களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

ம.காமுத்துரை


குத்து உரலில் வந்து உட்கார்ந்தாள் மீனா . மாலைக்கருக்கலின் குளிர்ச்சி உரலில் உறைந்திருந்தது. அது அவளது பிருஸ்ட்டத்தை சில்லெனத் தைத்தது.

அம்மா அப்பாவுடன் நடந்த வாக்குவாதத்தில் உடல் சூடேறி கண்கள் சிவந்திருந்தன. இதற்கு மேலும் பேச வார்த்தைகள் கிடையாது, என்ற நிலையில் வந்துவிட்டாள்.

வாழையும் முருங்கையும் அவளது வருகையில் பூரித்தன. தினமும் உரையாடுகிற உறவல்லவா..! பள்ளிக்கூடம் போகிற நாளிலிருந்தே முருங்கையிடம் நட்புக் கொண்டிருந்தாள். அப்பாதான், ஏதோ ஒரு இடத்திலிருந்து, இடுப்பு உயரத்தில் முருங்கைக்கொப்பு ஒன்றை ஒடித்துக் கொண்டு வந்திருந்தார். பாத்திவெட்டி, ஆட்டுப்புளுக்கை சாணம், முதலியன கரைத்து அடி உரமாய்ப் போட்டு மண் அணைத்து நட்டனர். கொப்பின் நுனியில் அம்மா பசுஞ்சாணியை அப்பி, ஈரம் காயாமலிருக்கச் செய்தது. ஒரே வாரத்தில் மரம், துளிர்க்கத் தொடங்கியது. முதல் துளிரைப் பார்த்த மாத்திரத்திலேயே தன்வசமிழந்தாள். சேகரனைப் பார்த்து நிலை மறந்தது போல.

”ஹாய் குட்டி..!” என்று கூப்பிட ஆரம்பித்தவள், இன்று பிள்ளைத்தாச்சியாய் பெருத்துப்போய் நிற்கும் நிலையிலும் முருங்கை மரத்தை அதே பெயரிட்டுத்தான் கூப்பிட்டு வருகிறாள். வாழை, சமீபத்தில் முளைவிட்டது, அதற்குமுன் அது தாய் என ஆகி, தாயின் பக்கவாட்டில் குருத்தாய் இன்னொன்று முளைத்து, கன்றுக்குட்டி போல அழகாய் இருந்தது.

தினமும் அவைகளுக்கு நீரூற்றி, சில நிமிடங்கள் பேசிச்செல்லாமல் மீனாவுக்கு பொழுதுதீராது.

சேகரனை ஒருநாள் கூப்பிட்டு வந்திருக்கிறாள். பெரும்பாலும் அவள் மரங்களோடு அளவலாவுகிற பொழுதுகளிலெல்லாம், தென்றல் நடந்துவரக் கண்டிருக்கிறாள்.

“இது என் தம்பி, ’ஆதி’ என்று முருங்கைமரத்தை அறிமுகம் செய்வித்தாள் வாழையை தங்கை என்றாள்.

‘‘தங்கச்சிக்குப் பெயரில்லையா..?’’

”லல்லு… லலிதா..!“

“பிரமாதம்…!“ – சொல்லியபடி நீண்டிருந்த இலையைத் தொட்டான். அது அவன்கைக்கு அகப்படாமல் விலகி, வெட்கப்பட்டது.

“பரவால்ல, அண்ணெ யாருமில்ல போலருக்கு இருந்தா நம்மள மெரட்டுவான்னு வச்சுக்கலியாக்கும்..?’‘

“ஆரு சொன்னா..இல்லேன்னு..? இருக்கார்.. வருவார் பாருங்க..!“ – சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தலைமுடி கலைத்து முகத்தைத் தடவி உடலைக் குளிர்வித்தபடி தென்றல் ஓடிவந்தது.

“ஓ…. இதுதான் மச்சானா…! அருமையான சொந்தங்களா இருக்கே, பிரமாதம் பிரமாதம்…!“ பராட்டினான்.

வீட்டில் நடந்த இன்றைய ரகளையில் பெத்தவகளை உதறிவிட்டு, மண்ணைத் தாயாகவும், வெயிலை அப்பாவாகவும் கொண்டால் என்ன, என்று தோன்றியது.

”பத்துமாசம் சொமந்த வயிறுடீ….. எரியவெக்காத.டீ…” அம்மா மூக்கைச் சிந்தியது..

நிச்சயமாக எரிய வாய்ப்பில்லை; தானாய் ஊதிஊதித்தான் பற்றவைக்கிறார்கள். பெத்தவங்களுக்கு ஏன்தான் பிள்ளைகள்மீது இது விசயத்தில் மட்டும் நம்பிக்கை வைப்பதில்லையோ.

பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறபோது இப்படியான அவநம்பிக்கை இருப்பதில்லையே… எந்தப் பள்ளியாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாத்தியராக இர்ந்தாலும் நம்பி அனுப்புகிற அந்த எண்ணத்தை இதிலும் கொள்ளலாமே. நிச்சயமாய்க் காதலிலும் ஜெயிப்பார்கள் என்று உற்சாகமாகச் சொல்லலாமே..!

”பள்ளிக்கூடம்னாப்ல கண்டேத்தமாவா அனுப்பிச்சு வைக்கிறோம்..? எத்தன வெசாரிப்பு.. எம்புட்டு அலைச்சல்.. அத்தனையும் பாத்துத்தான் சேத்துவிடுறோம்….!“

”எப்படியாப்பட்ட பள்ளிக்கூடம்னாலும் படிச்சு வர்ரது பிள்ளைகதானப்பா..! வாத்தியருக வழிகாட்டத்தே முடியும்.., அந்தமாதிரி நில்லுங்க…. நிச்சயமா மோசம் போயிடமாட்டம்ப்பா…! நாங்க உங்க பிள்ளைங்க…“

அப்பாவிடம் நிறையப் பேசியாயிற்று….இதற்குமேலும் பேச, மீனாவுக்கு சங்கட்டமாய் இருந்தது. அம்மாவிடமும் வேண்டியமட்டும் சொல்லி இருக்கிறாள்.

சேகரனின் குணம், அவ்னுடைய திறமை, அன்பான பேச்சு.. யாரிடமும் முகம்சுளிக்காத பொறுமை.., “நல்ல பையன்மா… அப்பாவ மாதரியெல்லாம் கோபப்பட மாட்டாரு…”

ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். “ஒனக்கு என்னடி தெரியும், ஒலகத்தப்பத்தி?”

ஏன் தெரியாது, பூகோளத்தில் தொண்ணூறு மார்க் வாங்கியிருக்கிறேன். தட்ப வெப்பம் பற்றித் தெரியும், பூமி சுழற்சிமுறை அறிவேன், உயிரினங்களின் வாழ்முறைமை தெரியும், மனிதகுல வரலாறு புரிஞ்சவ…

“ஒழுக்கமா, காப்படி அரிசி போட்டு கஞ்சி வக்கெத் தெரியுமாடீ…”

இதற்குமேல் அம்மாவிடம் பேசிப் பயனில்லை என முடிவு செய்தாள். ஒவ்வேல… ஒன்னோட அறிவெல்லா காப்படி அரிசிக்குள்ளதே இருக்கு…. அதனாலதே இந்த பூமியவே தாயா ஏத்துக்க முடிவு பண்ணீர்க்கேன்.

“எம்புட்டுத்தே வியாக்யானம் பேசுனாலும் சம்சாரம் பண்ண சம்பாத்தியம்ங்கறது வேணும்..” – அப்பா அம்மாவின் பின்புறமிருந்து சொன்னார்.

அழகர்கோயில் போகிறபோது அறுந்துபோன செருப்புக்கு உடனடியாய் புதிதாய் வாங்கிக் கொடுத்தானே.., முக அலங்காரத்திற்கு புதிதாய் வந்த வாசனைப் பவுடரும், தலைக்கிளிப்பும் பரிசாகக் கொடுத்தான். திருவிழாபோன சமயம் மதியநேர சாப்பாடு, பெரிய கடைக்குக் கூட்டிச் சென்று ஆசைப்பட்ட உண்வு வகைகளை யெல்லாம் தின்னச்செய்து ரசித்தானே …….

“அதெல்லா அவக ஆத்தா அப்பெங் காசு….!“

”காசெல்லா நாந்தான வாங்கிக் குடுத்தேன் . அதுல யார்பேரும் எழுதிஇருக்கல்லியே..!’‘

”செருப்பக் கொண்டிச் சாத்துங்க.. எம்புட்டு எகத்தாளம் பேசுறா பாருங்க.. பொட்டக் கழுதன்னு கைநீட்டாம வளத்ததுக்கு பெலென்..!“ அம்மா ஏவிவிட, அப்பா நிதானமாக தன்காரியம் முடிக்க காத்திருந்தார்.

“தேவைன்னு வாரப்ப, எல்லாம் வந்திரும்ப்பா..”

