கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அறிவு கெட்டவனே!
உன் தோளிலிலே
சுமந்திடு,
உன் பாரத்தை!
பிறரிடம்
பிச்சை எடுப்பவனே!
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று
யாசித்திடு!
அனைத்தையும்
தாங்கிக் கொள்ளும்
இறைவன்மேல் சுமையை
இறக்கி விட்டு
நிம்மதியாய் இருக்கிறாய்
வருத்தப் படாது,
திரும்பிப் பாராது!

பேராசை கொண்டு நீ
வெளிவிடும்
பெருமூச்சு சட்டென
விளக்கு ஒளியை அணைத்து
இருளாக்கி விடுகிறது!
களங்கம் பிடித்த
கரங்கள்
காணிக்கை அளிக்கும்
வெகுமதியைக்
கையேந்திப் பெற்றுக் கொள்ளாதே!
அழுக்கேறியது,
அந்த நன்கொடை!
புனித அன்புடன்
கனிந்த உள்ளம்
அளிப்பதை மட்டும்
கைநீட்டி ஏற்றுக்கொள்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 7, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா