குறிப்புகள் சில-27 நவம்பர் 2003-பாரம்பரிய நெல் வகை-உலக மக்கள் தொகை-தேகம் திரைப்படம்-தமிழில் என் வலைக்குறிப்பேடு

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


———————–

தினமணியில்(26 நவம்பர் 2003) ஆர்.எஸ்.நாராயணன் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அவரது ஆதங்கம் நியாயமானதே.விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை கிட்டதட்ட தொலைத்தே விட்டோம்.வெறும் நெல் வகைகளா அவை ? இல்லை நம் முன்னோரின் உழைப்பு,அறிவாற்றலுக்கு அவை சான்றுகள்.முறைதவறி பிறந்த, அரசனின் குழந்தையை பதிவு செய்யும் வரலாற்றில் இத்தகைய நெல்வகைகளை உருவாக்கியோர் பெயருக்கு இடமில்லை என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இவை ஒரு கூட்டு உழைப்பில் உருவானவை ஆனால் இவற்றின் வரலாறு நமக்கு தெரியாது.வாய்மொழி வரலாற்றில் இவை குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கலாம். இன்று என்ன செய்யமுடியும். இந்தியாவின் உத்தராஞ்சல் மாநிலத்தில் பாரம்பரிய விதைகளை காப்பது,பரப்புவது,பயன்படுத்தி விதை பரிமாற்றம் செய்து கொள்வதை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செய்தனர்.இதன் விளைவாக பாரம்பரிய விதைகள் பல விவசாயிகளுக்கு கிடைக்கவும்,பலர் தங்கள் வயல்களில் ஒரு பகுதியிலேனும் பயிரிடவும் முடிந்த்து.ஆந்திர பிரதேசத்தில் ஒரு தன்னார்வ நிறுவனம் இரு மாவட்டங்களில் பாரம்பரிய விதைகளை மீண்டும் பயன்படுத்த, பராம்பரிய வகைகளை பரவலாக பயன்படுத்த உதவி செய்தது.இதன் விளைவாக பாரம்பரிய வகைகளின் உபயோகம் கூடியது. வேறு பல நல்ல விளைவுகளும் ஏற்பட்டன. தமிழ் நாட்டில் ஒரு பரவலான இயக்கம் மூலம் பாரம்பரிய நெல் வகைகளை பரவலாக பயன்படுத்த விவசாயிகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். இதற்கென அரசு மானியம் தர வேண்டும்.அரிசி ஆராய்ச்சி அமைப்புகள், குறிப்பாக சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய நெல் வகைகளைப் பெற்று அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.அண்டை மாநிலங்களில் உள்ள பாரம்பரிய நெல்வகைகளையும் பெற்று பரிசோதிக்க வேண்டும்.தொடர்ந்து 10/20 ஆண்டுகள் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒரளவேனும் பாரம்பரிய நெல்வகைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு பரவலாக கொண்டுவர முடியும்.சட்டிஸ்கரிலுள்ள வேளாண் பல்கலைகழகத்தில் ரிச்சார்யாவின் உழைப்பால சேமிக்கப்பட்ட பாரம்பரிய நெல்வகைகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தி பரிசோதிக்கலாம். தன்னார்வ அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

——————————————————————————————————————————

Science கிரகத்தின் நிலை என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது.இதில் மக்கள் தொகை குறித்து ஜோயல் கோகன் கட்டுரை எழுதியுள்ளார்.அவர் அதில் புள்ளிவிபரங்களுடன் மானுடம்

முதன்முறையாக சில சவால்களை சந்திக்க உள்ளது என்பதைக் காட்டுகிறார்.மக்கள் தொகைப் பெருக்கம்

கடந்த நூறாண்டுகளில் முன் எப்போதும் இருந்திராத வகையில் அதிகரித்துள்ளது. சராசரி ஆயுளும் கூடியுள்ளது.பல நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.எதிர்காலத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் கணிசமான பகுதி வறிய/வளர்முக நாடுகளில்தான் இருக்கும்.

