கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

லதா ராமகிருஷ்ணன்


திரு.கோ.கண்ணனின் கவியுலகம் குறித்து ஏற்கனவே திண்ணை, பதிவுகள் முதலிய இணைய இதழ்களில் பேசப்பட்டிருக்கிறது. திரு.கண்ணனின் பார்வையின்மை குறித்து சொல்லப்பட வேண்டிய தேவையிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து நிலவும் பார்வைகளும் பேசப்பட்டிருக்கின்றன. பார்வையின்மை காரணமாக புத்தகங்கள் வாசிப்பதில் தனக்குள்ள பல்வேறு த்டைக்கற்களைப் பற்றி தோழர் கண்ணனும் தனது முதல் தொகுப்பான ‘ஓசைகளின் நிறமாலை’ யிலும் , இரண்டாவது தொகுப்பான ‘மழைக்குடை நாட்களி’ல் வெளியாகியுள்ள நேர்காணலிலும் விரிவாகப் பேசியுள்ளார். பார்வையற்றவர் என்பதால் அவர் எழுதும் எல்லாக் கவிதைகளையும் பார்வையின்மையோடு தொடர்ப்புபடுத்திப் பார்க்க முற்படும் வாசகர்களைப் பற்றி, பார்வையுடையவர்கள் என்ற ஒரே தகுதியம்சத்தை வைத்துக் கொண்டு ‘இதை ஏன் எழுதுகிறீர்கள், இதை எழுதலாமே, என்றெல்லாம் அறவுரை தருபவர்களைப் பற்றி, பார்வையற்றவர்களுக்கு இணைய தளங்களைப் படிக்க உதவும் ஜாஸ் மென்பொருளைப் போல் தமிழைப் படிக்கவும் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அது எத்தனை உபயோகமாயிருக்கும் என்பது பற்றியெல்லாம் கண்ணன் பலமுறை தொலைபேசியிலும், நேரிலும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுண்டு.

(பேராசிரியர் சிவராமன், கவிஞர் வைதீஸ்வரன் , கண்ணன்)

அவருடைய இரண்டு கவிதைநூல்கள் குறித்தும் பல்குரல் விமர்சன நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தோழியர் அமரந்த்தாவும் நானும் அடிக்கடி கூறிக் கொள்வோம். ஜூன் முதல் தேதியன்று சென்னையில் நடந்தேறிய தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் 3ம் ஆண்டுவிழா – பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுக்கும் கண்ணன் வரப் போகிறார் என்பது தெரிய வந்ததும் அந்த சமயம் இந்தக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யலாமே என்று தோன்றியது. என்றாலும், கடைசி நேரத்தில் தான் அரங்கம் ஏற்பாடு செய்ய முடிந்தது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் ஆண்டுவிழா மாநாடு நடந்த அதே இக்ஸா மையம் தான். மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு அதற்கு அடுத்த நாள் நடைபெறவிருந்த தோழர் கண்ணனின் பாராட்டுவிழாக் கூட்டம் பற்றிய அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மற்றும் கைப்பேசியில் முடிந்த அளவு கவிஞர்ககளுக்கும், கவிதை ஆர்வலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. 2.6.08 அன்று திங்கட்கிழமை என்பதால் பலருக்கு வர முடியாமல் போய்விட்டது.

