன்று வெளியான பிபிசி செய்தியின் படி இந்த கிறிஸ்தவ சபைதான் என்.எல்.எஃப்.டி (NLFT) எனும் திரிபுரா தேசிய விடுதலைப்படை என்கிற பயங்கரவாத அமைப்புக்கு ஆயுத உதவி செய்கிறது. உதாரணமாக திரிபுரா காவல் துறையினர் நவப்ராவின் பாப்டிஸ்ட் சர்ச்சின் செயலரான நாக்மன்லல் ஹலம் என்பவரை கைது செய்த போது அவரிடமிருந்து 50 ஜெலாட்டின் குச்சிகளும், 5 கிலோ பொட்டாசியமும், 2 கிலோ சல்பரும், இதர வெடிபொருட்களுக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. கடந்த இரண்டு வருடங்களாக தாம் என்.எல்.எஃப்.டி அமைப்பிற்கான ஆயுதம் வழங்குதலில் தாம் ஈடுபட்டிருப்பதாக அவர் ஒத்துக்கொண்டார்.

NLFT கிறிஸ்தவத்தை பரப்பும் முறை:

NLFT இன் முக்கிய இலக்கு ஜமாத்தியா சமுதாய மக்கள் ஆவர். பிடிப்புள்ள வனவாசி சமுதாயமான இம்மக்களை மதமாற்றுவது பொதுவான மதமாற்ற முயற்சிகளில் கடினமாக இருப்பதால் NLFT தாக்குதல், படுகொலைகள், தண்டனை படுகொலைகள் மற்றும் கடத்தல்ளாகிய முயற்சிகள் மூலம் இவர்களை புலம் பெயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. பொதுவாக பாரம்பரிய வாழ்விடங்களில் வாழும் சமுதாயங்களைக் காட்டிலும் புலம் பெயர்ந்து அகதிகள் முகாமில் வாழவைக்கப்படும் போது மதமாற்றுவது எளிதானது என்பது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நற்செய்தி பரப்பும் முயற்சிகள் (evangelical efforts) மூலம் மிசிநரிகள் கண்டடைந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

NLFT இயக்கம் எவ்விதத்தில் ஆட்களைச் சேர்க்கிறது. அதன் இயக்க அமைப்பினுள் இருக்கும் ஒருவர் எவ்விதம் உணர்கிறார் என்பதனை அந்த இயக்கத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு பின்னர் வெளியேறிய ரத்தன்சாய்ந் தெபர்மா கூறியுள்ளார்.

ஒரு முன்னாள் NLFT இயக்கத்தவனின் பார்வையில்:

பிப்ரவரி 1997 இல் இந்த இயக்கத்தினரால் வீட்டிலிருந்து வீட்டிலுள்ளோர் எதிர்ப்பையும் மீறி கடத்திச் செல்லப்பட்ட தெபர்மா பின்னர் மூன்று மாதங்கள் ஏகே-47 ஸ்டென்கன் உட்பட பல நவீன ஆயுதங்களில் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்ஸின் நான்கு மூத்த தலைவர்களை கடத்திச்சென்ற செயல் உட்பட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர் ஒருமுறை தமது கிராமத்தையே சார்ந்த ஒருவரைக் கொலை செய்ய அவரது விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தப்பட்டார். ‘கிறிஸ்தவத்திற்கு மதமாறுவது இயக்கத்தினுள் கட்டாயமான ஒன்றாகும். நானும் மதம் மாற கடுமையான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன். ஆனால் சாக்குபோக்குகள் சொல்லி நான் தப்பி வந்தேன். ‘ என்கிற தெபர்மாவுக்கு மாதத்திற்கு அவரது செயல்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் ரூபாய் ஐயாயிரம் ஆகும். ஆனால் தாம் யாரைக் கடத்தி வருகிறோம், அவர்களுக்கான மீட்புத்தொகை எவ்வளவு என்பது குறித்து இவர்கள் அறியமுடியாது. ( ‘தி டெலிகிராப் ‘ 20 ஏப்ரல் 2000)

இனி NLFT மதரீதியில் நிகழ்த்திய பயங்கரவாத செயல்களுக்கு வரலாம். NLFT பாப்டிஸ்ட் சபையினைச் சார்ந்தது. இருபத்தொன்றாம் நூற்றாண்டினது. கோவாவின் புனித விசாரணை கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டது. 1560-1812 வரை நடத்தப்பட்டது. என்ற போதிலும், இந்த வன்முறைகளில் ஒரு ஒற்றுமையை காணமுடியும். கிறிஸ்தவ இறையியலின் வெறுப்பியல் ஒற்றுமை அது.

