காலம் மட்டுமே அறியும் ரகசியம்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

பாண்டித்துரை



உலகம் தழுவிய இலக்கிய ஆர்வலர்களால் பரவலாக எதிர்நோக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் நேற்று இன்று நாளை (09.06.07) அன்று இதயம் நிறைந்து இனிதே முடிந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தலைக்கு மேல இருக்கும் வேலையை முடித்தால் அப்பாடானு ஒரு ஆயாசை வரும் அல்லவா அப்படித்தாங்க எனக்கு இல்லைங்க பாலு அண்ணாவிற்கு ஏற்பட்டு இருக்ககூடும். கடந்த வாரமே திண்ணையில் பதிவுசெய்ய எண்ணியிருந்தாலும் வேலைப்பளு மற்றும் மலேசிய பயணம் (பணி நிமித்தம்) காரணமாக இன்றுதான் மனதினில் நிறைந்த கருத்தரங்கை தட்டச்சு செய்யநேர்ந்தது. கவிஞரும் பாலு மீடியா நிர்வாகியுமான திரு. பாலுமணிமாறன் அவர்கள் இன் நிகழ்சியை சிங்கை தேசிய நூலகம் மற்றும் சிங்கை தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தியதற்கு என் நன்றிகள்.

சிங்கப்பூரின் ஒலி96.8ன் செய்திப்பிரிவை சேர்ந்த திரு செ.ப. பன்னீர் செல்வம் பாக்டர் சீதாலட்சுமி பன்முக ஆளுமைகொண்ட எழுத்தாளர் திரு சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் மலேசியாவை சேர்ந்த எழுத்தாளர் பீர் முகம்மது பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் தென்றல் வாரஇதழின் ஆசிரியர் திரு வித்யாசாகர் முறையே நேற்று இன்று நாளை என்று தங்களின் உரையை நிகழ்த்தினர்.

ஒலி96.8ன் செய்திப்பிரிவை சேர்ந்த திரு செ.ப. பன்னீர் செல்வம் அவர்கள் பேசுகையில் சிங்கப்பூரின் தமிழ் வரலாறுகள் பேசிக்கொண்டே செல்கிறது. ஆனால் பதியப்படவில்லை என்றும் அப்படி பேசிச்செலகையில் தானும் பதிவுசெய்யாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் ஆய்வு நூல்கள் இங்கு தேசியநூலகத்தில் மட்டுமே உள்ளது என்றும் அனைத்து நூலகத்திற்கும் விரிவுபடுத்தவேண்டும் என்றும் நூலகவாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். இவரது பேச்சுகள் நிறைய வரலாற்று சுவடுகளை தொட்டுச்சென்றது பின் சிங்கப்பூரின் பத்திரிக்கை பற்றிய தகவல்கள் முதல் சிறுகதை (18ம் நூற்றாண்டு காலகட்டத்தில் )இங்குதான் எழுதப்பட்டது எனும் தகவல் என்று 20நிமிடத்தில் நிறைவான தகவல்களை சொல்லிச்சென்றாலும் என்போன்ற புதியவர்களுக்கு மனதில் நில்லாமல் மறையவேசெய்கிறது (அய்யா சீக்கிரமாக உங்களின் புத்தகம் வரட்டும் காத்திருக்கிறோம்).

எழுத்தாளர் பீர் முகம்மது பேசுகையில் பெரும்பாலன தகவல்கள் முஸ்லிம் தமிழர்களை பற்றியதாகவே இருந்தது. 1755 காலகட்டத்திலேயே பிணாங்கு எனும் பகுதியில் நிறுவப்பட்ட மசூதி மூலமாக தமிழ்கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்து என்றார். அதற்கு முன்பே இங்கு தமிழர்கள் வந்திருக்க கூடும் என்றார். திராவிட கழகத்தின் தாக்கம் மற்றும் திரைஊடகத்தின் தாக்கத்தால் 1950க்கு பின் தமிழ்இலக்கியத்தில் மாற்றம் ஏற்பட்டது என்றும் பணமின்மையால் சிறுவயதில் திரையரங்கின் கதவோரம் மனோகரா வசனத்தை கேட்டு பின் மறுநாள் பள்ளியில் பேசிக்காட்டியது இது இவரது சிறுவயது அனுபவங்கள் எங்களை நெகிழவே செய்தது.

