குழியும் பறித்ததாம்!

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

எம் எஸ் கல்யாணாசுந்தரம்


மாம்பலம் ஸ்டேசனை வண்டி நெருங்கும்போதும் கதவண்டை கூட்டமாகத்தான் இருந்தது; முன் இரண்டு ஸ்டேசன்களைப் போல் ‘இடித்த புளி ‘யாக இல்லையென்றாலும், மல்யுத்தத்திற்குத் தயங்குபவன் வண்டியிலிருந்து இறங்க முடியாது. வழக்கம்போல சட்டைப்பையைத் தடவிக்கொண்டே, ‘தயவு செய்து, இறங்கறவாளுக்கு வழி, சார்! ‘ என்று கிழட்டுக் கூச்சலுடன் நான் இறங்கத் தயாரானேன். உடனே விருக்கென்று சட்டைப்பையைப் பார்த்தேன்; கை அனுப்பிய தந்திச் செய்தி உண்மைதான். பர்சைக் காணோம்! பெரிய அதிர்ச்சி, கிறுகிறுப்பு, அதோடு கூடவே, ‘இது உண்மைதானா, அல்லது ஒரு கெட்ட சொப்பனமா ? ‘ என்ற சந்தேகம். வண்டி, கூட்டம், சுற்றுப்புறத் தோற்றம், காலையிலிருந்து செய்த காரியங்கள், இன்னும் நிறைவேற்றயிருக்கும் அலுவல்களின் ஜாபிதா . . . எல்லாவற்றையும் தெளிவாக நினைக்கும்போது, கனவல்ல என்றே தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் கனவு காணும் போதும், அந்தச் சமயத்திற்கு அப்படிதானே தோன்றுகிறது . . .! ‘ஆயுள் காலத்தில் பண முடிப்புப் பறிகொடுத்ததில்லை ‘ என்று இனி ஜம்பம் அடித்துக் கொள்ள முடியாது. இனி பிறருக்குப் புத்தி புகட்டும் போது, ‘என்னைப் போல் மடத்தனமாக . . . ‘ என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க வேண்டும்.

‘பர்ஸ் திருட்டுப் போயிற்று ‘ என்ற இயற்கையான வருத்தத்தைக் காட்டிலும் அந்தச் சுற்றுப்புற விசாரணைகளில் மனம் ஈடுபட்டிருப்பதை நினைத்தால், ‘அதற்கப்புறம் விழித்துக்கொண்டு, ஒரு வாய்த் தண்ணீர் குடித்துவிட்டு . . . ‘ என்று சொல்லும்படி கனவாகவே இருக்குமோ என்ற நப்பாசை மறுபடியும் தோன்றிற்று. இன்னொரு விஷயம், பர்சில் ஒரு சீசன் டிக்கெட்டும், சில தபால் பில்லைகளும் ஒன்றிரண்டு விலாசக் குறிப்புகளுமே இருந்தன. சாதாரணமாக, இதுபோன்ற சமயங்களில், நம் நஷ்டத்தைக் காட்டிலும், ‘முடிச்சவிக்கி ‘க்குச் சுலபமாய்க் கிடைத்துவிட்ட லாபத்தை நினைத்து நம் மனம் பொறாமைப்பட்டுப் பதறும்! எப்படியெல்லாம் ஆசைகளை அடக்கி, சிக்கனப்படுத்தி இரண்டணா, நாலணாவாகச் சேகரித்த பணம், முட்டாள் பட்டதும் சூட்டிவிட்டுப் பறந்து போய் விட்டதே என்று நினைக்க நெஞ்சு உலரும். தற்செயலாக இந்த சமயம் அந்தத் தவிப்பு எனக்கில்லை. ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவித்தால், ஏற்பட்ட அபராதம் செலுத்தி பதில் டிக்கெட்டும் பெற்றுக்கொள்ளலாம். பத்து நிமிடத்திற்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்ட சூடு ஆறாத டிக்கெட்.