வன்முறைக்கொடுமைகள்:

தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஹிந்து குடும்பத்தை NLFT தீவைத்துக் கொளுத்தியது. (பிபிசி, ஏப்ரல் 14, 2000.)

திரிபுராவில் ஜிரான்சியா பகுதியில் உள்ள கோவிலுக்குள் ஞாயிறு இரவு நுழைந்து அங்குள்ள பூசாரியும் மதத்தலைவருமான சாந்தி காளீயை சுட்டுக்கொன்றனர் NLFT இயக்கத்தினர். அனைத்து வனவாசிகளும் கிறிஸ்தவத்தையே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றனர் NLFT இயக்கத்தினர். (பிபிசி, ஆகஸ்ட் 28, 2000)

அனைத்து ஹிந்து சேவை மையங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்படவேண்டுமென்று NLFT இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். கடந்த ஜூலை 8 ஆம் தேதி வடதிரிபுராவின் ஆனந்த பஸார் பகுதியில் உள்ள சேவா-மிஷன் நிறுவனத்தின் மாணவர் விடுதி இந்த இயக்கத்தினரால் தீ வைக்கப்பட்டது. இங்கு இருந்த 32 மாணவர்களும் ஓடி ஒளிந்ததால் உயிர் தப்பினர். (தி டெலிகிராப், செப்டம்பர் 24, 2000)

திரிபுராவின் பிரபல ஹிந்து சமயத்தலைவரான லாப்குமார் ஜமாத்தியாவின் பிணம் காடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டது. NLFT இயக்கத்தினர் கிறிஸ்தவராக வேண்டுமென்று வைத்த கோரிக்கையை மறுத்துவிட்டவர். (பிபிசி: 27, டிசம்பர் 2000)

கிறிஸ்தவ சர்ச் ஆதரவு பெற்ற NLFT இயக்கத்தினர் பாரம்பரிய இசைக்கருவிகளை கீர்த்தனங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஹிந்து வனவாசிகளுக்கு தடைவிதித்துள்ளனர். ஹிந்து வனவாசிகளிடையே விநியோகிக்கப்பட்ட எச்சரிக்கை பிரசுரங்களில் NLFT இயக்கத்தினர் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு தடை விதித்துள்ளனர். இச்செயல் திரிபுராவின் உட்பகுதிகளான போராக்கா, பட்னி, பார்கதால் மற்றும் சோனாய் (சதார் உட்பிரிவு) ஆகிய இடங்களில் வாழும் ஹிந்து வனவாசிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக, NLFT இயக்கத்தினர் ஹிந்து வனவாசிகளை கொன்றும் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி துப்பாக்கிமுனையில் கட்டாயப்படுத்தியும் வருகின்றனர். இதே காலகட்டத்தில் 35 ஹிந்து வனவாசிகள் (முன்னணி ஹிந்து வனவாசி சாதுக்களான சாந்தி காளீ மகராஜும், வைணவப்பிரிவு தலைவர்களான தாச்சிதாஸ ரியாங்கும், சந்ஜித் ரியாங்கும் இதில் அடக்கம்) NLFT இயக்கதினரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர வனவாசிகளால் நடத்தப்படும் ஹிந்து மத ஆசிரமங்கள் மற்றும் சமய நிலையங்கள் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டுள்ளன. மார்ச் 26 அன்று ஜமாத்தியாக்கள் வாழும் பந்தர்கத் கிராமத்தில் (அமர்பூர் உட்பிரிவு) ஆறு வனவாசிகளை அவர்களின் பாரம்பரிய மதச்சடங்குகளை பின்பற்றியதற்காக அடித்து நொறுக்கினர். (தி டெலிகிராப்,1 ஏப்ரல், 2001)

பிரிவினைவாத பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படாமல் இருக்க வனவாசி ஹிந்துக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக வனவாசி தலைவர்கள் கூறினர். ‘ஆயுதமேந்திய NLFT பயங்கரவாதிகளால் வனவாசி கிராம மக்கள் பலவந்தமாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படுவது ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள மிக பயங்கர அபாயம் ‘ என ஜமாத்தியா சமுதாய தலைவரான ராமபாத ஜமாத்தியா கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 5000 வனவாசி கிராம மக்கள் NLFT அமைப்பால் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் கூறினார். குறைந்தது 20 ஹிந்து வனவாசிகள் கடந்த இரு வருடங்களில் NLFT க்கு பணிய மறுத்தமைக்காக கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.19 சமுதாயங்களின் .சமுதாய தலைவர்களும் சமயத்தலைவர்களுமாக கூடி வனவாசி பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பினை NLFT-ஆல் ஏற்பட்டுள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க உருவாக்கியுள்ளனர். (Indo-Asian News Service (IANS) செய்தி நிறுவனத்திற்காக, சையது ஸாகீர் ஹுசைன், 2-ஆகஸ்ட்-2001)

மகரசங்கராந்திக்கு முந்தைய நாள் அதனை கொண்டாட உள்ளூர் சந்தைக்கு சென்றவர்களில் 16 பேர், NLFT யினர் சுட்டதில் உயிரிழந்தனர். இவர்களில் ஸ்ரீமா என்ற ஏழுவயது குழந்தையும் அவளது பெற்றோர்களும் அடங்குவர். (பிடிஐ செய்தி, 13 ஜனவரி 2002)

கொந்தளிப்பான வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பான NLFT யின் பணம் பிடுங்கும் மிரட்டல்களுக்கு தாம் பணியாமல் போராடப் போவதாக ஹிந்து கிராமவாசிகள் கூறினர். நூற்றுக்கணக்கான ஹிந்து வனவாசிகளுக்கு தடை செய்யப்பட்ட NLFT அமைப்பினர் பணம் தரும்படி எச்சரிக்கை மிரட்டல்கள் அனுப்பியுள்ளனர். ‘ஹிந்து வனவாசி கிராம மக்களுக்கு மட்டும் இத்தகைய பணம் தரும் மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மறுப்பவர்களுக்கு கொலைத்தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ என்று ஜமாத்திய ஹோதா எனும் சமுதாய அமைப்பின் தலைமை பூசாரி அஸ்வதாம ஜமாத்தியா தெரிவித்தார். காவல் துறையும் இந்த மிரட்டல்களை உறுதி செய்தது. அரசு பணியிலிருக்கும் அனைவரும் தமது வருடாந்திர ஊதியத்தில் மூன்று சதவிகிதத்தை NLFTக்கு வரியாக அளிக்க வேண்டும். விவசாயிகளும் சுய தொழில் செய்வோரும் ரூபாய் 1800 முதல் ரூ 4000 வரை வரி கட்ட வேண்டும். NLFT அமைப்பினர் துப்பாக்கி முனையில் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதாகவும் வனவாசி ஹிந்துக்கள் புகார் செய்கின்றனர். (Agence France Presse: 31, டிசம்பர் 2002)

திரிபுரா அரசின் ஜூன் 2004 அறிக்கையின்படி இதுவரை 20,000 மக்கள் இவ்வன்முறைகளால் தம் பாரம்பரிய வாழுமிடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு திரிபுராவின் பிருந்தாபங்கத் எனும் இடத்தில் இன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் NLFT இயக்கத்தினர் எட்டு பேரைச் சுட்டுக்கொன்றனர். விவரம்: அமுல்ய தேவநாத், அமர் சரண் தேவநாத், அரபிந்தோ தேவநாத் (4), நிரேத தேவநாத் , பல்குமாரி தேவநாத், நிவா தேவநாத், சபால தேவநாத் மற்றும் பிரேமானந்த தேவநாத் (102) (ரிடிஃப் செய்தி 25, செப்டம்பர் , 2005)

—-

(தொடரும்)