பாக்டர் சீதாலட்சுமி யின் பேச்சு ஒரு கவியை எடுத்துக்கொண்டு ஆய்வுசெய்தால் கொடுக்கப்பட்ட 20நிமிடமும் பேசநேரிடும் என்று மேலோட்டமாக தொட்டுச்சென்றார். மேலும் இவரது பேச்சு சீனம் மலாய் ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கியங்களின் ஒப்பீடே நிறைந்து காணப்பட்டது. மற்றமொழிகளை காட்டிலும் தமிழ் இலக்கியம் வளர்ச்சியின்றியே இருக்கிறது என்றார் (தழிழ் இலக்கிய ஆர்வளர்கள் கவனிக்க) . இலக்கியம் என்பது பிறரை சிந்திக்க வைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி இலக்கியம் மாணவர்களை சென்று சேரவேண்டிய முக்கியமான நிலையில் சிங்கப்பூர் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். (தமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்கு) இங்கு முழுநேர படைப்பாளி உருவாக்கபடவேண்டும் என்றும் வளரும் கலைஞர்கள் வளரும் கலைஞர்கள் என்று போட்டிகள் நட்த்த வேண்டும் என்றார். எல்லா மொழிகளிலிலும் சிறுகதைகள் சிகரத்தை தொட்டுக் கொண்டிருக்க நாம் கிணற்றுக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்றார் (பாக்டர் சீதாலட்சுமி தாங்கள் சமீபத்தில் வெளியீடு கண்ட எம்.கே. குமாரின் மருதம் சிறுகதை தொகுப்பை படிக்கதவறியிருப்பின் வாங்கிப்படியுங்கள் அடுத்த கருத்தரங்கில் நம்பிக்கையுடன் பேச நேரலாம்) இவரது விடுபட்ட பேச்சுகள் விரைவில் வெளியிடம் ஆய்வு நூலில்இடம்பெறும் என்ற தகவலைவிட்டுச்சென்றார்.

பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. வானம்பாடியின் வருகைக்கு பின் புதுக்கவிதை வீச்சு மலேசிய அளவிலே வெகு பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் சிறுகதையே சிறந்த வீரியமாக இங்கு வெளிப்படுவதாக சுட்டி சில சிறுகதைகளின் உரையாடல்களை எடுத்துச்சொன்னார். ஆதற்கு மலேசிய எழுத்தாளார்கள் அவர்களையும் அறியாமல் கோட்பாட்டு ரீதியிலே எழுதிவருவதாக கூறினார். மலேசியாவின் விளிம்பு நிலை தமிழர்களை மையபடுத்தியே நிறைய சிறுகதைகள் தோன்றியது. மேலும் மலேசிய தமிழர்களின் சூழல் வன்முறையாளர்கள் அங்கு உருவாக்கப்டும் நிலை என்று நிஜங்களை சிறுகதைகள் பதிவுசெய்கின்றன. 1970 அமல்படுத்தப்பட்ட சிகப்பு அட்டை சூழல் பின் தோட்டபகுதியில் அமர்தப்பட்டது முதல் இன்று விலை மலிவான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சூழல் என தமிழ் சமூகம் அடைந்த அதீதமான துன்பங்களை காண நேரிட்டது.

எழுத்தாளர் திரு சுப்பிரமணியன் ரமேஷ் நாளை சிங்கப்பூர் இலக்கியத்தை கணிப்பது தட்பவெப்பநிலையை கணிப்பதுபோன்று கைத்தட்டலை பெருவதைகாட்டிலும் தருமஅடியை பெற்றுத்தரும் உன்னதமான பணி என்றார் (ஒருவேளை உண்மையா இருக்குமோ!) உண்மையான கலைஞன் உருவாக்கப்படுவதில்லை உருவாகுகிறான். தேடல் சுயவிசாரணை காதல் என்று தான் கண்டவற்றை நெஞ்சு முன்வைத்து உருவாக்கும் படைப்பாளர்களை நாளை காண்பது காலம் மட்டுமே அறியும் ரகசியம் என்றார். மகத்தான இலக்கியம் இம் மண்ணில் தோன்ற தேடலும் விழிப்புணர்வும் கொண்டு சிங்கையின் ஆன்மீக சாரத்தை தேடிஅலையும் சுய மன மலர்ச்சி கொண்ட மனிதனை நோக்கியே காத்திருக்கிறது என்றார். சிங்கப்பூர் இலக்கிய சூழலக்கு தேவையானவற்றையும் பட்டியலிட்டார் தீவிர வாசிப்பு தனிமனித மாற்றம் சுயதேடல் ஆராய்தல் நவினசிந்தனை அவசரதேவை இலக்கிய இதழ் (ம் யாரு இந்த பூனைக்கு மணிகட்டபோவது) என்று நீண்டது.

தென்றல் வாரஇதழின் ஆசிரியர் திரு வித்யாசாகர் இவரதுபேச்சு எதார்தமாக இருந்தது (இவரை தனியே சந்தித்தால் நிறைய கேள்விகளை கேட்க நண்பர்கள் பலர் தயாராகி உள்ளது யாமறிந்த ரகசியம்) நகைச்சுவை நிரம்பிய யாரையும் புண்படுத்தாத பேச்சு . இவரது முதல் சிங்கப்பூரின் விஜயம்வேறு மனிதரை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. வாழ்வியல் உண்மைகள் அதுதான் இவர் நம்பும் இலக்கியம். இன்று வாழும் தமிழினிம் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச்செல்கின்றனார். ஆனால் இங்கு மூத்த எழுத்தாளர்களே இரு வேறுபட்ட சூழலை எழுதவேண்டியுள்ளது என்றார். ஆசிரியரின் மகன் ஆசிரியர் போலிஸ்காரரின் மகன் போலிஸ் ஆவதுபோல் எழுத்தாளரின் மகன் எழுத்தாளன் ஆகததே எழுத்து வெற்றியடையயடையாததன் காரணம் என்றார். வாசிப்பது பொழுதுபோக்கு என்று எழுத்தாளன் கூட சொல்லக்கூடாது என்றார். படிபதற்கான சூழலை நாம் உருவாக்கினால் அடுத்த 10 ஆண்டுகளில் நாம் மீண்டும் ஒரு படைப்பாளி உலகத்தை உருவாக்க முடியும் என்றார். உலகில் சிறந்த புத்தகம் கண்ணாடி அதை தினமும் படி மனசு சொல்வதை எழுது என்று கூறியது வெகுவாகவே ரசிக்கப்பட்டது. மனதோடு பேசும் இலக்கியம்தான் நல்ல இலக்கியத்தை உருவாக்கும் என்று சொல்லி நான் என்று செல்லாமல் நாம் என்று சொல்வோம் என சொல்லியமர்ந்தார்.

எழுத்தாளார் திரு.கேசவன் தலைமையில் பின் பார்வையாளருடனான கலந்துரையாடல் நடைபெற்றது . இன்றைய சூழலில் அச்சு இதழ் தேவையா ஊடகம் இன்னமும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடம் மாட்டிக்கொண்டுள்ளதா? சிங்கப்பூர் சூழலுக்க புரிந்துணர்வற்ற படைப்புகள்..? என்று நிறைய கேள்விகளுக்கு பேச்சாளர்கள் பதிலளித்தனர். இன்னும் முத்தமிழ் கலைஞர் என்று கவியரங்கம் நடத்தபடும் சூழலில் தமிழ் இலக்கியம் நாளை எப்படி இருக்கும் என்று பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த பாக்டர் சீதாலட்சுமியின் புரிந்துணர்வு எனக்கு ஆச்சர்யத்தையொன்றும் ஏற்படுத்தவில்லை.

இந்நிகழ்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவ்வப்போது தனது கருத்துகளையும் சொல்லி நிக்ச்சியினை கவிஞர் பிச்சனிக்காட்டு இளங்கோ வழிநடத்தினார். பாலு அண்ணாவின் முயற்சியால் சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியசூழலை அறியமுற்பட்டதற்கு மனம் பாராட்டவே செய்கிறது. இது போன்ற பரிட்சார்தமாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது நாளை நம்பிக்கையுடன் நடைபோடும்.

ப்ரியங்களுடன்: பாண்டித்துரை
புகைப்படம்: பாலுமீடியா


pandiidurai@yahoo.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை