குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

ஜெயமோகன்


சமீபகால தமிழ் வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ அதற்குச் சமானமான முக்கியத்துவமுள்ள ஒருவர் வேலுத்தம்பி தளவாய். தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பெயர். தளபதி என்ற பேரில் ஒரு வடிவம். அக்காலகட்டத்தில் திருவிதாங்கூரில் தலைமைத்தளபதி அமைச்சர் இருவரும் ஒருவர்தான்.

வேலுத்தம்பி குமரிமாவட்டத்தில் தலைக்குளம் என்ற ஊரைச்சேர்ந்தவர். சிறுவயதிலேயேமவரும் அவரது தம்பியும் பெரிய வீரர்களாக புகழ்பெற்று நாயர் படைகளுக்கு தலைமதாங்க ஆரம்பித்தனர். படைத்தலைவர்களில் ஒருவராக இருந்த வேலுத்தம்பி தொடர்ச்சியான ஒருமக்கள்புரட்சி மூலம் தளவாயாக ஆனவர் என்றால் அது மிகையல்ல. பாலராமவர்ம குலசேகரன் என்ற மன்னர் 1798ல் தன் பதினாறுவயதில் கிரீடமேற்றபோது அப்போது வளமிக்க நாடாக இருந்த திருவிதாங்கூர் பலவகையான சீரழிவுகளை சந்திக்க நேர்ந்தது. கோழிக்கோட்டு சாமூதிரி மன்னரின் ஆளான ஜெயந்தன் நம்பூதிரி என்ற வைதீகர் மன்னரை தன் பிடியில் வைத்திருந்தார். இவர் வைத்ததே சட்டம் என்ற நிலை இருந்தது இதற்கு எதிராக உள்ளூர் நிலக்கிழார்கள் கோபம் கொண்டிருந்தர். அக்கோபத்தை வேலுத்தம்பி பிரதிநிதித்துவம் செய்தார்.

அப்போது திருவிதாங்கூ திவானாக இருந்தவர் ராஜா கேசவதாசன் என்பவர். நாகர்கோவில் அருகே ஓர் எளிய வேளாள குடும்பத்தில் பிறந்த இவர் தன் தனித்திறமையால் திவானாக ஆகி கேரளவரலாற்றில் அழியாத இடம் பெற்ற மாமனிதர். திருவிதாங்கூர் மீது பெரும்படையெடுத்துவந்த திப்புசுல்தானை பாலக்காட்டுக் கோட்டையில் தோற்கடித்த வெற்றிவீரர் அவர். இன்றைய கேரளத்தின் பல முக்கிய நிர்வாக , தொழில் அமைப்புகளை உருவாக்கியவர் இவரே. சதுப்பு நிலத்தில் ஆலப்புழா என்ற ஊரை அமைத்து அதை துறைமுகமாக வளர்த்தார். கயிறு த்தொழிலை அங்கே வளரச்செய்தார். திருவனந்தபுரம் துறைமுகம் அபல முக்கிய சாலைகள் அணைகள் போன்றவை இவரால் அமைக்கப்பட்டவை. கடல்நீரை அணைகட்டி நிறுத்தி அச்சதுப்பில் நெல்விவசாயம் செய்யும் குட்டநாட்டு விவசாயமுறையை உருவாக்கியவரும் இவரே. ஜெயந்தன் நம்பூதிரி இவரை மன்னரிடமிருந்து அன்னியப்படுத்தினார்.

ஜெயந்தன் நம்பூதிரி மன்னரின் பல்லக்கில் ஏறி ஊர்வலம் வந்தது, தன் உறவினரான சங்கரன் நம்பூதிரி என்பவருக்கு காயம்குளம்பகுதியை அளித்தது போன்றவற்றை கேசவதாசன் கண்டித்தார். எனவே மன்னரை கரைத்து திவானை கைதுசெய்வித்த ஜெயந்தன் நம்பூதிரி பின் அவரை விஷம்வைத்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஜெயந்தன் நம்பூதிரி திவான் ஆனார். அவரது அடிப்பொடிகள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். திருவிதாங்கூர் அவர்களால் சூறையாடப்பட்டது.

அக்கலகட்டத்தில் திருவிதாங்கூர் வெள்ளைஅரசுக்கு பெருந்தொகை கப்பமாக கட்டவேண்டியிருந்தது. அத்தொகை மூலம் செல்வ வளம் மிகுந்த இந்நாடு நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டது. அதைப்போக்க கடும் வரிவிதிப்பும் கட்டாய உழைப்பும் சாதாரணமாக இருந்தது. ஜெயந்தன் நம்பூதிரி நிதிவசூலில் தன் பங்கையும் எடுத்துக் கொண்டார். ஆகவே நிலக்கிழார்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பெருந்தொகை கட்டணமாக விதித்து அதை அளிக்காதவர்களை கொடூரமாக தண்டித்தார். வேலுத்தம்பி அப்படிஅழைக்கப்பட்டதாகவும் ரூ 3000 அவருக்கு கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்பணத்தை திரட்டி வருவதாக சொல்லமீண்ட வேலுத்தம்பி பல்வேறு நிலக்கிழார்களை திரட்டி ஒரு சேனையை உருவாக்கி அதை நடத்திக் கொண்டு திருவனந்தபுரம் வந்தார்.

