கொள்ளையின்பம்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

பசுபதி


கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் !
தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் !

பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற்
. . பொறியொன்றின் பிறைகாட்டிப் போதைதந்தாள் மாது
அறிவியலாம் ஆழ்மடுவில் நீந்துகின்ற அந்நாள் — என்னை
. . அவள்பக்கம் இழுத்தனளே அழகரசி மின்னாள் ! (1)

ஆசிரியப் பணிநடுவே ஆசைகாட்டி அலைப்பாள் –என்
. . அருங்கால நிர்வாகம் அத்தனையும் குலைப்பாள் !
காசுபணம் தேடுபணி மூட்டைகட்டச் சொல்வாள் — தன்
. . காலடியில் பகலிரவு கழித்திடவே செய்வாள். (2)

கல்யாவும் மாணிக்கக் கல்லாகா என்பாள் — வெறும்
. . கற்பனையை மெய்யுடனே கலப்போரைத் தின்பாள்
நல்லோரின் சொற்களிலும் நாலுகுற்றம் கண்டு — சற்றும்
. . நடுங்காமல் சபைநடுவில் நடமாட வைப்பாள். (3)

‘வெண்மையிலே பலநிறங்கள்; வீண்குழப்பம் ‘ என்பேன் — ‘வான
. . வில்முடிவில் நிதிக்குவியல் மீட்டிடலாம் ‘ என்பாள்.
‘தண்ணீரில் மூழ்குகிறேன் தருவாய்கை ‘ என்பேன் — ‘நன்கு
. . தத்தளித்தால் தானினிக்கும் என்தழுவல் ‘ என்பாள். (4)

பயன்தருமோர் கருத்துரைத்தால் ‘புதிதல்ல ‘ என்பாள் — புதுப்
. . படைப்புகளை முன்வைத்தால் ‘பயனில்லை ‘ என்பாள்
அயராமல் உழைத்தாலோ அவள்தரும் முயக்கம் — ஆகா!
. . அவளணைப்பில் ஐம்புலனும் அமுதுண்ட மயக்கம்! (5)

முன்னோடித் தோளேறி முக்காலம் பார்ப்பேன் — அவள்
. . முந்தானைப் பின்னோடும் முயற்சியில் வியர்ப்பேன் !
உன்னதமாம் புதுநகைகள் உவந்தவட்(கு) அளித்தால் — இமய
. . உச்சிக்கே அவளணைப்பு உயர்த்துதல் உணர்வேன் ! (6)

பழமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் அறிவு — அந்தப்
. . பாதையிரு பக்கத்தில் பாதாளச் சரிவு!
அழகினுள்மெய் அறைகூவி அழைத்திடுமே நம்மை — அதை
. . அடைவதற்குப் பீறிடுமோர் அசுரவெறித் தன்மை ! (7)

அள்ளவள்ளக் குறையாமல் அழகிதரும் இன்பம் — நான்
. . ஆண்டவனே என்றெழுமோர் அகங்கார இன்பம் !
விள்ளவிள்ள விக்ரமனாய் வளர்மர்ம இன்பம் — அந்த
. . மின்ஞானம் காட்டிடுமோர் மெய்ஞ்ஞான இன்பம். (8)

காரிருளைக் கண்டவுடன் கடுஞ்சாபம் இடாமல் — அகலின்
. . கனலொன்றால் இருளகற்றிக் களிப்படையும் இன்பம் !
தாரகையைப் பிடித்திடவே தாவாமல் குனிந்து — சின்னத்
. . தரையொன்றில் களையெடுக்கும் சாதனையில் இன்பம்! (9)

‘ஆய் ‘வென்னும் அழகிதரும் ஆனந்தம் என்னே! — எனை
. . ஆளவந்த அரசியவள்; கொத்தடிமை நானே !
தேய்வில்லா நிறைமதியாள் தெவிட்டாத தேனாள் — இனி
. . தினந்தோறும் அவள்பணியில் தீர்த்திடுவேன் வாணாள் ! (10)

pas@comm.utoronto.ca

~*~o0o~*~

Series Navigation

பசுபதி

பசுபதி