குன்றத்து விளக்கு காளிமுத்து

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


குன்றத்து விளக்கு காளிமுத்து

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

‘தென்னகம்’ இதழிலில் ‘குன்றத்து விளக்கு’ எனும் தலைப்பில்
கட்டுரையைப் படித்தேன்.அது 1974-75 காலகட்டம்.
அது அரசியல் கட்டுரை எனினும் அதன் தமிழ் வாடை
இலக்கியமாகப்பட்டது எனக்கு.
அரசியல் கருத்துக்களை எடுத்துவைக்கும்முறை, வந்துவிழும் சொற்றொடர்,
அதற்கு பயன்படும் தமிழ் இவற்றைக் கண்டு;படித்து;உய்த்து;உணர்ந்து காரணமில்லா ரசிகன் ஆனேன்.
அது, நான் கோவை வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் நேரம்.
படிப்பை முடித்துத் தமிழக அரசில் வேளாண்மை அலுவலராக 1977-ல் பணியில் சேர்ந்தேன்.
1980-லிருந்து 1983 வரை நான் வேதாரண்யத்தில் பணியாற்றினேன்.
அந்தக்காலகட்டத்தில்தான் கவியரசு கண்ணதாசன் இறந்த நாளன்று உவமைக்கவிஞர் சுரதா அவர்களை
என் நண்பரின் திருமணத்திற்கு அழைத்திருந்தேன்.
திராவிட முன்னேற்றக்கழகக் காலத்தில் கா.காளிமுது B.A என்றிருந்தவர்
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சரானார்.
அதுமட்டுமல்ல அவர் M.A முடித்து தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற்று டாக்டர் கா.காளிமுத்து
ஆகிவிட்டார்.
அவருக்குத் தஞ்சை சங்கீத மகாலில் தஞ்சைமாவட்ட வேளாண்மைப்பட்டதாரிகள் சங்கம் சார்பாக
பாராட்டுவிழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அண்ணன் வ.பழநியப்பன் முன்னின்று நடத்தினார்.
அவரைப்பாராற்றி நான்தான் கவிதைப்படிக்கவேண்டும்.
அதற்கு முதல்நாள் தஞ்சை பெரிய கோவிலில் மன்னன் இராசராசனுக்கு (சதையவிழா)பிறந்தநாள்
விழா நடைபெற்றது.
அங்கே சிறப்புரை ஆற்றியவர் டாக்டர் காளிமுத்து.
அவரைப்பற்றி முழுமையாகக் கவிதை எழுதுவதற்குமுன்
அவருடையப் பேச்சைக்கேட்க ஆசைபட்டு அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.
அவருடையப்பேச்சில் மன்னன் இராசராசனின் சிறப்புப்பெயர்கள் நூறினை அடுக்கிச்சொன்னார்.
அன்று அது எனக்கு வியப்பாக இருந்தது. அடுத்த நாளில் அவரைப்பற்றி வாசிக்கும் கவிதையில்
என்னையறியாமல் சில மாற்றங்களை செய்யவைத்தது அவருடைய பேச்சு.
பாராட்டுவிழாவில் அவரைப்பற்றி நான் எழுதிய கவிதையும் நான் படித்த விதமும் அனைவரையும்
கவர்ந்தது.
பாராட்டு இதழைப் படிக்கமட்டுமே அழைத்த சங்கத்தார்கள், நான் படித்து முடித்தபின்
அவ்விதழை அவரிடம் கொடுக்க என்னையே அனுமதித்துவிட்டார்கள்.
அதுமட்டுமா நிகழ்ந்தது!
அடுத்தநாள் மாலைமுரசில் சங்கத்தைச்சேர்ந்தவர்களோடு அவரின் படம் வருவதற்குப்பதிலாக
என்னுடைய படமும் அவருடைய படமும் வெளிவந்தது.
அவரைப்பற்றி அன்று நான் எழுதிய வரிகளும் நினைவுக்கு வரவில்லை. மாலை முரசில் வெளிவந்த
படமும் என்னிடம் இல்லை.
அடுத்த சில நாட்களில் வேதாரண்யம் தொகுதியில் அவருடைய சுற்றுப்பயணம்.
அரசு ஊழியர் என்ற முறையில் அவரின் அருகில் இருக்கும் வாய்ப்புகிடைத்தபோதெல்லாம்
புன்னகையை மட்டும் பறிமாறினார்.
இன்னொருமுறை 1983 ஆண்டு திருச்சி மருத்துவ அரங்கில் அவருக்கு மீண்டும் பாராட்டுவிழா.
தமிழ்நாடு வேளாண்மைப்பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
அன்றைக்குச் சங்கத்தேர்தலும் நடைபெற இருந்தது.
அப்போதைய தலைவர் சிவ சண்முகம்.
மதுரைக்காரர்.
போட்டி தஞ்சைக்கும் மதுரைக்கும்தான்.
தஞ்சை சார்பாக வ.பழநியப்பன் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் என்னைக் கவிதைஎழுதி வரச்சொன்னார்கள் சங்கத்தார்கள்.
தேர்தல் வருகிறகாரணத்தால் ,நான் தஞ்சையைச் சேர்ந்தவன் என்பதால் தலைவர் சிவ.சண்முகம் என்னை
அனுமதிக்கவில்லை.
ஒருவாராக மதுரை நண்பன் திலகர் உதவியுடன் கவிதைவாசிக்க அனுமதி கிடைத்தது.
மேடையில் அமைச்சர்கள்,சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.
மேடைக்குப் பின்னே நான் நின்றுகொண்டிருந்தேன்.
கவிதைபாட என்னை அழைத்தார்கள்.
அன்றைக்கு தஞ்சை தண்ணீர் இல்லாமல் வேளாண்மை பாதிக்கப்பட்டிருந்த நேரம்.
கர்நாடக மாநிலத்தின் அன்றைய முதல்வர் குண்டுராவ் .அவர்தான் தண்ணீர் விடவில்லை.
தஞ்சை வறண்டதற்கு அவர்தான் காரணம்.
இவற்றை உள்ளடக்கி என் கவிதை வரிகள் இருந்ததன.
24 ஆண்டுகளுக்குப்பிறகு நினைவுக்கு வருகின்றன சில வரிகள்:

டாக்டர் பட்டம் பெற்ற உனக்கு
வைரத்தில் கிரீடமும்
தங்கத்தில் மாலையும்
சூட்டிப்பார்க்க ஆசைதான்
தஞ்சை வறண்டதினால்
தண்ணீர்விட குண்டன் தடுத்ததினால்
நெஞ்சில் ஊறும் தமிழைமட்டும்
காணிக்கையாக்குகிறேன்

தமிழ்க்கடலில்
முத்தெடுக்க மூழ்கினாய்
முத்தெடுக்கவில்லை
முத்தாக நீயே வந்தாய்

திராவிடம் என்றால்
உனக்கு என்ன அவ்வளவு அக்கறை!
தேசியம் என்றால் என்ன
அவ்வளவு வெறுப்பு!

புரிகிறது
தேசியம்
அது ஈயமிழந்த
சுதேசிப்பாத்திரம்

தேசிய நீரோட்டம்
அது
உமிழ்நீர்கூட சுரக்காத
வறட்டு நாக்குகளின்
வாய்த்தாளம்
என்று பாடினேன்.
கையொலி அரங்கம் அதிர்ந்தது.
கவிதைபாடி முடித்து அரங்கில் என் இருக்கையில் அமர்ந்தேன்.
மற்றவர்களும் அமைச்சர்களும் பேசியதற்குப்பின்பு டாக்டர் காளிமுத்து பேச்சைத்தொடங்கினார்.
அரைமணி நேரம்தான் அவர் பேசியிருப்பார்.
அதில் என் பெயரைப் பத்து தடவைக்குமேல் பயன்படுத்தியிருப்பார்.
என் கவிதைவரிகளை எடுத்துச்சொல்லி அதற்கு பதிலும் சொன்னார்.
அதை கேட்கக் கேட்க நான் ஆனந்தக்கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தேன்.
அப்போது அவர் ” கடலில் மூழ்கி நான் முத்தையெடுக்காமல் நானே முத்தாக வந்ததாக தம்பி இளங்கோ சொன்னார்.
அவருக்குச்சொல்லிக்கொள்கிறேன், இந்தக் காளிமுத்து இன்னும் தமிழ்க்கடலோரத்துச்சிப்பிகளைத்தான்
பொறுக்கிக்கொண்டிருக்கிறான். முத்தை எடுக்கிற அளவுக்கு ; முத்தாக வெளிவரும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.
என்னுடைய டாக்டர் பட்டத்திற்குப் பின்னால் பல தமிழ் அறிஞர்களுடைய உழைப்பு இருக்கிறது.
அவர்களுடைய பாதங்களுக்கு உங்களுடைய பாராட்டைச் சமர்ப்பிக்கிறேன்.
தேசியத்தைப்பற்றியும்; தேசிய நீரோட்டம் பற்றியும் என்னைவிட வேகமாகச்சாடினார்.
அவரூகுச்சொல்லிக்கொள்கிறேன், அந்த வேலையை என்னிடம் விட்டு விடுங்கள்.
அவர்களைப் பதம்பார்ப்பதற்காகவே புரட்சித்தலைவர் என்னைக் கொம்புசீவி வளர்க்கிறார்.” என்று பேசிக்கொண்டு
வந்தவர் திடீரென்று,
” ஒருவேளை இந்தக் காளிமுத்து நாளை மிசா கைதியாகச்சிறையில் தள்ளப்பட்டால் என்னைச் சிறையிலே வந்து
சந்திப்பதற்கு தம்பி இளங்கோவைப்பெற்றிருக்கிறேன் என்ற மன நிறைவோடு விடைபெறுகிறேன் ” என்றார்.