அதேபோல வடக்கே சிறையின்கீழில் இருந்து அய்யப்பன் செம்பகராமன் பிள்ளை என்பவரது தலைமையில் ஒரு கலகப்படை திருவனந்தபுரம் வந்தது. அவர்கள் அரண்மனையை சுற்றிவளைத்தாலும் ராஜபக்திகாரணமாக எல்லைமீறி உள்ளே நுழையவில்லை. வேறுவழி இல்லாத மன்னர் சரணடைந்தார். கலகக்காரர்களிடம் ஜெயந்தன் நம்பூதிரியும் பிறரும் ஒப்படைக்கப்பட்டனர். பிராமணர்களைகொல்வது இல்லை என்பதனால் அதிகபட்சத்தண்டனையாக அவரை நாடுகடத்தினார்கள்[ ஆனால் ஒரு தம்ழி பிராமணனை கூடவே அனுப்பி நம்பூதிரி திருவிதாங்கூர் எல்லையைத்தாண்டியதுமே அவரை வெட்டி வீழ்த்த வேலுத்தம்பி ஏற்பாடு செய்திருந்தார்] மற்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யப்பன் செம்பகராமன் திவான் ஆனார். ஆனால் முதியவரான அவர் ஒருவருடத்திலேயே மரணமடைய வேலுத்தம்பி திவானாக ஆனார்.

வேலுத்தம்பியை மிக குரூரமான மிக மிக நேர்மையான ஒருவராக சரித்திரம் காட்டுகிறது. குட்டிகுட்டித் தலைவர்களை அவர் குரூரமாக ஒடுக்கினார். திருவிதாங்கூரின் வரிவருமானம் குறையமுக்கியக்காரணம்னூழலே என்று கண்டு அவர் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஊழலை கிட்டத்தட்ட முற்றாக ஒழித்தார். அதுவே நாட்டின் வருமானத்தை பலமடங்கு அதிகரிக்கச்செய்தது . ஒரு கதை சொல்லப்படுகிறது. வேலுத்தம்பியின் அன்னைக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் கீழ்க்குளம் என்ற ஊரில் இருந்தன. அவற்றுக்கு வரி நிர்ணயித்த அதிகாரி அவை தளவாயின் அன்னைக்கு உரியவை என்பதனால் மிக குறைவாக அதை நிர்ணயித்தார். அதை அறிந்த தளவாய் கோபம்கொண்டு அவ்வதிகாரியின் கட்டைவிரலை வெட்டினார். தன் தாயையும் தண்டித்தார்.

இந்நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவு பெற்றாலும் அதிகாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கின. ஆரம்பத்தில் வெள்ளீயர் வேலுத்தம்பியை ஆதரித்தார்கள், காரணம் கப்பம் முறையாக கிடைத்தது. ஆனால் அப்போது ரெசிடண்ட் ஜெனரலாக இருந்த கெர்னல் மெக்காலே என்பவர் மன்னரை உதாசீனம் செய்து தானே ஆட்சியாளர் என்றமுறையில் சில நடவடிக்கைகளை எடுத்தது வேலுத்தம்பிக்கு பிடிக்கவில்லை. சில கிறித்தவபாதிரியார்கள் தளவாயை அவமானப்படுத்தியதாகவும் அதற்கு கேனலின் ஆதரவு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கப்பமாக போகும் பெரும் செல்வம் வேறு தளவாயை கோபம் கொள்ளச்செய்தது. மெல்ல ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக வேலுத்தம்பி செயல்பட ஆரம்பித்தார். கப்பம் தொடர்ந்து உயர்த்தப்பட்டத்தை வேலுத்தம்பி எதிர்க்க பூசல்கள் வெடித்தன. ஒருகட்டத்தில் நாட்டின் வருடாந்தர வரிவசூலில் எண்பது சதவீதம் கப்பமாக வசூலிக்கப்பட்டது.

கேனல் மெக்காலே வரிவசூல் தொகையின் கணிசமான பகுதியை தனக்காக எடுத்துக் கொண்டது பிரச்சினையாயிற்று. தொடர்ந்து வரியை உயர்த்திய மெக்காலே வரியை உயர்த்தும்படி திவானை வறுபுறுத்தினார். அதற்கு திவான் ஒப்பவில்லை. ஒருகட்டத்தில் மன்னரின் நகைகளைக்கூட விற்று கப்பம்கட்ட நேர்ந்தது. அது மன்னருக்கும் அதிருப்தியை உருவாக்கியது. மெக்காலே திவானை பதவி நீக்கம் செய்யவைத்தார். அவரை சிறைப்பிடிக்க உத்தரவு வந்தது. ஊருக்கு தன் தம்பியுடன் தப்பி ஓடிய வேலுத்தம்பி இங்கு வந்து1809ல் குண்டறை என்ற ஊரில் வைத்து ஒரு அறிக்கையை விடுத்தார். ஆங்கில சுரண்டல் அரசுக்கு எதிராக ஒன்றுபடும்படி மக்களை அறைகூவினார். இது குண்டறை விளம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