கண்ணன் கவிஞர் வைதீஸ்வரனின் கால் மனிதன் கவிதைத் தொகுப்பைப் படித்து அது தனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாகத் தெரிவித்திருந்தார். எனவே, கண்ணனின் பாராட்டுவிழா கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற வரும்படி கவிஞர் வைதீஸ்வரனைக் கேட்டுக் கொண்டதும் அன்போடு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் திரு.வைதீஸ்வரன். கண்ணனுடைய கவிதைகளின் நிறைகளையும், தனித்தன்மைகளையும் பற்றி அடர்செறிவான ஒரு உரை நிகழ்த்தினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணீயாற்றி வரும் பேராசிரியர் சிவராமனை,(பார்வையற்றவர். சமீபத்தில் பார்வையற்றவர்கள் கணினியின் உதவி கொண்டு மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன்’ துறையில் எத்தனை திறம்பட இயங்க முடியும் என்பது குறித்து இவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு பெரிதும் கவனத்திற்குரியது. அவர் ‘ஆய்வு செய்வதில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் தடைகளூம், சவால்களும்; என்ற தலைப்பில் அகல்விரிவான உரையாற்றிய சிவராமன் பார்வையற்றோருக்கு இத்தகைய கூட்டங்கள் தொடர்ந்தரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டால் அது அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார். கவிஞர்கள் கிருஷாங்கினி, சொர்ணபாரதி ( கல்வெட்டு பேசுகிறது மாத இதழின் ஆசிரியர்) வாழ்த்துரை வழங்கினார்கள். கண்ணனோடு தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் வேலை பார்த்தவரும், இப்பொழுது மாநிலக் கல்லூரியில் பணிபுரிபவருமான மொழிபெயர்ப்பாளர் திரு. ஆர். சிவகுமார்(தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர்)கண்ணனைப் பற்றித் தனக்குத் தெரிந்த சிலவற்றை அவையில் பகிர்ந்து கொண்டார். கண்ணனின் இரண்டாவது கவிதை தொகுப்பான மழைக்குடை நாட்களை மிகவும் தரமான பதிப்பாக வெளியிட்டுள்ள நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகியசிங்கர் அன்று ஊரிலில்லாததால் அவரால் விழாவுக்கு வருகை தர இயலவில்லை.

வாசகர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. ஒரு பிரிவினர் கவிஞனை மட்டம் தட்டுவதற்கென்றே “நீங்கள் எழுதுவதில் ஒன்றுமே புரியவில்லையே” என்று குற்றஞ்சாட்டும் தொனியில் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினர் கவிதை குறித்த உண்மையான அக்கறையுடன் , குறிப்பிட்ட ஒரு கவிதையின் ஆதாரச்சரடுகளை, கிரியாவூக்கிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்புபவர்கள். இரண்டாம் பிரிவினருக்கு பதிலளிக்கும் பொறுப்பு கவிஞனுக்கு இருக்கிறது. இதை மனதில் கொண்டவராய் கண்ணன் அவருடைய கவிதை குறித்து முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்தார். கவிதை தன்னில் எப்படி உருவாகிறது என்று தன்னால் தெளிவாகக் கூற முடியவில்லை என்று அவர் கூறினாலும் அவருடைய பதில்கள் தெளிவாகவே இருந்தன. கவிதை வடிவம் தனக்குப் பிடித்திருப்பதாலும், அதில் இயங்குவது தனக்கு வசதியாக இருப்பதாலும் அதிலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தனது ஏற்புரையில் தெரிவித்தார் கோ.கண்ணன்.


(சொர்ணபாரதி)

நிகழ்வின் முதல் அமர்வாக கவிதை வாசிப்பு நிகழ்வு நடந்தேறியது. செந்தமிழ்மாரி, வெங்கடேஷ், சொர்ணபாரதி, ரிஷி, கிருஷாங்கினி, எஸ்.குரு முதலியோர் தங்களது கவிதைகளை வாசித்தனர். அமரந்த்தா கண்ணனின் கவிதைகளில் தனக்குப் பிடித்த சில கவிதைகளை வாசித்துக் காட்டினார். அடுத்து நடந்த கலந்துரையாடலில் கண்ணனின் கவிதைகளில் தென்படும் பொதுவான மற்றும் குறிப்பான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. பார்வையற்றவரால் நிறங்களைப் பற்றி எப்படி கவிதையெழுத முடிந்தது என்றும், அப்படி எழுதப்பட்டிருக்கும் கவிதை நிறங்களைப் பற்றிய புதிய பார்வைகளை பார்வையுடையவர்களுக்குத் தருவதாக இருப்பதாகவும், புராண கதாபாத்திரங்களான ராமன், அகலிகை முதலியோரைக் கண்ணன் தனது கவிதையில் பயன்படுத்தக் காரணமென்ன என்றும், அந்தக் கதாபாத்திரங்களை கண்ணன் நவீன பார்வையில் தான் கையாண்டிருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துக்கள் நட்புரீதியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்