இந்த யோசனைகளெல்லாம் மனத்தில் அடிபட இரண்டு மூன்று வினாடிதான் பிடித்திருக்கும். நான் ஒருவரிடமும் ஒன்றும் சொல்லவில்லை. பிரயோசனமில்லை என்பது ஒரு கருத்து; வண்டி சைதாப்பேட்டை, கிண்டி செல்லும்வரை வண்டியில் தங்கும் பிரயாணிகளுக்குப் பேச ஒரு விஷயதானம் செய்யக்கூடாது என்ற அல்ப எண்ணமும் இருக்கலாம். ‘சாது, நல்ல மனுசர், தெற்குச் சீமை போலிருக்கிறது; சோதாப் பசங்களுக்குச் சரியான வேட்டை . . . ‘ என்று விமர்சனம் செய்வார்கள். ‘போர ‘டித்துக் கிடக்கும் சில பிரயாணிகளுக்குத்தான் ‘திருட்டு ‘, ‘பாம்புக்கடி ‘, ‘லாரி விபத்து ‘, ‘சிங்கம் என்பது சரியா, சிம்மம் என்பது சரியா . . . ? ‘ இதுபோன்ற மகத்தான விஷயங்கள் கிடைத்துவிட்டால் போதுமே!

ஆனால் என்னைக் கவனித்த ஒருவர் அனுதாபத்துடன் மெல்லிய குரலில், ‘என்ன சார் ? ‘ என்று வினவினார்.

‘பர்ஸ் போய்விட்டது ‘ என்றேன்.

‘மணி பற்ஸ் விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சார் ‘ என்றார் வேறு ஒருவர் வல்லின ‘ற ‘வுடன்.

நான் சுட்டெரிக்கும் பார்வையுடன், ‘இனிமேல் உங்கள் யோசனைப்படியே செய்கிறேன் ஐயா. அஜாக்கிரதையாக இருங்கள் என்று பலர் சொன்னதனால், அப்படி இருந்துவிட்டேன்! ‘ என்றேன்.

ஆலோசனை சொன்னவர் ‘என்ன சார், ஒரு மாதிரிப் பேசறீங்க! உங்களைப் போல ஜனங்களுக்குத்தான் சார், மணி பர்ஸ் அடடிக்கடி திருட்டுப் போகணும் ‘ என்று அதட்டி ஆசீர்வதித்தார்.

அதே சமயத்தில் அறிவு ஆற்றலுள்ள ஒரு குரல், ‘எப்படி ஐயா எடுத்தான் ? ‘ என்று கேட்டது.

இன்னொருவர் கோபக்காரரைப் பார்த்து, ‘அவருடைய கருத்து உங்களுக்கு விளங்கவில்லையே! வயிற்றெரிச்சல் தாங்காமல் . . . ‘ என்று விவரித்துக் கொண்டிருந்தார்.

தத்துவ ஆராய்ச்சியாளருக்கு விளக்கம், கோபக்காரருக்கு சமாதானம், என் கட்சியை எடுத்துப் பேசியவருக்கு நன்றியறிவிப்பு, எல்லாம் அளிப்பதற்குமுன் டிரைவருக்கு ஒரே அவசரம் – மாம்பலத்தில் வண்டி நின்றது. நீராவி ரயில்வண்டி தன் ஞாபகர்த்தாமாகக் கொஞ்சம் புகையைப் பின்விட்டுச் செல்வது போல் நானும் என் காய-சித்த-ஆத்ம அமைப்பின் ஒரு அம்சத்தை வண்டியில் இருத்திவிட்டுக் கீழே இறங்கினேன்.

ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னதற்கு அவர் ‘த்சொ . . . த்சொ . . ., இன்றைக்கு இது இரண்டாவது கேஸ் . . . டிக்கெட் எப்படியாவது எங்கள் கைக்கக் கிடைத்தால், உங்களிடம் சேர்ப்பிக்கிறோம். எதற்கும் நீங்கள் உடனே எங்கள் ‘ஆரம்ப ஸ்டேஷனில் ‘ எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் ‘ என்று மரியாதையாகப் பாடம் ஒப்புவித்தார்.

