கவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சத்தி சக்திதாசன்


சத்தமில்லாமலே இங்கேயொரு
சமுதாயம் தனது
சரணங்களை இழந்து
சரிந்து கொண்டு போகிறதோ ?

கட்டாயத்தின் நிமித்தம்
கலாச்சாரமெனும் பெயரால்
கலையுணர்வு இல்லாமல்
கலைக்கல்வி கற்றுக்கொண்டு
கரைந்து கொண்டே போகிறதோ
கனிவான ஒரு கூட்டம்

முகவரி இல்லாத
முத்திரையற்ற அஞ்சல் போல்
வெளிச்சத்தை இழந்த
விளக்கைப் போல்
நிழலைப் பறிகொடுத்த
நீண்ட மரத்தைப் போல்
இருந்ததையும் இழந்து தவிக்கும்
இல்லாத மனிதனைப் போல்….
இடம் பெயர்ந்த நாம்
இழப்போமோ எம்மை ?

பாலவனத்தில்
பார்க்கும் கானல் நீர் போல்
தென்றலற்ற ஒரு
தென்னஞ்சோலை போல்
முற்றாய்த் தொலைத்தோமோ
மாறாத அடையாளத்தை ?

மனதில் ஒன்றை நிறுத்திடுவீர்
மனிதத்தை இழாக்காதவரை
மனிதராய் வாழும்வரை
மண்ணில்
மறையாது எம்மின உணர்வுகள்

0000

இன்பமான நாட்களே இரவாலாக வாராயோ ?

சத்தி சக்திதாசன்

அதோ
அந்தத் தெருவிலேதான்
அன்று நான் என்
ஆனந்தத்தை தொலைத்தேன்

விழித்துக் கொண்டேன்
தொலைத்தேன் கனவையும்

துன்பம் என்றால் என்ன
துள்ளித் துள்ளி
தேடினோம் தோழர் நாம்

துயரமில்லா
துளி வினடிகளைத்
தூங்காமல் தேடித் தேடி
ஏங்குகிறோம்

ஆலய மணலிலே
அமைதிப் பொழுதினிலே
அன்று தொலைத்த
இரவுகள் தான் எத்தனை எத்தனை !

அந்த இன்ப நாட்கள்
இன்றெனக்கு
இரவலாய்க் கூட வராதோ ….

0000

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்