‘ருத்ரா ‘
காதல்
காதல்
காதல்….
பாரதி
கொட்டி
முழக்கிவிட்டுப்போன
முரசு இது.
இன்று இதன்
தோல் கிழிந்து
சத்தம் எல்லாம் ரத்தம்.
கல்லூாி வளாகத்தின்
கனவு நாற்றுகளில்
மட்டுமே
பிரம்மாண்டமாய் நிற்கிறது
இந்த காதல் ‘கட்-அவுட் ‘.
காதல் சொட்டும்
அவள் கடைக்கண்ணுக்கு
தன்னையே
உருவ பொம்மையாக்கி
தினம் தினம்
எாிந்து போகும்
கொடும்பாவி விளயாட்டு இது.
அவள் கால்தடம் ஒற்றி
இந்த தூசி துரும்புகள் எல்லாம்
‘ஹை ‘க்கூக்கள்
கிறுக்கித் தள்ளின.
இந்த காதல் மீதும்
எத்தனை அம்புகள் ?
கவியரசுகளின்
பேனாக்கூர் முனையில்
எத்தனை எத்தனை
எழுத்துக்கள்
கழுவேறுகின்றன.
இராத்திாியை
திாியாக்கி
இவர்கள் ஏற்றிவைத்த
மெழுகுவர்த்திகளில்
இருபத்தியொன்றாம்
நூற்றாண்டின்
விடியல் பிஞ்சுகள்
எல்லாம்
கரைந்து போகின்றன.
இளைய யுகத்தின்
‘கணினி வன ‘த்துக்குள்
புகுந்த இந்த வைரஸ்களுக்கு
மருந்து எங்கே ?
இந்த காதல் நோயை
‘வணிகத்தனம் ‘
காசு மழையாக்கிய போதும்
இளைஞர்களின்
சமூகசிந்தனையில்
காச நோய்
மட்டுமே மிச்சம்.
இளைய அரும்புகளே!
சினிமா இருட்டின்
போதை காய்ச்சிய
இந்த கள்ளச்சாராயத்தில்
பாசனம் செய்தா
உங்கள் விடியலை
அறுவடை செய்யப்போகிறீர்கள் ?
ரோஜாக்களைக்கொண்டு
கல்லெறிந்த காயம் இது.
நட்சத்திரங்களை தலையணைக்குள்
அடைத்துக்கொண்டு
தூங்கத்தவிக்கும்
தாகம் இது.
அன்பான இளைஞனே!
இரவுக் ‘குருட்சேத்திரத்தில் ‘
யானைகளாய் குதிரைகளாய்
கொல்லும் வெறியோடு
இந்தக் கனவுகள்
உன்மீது
தேர் ஓட்டுகின்றன.
மொட்டை மாடியில்
உச்சி வெறித்து
நீ கிடக்கின்ற போது
உன் தூக்கத்தை
தீனி கேட்கும்
வானமுகடுகள்
இராட்சச
உள்நாக்குகளாய்
உன் முகம் மீது படர்ந்து
மூச்சு முட்டுகிறது உனக்கு.
மார்புக்குள்
மாயமான்களின் குதியாட்டம்.
அந்த விழி முனைகளின்
மலர் அம்புகளில்
யார்
இந்த ‘சையனைடை ‘த்தடவியது ?
சடலங்களாய்
விழுவதற்குள் புதுப்
படலங்கள் படைத்து விட
எழுச்சி கொள் இளைஞனே!
வீசியெறிந்து விடு.
காதல் வெறும் புடலங்காய்.