கற்பும், கருத்துச்சுதந்திரமும்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

லதா ராமகிருஷ்ணன்


—-

கற்பு தூலமானதா ? சூக்குமமானதா ? உடல் சார்ந்ததா ? மனம் சார்ந்ததா ? fidelity, betrayal of faith என்பதாக பல வார்த்தைகள் கற்பின் மனம் சார்ந்த பரிமாணங்களைக் குறிப்பதாக வழக்கிலிருந்தாலும் பொதுவாக கற்பு என்பதை உடல் சார்ந்த விஷயமாகவே , குறிப்பாக பெண்ணின் உடல் சார்ந்த விஷயமாகவே பார்க்கும் வழக்கம் நம்மிடையே நிலவி வருகிறது. இந்தப் பார்வை அல்லது அணுகுமுறையை வளர்க்கும் விதமாகவே வெகுஜன ஊடகங்களும் இயங்கி வருகின்றன. பெண்ணின் உடலை நுகர்பொருளாக பலவாறாகக் காட்சிப்படுத்தி (பாலியல் பலாத்காரக் காட்சிகளும், வர்ணணைகளும் இதில் அடக்கம்) பணம் பண்னுவதற்கும் இந்த ‘கற்பு ‘ என்கிற கருத்தோட்டமும் , அதில் எந்தவித மாற்ரமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் தேவையும் இந்த ஊடகங்களுக்கு இன்றியமையாததாகிறது. இதன் காரணமாகவே ‘கற்பழிப்பு ‘ என்ற சொல்லுக்கு ‘வன்புணர்ச்சி ‘, பாலியல் பலாத்காரம் ‘, முதலான மாற்ருச் சொற்கள் புழக்கத்திற்கு வந்து விட்ட பிறகும் ‘கற்பு ‘ என்ற சொல்லை வெகுஜன ஊடகங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது.

நடிகயர்கள் ‘மார்க்கெட்டி ‘ல் இருக்கும் வரைக்கும் திரைப்படங்களில் பெண் எப்படியெல்லாம் நுகர்பொருளாக்கப்பட்டு வருகிறாள் என்பது பற்றி எந்த வித எதிர்ப்பும் காட்டாமலிருந்து விட்டு, அத்தகைய பிற்போக்கு பிம்பங்களுக்கெல்லாம் தாங்களும் கணிசமான பங்களித்து விட்டு, பின், திடுமென ஒரு நாள் பெண் விடுதலை பற்றி முழங்க முற்படும் போது அது கேள்விக்குட்படுத்தப்படுவதும், அதே போல், திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாகவும், புரட்சித் தோழனாகவும் நடிப்பதன் மூலமே மக்களின் வாக்குகளைப் பிடித்து ஆட்சி பீடத்தில் ஏறி விட முற்படும் நடிகர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதேசமயம்,அரசியல்வாதிகளாக ஆட்சிப்பொறுப்பில் அமரும் நடிகரல்லாத பிறரெல்லோரும் மக்கள் தொண்டாற்றியவர்கள் தானா என்ற கேள்வியும் பொருட்படுத்தப்பட வேண்டியதே.

