கி ராஜநாராயணன்
இந்தத் தபா சென்னப்பட்டினம் போயிருந்தபோது, வக்கீல் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். ரெண்டு நாள் இருக்க வேண்டியதாயிட்டது. முதிர் காலை காலம்.
வக்கீல் கோர்ட்டுக்குப் போயிட்டார். பையன் பள்ளிக்கூடம் போயிட்டான். இல்லாளுக்கும் உத்யோகம். நாங்க மட்டுந்தான் வீட்டுல.
அது திருவான்மியூர். கடற்கரைப் பக்கம். தலைக்குளிச்சி, சாப்பாட்டை முடிச்சி, சோபாவுல சாய்ஞ்சி கிடக்கிறேன். ஏகப்பட்ட தினப்பத்திரிகெ; பாக்க நாதி இல்லை.
நெத்தியில பூத்த வியர்வைப் பதத்தைக் காத்து ஊதி ஊதி ஆத்துது. ஈயைப் பார்த்து நகர்ந்து வாரா பல்லியைப் போல தூக்கம் நகர்ந்து வருது, மெல்ல. பக்கத்து அறையில கணவதியின் லேசுக் குறட்டை.
நிழலை முன்னே அனுப்பி ஒரு மனுசர் பின்னே வந்தார். யாரு, என்ன வேணும் ?
தெக்குத்திச் சீமையிலயிருந்து வக்கீலைப் பார்க்க வந்த வாத்தியாரு.
உக்காந்தார், பேச ஆரம்பித்தார்.
இப்போ அங்கே சாதிக் கலவர நிலைமையெல்லாம் எப்படி இருக்கு ?
பதில் வந்து கொண்டிருந்தது அவரிடமிருந்து.
எதுக்காக, ஏம் இப்படி ஒருத்தரை ஒருத்தர் வெட்டிச் சாவுதானுவோ ? கேட்டேன்.
மனுசருக்குன்னு உள்ள குணபாகங்களை வாத்தியார் வர்ணிக்கும்போது ஒரு கதை சொன்னார். இப்ப அந்தக் கதைதான் என் ஞாபகத்தில் எப்பவும். அதைச் சொல்லணும்னு தோணுது.
ரெண்டு சேக்காளிக. அவங்க ரெண்டு பேருமே ரெண்டு சாதிக்காரங்க. அதுல ஒருத்தன் காட்டான். இன்னொருத்தன் நாட்டான்.
காட்டான் மேய்ப்பாளி; நெறய்ய ஆடுக வச்சிருந்தான். நாட்டான்கிட்ட எதுவும் கிடையாது.
காட்டாங் கையில தொறட்டிக்கம்பு உண்டு. நாட்டாங்கையில வெட்டருவா (வீச்சருவாள்) உண்டு. அது வெளியே தெரியாது. சட்டைக்கு உள்ள பெறத்தால பிடதியிலே தொங்கவிட்டுப்பான். தேவைன்னா பிடத்தியத்தோடு ராப்புல இருக்கும். அடுத்த வினாடி கையில அருவா மினுங்கும்.
ஞாயப்படி காட்டான் தான் வேட்டைக்காரனா இருக்கணும். அவன் வேட்டைக்காலத்தை முடிச்சி நாட்டுக்காரனா ஆயிட்டாம். ஆனா நாட்டுக்காரனா இருக்க வேண்டிய நாட்டான் இன்னம் வேட்டைக்காரனாவே இருக்காம்! பசி வந்துதா, உணவாக எது எங்கே இருக்கோ அது அவனோடது. எதும் நாளக்கி வேணுமேன்னு சேத்து வைக்கிறது கிடையாது அவங்கிட்டே. எதும் பேர்லயோ யாரு பேர்லயோ அவனுக்குக் கோவம். அதெக் கண்டுபிடிச்சி யோசிச்சி நிவர்த்தி பண்ணிக்கிடத் தெரியல அவனுக்கு. அவந்தேவைகள் யாரிட்ட இருந்தாலும் சொந்தம் போல எடுத்துக்கிடறதுதாம் அவன் வழக்கம். பழக்கத்துக்கு நல்லவனா இருக்காம். நம்பிட்டா உசுரையும் கொடுப்பாம். பிடிக்கலைன்னா -கொஞ்சம் பிடிக்கலைன்னாக்கூட- நொங்கு சீவுறதுபோலத் தலையச் சீவிறுவாம், பழகினவனேன்னு கூடப் பாக்க மாட்டாம். மனசாட்சிங்கிறது கிடையாது.
இந்த அருவாளும் அந்த தொறட்டிக்கம்பும் எப்படி சேக்காளிக ஆனாங்கன்னு தெரியல! பிரியம்னா பிரியம் அப்பிடி ஒரு பிரியம். ஒருத்தர்பேர்ல ஒருத்தர். நினைச்சா வந்துருவாம் நாட்டான் காட்டனைப் பாக்க. வர்ற போதெல்லாம் ஆட்டுக்கறிகிடைக்கும் திங்க. காட்டானோட கைப்பக்குவம் அப்படி. ஒரு நாக் கூட கறி திங்காமப் போனதில்ல. அன்னெக்கும் அதுபோலத்தாம் நம்பி வந்துட்டாம். இவம் வந்த நேரம் காட்டான் ஏதோ முக்கிய வேலையா இருக்காம். வந்தவனுக்கு மோர் மாத்திரந்தான் கிடைச்சது. குடிசைக்கு முன்னால இருக்க மரத்து எணல்லே கிடந்த கயித்துக் கட்டில்ல வந்தவன உக்கார வச்சிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுதாம்.
என்னவே சங்கதி ?
கொஞ்சம் இரி; வந்துட்டேம்.
வந்தவனுக்குப் பசி. குடிச்ச மோரு போனமூல தெரியல.
அப்ப நா வரட்டுமா. எந்திரிச்சுட்டாம்.
பொறப்டுட்டியா; செரி. எனக்கும் இங்கே சரிய்யாதானிருக்கு வேலே. ஆட்டுக்குட்டிகளுக்கு அவசரமாக் கூண்டு கட்டணும்; தக்காலம் வருதே.
காமிச்ச பக்கம் பாத்தா… ரெண்டு இடத்துல வட்டமா தரையில முளைகள் அடிச்சிவச்சிருக்கு. பக்கத்துல நீள நீளமா, விரல்தாண்டி பச்சைக் கம்புக கிடக்கு.
நடுப்பொழுதுக்குள்ள இந்தக் கம்புகள் ‘கமான் ‘ வளைவுகளா வளச்சி முளைகள்ள கட்டி வச்சிறணும்பா உக்காந்து பேச நேரமில்ல.
நாட்டான வழியனுப்ப கொஞ்ச தூரம் அவனுக்குப் பின்னால நடந்தாம். அப்பத்தாம் அந்த மணம் மணத்தது. ஆட்டுக்கறி வேகும் மணம்!
அடத்தாயிளி மகனே, எங்கிட்டயா ஒம்புளிப்பக் காமிக்கே. எனக்குப் பாதெ காமிச்சிட்டு எனக்குத் தராம நீயாவே திங்கப் போறியாக்கும். அம்புட்டுக்கு ஆகிப்போயிட்டியா நீ. சொடக்குப் போடறதுக்குள்ளே ஒந்தலை சொத்துன்னு மண்ணுல விழப்போகுது பாரு இப்ப ன்னு நெனச்சி சுத்துமுத்தும் பாக்காம் நாட்டான்.
ஒரு முசலு (முயல்) தவ்வித்தவ்வி வேகமா ஓடுது. அதெ ரெண்டு பேரும் பாத்தாங்க. ஒரு ‘வீச்சக்கம்பு ‘ இருந்தா பரசிவிடலாம்ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாம் காட்டான்.
அந்த இடத்துல ரெண்டு பேரும் நின்னாங்க.
வழியனுப்பிட்டுக் காட்டான் திரும்புவான் தலைய வெட்டுறதுக்கு அதாம் வாகுன்னு நாட்டான் நினைச்சான்.
திரும்புறதுக்கு மின்னாடி காட்டான் சொன்னான்: சரிப்பா, போயிட்டு வா, ஆத்திப்பட்டே மணத்து ருச்சி. அதுக்கு மேலேயும் வெந்தா கூழாயிரும். நார் எடுக்க முடியாது. நாளக்கி வா. ஆட்டுக்கறியும் கிடைக்கும். அதோட ஈச்சங்கள்ளும் உண்டு ன்னாம்.