எனினும் இவற்றிலும் மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு காலகட்டத்தில் அதிகரிப்பதன் விகிதம் குறைந்துவிடும்.சர்வதேச அளவில் மக்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்தல், குடும்பம் எனும் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவர் குறிப்பிடுகிறார்.1965-70 ல் மக்கள் தொகை ஆண்டிற்கு 2.1 % அதிகரித்தது.ஆனால் 2002 இது 1.2 % ஆக குறைந்துவிட்டது.1927 ல் 2 பில்லியனாக இருந்த மக்கள் தொகை 1974ல் 4 பில்லியானக கூடியது.அடுத்த 25 ஆண்டுகளில் இன்னும் 2 பில்லியன் கூடி , 2003 ல் உலக மக்கள் தொகை 6.3 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.அவர் எழுதுகிறார்

‘Three factors set the stage for further major changes in families: fertility failing to very low levels,increasing longevity; and changing mores of marriage, cohabitation and divorce.In the next generation, the children of those children have no cousins,aunts or uncles.If adults live 80 years and bear children between age 20 and 30 on average, then the parents will have decades of life after they have reached adulthood and their children have decades of life with eldrely parents.The full effects on marriage,child bearing, and child rearing of greater equality between the sexes in education;earnings;and social,legal, and political rights have yet to be felt or understood ‘ (Human Population : The Next Half Century-Joel E.Cohen,Science, 14 November 2003)

சில வாரங்கள் முன்பு தினமணியில் மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற தலைப்பில் ராஜம் கிருஷ்ணன் ஒரு

கட்டுரை எழுதியிருந்தார்.அது குறித்து கடிதங்கள்/கட்டுரை(கள் ?) வெளியாயின.அந்தக் கட்டுரையையும்,

ஜோயல் கோகன் எழுதிய கட்டுரையையும் படித்தால் சில புதிய கேள்விகள் தோன்றும், ராஜம் கிருஷ்ணன்

எழுப்பியுள்ள சில கருத்துக்களை வேறு விதமாகவும் அணுக முடியும் என்பதும் தெளிவாகும்.Science வெளியிடும் இக்கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவை.

——————————————————————————————————————————

தேகம் என்ற மொழிமாற்று திரைப்படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.கடந்த மாதம் இது திரையிடப்பட்ட போது காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, ஆட்சேபம் தெரிவித்த்தால் இது திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. காங்கிரஸ்கார்கள் ஆட்சேபிக்க காரணம்- படத்தில் சோனியா, பிரியங்கா,

கமல் நாத் என்ற பெயர்கள் பாத்திரங்களுக்கு இருந்த்து. வில்லி பாத்திரத்திற்கு சோனியா அல்லது பிரியங்கா என்று பெயர் இருந்தால் அதை தடுத்து நேரு பரம்பரையின் புகழைக் காக்க வேண்டியது காங்கிரஸ்காரர்கள் கடமையல்லவா.அன்று இதை ஆதரித்தவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சோ.பாலகிருஷ்ணன். அவர்தான் சில வாரங்கள் கழிந்த பின்னர் ஹிந்துப் பத்திரிகை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் குறித்து அறிக்கை விட்டவர். பாய்ஸ் படத்தை தடை செய்யக் கூடாது, அது கலைஞர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று தெரிவித்த ப.சிதம்பரம் தேகம் படம் காங்கிரஸ்காரர்கள் காட்டிய எதிர்ப்பால் திரையரங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

இப்படத்திற்கு விளம்பரம் கிடைக்க காங்கிரஸ்காரர்கள் உதவி செய்துள்ளனர்.

இப்போது பாத்திரங்களுக்கு என்ன பெயர்கள் வைத்துள்ளார்கள் என்பதை நானறியேன். ஆனால் பிபாஷா

பாசு என்ற அழகுப்பிசாசின் (வார்த்தை உபயம் தமிழ் நாளேடு ஒன்று) தேகம் காரணமாக பிரபலமடைந்த ஜிஷ்ம் என்ற இந்திப் படத்தின் தமிழ் மொழிமாற்றுப்படம் தேகம். இந்த ஒரு விஷயத்திலாவது காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாக செயல்படுகிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது :).

——————————————————————————————————————————

தமிழில் என் வலைக்குறிப்பேடு கீழ்க்கண்ட இணைய முகவரியில் உள்ளது

http://ravisrinivasblog.rediffblogs.com/

——————————————————————————————————————————வரும் குறிப்புகளில்:பெளத்தம், போர்,எதிர்ப்பு-லெசிக்கின் வலைக்குறிப்பேடு

———————————————————————————————

ravisrinivas@rediffmail.com

K.Ravi Srinivas

http://in.geocities.com/ravisrinivasin

Series Navigation