”எப்படி வரும்..?“

“அதெல்லா படம் போட்டு பாகம் குறிக்க முடியாதுப்பா..! வெதைல இருந்துதே செடி மொளைக்கணும்னு இல்லீல்ல…. வெதையே இல்லாம கிள்ளிப்போட்ட எச்சத்துல இருந்தும் புது உயிரு தழைச்சு வருதில்ல….”

”எப்பிடி இருந்தாலும் அதும் ஒரு வகைல வெததான…”

”அதத்தானப்பா நானும் சொல்றேன். எல்லாக் கணக்குக்குமே சூத்திரம் இருக்கு.” விதியின் கோட்படுகளுக்கு உட்பட்டுத்தான் இயற்கையே இயங்கிக் கிட்டிருக்கு; விதிமீறலும் கூட ஒருவகை விதி என்பதை எப்படித்தான் அப்பா ஒப்புக்கொள்ளுவார்..

உன்மையில் மீனாவுக்கு காதல் என்பதெல்லாம் எந்த அறிதலும் கிடையாது. அதற்காக அவள் முயலவும் இல்லை. அப்படிப்பட்டவர்களோடு பழக்கமும் இருந்ததில்லை. எப்போது சேகரனிடம் பழக்கம் ஏற்பட்டது என்ற ஞாபகமும்கூட இல்லை.

காலையில் எழுந்து பல்தேய்ப்பதும், தேய்த்து முடித்ததும் உணவு உண்பதும் போலத்தான் சேகரனோடு நிகழ்ந்த பழக்கமும், ஆனால் பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அந்த அளவளாவலை விரும்பி அதற்கான சூழலை எதிர்நோக்கித் திட்டமிடுகிற மனோபாவத்தைத்தான் காதல் என்கிறார்கள் போலிருக்கிறது.

காலை உணவையோ மதிய உணவையோ மறந்துவிடுவது அல்லது மாற்றிவிடுவது என்பது சாத்தியம் இல்லாதது. அல்லவா.., இதனைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களா, இல்லை நாங்கள் விளங்கவைக்க வில்லையா?

பெத்தவங்களோட பலகீனம், தங்களோட பிள்ளைகள் தாங்களக்காட்டிலும் உயரம வளர்ரதககண்டு சந்தோசப் படுவாங்க…. ஆனா , உருவத்தோட சேந்து உள்ளமும் வளரும்ங்கறதக் கணக்கு வச்சுகறதில்லேங்கறதுதான்.. சைக்கிள்ல போனா பயக்குறதும், பைக்கே வாங்கித்தர மாட்டேன்னு அலர்றதும் ….. ஒவ்வொரு செடிக்கும் தனித்தனி வேர் அமையும்ங்கற வெவரத்த புரிஞ்சிக்க மாட்டாங்க. – சேகரன் தன்வீட்டுக்கு வந்தநாளில் வாழையின் பக்கமாய் நின்று சொன்னசொல் ஞாபகம் வந்தது.

”ஆனா மரம் செடிகளமட்டும் கரெக்ட்டா. பிரிச்சு வச்சிடுறாங்க.. இல்லியா..! கோழிய ஒருமாசத்துல தனிக்கூட்டுல புடிச்சு அடச்சிடுறாங்க…. நெஜம்தானே…..” மீனா முருங்கையில் தன்னுடல் சாய்த்திருந்தாள்.

கபகபவெனச் சிரித்தான் சேகரன். “அதுதான் மனுச சுபாவம்ங்கறது., தன்னுடல், தன்னுயிர்…, இவைகளுக்கெல்லாம் ஒரு மதிப்பும்.., தனக்கு அப்பால் ஒரு மதிப்பும் வச்சிருக்கற அறிவு – மனோபாவம்..”

மீனாவுக்கு அச்சர்யமாய்க்கூட இருந்தது. எப்படி, இப்படியெல்லாம் இவனால் பேசமுடிகிறது.., “என்னா படிச்சிருக்க…?“ அவளது கேள்விக்கு சற்று மௌனம் காத்தவன், ‘ஒம்பேச்சு.., நம்மளப் பெத்தவங்க நடத்தை.., ஊராரோட கொள்கை.., எல்லாத்தியும் கொஞ்சம் கவனிச்சாலே…. நெறையக் கெடைக்கும்..” – சொல்லிவிட்டு கண் சிமிட்டினான்.