மோசம் போகத் திரிஞ்சனே .. அய்யோன்னு தன் தலையில அடிச்சிக்கிட்டாம் நாட்டான்.
என்ன என்ன என்று பதறிப் போயி கையெப்பிடிச்சாம் காட்டான்.
வாத்தியார் இந்த இடத்தில கதெய நிறுத்தி,
‘ஆத்திப்பட்டை அவிஞ்சா ஆட்டுக்கறிவாசம் வரும் ‘ என்று ஒரு பாடலின் வரியைப் போலச் சொல்லிவிட்டு, அந்த மரப்பட்டையைக் கொதிநீரில் அவிய விட்டு எப்படி அதிலிருந்து நார் உரித்துப் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கினார்.
நான் கதையைச் சுட்டிக்காட்டி ‘அதற்குப் பிறகு ‘ என்று கேட்டேன்.
அவ்வளவுதான் என்றார்.
அப்படிச் சொல்லிவிட்டு, மனுசப்பய புத்தியே அவ்வளவுதாம். பழகுனது வந்தது தின்னது கொடுத்தது கொண்டது எல்லாத்தயும் மறந்துருவாம். இப்பத் திங்கறதுக்கு ஒன்னும் தரலியேங்கறதுக்காகத் தலெயெச் சீவ புறப்பட்டுட்டாம் பாத்தீகளா. இவனுக புத்தி இப்படித்தாம் ‘சவத்துப் பயலுகுப் பிறந்த பயலுவ ‘ என்ற ‘வாழ்த்து ‘ மானத்தோடு முடித்துக்கொண்டார்.
**
இந்தப் புத்தி ஒரு சாதிக்கு மட்டுமா சொந்தம், மனுச சாதிக்கே உண்டும். எங்க ஊரிலே எங்க வீட்டில் நான் அறிய நடந்த ஒரு நடப்பை இப்பச் சொல்றேன்.
அப்போ நான் சிறு பையன். எங்க வீட்டில் மொத்தம் 17பேர் நாங்கள். பாட்டிகள் 2, அப்பா1, அம்மா2, பிள்ளைகள் 9 பேர். ஆடுமாடு மேய்க்க வேலையாள் 2 பேர். சம்பளக்காரன் ஒருத்தன்; ஆக 17 எண்ணம். நாள் தவறுனாலும் விருந்தாளிகள் தவறாது. அந்தக்காலத்தில் பஸ்(பேருந்து) வசதியே கிடையாது. தொலைதூரப் பந்துகள் ( ‘சுட்டாலு,பக்காலு ‘) எல்லோருமே நடந்துதான் வரணும். வண்டிகட்டிக்கொண்டு வருகிறவர்களும் உண்டு.
முன்னக்கூடித் தகவல் தெரிவித்துவிட்டு வருகிற வழக்கமே கிடையாது. இதில் பலபேர் நம்ம வீட்டுக்கு என்று வருகிற விருந்தினர் இல்லை. இந்த ஊரைத் தாண்டி போகிற வழியில் இறங்கி ‘பாத்துட்டுப் போவமே ‘ என்று விஜயம் செய்கிற விருந்தினர்கள் ரொம்ப. எப்ப யார் வந்தாலும் கம்பஞ்சோத்துக்கும் குதிரைவாலிச் சோத்துக்கும் அட்டி இருக்காது. உடனே சமையல் செய்ய வேணுமென்று கிடையாது. இதுக்கென்று உயரமான பெரிய்ய பெரிய மண்பானைகள் உண்டு.
விசேச விருந்தினர்கள் வந்துவிட்டால் ‘கோழியடிச்சி ‘ சோறு போடுகிறது உண்டு. வீட்டுக்கு மட்டும் என்றால்கோழி ரெண்டு வேணும். விருந்தினருக்கும் என்றால் மூணு கோழிகள் வேணும். எதுமே விலைக்கு வாங்கறது இல்லை. காட்டில் விளைகிறதும் வீட்டில் இருக்கிதும்தான். படைபடையாகக் கோழிகள் வீடுநிறைய்ய திரிந்து கொண்டிருக்கும். உள்வீட்டுக்குள் கோழிகள் நுழைந்து விடாமல் விறட்டிக் கொண்டே இருக்க வயசாளிகளுக்குப் பொழுது சரியாக இருக்கும். அந்தக் காலத்தில் ‘ராணிக்கட் ‘ என்ற கழிச்சல் நோய் கோழிகளுக்குக் கிடையாது. அதனால் கோழிகள் நோயினால் சாவதில்லை. கோழிகளுக்கு வரும் சாவுகளெல்லாம் மனிதர்கள், காட்டுப் பூனைகள் (வெருகுகள்) நரிகள் இதுகளால் ஏற்படுவதே.
