காலத்தில் செல்லும் வார்த்தைகள்

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

ராபின்


சென்றவை யாவும் கதைகள்
வருபவை என்றும் புதிர்கள்
இருப்பவை வெற்று நிகழ்வுகள்
மனதின் பிரிவுகளில் காலத்தின் தோற்றம்
சிந்தை யனைத்திலும் அதன் நீட்சி
நினைவுகள் முழுதும் அவறறின் காட்சி
சொற்களில் தேயும் கால அளவுகள்
புவியுடன் பயணிக்கும் அதன் பரிணாமங்கள்
காலத்தைக் கடக்க விழையும் ஆணவம்
அதன் அசுரத்தில் குறுகிய துயரம்
விலகியோட வழியேதுமில்லை
நீக்கமற நிறைந்திருக்கும் வலைப் பின்னல்கள்
கடவுளின் படைப்பாய் காலம் தரும்
ஆறுதல் சற்றே நீடிக்கக் கூடும்
கடவுள் யார் படைப்பு ? எனும் வரையில்
ஆதி அறியாமையினால் அந்தம் புதிராயிற்று
வார்த்தைகள் கேள்விகளாய் மனம் குழம்பிற்று
கால அளவீடுகள் என்றும் தந்ததிலலை
மனிதன் தேடும் காலத்தின் தரிசனத்தை
பஞ்சாங்கங்களையும் நாள்காட்டிகளையும் உண்டுசெரித்து
கடிகார முட்களை அரூபமாய் நகர்த்திச் செல்லும்
ஒளிக்கற்றையின் பின்சென்று காலத்தின்
பெளதிகத் தளம் கண்ட விஞ்ஞானம்
ஒளியின் வேகம் மூலம் காலத்தைக் காணும்
தந்திரத்தில் முழுமை யுணராமல் சலிப்புறும்
சுழற்சியாய், தொடர்ச்சியாய் இயங்கும் காலம்
மனதின் வெறுமையில் எச்சங்கள் விட்டுச்செல்லும்
வார்த்தைகளில் எழுதிப் பார்க்கின்றேன்
‘காலமென்றேதுமில்லை – மனதின் ஒருமையில் ‘

***
amvrobin@yahoo.com

Series Navigation

ராபின்

ராபின்