காற்றோடு காற்றாய்…

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

மலிக்கா



எல்லைகள் கடந்து
எதையுமே எதிர்கொண்டு
எதிர் திசையில் நின்றபோதும்
ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும்

பச்சைப் பசுமையின்மேல்
மையம் கொண்டு
பறக்கும் திறனையும்
கற்றுக் கொண்டு

பூக்களின்மேல்
மஞ்சம் கொண்டு
பூந்தென்றலாய் வீசுவதும்.

புயலாய் வருவதும்
புண்படுத்திப்
புறபட்டுப் போவதும்

புழுதியாய் வருவதும்
புகையேற்படுத்தி
புழுங்க வைத்துப் போவதும்.

வசந்தமாய் வருவதும்
வருடிச் செல்வதும்
தென்றலாய் வருவதும்
தாலாட்டிச் செல்வதும்.

மனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.

உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.

பட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.

வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
விதவிதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்.

உருவமில்லாது
ஒருவார்த்தை சொல்லாது
உலுக்கியெடுத்து
உதறித்தெளித்து
உலகையே ஆட்டிவைப்பதும்
உனக்கு கைவந்தக்கலை

என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!

உனக்குத் துணையாய்
எனைச் சேர்த்து
இவ்வுலகையே
என் கனவுக் கூட்டுக்குள்
கொண்டுவர வைத்ததேனோ…..

அன்புடன் மலிக்கா

Series Navigation

மலிக்கா

மலிக்கா