காவலுக்கு

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

தி ஜானகிராமன்


‘ஐயா…ஐயா ‘

பதில் இல்லை உள்ளேயிருந்து

‘சுவாமி ‘ சுவாமி ‘

பதில் இல்லை.

‘வெற்றிலைக்காரம்மா ‘ வெத்தலைக்காரன் வந்திருக்கேன்….

யாரு உள்ள ‘ ‘

‘யாரு ? ‘

‘நான் தாம்மா வெத்திலெ ‘

வேதாந்தி இடை வழியைப் பார்க்கிறார். நடை வழியில் சுவரை ஒட்டி ஒரு திண்ணை. அந்த திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த கிழமுகம் தெரிகிறது. பொல்லென்று வெளுத்த தலை. நெற்றியில் சந்திர வளையம் போல் திருமண்.

‘யாரு ‘ அம்மாவா ‘ எப்ப வந்தீங்க ? ‘

‘யாரு ? ‘

‘என்ன யாருன்னு கேக்குறிய ‘ தெரியலியா ‘ வேதாந்திம்மா வேதாந்தி. எப்ப வந்தீங்க ? ‘

‘ –வேதாந்தியா ?யார்றாப்பா இப்படிக் கத்தறதுன்னு பார்த்தேன் ‘ என்று கிழவி இடைக்கழி திண்ணையிலிருந்து எழுந்து

‘யப்பா, யம்மா ‘ என்று தள்ளாடித் தள்ளாடி முந்தானை பின் பக்கம் ஆடுசதைவரை தொங்க நடந்து வந்து வாசல் திண்ணை வரையில் உட்காருகிறாள்.

‘எப்ப வந்தீங்க ? ‘

‘நான் வந்து பத்து நாளாச்சே ‘

‘முந்தாநாத்து நான் வந்து வெத்திலை கொடுத்திட்டுப் போனேனே அம்மாளை பாக்கிலியே ‘

‘ரண்டாங்கட்டுலெ படுத்திருந்தேன். இப்ப மாட்டுப் பொண்ணு குளிக்கப் போனா, கடசிக் கொல்லைக்கு வாசப்பக்கம் பார்த்துக் கோன்னா. ரேழித் திண்ணையிலே வந்து படுத்துண்டேன். நேத்திக்கி கூட நினச்சுண்டேன் உன்னை. தினமும் குரல் கேக்குமே செத்துப் போயிட்டானோ இருக்கானோ தெரியலியேன்னு நினைச்சிண்டிருந்தான் ‘

‘இப்ப தெரிஞ்சுதா இல்லியா இருக்கேனா செத்திட்டேனான்னு. ‘

‘எதுக்காக செத்துப் போகணும். மகாராஜனா இன்னும் நூறு வருஷம் இரு. உன் தம்பி சடையன் பட்டச்சேரி அய்யங்கார் நாத்தங்காலெல்லாம் குத்தகைக்கு வச்சிண்டிருந்தானே. அவன் செத்துப் போயிட்டானோ இருக்கானோ ‘ ‘

‘நீங்க போன தடவை எப்ப வந்தீங்க ? ‘

‘போன தடவையா அது, அஞ்சு வருஷம் ஆச்சு. கான்பூர்லே தான் என் கால்லே ஆணி அடிச்சு வச்சுட்டானே பெரிய புள்ளே. உப்பிலி ரங்கராஜன் எல்லாரையும் பாத்து மாமாங்கம் ஆனாப் போல இருக்குடா இப்ப. நான் எப்படியாவது போய்த்தான் தீர்வேன். ஒத்தக்காலாலே நின்னேன். அப்புறம்தான் யாரோ துணை கிடைச்சுதுன்னு ரயில்லே ஏத்திவிட்டான். ‘

‘நீங்க அப்பவும் என் தம்பி சடையன் செத்துட்டானா இருக்கானான்னு கேட்டாங்க. ஞாபகமிருக்கா ? ‘