கலகம் ஏறத்தாழ் ஒருவருடம் நடைபெற்றது. மைசூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் உபரி படைகளை வரவழைத்து ஆங்கில கம்பெனி போரிட்டதனால் கலகம் சீக்கிரமே அடங்கியது.கர்னல் லோகர் என்பவர் பெரும்படையுடன் வந்து உதயகிரிக் கோட்டையை கைப்பற்றியதுடன் போர் நின்றது. தலைமறைவாக இருந்த வேலுத்தம்பி மண்ணடி என்ற ஊரில் சுற்றிவளைக்கப்பட்டார். தன் தம்பியிடம் தன்னை வெட்டும்படி அவர் கோரவே தம்பி அண்ணனை வெட்டிக் கொன்றார். பத்மநாபன் தம்பி கைதுசெய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்டார்.

வேலுத்தம்பியின் அரண்மனை இடிக்கப்பட்டு அங்கே ஆமணக்கு விதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினர் வேட்டையாடப்பட்டனர். பலர் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர். அரசசேவையிலிருந்து நாயர்கள் முற்றாக விலக்கப்பட்டார்கள். நாயர்படை இருநூறுபேருக்குமேல் போகக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு வரையறைசெய்தது. கிராமங்களில் நடந்துவந்த ஆயுதப்பயிற்சிசாலைகள் நிறுத்தப்பட்டன.

ஒருதலைமுறைக்குப்பிறகு திருவிதாங்கூமகாராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று வேலுத்தம்பியின் வம்சத்தில் எஞ்சிய ஒரு பெண்ணுக்கு மணம் செய்வித்து அவளுக்கு கட்டித்தந்த சிறுஅரண்மனை தலக்குளத்தில் இப்போதும் உள்ளது. மரத்தாலான கட்டுமானம். பூமுகம், பத்தாயப்புரை , அங்கணம் உள்ளடுக்கு எல்லாம் கொண்ட நாலுகெட்டு வீடு அது. அதில் முப்பது வருடம் முன்புவரை தளவாயின் வாரிசுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள்பெரும்பாலும் கேரளத்துக்கு சென்றுவிட தளவாயின் வாரிசுகளில் ஒருவர் கைவசம் உள்ளது.

நாங்கள் சென்றபோது நல்ல மதியம். அரண்மனையை காணவிரும்பியதாக சொல்லியனுப்பினார் பெருமாள். வேலப்பன்நாயர் பெருமாளை ஏற்கனவே அறிந்தவர் என்பதனால் சாவியுடன் வந்தார். அரண்மனை அப்படி யாராவது வந்தால்மட்டுமே திறக்கப்படுகிறது. சற்று தூசிபடிந்திருந்தாலும் நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. ஆனால்பெரிய கட்டிடம் பழுதுபார்க்கப்படாமல் அழிந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடுகள் பல இடங்களில் உடைந்து ஒழுகி மரம் அழிய ஆரம்பித்துவிட்டது. பழுதுபார்க்க லட்சகணக்காக ரூபாய் செலவாகும் . அதற்கு இன்றைய வாரிசுகளிடம் பணவசதி இ.ல்லை. வாரிசுகள் பலர். அரசிடம் அரண்மனையை எடுத்துக் கொள்ளச்சொல்லி பலவருடங்களாக மன்றாடிவருகிறார்கள். தமிழக அரசு ஆர்வம்காட்டவில்லை, கேரளஅரசுக்குஆர்வம்தான், ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதியும் அளிக்கவில்லை.

மரவேலைப்பாடுகளை வசந்தகுமார் புகைப்படம் எடுத்தார். ‘இவர்கள் இதை பெயர்த்து எடுத்து விற்றால்கூட நல்ல பணம்தேறும் ‘ என்றார்

‘ஆனால் அதை அவர்களுடைய பரம்பரை பெருமை அனுமதிக்காது ‘ என்றேன்.

வேலுத்தம்பி தளவாயும் வீரபாண்டியகட்டபொம்மன் போல சினிமா மூலம் பிரபலமானவரே. அவரது முகம் நடிகர் கொட்டாரக்கர ஸ்ரீதரன்நாயரின் முகமாகவே நினைவில் உள்ளது. அந்த வீட்டு ஆயுதப்புரையில் தளவாயின் படம் இருந்தது. அது அக்கால டச்சு ஓவியன் ஒருவனால் வரையப்பட்ட படத்தின் பிரதி.

அங்கிருந்து குளச்சல் துறைமுகத்துக்கு கிளம்பினோம்

[தொடரும்]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்