அடுத்த எதிர்ப்புற வண்டியில் ஏறி நான் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் என் மனுவைச் சமர்ப்பித்தேன். ‘மைகூட உலராத டிக்கெட் ‘ என்று அறிந்து அவர் மனப்பூர்வமாக அனுதாபத்தைத் தெரிவித்தார். (ட்பூப்ளிகேட்) டிக்கெட் கொடுக்க விதி அனுமதிக்காது என்று சொல்லிவிட்டார். அப்படியானால் ஒரு மாதம் கழித்து டிபாசிட் தொகை வாங்கிக் கொள்கிறேன் என்று நான் சொன்னதற்கு, ‘டிக்கெட் வாபஸ் ஆகாதவரை அதுவும் ‘கோவிந்தா ‘தான் ‘ என்றார். நான் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை; ‘டிபாசிட் திரும்பாது என்ற விதிக்கு அடிப்படையான நியாயமே இல்லையே! முடிச்சவிக்குக்கும் லாபம், ரயில் இலாக்காவுக்கும் லாபமா ? ‘சரி, நீங்கள் என்ன செய்வீர்குள் ? மேலதிகாரிகளுக்கு எழுதுகிறேன். தபால் இலாக்காவும் கொஞ்சம் பிழைக்கட்டும் ‘ என்று முணுமுணுத்துக்கொண்டே டிக்கெட் விற்பனை அறையை அடைந்து பையிலிருந்த சில்லறையைக் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டேன். நாணயங்களைப் பர்சில் போடாமல் சட்டைப்பையில் போட்டு வைப்பது என் வழக்கம்.

இந்த முறை வண்டியில் தாராளமாக இடம் இருந்தது. சிந்தனைக்கு விஷயமும் அவகாசமும் இருந்தன.வீட்டை விட்டுப் புறப்படும்போது அன்று டிக்கட்டின் புனர்ஜென்ம திதி என்ற நினைவில்லை. ஸ்டேஷனுக்கு வந்த பிறகு பார்த்தால் ‘வள்ளிசாக ‘ டிக்கெட்டுக்கு வேண்டிய அளவுதான் ரூபாய்கள் இருந்தன. அதனால்தான் திருடினவனுக்கு ஏமாற்றம்; எனக்கும் ஒரு சிறு பழிவாங்கி திருப்தி. ஆனாலும் அவமானம் என் நிலைக்குத் தாங்க முடியாததுதான். தினமும் பிரயாணம் செய்யவேண்டிய ஜோலி எனக்கொன்றுமில்லை. மாதத்தில் பத்து நாள். தொல்லை வேண்டாம் என்பதற்காகத்தான் சீசன் டிக்கட் ஏற்பாடு. அது இந்தக் கதையில் வந்து முடிந்தது.

வயது அறுபத்தைந்து ஆகியும், அடிக்கடி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்தும், நான் இதுபோல் சோடை போகாததைப் பற்றிப் பெருமைப்படுவது உண்டு. இன்று கர்வபங்கம் ஏற்பட்டுவிட்டது. இனி வீட்டிலும் சரி, நண்பர்களிடமும் சரி, ஜம்பம் பேச முடியாது. ஆகவே, வெளியில் நான் சந்தித்த உறவினர், நண்பர் எவரிடமும் நான் என் நஷ்டத்தைப் பேசவில்லை.

நண்பர்களிடமே சொல்லாதவனா வீட்டில் தம்பட்டம் அடிக்கப் போகிறேன்! பேரன் மணியிடம் எச்சரிக்கையாக, ‘டிக்கட், சில்லறை பத்திரமடா ‘ என்று ஞாபகப்பிசகாய்ச் சொல்லிவிட்டால், ‘என்றோ ஒருதடவை தொலைந்து போனால், கொஞ்சம் அழுதுவிட்டு இன்னொன்று வாங்கிக்கொள்வோம், தாத்தா. வருஷம் பூராவும் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று கவலைப்பட்டு உயிரைவிட முடியுமா ? ‘ என்று புது முறையில் மன-தத்துவ-பொருளாதாரம் ‘விளாசு ‘கிறான்.