‘அப்படியா கேட்டேன் ? ‘

‘அப்படித்தான் கேட்டாங்க. அப்ப நான் என்ன சொன்னேன். நெனவு இருக்குங்களா ? ‘

‘சொல்லேன் ‘

‘என் தம்பி இப்ப சடையன் இல்லெ. சபாஸ்தியனாப் போய்ட்டான். பட்டாச்சாரி நாத்தாங்கலெ கிரயத்துக்கு வாங்கி சொந்தமாப் பயிர்செலவு பண்றான்னு சொன்னேன். உங்களுக்கு மறந்து போச்சு. இப்பவும் அவன் செத்துப் போகலெ நல்லாத்தான் இருக்கான். என் தம்பின்னா எனக்கு அப்புறம் தானே செத்துப்போகணும் ‘

‘குசாலா அவாவா அந்தந்தக் காலத்துலெ செத்துப் போறதுதான் நல்லது. அப்படியெங்கே நடக்கிறது ? அவர் செத்துப் போனவுடன் ‘நீ என்னோட வந்து இரும்மா ‘ன்னு பெரிய புள்ளே கான்பூருக்கு அழைச்சிண்டு போனான். கான்பூரு என்ன கிட்டஞ்சியா கொட்டையூரு, இன்னம்பூரு, சருக்க கோபாலசமுத்ரம் மாதிரி அதுகிடக்கு நாலாயிரம் மைலோ ஐயாயிரம் மைலோ எப்பவாவது ரண்டு வருஷம் மூணு வருஷம் நாலு வருஷத்துக்கு ஒரு தடவை வரேன். ஒவ்வொரு தடவையும் கேக்கற சேதியெல்லாம் தூக்கி வாரிப்போடறது. என் மச்சினன் புள்ளே ஆராமுது பொண்டாட்டிமேலே கோச்சுண்டு கொளத்திலெ விழுந்து ப்ராணனை விட்டுட்டானாம். போனதரம் வந்து ஒரு நாழிக்கெல்லாம் இந்த சேதியைச் சொன்னா சொரேர்னுது எனக்கு. அத்தோடவா, ராதா பொண்டாட்டி என்னோட பரம சிநேகிதி. அவளைப் பார்த்துட்டு வரணுமேடின்னேன் பெரிய மாட்டுப் பொண்ணுகிட்ட. அவ கான்ஸர் வந்து செத்துப் போய்ட்டாம்மான்னாளே பாரு. நாலு நாளைக்கு சோறு எறங்கலெ. இந்த மாதிரிதான் ஒரோரு தடவையும் சின்னது பெரிசுன்னு இல்லாம யாரைப் பத்திக் கேட்டாலும் டாபி வந்துடுத்து, மோட்டார்லே அடிபட்டுடுத்து, மாடு முட்டிடுத்து. ஆத்தோட போயிடுத்துன்னு கேட்டா எப்படியிருக்கும் ? நாலஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை தானே இந்தப் பக்கம் வரேன்– ‘

‘அது சரி, அப்படின்னா, செத்துப்போயிட்டாங்களா இருக்காங்களான்னு ஏன் கேக்கறீங்க ? இருக்காங்களா செத்துப் போயிட்டாங்களான்னு கேக்கப்படாதா ? ‘

‘எப்படிக் கேட்டா என்ன ? மாத்திக் கேட்டுட்டா மாத்திரம் செத்துப்போனவா பொழச்சி வந்துடப் போறாளா ‘ இல்லெ இருக்கறவாதான் செத்துப் போகாம இருக்கப்போறாளோ ? ‘

‘அது இல்லெதான் ‘ என்று வேதாந்தி கூர்தாடியும் காவிப் பல்லுமாகச் சிரிக்கிறார்.

‘ராதா செட்டி பொண்டாட்டி தான் செத்துப்போய்ட்டான்னா, இப்ப செட்டியார் செத்துப் போய்ட்டாரோ இருக்காரோ ? ‘

‘பார்த்தீங்களா ‘ மறுபடியும் அப்படியே கேட்டுட்டாங்களே. ‘

‘ஆமா, நான் கேட்டுத்தான் எசைகேடா ஆயிடுமாக்கும் ? ‘

‘எசைகேடா ஆகவாணாம். செட்டியாரு நல்லாத்தான் இருக்காரு. ரண்டு சுத்து பெருத்திருக்காரு– கருங்கல்லாட்டம் இருக்காரு. முன்னெல்லாம் பாய்ல படுக்கை. இப்ப பணத்து மேல படுக்கை. கருங்கல்லு உடம்பை கோரைப் பாயா தாங்கும் ? அதான் ஆண்டவன் பணமாவே படுக்கை விரிச்சுட்டான். ‘

‘ஆமா, கருங்கல்லு. கண்ணை மூடற வேளை வந்துதுன்னா கருங்கல்லாவது பாறாங்கல்லாவது. ‘

‘அதான் இருக்கவே இருக்கே….அது போவுதுங்க…இப்ப கான்பூர்லெ பெரிய ஐயா, பேரன் பேத்தி இவாள்ளாம் நல்லா இருக்காங்களா ‘ ‘

‘நல்லாவும் இருக்காங்க, பொல்லாத்தனமாவும் இருக்காங்க–ஏதோ நடக்கறது–போயேன் ‘

‘ஏன் இப்படி சொல்றீங்க ? ‘

‘பின்னே ? பெரிய பேரன் ஒழுங்கா பெல்லாரி பாஷ்யம் அய்யங்கார் பேத்தியைக் கல்யாணம் பண்ணிண்டான். ரண்டாவது பேரன் குண்டூர்லேர்ந்த ஒரு ரெட்டிப் பொண்ணாம். கூடப் படிச்சாளாம். அவளை ஓசப்படாம ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணினுட்டான். ரெட்டா மட்டான்னு எம்புள்ளே பேரன் மேலே பாஞ்சு பாஞ்சு குதிச்சான். இப்ப எல்லாம் சரியாப் போயிடுத்து. இப்ப அந்தப்பொண்ணு சமையல் உள்ளேயே வந்து காபி போட்டுக் குடுக்க ஆரம்பிச்சுடுத்து. மூணாவது பேரன் எல்லாத்தியும் தாண்டிப் போயிட்டான். ஸ்ரீநகர்லேந்து ஒரு துலுக்கப்பொண்ணாம். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு குதிக்கறான். இப்ப அம்மாக்காரி குதிக்கிறா. தினம் போது விடிஞ்சா சண்டை. மூஞ்சியை மூஞ்சியைத் தூக்கிண்டு மூலைக்கொண்ணா நிக்கறது ? ‘–

‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்.

வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்

வேண்டாத மனையினில் உறவு செய்வோம்

சோதித் துலாலியே தூங்கி விடுவோம்

சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்

ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்

அறியார்கள் இதையென்று ஆடுபாம்பெ ‘

என்று பாடிக்கொண்டே எழுந்து நின்றார் வேதாந்தி.

‘போரும் போரும் ‘ என்றாள் கிழவி–உப்பிலியின் தாயார்.

‘மீன் இறைச்சி தின்றதில்லை,

அன்றும் இன்றும் வேதியர்

மீன் இருக்கும் நீரலோ

மூழ்வதும் குடிப்பதும்.

மான் இறைச்சி தின்றதில்லை,

அன்றும் இன்றும் வேதியர்.

மான் உரித்த தோலலோ

மார்பில் நூல் அணிவதும் ‘

என்று ஆட ஆரம்பித்தார்.

‘போரும் போருமே ‘ என்று கிழவி காதைப் பொத்திக் கொண்டாள்.

‘என்ன அமர்க்களம் இங்கே ‘ என்று குரல்.

கஸ்தூரி குளித்து விட்டு, ஈரத்துண்டைக் கூந்தல் முடிச்சில் பந்தாக முடித்துக் கொண்டு, புடவையைச் சீராகக் கட்டிக் கொள்ளாமல் முக்கால் சுற்றாக சுற்றிக்கொண்டு வாசல் நிலையில் எட்டிப் பார்த்தாள்.