அப்போது எங்கள் வீட்டில் சம்பளக்காரனாக இருந்தது ‘ஆண்டியாபுரம் ‘ என்பவன். ஊரையே பெயராக வைத்துக் கூப்பிடுகிறது ஒரு வழக்கம். மரியாதையாகக் கூப்பிடவேண்டியவர்கள் அவனை ‘ஆண்டியாபுரத்து நாய்க்கர் ‘ என்பார்கள். வேலையாட்களில் கூலிக்காரர், சம்பளக்காரர் என்று ரெண்டுவகை. கூலிக்காரருக்குத் தவசம் (தானியம்) தான் கூலி. சம்பளக்காரர் என்பவர் வீட்டோடு தங்கியிருந்து வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு சமையல்புறைக்குள்ப் போகாத, ஆனால் சமையல் சம்பந்தப்பட்ட வேலைகளையும் காட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். சாப்பாடு துணிமணி தலைக்கு எண்ணெய் இவை போக ஆண்டுக்கு இவ்வளவு பணம் என்று தந்துவிடுவது. ஆடு மாடு மேய்க்கிறவர்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுக்கொள்வார்கள். அல்லது கையோடு கொண்டுபோவார்கள். அவர்கள் வீட்டினுள் தங்குவதில்லை. தொழுவத்திலோ ஆடுகள் இருக்கும் இடங்களிலோ படுத்துக்கொள்வார்கள். இது கால் நடைகளுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். எத்தனையோ சம்பளக்காரர்கள் எங்கள் வீட்டில் இருந்திருக்கிறார்கள். இந்த ஆண்டியாபுரத்தானை மட்டும் குறிப்பிட்டுச் இங்கே சொல்லக் காரணம் இருக்கிறது.
அவன் முகவாகு ஒரு அசைப்பில, உதடு பிரியாமல் சிரிக்கிறானோ என்று தோன்றும். ஒரு கண்ணில் ‘பூ ‘ விழுந்திருக்கும். அதில் பார்வை கிடையாது என்பதாலோ தலையைச் சாய்த்துக் ‘காக்காப்பார்வை ‘ பார்ப்பான். வீட்டுப் பெண்டுகளுக்குக் கோழிக்கறி சாப்பிடப்பிடிக்கும். ஆனால் கோழியைப் பிடித்துக் கொல்லுவதோ ரோமம் பறிப்பதோ அருவாள் மனையால் கறியை விடுவிப்பதோ பிடிக்காது. தொறட்டுப்பிடித்த வேலையாகத் தெரியும். ஆண்டியாபுரம் இதில் மன்னன். கோழியின் ரெண்டு கால்களையும் பாதங்களால் மிதித்துக்கொண்டு அதன் தலையைப்பிடித்து மூணு சுற்றுகள் முறுக்கிம் ரெண்டு கைகளாலும் மேல் நோக்கி இழுப்பான். அவன் தலைசாய்த்து எங்களைப் பார்த்துக்கொண்டு அந்த ஒற்றைக்கண்ணால் சிரிப்பான். கொஞ்ச நேரத்தில் அதன் உயிர் ஒய்ந்துவிடும். என்றாலும் அதே நிலையில் கொஞ்சநேரம் பிடித்துக்கொண்டிருப்பான். ஏன் என்றால் அதுக்கு ஒரு காரணம் வைத்திருப்பான்.
இப்படித்தாம், வெங்கா நாயக்கர் என்ன செஞ்சார் தெரியுமா, செத்துபோச்சின்னு நெனச்சி விட்டுட்டார். அது பிடிச்சது ஒரே ஒட்டம் தப்பிச்சோம் பிளைச்சோம்னுட்டு. இவரு பின்னாலயே குடுகுடுன்னு ஓடுதாரு. அதுபோயி ஒரு படப்புக்குள்ளே ஒளிஞ்சிகிட்டது. அவரு வீட்டு முதலாளி கோமணத்த வச்சிக்கிட்டு தலையில எண்ணெத் தேச்சிக்கிட்டு இருக்காரு. தலெ முழுகிட்டு கோழிக்கறி சாப்பிடலாம்ன்னட்டு என்று சொல்லிச் சிரித்தான்.
