கார்முகிலின் முற்றுகை

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

ப.மதியழகன்


மழை உண்டாக்கும் மாற்றம்
குடை ஒரு சுமையாய் ஆகிப்போகும்
அடுத்த அடி கூட நிதானித்து
வைக்க வேண்டியிருக்கும்.

‘மழைபெய்யும் சமயம்
மரத்தினடியில் ஒதுங்காதே
மின்னல் தாக்கும்’- என்ற
பாட்டியின் பயமுறுத்தல்
ஞாபகம் வந்து
நெஞ்சைப் பதறவைக்கும்.

பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர்
வாகன வேகத்தினால் சிதறி
தன் உடையை கறையாக்கிவிடுமோ
என்ற பதற்றம்
செல்லுமிடம் வரும் வரை
இருந்துகொண்டேயிருக்கும்.

கால்கள் பத்தடி தூரம் கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அனிச்சையாய்க் கண்கள்
வானத்தின் கருமையை நோக்கும்

வருணபகவான்
நாளையும் விஜயம் செய்வாரா –
என்பதையறிய
வானிலை அறிக்கை
வானொலியில் வாசி்க்கப்படும்போது
மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
கவனம் முழுவதும்
அந்த அறிவிப்பிலேயே நிலைத்திருக்கும்.

ப.மதியழகன்,

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்