‘என்னய்யா ஆட்டத்துக்கு இப்ப ? ‘ என்றாள் வேதாந்தியைப் பார்த்து.

‘ஒண்ணுமில்லெ. சந்தோசமா சேதி சொல்றாங்க. சின்னப் பேரன் எங்களவங்க பொண்ணை கலியாணம் சேஞ்சுக்கப் போறாங்களாம் கான்பூர்லெ. யாராயிருந்தா என்ன ? எங்கிருந்தா என்ன ? சீ நகரோ சித்தாம்பூரோ

மாட்டிறைச்சி தின்றதில்லை. அன்றும் இன்றும் வேதியர்.

மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக்கிடுவது ‘ என்று பாடி உட்கார்ந்தார்.

‘வேதாந்தி கிட்டவும் சொல்லியாச்சா–பெரிய சமாச்சாரத்தை ? ‘ என்று மாமியாரைப் பார்த்துப் பல்லைக் கடித்தாள் கஸ்தூரி அம்மாள்.

‘வேதாந்தி கிட்டே சொல்லாம தற்குறிக்கிட்டவா சொல்லுவாங்க ?..வெத்துலெ எத்தினி வக்யட்டும் ‘

‘என்ன கேழ்வி ? ஒரு கவுளி ரண்டு நாவட்டம் தெரியாதா உமக்கு. நீர் வாசல்லே வந்தாலெ ஏதாவது அமர்க்களம். எந்து உள்ள போங்களேன். ‘

வெற்றிலையைத் திண்ணையிலிருந்து எடுத்துக் கொண்டு வேதாந்தி வாசலில் இறங்குகிற வரையில் நிலைப் படியில் நின்றாள் கஸ்தூரி அம்மாள்.

‘ஏந்துண்டு உள்ளே போங்களேன் ‘ வெத்திலைக் காராட்டல்லாம் போயி ஆத்து சமாச்சாரத்தை யெல்லாம் கொட்டணுமா ஊர் சிரிக்கணுமா ? ‘

‘இத்தனை நாளா சிரிக்காதது இப்ப என்ன சிரிச்சுப் போச்சாம் ? இப்பதான் தந்தி ரேடியோவெல்லாம் வந்து அலகா பாத்தில்லே மூச்சு விட்டா அம்மா சமுத்திரத்திலே வந்து கேக்கறதே. ரண்டாவது பேரன் ரெட்டி பொண்ணைக் கலியாணம் பண்ணிண்டு ரண்டரை வருஷமாச்சு. அது தெரிஞ்சுட்டுப் போகட்டும். மூணாவது பேரன் துலுக்கப் பொண்ணைப் பண்ணிக்கப் போறானாமேன்னு இந்தத் தெரு கிருஷ்ணமாச்சாரிக்கு எப்படித் தெரியும். வரதய்யங்காருக்கு எப்படித் தெரியும் ? நான் ஊருக்கு வந்ததும் வராததுமா ரண்டு பேரும் கேட்டாளே ? வந்த அன்னிக்கே கேட்டாளே ? எப்படி ‘ மறுநாளைக்கு ஆமடையா வந்து அப்படியா சமாசாரம்னு குசுகுசுன்னாளே ரண்டாங்கட்டுலே என்னோட பேசறேன்னு ‘ ‘

‘நான் சொன்னேன்னு சொல்றேளா ? ‘

‘நீ சொன்னேன்னா சொன்னேன். ‘

‘நீங்க சொல்றதை அப்படித்தானே அர்த்தம் பண்ணிக்க வேண்டிருக்கு ? ‘

‘ஆமா, பெரிய அர்த்தத்தைக் கண்டுட்டே..போடா போ. ‘

‘சரி, நீங்க உள்ளே வந்து படுத்துக்குங்கோ. ‘

உப்பிலி வயலிலிருந்து வந்ததும் சமாசாரத்தைச் சொல்லி கஸ்தூரி அம்மாள் அவரை உசுப்பி விட்டாள். அவர் தாயாரைப் பார்த்துக் கத்தினார்.