நடிகை ‘குஷ்பு ‘விற்கெதிரான போராட்டமும், எதிர்ப்பும் வெடிக்கக் காரணமான ‘இந்தியா டுடே ‘ செக்ஸ் சர்வே ‘ யில் வியாபார நோக்கமே அதிகமாக இருந்தது என்பது வெலிப்படை. ‘கற்பு ‘ பற்றி குஷ்பு சொன்ன கருத்துக்களைப் படித்த போதே ‘பொதுவாழ்வில் இருப்பவர்கள் எல்லா மட்டத்துப் பெண்களையும் மனதில் கொண்டு பேசப் பழக வேண்டியது அவசியம் ‘ என்ற எண்ணமோடியது. இருந்தாலும், அவருடைய கருத்தின் முக்கிய சாரமாக, இளைஞர் சமூகம் பற்றிய சில ஆக்கபூர்வமான அக்கறையும், அவதானிப்புமே இருந்ததாகத் தோன்றியது. ‘படித்த ஆண்கள் தாம் திருமணம் செய்யப் போகும் பெண்கள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிபார்க்க மாட்டார்கள் ‘, என்பதாய் அவர் கூறியிருந்தது ‘மாறி வரும் உலகில், ஆணும்,பெண்ணும் இணைந்து செயலாற்றும் நாழிகைகள் அதிகதிகமாக இருந்து வருகையில் ‘கற்பு ‘ என்பதன் ஒற்றை அர்த்தத்தில் , அணுகுமுறையால் ஒரு பெண்னின் மொத்த வாழ்க்கையும் பாழடிக்கப்படுவது தேவையில்லை என்ற கருத்தையே அவர் முன்வைக்க முற்படுவதாகத் தோன்றியது. இன்று திரைப்படங்கள், மினி சீரியல்கள், மெகா சீரியல்களிலெல்லாம் விரும்பியோ, வலுக்கட்டாயமாகவோ ஒரு முறை ஒருவனோடு படுக்க நேர்ந்து விடும் பெண் அதன் விளைவாக வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப அல்லலுக்கும் , அவமானத்திற்கும் ஆளாவதாகவே தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகிறது. வன்புணர்ச்சிக்கு ஆளாகியும் ஒரு பெண் கருவைக் கலைக்க மறுப்பதாய் , தாய்மையுணர்வை உயர்த்துவதாய், திரும்பத் திரும்பக் காட்டப்படுகிறது. ஒரு ஆணுக்கு இரண்டு தாரங்கள் என்பது இயல்பான விஷயமாய் காட்டப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் பெண்ணைக் கேலி செய்தலே ஆண்மைக்கு அழகு என்று பல வழிகளிலும் காண்பிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் இளம்பருவத்தினர் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவா குஷ்புவின் கருத்து எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடும் ? ஜவ்வாது மலைப் பகுதியில் கண்ணிில் கண்ட இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் திருமணம் முடித்து, அனுபவித்து , பின், வயிற்றில் குழந்தையோடு இருநூறு, ஐநூறு ரூபாய் கொடுத்து அறுத்து விட்டு விடுவது இன்றும் நடப்பாக உள்ளது என்று விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எடுத்துக் காட்டப்பட்டது. ‘பெண்ணே நீ ‘ இதழொன்றில் (டாக்டர் ராமதாசின் மகள் கவிதா ஆசிரியராக இருக்கும் இதழ் இது.) வம்சம் அழியாமல் காக்க வேண்டி, பேத்தியை தாத்தாவுக்கு மணமுடித்து வைக்கும் பழக்கம் (எத்தனை வயது வித்தியாசம் என்று எண்னிப் பார்க்கவும்) இன்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கிராமமொன்றில் வழக்கிலிருந்து வருவதாக புகப்படங்களோடு கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இது போல் எத்தனையோ.எழுத்து வடிவில் வெளியான குஷ்புவின் கருத்தால் தமிழ் சமூகமே, இளைஞர் சமுதாயமே பாதிக்கப்பட்டு விடும் என்று எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் வெகுஜன ஊடகங்களில் காலங்காலமாக முன்வைக்கப்படும் மேற்படி பெண்பிம்பங்களைப் பற்றி ஏன் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை ? அத்தகைய பெண்பிங்கள் தான் தமிழர் மனங்களில் உருவேற்ரப்பட வேண்டும் -அதாவது, பெண்ணின் வாழ்க்கை ‘கற்பு ‘ என்ற வார்த்தையின் வழி அவள் மீது காலகாலமாகத் திணிக்கப்பட்டு வரும் மேற்படி வலுவிழப்பும், விருப்பத்தேர்விற்கான வழியிழப்பும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகத் தானே ஆகிறது ?