கிட்டத்தட்ட அவளது அப்பாவும் கூட அதையேதான் சொல்கிறார். “நீ… எம் மக…. என் ரத்தம்…. என்னோட வாரிசு… நான் கவலப்படாம எப்படி இருக்கமுடியும்..?“

யார் அவரைக் கவலைப்பட வேண்டாமென்றது.. சேகரன்கூட அப்படிச் சொல்லவில்லயே….

“இருவது வருசமா தழையவிட்டு வளத்தவனுக்குத் தாம்மா அதோட பசி, தாகம், துக்கம்…. எல்லாந்தெரியும்..”

எதற்காக இத்தனை பிலாக்கிணம் பிடிக்கிறார்….?

”அப்பா , நாங்க ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சு ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சுது.., ஒங்களுக்குத் தெரியுமான்னு தெரியல.., ஆனா நெனச்சிருந்தா எங்கியாச்சும் போயி குடும்பம் நடத்தியிருக்க முடியும்…. உங்களக் கேட்டது தப்புனு ஆக்கிடாதீங்க…..! “

”ஓ அம்புட்டுக்கு ஆகிப்போச்சா…? ஓடிப்போயிக்கூட கல்யாணம் பண்ணிக்குவீங்களா….?” – அம்மா கண்களை உருட்டி கேள்வி கேட்டது.

”கல்யாணம் பண்ணிக்குவம்னு சொல்லலடீ….. குடும்பம் நடத்துவம்ணே சொல்லுது ஓம் புள்ள.“ குமுறுகிறார்போலப் பேசினார் அப்பா.

மீனாவுக்குத் தலை கிறுகிறுத்தது.

மூன்று நாட்களாய் ஒரே பிரச்சனையை மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டே இருந்தால்…..

குத்து உரலில் இருந்து எழுந்து ‘ லல்லு ‘ விடம் முகம்புதைத்து சாய்ந்துகொண்டாள். ஜில்லென்று அதன் குளுமை அவள் கன்னங்களைக் குளிர்வித்தது. அண்ணனான தென்றலும் ஓடோடி வந்து சேர்ந்தான். லல்லு தன் நீண்ட இலைக் கரங்களால் மீனாவின் உடலை வருடி ஆற்றுப்படுத்த, அந்த லயிப்பில் மெய்மறந்த மீனா, ”நா எங்கபோனாலும் நீங்களும் என்னோடவே வந்திரணும்… ஒன்னோட பக்கக் கன்றும், ஆதியோட ஒரு அங்கமும் போதும், உயிர் வளர்ப்பேன்… தருவியா…?”

சகோதரர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் மறுபடியும் அப்பா வந்தார்.

’பெத்தவகளப் புரிஞ்சிக்கணும் என்றும், அடையாளந்தெரியாத ஒருத்தெங் கைபட்டு நீ கலங்கக்கூடாது…. இதுவரை என்னோட குரலால கூட ஒன்னிய அதட்டிப்பேசி காயப்படுத்தினது கிடையாது. நீ எங்க செல்ல மகளம்மா…” – சொல்லிவிட்டு வழக்கத்திற்கு மாறாக கண்ணீர் விட்டார்.

புரிந்து போனது அவளுக்கு, அடுத்த யுத்த களம் தயார் செய்து விட்டார்கள்.! அழுகைதான் அதன் ஆயுதம்.

நீங்க பாத்துவைக்கிற மாப்பிள்ளை அடிக்க மாட்டானாப்பா..! இது ஒரு காரணாமாப்பா… இல்ல, நான் வளந்துட்டேன். நல்லது கெட்டது எனக்கும் தெரியும் அப்பா. நீங்களும் அம்மாவும் ஏன் இப்பிடி குறுகிப் போய்ட்டீங்க? – சொல்லமுடியாத வசனங்கள்.

இப்போது அவளுக்கும் ஒரு அஸ்திரம் தேவைப் பட்டது. அது பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் உடைக்க முடியாததாய் இருக்கவேண்டும். வார்த்தைகளால் போரிட்டுப் போரிட்டு களைத்துப் போய்விட்டாள்.

மௌனத்தைப் தேர்வு செய்தாள்.

அன்றைய இரவில் அழுகை ஒப்பாரியாய் நீண்டது. இது எத்தனை நாள் நீளுமோ என்ற பயத்தில், காலையில் எழுந்ததும், காப்பிக்கு பதிலாய், பூச்சி மருந்தை எடுத்தாள்.

(மு ற் று ம்)
makamuthurai@gmail.com

Series Navigation

ம.காமுத்துரை

ம.காமுத்துரை