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

அரவிந்தன் நீலகண்டன்


வதைக்கும் சிலுவையில் அவன் – அவனது அருகில் நின்றேன் நான்

இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான்

எனினும் முனங்கினான் ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான்

எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது

எத்தனை கொலைகள் அவனால் என் நாட்டில். நான் கூச்சலிட்டேன்

இளக்காரமாக

‘போ போ போய் விடு! ‘

-ஷெல்லியின் கிறிஸ்து எனும் கவிதை-

‘சில காலம் கோவாவில் வன்முறையை கிறிஸ்தவர்கள் செய்தது என்பது உண்மையே. அங்கு மாட்டுக்கறியை இந்துக்களின் வாயில் திணித்து கிறிஸ்தவராக்கினர். ஆனால் இம்முறையைக் கூடிய விரைவிலேயே கைவிட்டனர். ‘ என்கிறார் கற்பக விநாயகம். அப்படி என்ன வன்முறையைத்தான் கிறிஸ்தவர்கள் கோவாவில் செய்துவிட்டனர் ? மாட்டுக்கறியை இந்துக்கள் வாயில் திணித்தார்கள் அவ்வளவுதான். அதுவும் சிலகாலம். அப்புறம் அதையும் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் சவேரியார் என திருநாமம் சூட்டப்பட்டுள்ள பிரான்ஸிஸ் சேவியருக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? அவர் தமிழ்நாட்டில்தானே ‘ஊழியம் ‘ செய்து கொண்டிருந்தார் ? என்பது கற்பகவிநாயகத்தின் வாதமாக இருக்கிறது. எனவே கோவாவில் கிறிஸ்தவம் செய்த வன்முறையின் உண்மையான இயற்கை என்ன என்பதனை காட்டவும், இவ்வன்முறையின் பின்னாலிருக்கும் இறையியல் இன்றைக்கும் கிறிஸ்தவத்தில் தொடர்வதையும் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கர்த்தரின் அன்பின் ராச்சியத்தை தமிழ்நாட்டில் பரப்பிட வந்த ப்ரிட்டோ பாதிரி இங்குள்ள அரச குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்க முயற்சி செய்து தண்டிக்கப்பட்ட வன்முறை மீண்டும் மீண்டும் கற்பகவிநாயகத்தால் கூறப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் கத்தோலிக்க ஏசுவின் கருணையை லூத்தர அரசர்களுக்கு எடுத்தோதிய கத்தோலிக்க மதமாற்றிகளுக்கும் அவ்விதமே லூத்தேறிகள் என கத்தோலிக்கர்களால் அழைக்கப்பட்ட புரோட்டஸ்டண்ட் மதமாற்றிகளுக்கு கத்தோலிக்க ஐரோப்பிய அரசர்கள் காட்டிய வன்முறையும் ஒப்பிடுகையில், ஒரு ப்ரிட்டோ பாதிரிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை திரு.கற்பக விநாயகம், ஏதோ ஹிந்து அரசர்கள் அனைவருமே இப்படித்தான் கிறிஸ்தவ பாதிரிகளை நடத்தியதாக கூறுவது தவறானது. அரசு அதிகாரத்தில் மதமாற்றத்தால் வெளிப்படையாக தெரியும்படியான குழப்பத்தை உருவாக்கிய பாதிரிகள் மட்டுமே வெகு அரிதாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் கிறிஸ்தவம் தனது முழு அதிகாரத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் கோலோச்சிய இடங்களில் அன்று முதல் இன்று வரை எவ்விதத்தில் பிற மதத்தவர்களை நடத்தியுள்ளனர் என்பதனை ஆராயலாம். குறிப்பாக கோவாவில் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் இன்க்விசிசன் மற்றும் அதில் ‘புனிதராக ‘ கத்தோலிக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவியரின் பங்கும் அவரது கருத்தாக்க தாக்கமும் என்ன என்பதனையும் சிறிது காணலாம்.

1. ‘சில காலம்….அவ்வளவுதான் ‘:

கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778 இல் அது மதப்பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த ‘புனித விசாரணை ‘ நிறுவனம் நீடித்தது.

2. பிரான்ஸிஸ் சேவியரின் ஊழியமும் பார்வையும்:

நமது மீட்பரின் ஆண்டான (Anno Domini) 1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

‘சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள். அதனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்….இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன. ‘ (St. Francis Xavier ‘s Letter from India, to the Society of Jesus at Rome, 1543)

பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும் பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:

‘முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு முறம்பான விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது. பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன் நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான். இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது….இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும். ‘ (St.Francis Xavier ‘s Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)

1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள்தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும் அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட ‘Modern Asia and Africa, Readings in World History ‘ பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971.)

கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே ஹிந்துக்களுக்கு எதிரான ‘சில கால ‘ வன்முறை ஆரம்பித்துவிட்டது. ‘குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து ஹிந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள் உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. ஹிந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. ஹிந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து துரத்தப்பட்டனர். ‘ என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing House,Bombay,1988.)

3. சேவியரின் கனவு நனவாகிறது:

சேவியர் 1552 இல் இறந்தார். அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு பின்னரே அவரது கனவு நனவாயிற்று. புனித விசாரணையின் போக்கில் சேவியரின் அதே மனப்பாங்கினை மீள் காணமுடியும்.இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் கத்தோலிக்க ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்க்விசிசன் கத்தோலிக்க தெய்வீக அதி உயர் நிலையையும் அதன் நம்பிக்கைகளையும் எதிர்த்தவர்களைக் கடுமையாக தகித்துக்கொண்டிருந்தது. 1560 இல் இறுதியாக கோவாவில் நிறுவப்பட்டது. அக்காலம் தொட்டு நடந்த வன்முறைகளை கீழே காணலாம்.