குஷ்பு சொன்ன கருத்தை ஒட்டியும், வெட்டியும் பேச இடமும், வாய்ப்பும் அளிக்க ஊடகங்கள் முன் வந்தாலே போதும். அதை விட்டு, அச்சு ஊடகத்தோடு அவ்வளவாகப் பரிச்சியம் இல்லாமலிருக்கக் கூடிய மக்களிடம் திரும்பத் திரும்ப நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களின் ‘கற்பு ‘ குறித்துக் கேவ்லமாகப் பேசி விட்டதாகத் தொடர்ந்து ‘சன் ‘ தொலைக்காட்சி செய்தி வெலியிட்டு வந்ததன், வருவதன் உள்நோக்கம் என்ன ? சமீபத்தில் N.D.T.V தொலைக்காட்சியில் இந்த விவகாரம் குறித்து ‘big fight ‘ நிகழ்ச்சியில் (19.11.2005 &20.11.2005) இந்த விவகாரம் குறித்து அலசப்பட்டது. சாருஹாசன், சரத்குமார், தொல்.திருமாவளவன், கனிமொழி, வழக்கறிஞர் கீதா ராமசேஷன், ‘ஹிந்து ‘ ராம், துக்ளக் சோ எனப் பலரும் கலந்து கொண்ட அந்த விவாதத்தில் பார்வையாளர்களாய் மாணவர்கள் முதல் பல்வேறு நிலைகளிலிருந்தும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்தனர். அவரவருக்குத் தரப்பட்ட நேர அளவைத் தண்டி யாரும் அடுத்தவருடைய நேரத்தை ஆக்கிரமிக்கவில்லை. அது ஆங்கிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாதலால் தமிழகத்திலிருக்கும் எல்லோரையும் அது எட்டியிருக்கும் என்று சொல்ல முடியாது. அதைத் தொடர்ந்து கடந்த 22.11.05 அன்று ‘சன் நியூஸ் ‘ தொலைக்காட்சியில் அப்படி ஒரு விவாதம் ஏற்பாடாகியிருந்தது. பார்வையாளர்களென்று யாருமில்லை. வழக்கறிஞர்கள் அருள்மொழி, அஜிதா, சுதா ராமலிங்கம், மற்றும் திரு குமரி அனந்தனின் மகள்(மருத்துவர், மற்றும் அரசியல்வாதி) என்ற நான்கு பெண்களும், நக்கீரன் கோபால், சரத்குமார், பழ.கருப்பையா, இயக்குனர் சீமான், தொல்.திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர்; வழக்கறிஞர்) ஆகியோரும் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர்கள் திறம்பட தங்கள் வாதத்தை முன்வைத்தாலும் அவர்களை பேச விடவேயில்லை கலந்து கொண்ட ஆண்கள். குஷ்பு சொன்ன கருத்தை ‘அவர் இளைய வயதினரை ‘ஊர் மேய ‘ச் சொன்னதாய் திருப்பித் திருப்பி அழுத்தமாய்க் கூறினார் திரு.பழ. கருப்பையா. அவர் கூற்றை பலமாக ஆமோதிப்பதாய் பேசாமலிருந்தனர் மற்ற ஆண்கள். சங்கஇலக்கியத்தை குஷ்புவின் கூற்றுக்கு துணை சேர்ப்பதே தவறு என்றும் , சங்க இலக்கியத்தில் தனது மனதிற்குப் பிடித்த ஒருவனோடு தான் ஒரு பென் திருமணத்திற்கு முன் உறவு கொள்வாள் என்றும், பின் அவனையே மணந்து கொள்வாள் என்றும், குஷ்பு சொன்னது அதுவல்ல என்றும், அவர் சொல்வது ஊர் மேய்தலை என்றும் கலந்து கொண்ட ஆண்களில் ஒன்றிற்கு மேற்பட்டோர் கூறினார்கள். ‘தமிழர்களுக்குங்ங்ங்ங் கொம்பு முளைத்து விட்டதா என்று நடிகை சுஹாசினி கேட்டதை ‘a way of expression ‘ என்பதைத் தாண்டி ‘literal ‘ ஆக எடுத்துக் கொள்கிறவர்கள் குஷ்பு ‘ஊர் மேய ‘ச் சொல்கிறார் என்று அவருடைய கருத்தின் சாரத்தைத் திரித்துத் தருவது அவதூறு ஆகாதா ? ‘கற்பு ‘ என்ற ஒரு கருத்தோட்டத்தை நாம் கேள்விக்குட்படுத்த , மறுதலிக்க ஆரம்பித்து விட்டால் குடும்பம், சமூகம், என்ற அமைப்புகளெல்லாம் சிதறிப் போய் விடும் என்பதே கலந்து கொண்ட ஆண்களின் கண்டனமாக இருந்தது. விவாகரத்துச் சட்டம் வரவிருந்த போதும் இதே காரணங்களைக் கொண்டு தான் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டன என்று சுட்டிக் காட்டினார் வழக்கறிஞ்ஞ்ஞர் அஜிதா. தமிழ்ப் பென்களிடமிருந்துகுஷ்புவுக்கு எதிராக உருவாகியிருக்கும் எதிப்புணர்வும், போராட்டமும் தன்னியல்பாக அவர்களிடமிருந்தே எழுந்ததேயன்றி யாராலும் தூண்டப்படவில்லை ‘ என்றார் திரு. தொல்.திருமாவளவன். ‘அப்படிப் பார்த்தால், பெண்களுக்குப் போராடுவதற்கான தினசரிப் பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் வழக்குத் தொடுக்காத பெண்கள் இந்த விஷயத்தில் மட்டும் தாங்களாகவே கிளர்ந்தெழுகிறார்கள் என்பதை நம்பமுடியவில்லை ‘ என்றார் சுதா ராமலிங்கம். ‘குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பெண்ணிய இயக்கங்களைக் கேவலமாகப் பேசுவது அநாகரீகமானது ‘, என்றார் அஜிதா. ‘குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதை ஃபாஷனாகக் கொள்கிறார்கள் பெண்ணியவாதிகள் ‘, என்றார் குமரி அனந்தனின் மகள். ‘அயல் நாடுகளிலெல்லாம் இந்தியாவுக்கு மதிப்பே அதன் கற்புநெறியால் தான் என்று பரவசமாக முழங்கினார். ‘குஷ்பு மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில் அந்தப் பிரச்னை குறித்து மீண்டும் சுஹாசினி பேச வேண்டிய அவசியம் என்ன ? அதுவும், ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் அவர் யார் மன்னிப்பு கேட்க ? ‘ என்பதே விவாதத்தில் கலந்து கொண்ட ஆண்களின் எதிர்ப்பாக இருந்தது. ‘தமிழகத்தில் யார் என்ன கருத்து கூறினாலும் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாகவும் பேசுவது தானே இங்கே வாடிக்கையாக இருக்கிறது. நீங்களும் உங்ங்களின் எதிப்பை அப்படித் தானே வ்கைப்படுத்துகிறீர்கள், ‘ என்றார் சுதா ராமலிங்கம். ‘எய்ட்ஸ் நோய்க்குக் காரணம் உடலுறவு மட்டுமல்ல, ஊசி, ரத்தம் செலுத்துதல் முதலியவற்றாலும் அது பரவும் ‘ என்பது பாமர மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வரும் இன்று ‘ ஒருவனோடு மட்டும் இருந்தால் எய்ட்ஸ் வராது ‘ என்று திரும்பத் திரும்ப ‘கற்பு ‘ சார்பாய் வலியுறுத்திப் பேசினார் திரு.பழ.கருப்பையா.. ‘சுஹாசினி எப்பொழுதுமே தமிழுணர்வு, தமிழ்த் தேசியம் பற்றி எள்லுவதாய்த் தான் பேசி வருகிறார் என்று ‘தமிழர்களுக்குக் கொம்பு முளைத்து விட்டதா என்ற கேள்வி பற்றிக் குறிப்பிட்டார் அருண்மொழி. குஷ்புவுக்கு ஆதரவாய் சக நடிகைகளில் ஒருவர் கூட வாய் திறக்காத நிலையில் (ராதிகா சரத்குமார் உட்பட) சுஹாசினி ஆதரவு குரல் கொடுத்திருப்பதை வரவேற்பதைக் காட்டிலும் அவருடைய தமிழுணர்வு குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதே அவருக்கு முக்கியமாகப் பட்டதற்கு அவருடைய ‘ஆரிய எதிர்ப்பு ‘ம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. ‘இரவு பத்தரை மணிக்கு சுஹாசினி எஸ்.எம்.எஸ் அனுப்பியதை ‘சைபர் க்ரைமாக ‘ சரத்குமார் வர்ணித்ததைக் கேட்டு வழக்கறிஞர் அஜிதாவால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை!