ஆண்டியாபுரம் கோழியடிக்கிற வயணத்தை வேடிக்கை பார்க்க சிறு பிள்ளைகளான நாங்கள் கூடிவிடுவோம். அருவாள் மனையில் கறியை விடுவிக்கும்போது எங்கள் பக்கத்தில் எங்கள் வீட்டு நாயும் எங்களோடு சேர்ந்து கொள்ளும். இந்தக் காகங்களுக்கு எப்படித் தகவல் தெரியுமோ அதுகளும் ரெண்டு மூணு வந்துவிடும். காகங்கள் வருவது நாய்க்குப் பிடிக்காது. அது காகங்களை ஒரு பார்வையும் ஆண்டியாபுரத்தை ஒரு பார்வையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே அமைதியில்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும். மத்தியில் மத்தியில் காகங்களைப் பார்த்து வைவதுபோல் ‘ஒள் ‘ என்று சொல்லும்.
அன்று மூன்று கோழிகள் அடிக்கப்பட்டன. சாப்பாட்டு வேளையில் எதிர்பாராமல் கீகாட்டிலிருந்து வண்டிகட்டிக்கொண்டு விருந்தினர் கூட்டம் வந்துவிட்டது. ஆக மூணு அடித்தும் கண்டும் காணாமலும் கறி அறுவாகிவிட்டது. கடேசியில் ஆண்டியாபுரம் உட்கார்ந்தபோது அவனுக்குச் சொட்டுக்கறி இல்லை!வீட்டுக்காரர்களுக்கே சிலசமயம் இப்படி ஏற்பட்டுவிடும். அதை எப்படியாவது சமாளித்துச் சமாதானம் கொள்வார்கள். ஆண்டியாபுரமும் வீட்டோடு சேர்ந்தவன்தானே.
மறுநாள் காலையில் ஆண்டியாபுரத்தைக் காணவில்லை! பயலுக்குக் கோவம் வந்துட்டது போலிருக்கு என்று பெரியவர்கள் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். நேரம் ஆக ஆக நெசமாகவே ஆண்டியாபுரத்தான் போய்விட்டான் என்று தெரிந்தது. அவனுடைய துணிமணிகளும் காணோம். அதைவிட இன்னொன்றுதான் எப்படிப் போச்சி என்று தெரியவில்லை.
ராத்திரி பஞ்சாரத்தினுள்ப் பிடித்து அடைத்துவைத்திருந்த கோழியையும் அதன் பச்சைக் குஞ்சுகளையும் காணவில்லை. அடையிலிருந்து இறக்கி விடப்பட்டு ஒரு வாரம் தான் ஆகிய குஞ்சுகள்.
காலையில் அப்பா எழுந்ததும் தோட்டக் கிணற்றடிக்குக் காலைக்கடன்களை முடிக்கப்போவார். அன்று அவர் சீக்கிரமாகவே திரும்பிவிட்டார். பாட்டியிடம் வந்து, அம்மா, ஆண்டியாபுரத்தாங் கதெயப் பாத்தியா; போய்ப்பாரு என்றார்.
எல்லோரும் என்னமோ ஏதோ என்று போனோம். போய்ப்பார்த்தால், அங்கே தாய்க்கோழியும் அதன் பதினாறு குஞ்சுகளும் தலையைத் திருகிக் கொல்லப்பட்டுக்கிடந்தன.
குரூரத்தில் சாதியாவது ஒண்ணாவது; மனிதச் சாதி என்று ஒன்றுதான் உண்டு.
**
- தேவை
- போலீஸ்காரர் மகள்
- சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்
- குரூரம்
- அடை வேகுதே!
- ஒற்றைத் தீக்குச்சி
- பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?
- பாதாங்கீர் பாயசம்
- உளுத்தம் பருப்பு போண்டா
- என் கதை – 3 (கடைசிப் பகுதி)
- சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்
- 1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியான ஆலோசனைகள்