‘நீ எதுக்கு ரேழி திண்ணெல படுத்துக்கறே. ரண்டாம் கட்டுலெயே படுத்திண்டிருக்கறதுக்கு என்னவாம் ? ‘

‘அவதானடா சொன்னா நான் குளிக்கப்போறேன், வாசல் பக்கம் பார்த்துக்கோன்னு. ரேழியிலெ வந்து படுத்துண்டேன். ‘

இனிமே ரண்டாங் கட்டுலெ படுத்துக்கோ.

‘நான் மாட்டேன், அங்கே புழுங்கித் தள்ளுது. நான் ஒரு மாசமோ ரண்டுமாசமோ இங்க இருக்கற வரைக்கும் ரேழியிலேதான் படுத்துப்பேன் ‘ என்று அடம் பிடிக்கிறாள் கிழவி.

அன்று மாலை உப்பிலியும் கஸ்தூரி அம்மாளும் கடைத்தெருவுக்குக் கிளம்பினார்கள்.

‘காம்ரா உள்ளே நன்னாப் பூட்டிண்டுவா ‘ என்று சொல்லிக்கொண்டே வாசலுக்குப் போனர் உப்பிலி.

ரேழியைக் கடக்கும்போது, ‘எல்லாம் பூட்டி யாச்சு ரேழியிலெ காவலுக்கு நாய் படுத்துண்டிருக்கே ‘ என்று கிழவி காதில் மட்டும் விழும்படியாகச் சொல்லிக் கொண்டே வாசல் நிலையைக் கடந்தாளாம் கஸ்தூரி அம்மாள்.

‘சின்ன நாய் வெளியே போய் பெரிய நாய்தான் காவல் காக்கணும் ‘ என்று சற்று உரக்கவேகுரல் கொடுத்தாள் கிழவி.

பாருங்கோ உங்கம்மா போறதே ‘ ‘

‘என்ன ? ‘

‘உங்கம்மாவையே வந்து கேளுங்கோ ? ‘

‘என்னத்தைக் கேக்கறது ? ‘

‘உள்ளே வந்து கேளுங்கோ ? ‘

உப்பிலி புருவத்தைச் சுருக்கி ரேழிக்கு வருகிறார்.

‘என்னம்மா சொன்னே ? ‘

‘அவளையே கேளேன். அவ முதல்லெ என்ன சொன்னாள்னு. ‘

‘நீ என்னசொன்னே ? ‘– மனைவியிடம் உப்பிலி.

‘அதான் ரேழியிலே காவல் இருக்கே. எதுக்குப்பயப் படறேள்னு உங்க கிட்டதான் சொல்லிண்டு வந்தேன் ‘

‘அப்படியா சொன்னே ‘ நாய் படுத்திண்டிருக்கு காவலுக்குன்னு சொல்லலே ? ‘

‘ராட்சசிக்குப் ப்ரோக்ஷசின்னு சொல்லனும் போல இருக்கு எனக்கு. நீ எனக்கு அம்மா. அவ எனக்குப் பொண்டாட்டி. சரிசரி போ…பத்து புலி சேர்ந்து விளையாடும் ரண்டு பொம்பனாட்டி….சரி சரி…போ. மொறைக்க வேண்டாம். ‘

ஒரு பயந்த அதட்டல். கஸ்தூரி முன் போக உப்பிலி பின் தொடர்கிறார்.

‘நீங்க சண்டை போடாம செளஜன்யமா இருங்கோ. ஆண் நாயும் பெண் நாயும் ‘ என்று முணுமுணுக்கிறாள். ரேழித் திண்ணையில் ஒருக்களிக்கிறாள் கிழவி.

Series Navigation

- தி. ஜானகிராமன்

- தி. ஜானகிராமன்