பயம் உண்டாக்கக் கூடாதாம். ஒரு பூரானிடம், ‘ஓ பலகால் பிராணியே, கணக்குப்படி கால்களை ஜாக்கிரதையாக எடுத்து வை. இல்லாவிட்டால் ஆபத்துதான் ‘ என்று நாம் எச்சரிக்கை செய்துவிட்டால், பாவம், பூரானின் கால்கள் ஒன்றுக்கொன்று இடித்துப்பின்னித் தடுமாறி ஒடிந்து போய், பூரான் செத்தே போய்விடுமாம், அவன் சொல்லுகிறான் . . .

மருமகன் சங்கரன் சமாச்சாரம் சொல்ல வேண்டியதில்லை. முடிச்சவிக்கிக்குத் திருடுவதில் உள்ள பயிற்சியைக் காட்டிலும் சங்கரனுக்குத் திருட்டுக் கொடுப்பதில் அப்பியாசமும் நிபுணத்துவமும் அதிகம். ‘உன்னை ‘அமெச்சூர் பாஸ் – போக்கி ‘ சங்கத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் சங்கரா! ஏனென்றால் இதே உனக்குத் ‘தொழில் ‘ ஆகிவிட்டது என்று இனிமேல் கிண்டலாகச் சொல்ல எனக்கு வாயில்லாமல் போய்விட்டது . .

‘பாட்டி ‘ (என் மனைவி) அந்த அநாவசியமான சீசன் டிக்கட்டுக்காகத் தன் கண்ணீரிலேயே ஒரு முழுககுப் போட்டுவிட்டு ‘எத்தனை தையல், எத்தனை ஓட்டு, ஆதியில் இருந்த தோல் அந்த மணிப்பர்சிலே லவலேசமாவது இருந்ததா ? சந்தேகந்தான்! தலையைச் சத்தி வீசி எறியுங்கோன்னா கேட்டாதானே! இந்த அழகிலே பண்டம் திருட்டுப் போகாதுன்னு ஒரு கர்வம் வேறெ! ‘ என்றவாறு ஆரம்பித்துவிடுவாள்.

இப்படி நான்கைந்து நாட்கள் கழிந்தன. நடுவில் ‘ஜேப்-அடி ‘ப் பேச்சு ஏதோ கிளம்பிற்று. நான் வேறு காரியத்தைக் கவனிப்பதுபோல் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். என் மகன் டாக்டர் ராஜு, அமெரிக்கா தேசத்துக் கைதேர்ந்த சோதாக்களைப் பற்றி வர்ணித்தபோது கூட, ஒதுங்கியிருந்து விட்டேன். ‘உணவு பொருளுக்கு அமெரிக்கா, மார்ஷல் உதவிக்கு அமெரிக்கா, அணுக்குண்டு நைட்ரஜன் குண்டுக்கு அமெரிக்கா, சோதாக்களுக்கும் அமெரிக்காதானா நமக்கு லட்சியம் ? ‘ என்று வழக்கப்படி ஆட்சேபிக்கவில்லை. ‘பாட்டி ‘க்குக்கூட வெறிச்சென்றிருந்திருக்கும். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையா, தலைவலியா ? – என்றும் நினைத்திருக்கலாம்.

நானோ எதையும் லட்சியம் செய்யாமல் என் புது அனுபவத்தை ரஸித்து கொண்டிருந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை. வழக்கப்படி குடும்ப வம்பர் சபை கூடியிருந்தது. நான் வெளியே சுற்றிவிட்டு வீடு திரும்பினேன். எல்லோரும் ஒருவரையொருவர் ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டார்கள். ‘என்ன சமாசாரம் ? ‘ என்று நான் கேட்டதற்கு, ‘ஒன்றுமில்லை! ‘ என்று மழுப்பி விட்டார்கள்.

சில நிமிஷங்கள் கழித்து, மணி ‘ஜேப்படிக் கதை ‘ ஒன்று கிளப்பினான். தான் கேள்விப்பட்ட செய்தி ஒன்றை சாங்கோபாங்கமாக வர்ணித்தாள் பாட்டி. ராஜு தன் பழைய கதை ஒன்றைத் தட்டித் துடைத்து, கைகால் ஒட்டி, மெருகு ஏற்றிப் புதுப்பித்தான். நான் சும்மா இருந்தேன். சங்கரன் பொறுமையிழந்தவனாய், ‘மாமா நீங்க நிஜம்மா ஒருவாட்டி கூடப் பறிகொடுத்ததே இல்லையா ? ‘ என்று வம்புக்கு இழுத்தான்.

‘சொந்தப் பொறுப்பில் பணத்தைக் கையாளும் இந்த ஐம்பது வருஷங்களில் நான் உண்மையாக ஒரு தடவைகூடப் பணம் நழுவவிட்டதே இல்லை ‘ என்று எச்சரிக்கையுடன் சொற்களை ஜோடித்துக்கொண்டிருக்கும்போது, பாட்டி, ‘ஏண்டா சங்கரா அவர் வாயைக் கிளர்றே ? வயசுக்கு மரியாதை வேண்டாமா ? ‘என் ஆயுசிலே பணமுடி இழந்ததில்லை, தேள்கடி பட்டதில்லை ‘ன்னு காது புளிக்கச் சொல்லுவார். இனிமேல் உனக்காகத் தேள்கடியோட நிறுத்திக்குவார். திருப்தியா ? ‘ என்று எனக்குப் பரிந்து பேசும் தொனியில் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தை ‘சுருக் ‘கென்று தேள் கொட்டினாற் போலவே எனக்கிருந்தது.

அதற்குள் என் கண் (அன்று ஞாயிறு, தபால் வராது என்பதை மறந்து) கடிகாரப் பெட்டியின் மேல் அன்றாடம் வரும் கடிதங்களை வைக்கும் இடத்தை நாடியது. பருமனான ஒரு பழுப்புக் கவர் இருந்தது. எடுத்துப் பார்த்தேன். பிரிக்கப்பட்டிருந்தது. தபால்தலை அல்லது முத்திரையில்லை. யாராவது கையோடு கொண்டு வந்து வீட்டுக் கடிதப் பெட்டியில் போட்டிருக்க வேண்டும்.

‘இதென்ன முனிசிபாலிடியிலிருந்து . . . ‘ என்று கேட்டுக்கொண்டே பிரித்துப் பார்த்தேன். அறையில் வழக்கத்திற்கு விரோதமான நிசப்தமும் தன்னடக்கமும் சந்தேகத்தை வளர்த்தன. கவரின் பொருளடக்கம்:- என் நைந்த பர்ஸ்; என் சீசன் டிக்கெட்; என் விலாசத்தின்கீழ் சில பென்சில் கோடுகள் நெளிந்திருந்தன; தபால் வில்லைகள்; ஒரு நயா பைசா! இடது கையாலோ கால் விரல்களாலோ எழுதப்பட்ட ஒரு குறிப்பு.

‘சீ அதிர்ஷ்டக்கட்டை – இன்னிக்கு போணி இப்படியா போவணும் ? அடக்கடவுளே! இப்படியும் தரித்திர நாராயணனுங்க இந்த மெட்ராசுலே இருக்காங்களா ? ஏ சாரே, ஒரு ந.பை. வச்சுக்கோ! டாம் டூமுன்னு வீண்செலவு செஞ்சிடாதே!!!

இப்படிக்கு

துரதிர்ஷ்டசாலி ‘

மயக்கம் உண்டாவது போல தலையில் ரத்தம் குப்பென்று முட்டிற்று. கூடவே, அந்த மகாரசிகனைக் கண்டு பேச வேண்டும் என்ற அவா என்னை ஆட்கொண்டது.

[எம் எஸ் கல்யாணசுந்தரம் சிறுகதைகள் . தமிழினி பதிப்பகம் சென்னை ]

***

தட்டச்சு – ஜெயமோகன்

***

Series Navigation

எம் எஸ் கல்யாணாசுந்தரம்

எம் எஸ் கல்யாணாசுந்தரம்