1560: 200 அறைகள் கொண்ட மாளிகை புனித விசாரணைக்காக சீரமைக்கப்பட்டது. முதல் விசாரணையாளர் வாசஸ்தலம், இரகசிய அறை, புனிதக்கோட்பாட்டின் அறை, சித்திரவதைகளுக்கான அறைகள், சிறை அறைகள், நிரந்தர சிறை அறை என பல அமைக்கப்பட்டன. கோவாவில் வைஸிராயின் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாக புனிதவிசாரணை நிறுவப்பட்டது.

ஏப்ரல்-2 1560: அரச பிரதிநிதி டி கான்ஸ்டண்டைன் டி பிராகான்கா அனைத்து அந்தணர்களும் கோவாவினையும் போர்த்துகீசிய பிரதேசங்களையும் விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

பிப்ரவரி-7 1575: ஆளுநர் அண்டோனியோ மோரெஸ் பாரெட்டோ கிறிஸ்தவத்திற்கு விரோத மனப்பாங்கு கொண்டதாக அறியப்படும் அனைத்து ஹிந்துக்களின் சொத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். 1585 இல் மூன்றாவது பிரதேசங்களின் பேராயர்கள் கூடுதலில் கோவாவில் புனிதப்பணி நடந்தேறியுள்ள விதம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு நிறைவேற்றப்படுகிற தீர்மானம் அந்தணர்களுடன் மருத்துவர்களும் கிறிஸ்தவத்தின் பரவுதலுக்கு இடையூறாக இருப்பதால் அவர்கள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வைத்தது. உள்ளூர் கிறிஸ்தவ பாதிரிகளுடனும் மிசிநரிகளுடனும் போர்த்துகீசிய அதிகாரிகள் கலந்தாலோசித்து அந்தந்த இடங்களில் இத்தகையவர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கூறியது. முதலில் அந்தணர்கள் தான் கிறிஸ்தவம் பரவ தடை எனக்கருதப்பட்டு அவர்களை வெளியேற்றியது புனிதவிசாரணை. பின்னர் இதர ஹிந்துக்கள் மீது தாக்குதல் பாய்ந்தது.

இந்த பாணி சேவியரின் கடிதங்களில் காணமுடிந்த ஒன்றுதான். பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட ஹிந்துக்கள் தமது விக்கிரக ஆராதனை, மணச்சடங்குகள் மற்றும் ஈமச்சடங்குகள் போன்ற ஹிந்து வழிபாடுகளை தொடர்வதாக கண்டறியப்பட்டால் அவர்கள் புனிதவிசாரணையின் ஆக்ஞைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். எல்லா ஹிந்து மதச் சடங்குகளும் சைத்தான் வழிபாடு எனக் கருதப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பலவந்தமாக மதமாற்றப்பட்ட ஹிந்துக்களும் யூதர்களுமாவர். கத்தோலிக்க ஆளுகைக்குட்பட்ட உலகின் ஐந்து மாகாணங்களிலும் கோவாவின் புனித விசாரணை அதன் கடுமையில் மிகவும் கொடியதாக விளங்கியது என்பதனை அனைத்து சர்வதேச எழுத்தாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். “…. இப்புனித விசாரணை இந்த அக்னி சோதனை இப்பூவுலகின் மீது மானிடத்துக்கு அனுப்பப்பட்ட கொடுமை, இந்த கொடூர நிறுவனம் – அதனை செய்தவர்களை வெட்கத்தால் தலை குனிய செய்யும் அமைப்பு, வளமையான ஹிந்துஸ்தானத்தின் மீது அதன் மிருகத்தன்மை கொண்ட அதிகாரத்தை நிலைநாட்டியது. இக்கொடூர அரக்கனை கண்ட மக்கள் -முகலாயர்கள், அராபியர்கள், பாரசீகர்கள், அர்மீனியர்கள், யூதர்கள்- அனைவரும் சிதறி ஓடினர். சமயப்பொறுமை கொண்ட சமாதான பிரியர்களான இந்தியர்களுக்கோ கிறிஸ்தவத்தின் தேவன் முகமதின் தேவனைக் காட்டிலும் கொடூரத்தில் மிஞ்சி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போர்த்துகீசிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறினர். ‘ (Memoirs of Judges Magalhaes and Lousada: ( Vol 2, Annaes Maritimos e Coloniais, page 59, Nova Goa 1859, ஆல்ப்ரெடோ டிமெல்லோவின் ‘Memoirs of Goa ‘) ஆல்ப்ரட் டி மெல்லோ மேலும் கூறுகிறார்: ‘ உதாரணமாக, ஏப்ரல் ஒன்று 1650 இல் நான்கு பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த புனித விசாரணையின் பகிரங்க தண்டனையில் (Auto da fe) டிசம்பர் 14, 1653 இல் 18 பேர் தீயால் எரிக்கப்பட்டனர். இது கத்தோலிக்க சமயத்திற்கு எதிரான குற்றத்திற்காக (crime of heresy). பின்னர் ஏப்ரல் 8 1666 முதல் 1679 வரை தெலோன் எனும் பிரஞ்சு மருத்துவரின் சிறைக்காலத்தில் – புனித விசாரணையின் பகிரங்க தீர்ப்புகள் 8 நிறைவேற்றப்பட்டன. இதில் 1208 பேர் தண்டனையளிக்கப்பட்டனர். நவம்பர் 22, 1711 41 பேர்களுக்கு புனித விசாரணையின் பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்றொரு மைல் கல் டிசம்பர் 20, 1736, அன்று எட்டப்பட்டது,. அன்று ஒரு குடும்பம் முழுமையாக எரிக்கப்பட்டது. ‘