நான் ஆனந்தக்கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.
கூட்டம் முடிந்ததும் அவருடன் மதிய உணவு சாப்பிட என்னை அழைத்தாராம்.
அனால் யார் கண்ணிலும் நான் தென்படவில்லை.
உள்ளுக்குள் மகிழ்ந்து மகிழ்ந்து வீடு திரும்பினேன்.
அன்றைய கவிதையில் நான் குண்டன் என்று குறிப்பிட்டது கர்நாடகத்தின் அன்றைய முதல்வர் திரு குண்டுராவ் அவர்களை.
கவிதைபடிக்கும் அன்றைக்கு திருச்சியில் குண்டுராவ் இருந்தார் என்பது அன்றைய மாலைமுரசு செய்தி.

1983-ல் திருச்சி அகில இந்திய வானொலியில் சேர்ந்துவிட்டேன்.
வானொலி சார்பாக அவருடைய பேச்சை ஒலிப்பதிவு செய்ய பல வாய்ப்புகள் கிடைத்தன.
மதுரை வேளாண்மைக்கல்லூரியில் ஒருமுறை.
மீண்டும் திருச்சியில் தோட்டக்கலைத்துறை சார்பாக நடந்தவிழாவில் கபிலர் பாடிய 99 பூக்களையும் வரிசையாகக் கூறினார்.
அதைப்பின்பற்றி நானும் அந்தப்பூக்களைப்படித்து சிங்கப்பூரில் நடைபெற்ற (1997) தமிழ்மொழிவாரத்திலும்,
புதுமைத்தேனீ
அண்ணன் மாஅன்பழகன் அவர்களின் மணிவிழாவான நூல்கள் வெளியிட்டு விழாவிலும் 99 பூக்களைச்சொல்லி மக்களை
அசத்தியிருக்கிறேன் .
நாஞ்சில் மனோகரன் அவர்கள் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழ்கத்தில் இருந்தபோது அவரைத் திமுகவினர்
‘ மந்திரக்கோல் மைனர் மனோகரன்’ என்றனர்.
அவர் திமுகவுக்குப் போனபின்பு அவரைக் காளிமுத்து ‘குறுந்தடி கோமான் மனோகரன்’ என்றார்.
“கருவாடு மீனாகாது
கறந்தபால் மடிபுகாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது” எல்லாம் நீங்கள் படித்ததுதான்.
உவமைக்கவிஞர் சுரதாவின் கவிதையில் மிகுந்த ஈடுபாடு அவருக்கு உண்டு.
மங்கையர்க்கரசி பட வசனத்தை அவர் வியந்து பாராட்டியிருக்கிறார் .
கையில் கடிகாரம் இருக்காது.
மகிழ்வுந்தில் பயணம் செய்யும்போது படித்துக்கொண்டேயிருப்பாராம்.
முழுக்கை சட்டைபோடாமல் ‘முக்கா’ கை சட்டைபோட்டு மிரட்டிவைத்திருப்பது அவருடைய பழக்கம்.
சிங்கப்பூர் வந்தபோதும் அவரைச்சந்தித்தேன்.
பழையதை நினைவுப்படுத்தினேன். அவருடைய நெஞ்சம் இலக்கிய நெஞ்சம் என்பதை உணர்ந்தேன். அவ்வளவுதான்….

12.12.2006 சிங்கப்பூர்.


pichinikkaduelango@yahoo.com

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