‘புனித விசாரணை ‘ நடத்திய பாதிரிகள் பெண்களிடம் தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ளவும் இந்த புனித விசாரணை உதவியது. ‘புனித விசாரணை அதிகாரிகள் தமது ஆசைக்கு இணங்காத பெண்களை சிறைப்படுத்தி அவர்களிடம் தமது விலங்கு இச்சைகளை தீர்த்துவிட்டு பின்னர் அவர்களை கத்தோலிக்க மதத்திற்கு விரோதமானவர்கள் என எரித்தார்கள். ‘ ( ‘A India Portuguesa, Vol.11, Nova Goa ‘, 1923, p.263 – மேற்கோள் காட்டப்பட்ட நூல் ‘The Goa Inquisition ‘ பக்.175, பிர்லோகர், 1961)

(இடைக்குறிப்பு: வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரி ஒருவருக்கு கிடைத்த தண்டனையைக் குறித்து விவரித்து எழுதிய நண்பருக்கு தமது சக இந்தியருக்கு நடத்தப்பட்ட இத்தனைக் கொடுமைகளையும் அவை நடந்தேறிய 252 ஆண்டுகளையும், ‘சில காலம் கோவாவில் வன்முறையை கிறிஸ்தவர்கள் செய்தது என்பது உண்மையே. அங்கு மாட்டுக்கறியை இந்துக்களின் வாயில் திணித்து கிறிஸ்தவராக்கினர். ஆனால் இம்முறையைக் கூடிய விரைவிலேயே கைவிட்டனர். ‘ எனும் வார்த்தைகளால் பூசி முழுகிவிடமுடிகிறது என்பது குறித்து மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் போலி மேற்கோள்கள், தவறான வரலாற்று தகவல்கள் என்பவற்றால் ஹிந்து மதத்தினருக்கு எதிரான அனைத்து வெறுப்பியல் வாதங்களையும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளையும் நியாயப்படுத்தி வருகிறார் திரு.கற்பகவிநாயகம். அத்தகைய மனிதர் ‘சிலகாலம் வன்முறை நடந்தது ‘ என ஒத்துக்கொள்வதே ஒரு பெரிய தாராள மனப்பாங்குதான். அடுத்ததாக ஸ்டெயின்ஸ் பாதிரி கொல்லப்பட்ட அதே காலகட்டத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் இழைத்த கொடுமைகளை காணலாம். எப்படி திரு.கற்பகவிநாயகம் கோவா படுகொலைகளை பூசி மொழுகி ஒரு மேற்கத்திய பாதிரியின் மரணத்தை நெகிழ நெகிழ எடுத்தோதினாரோ அப்படியே ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் பலவும் பூசி மொழுகப்பட்டு, ஒரு மேற்கத்திய மதமாற்றியின் கொலை மட்டும் பெரிதாக்கப்படுகிறது என்பதனை இங்கு காணலாம். அதே நேரத்தில் இதன் மூலம் இக்கட்டுரையாளன் ஸ்டெயின்ஸ் படுகொலையை எவ்விதத்திலும் ஆதரிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ இல்லை.)

(தொடரும்)

—-

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்