மேற்படி விவாதம் நடத்தப்பட்ட விதம் குறித்து சில கேள்விகள் எழுகின்றன. பெண்களில் குஷ்புவுக்கு எதிராக கருத்துச் சொல்லும் ஒருவரை இடம்பெறச் செய்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஆண்களில் குஷ்புவுக்கு ஆதரவான பார்வை உடையவர் யாரையும் இடம்பெறச் செய்யாதது ஏன் ? பரிக்ஷா ஞானி , மனுஷ்யபுத்திரன், சாரு நிிவேதிதா , அ.மார்க்ஸ் , பா.செயப்பிரகாசம் முதலிய பலர் இந்தப் பிரச்னை குறித்து அகல்விரிவாக எழுதியுள்ள நிலையில் அவர்களையொத்தவர்கள் யாரும் விவாதத்தில் இடம்பெறாதது ஏன் ? அதே போல், மாணவசமுதாயத்தினருக்கும் இந்த விவாதத்தில் இடமளிக்கப் பட்டிருக்க வேண்டும்.

இன்னொன்று–இந்த விவகாரம் பற்ற்ி உடனடியாக தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முன்வராதவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என்பதாய் இலக்கியவுலகில் ஒரு பார்வை இருந்து வருவது போல் தொன்றுகிறது. இது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை. ‘ஆண்திமிர் அடக்கு ‘ என்ற தலைப்பில் அக்டோபர் மாத தீராநதி இதழில் இந்த விவகாரம் பற்றி அகல்விரிவாக எழுதியுள்ல திரு அ.மார்க்ஸு ‘ம் , “கடைசியாக ஒன்று; நமது இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகள், பெண்கவிஞர்கள் எல்லோரும் ஏன் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர் ? ஏதாவது ஒரு சினிமா சான்ஸ் வந்து அதைக் கெடுத்துக் கொள்வானேன் என்றா ?” என்பதாய் தனது கட்டுரையின் முடிவில் கேட்டிருப்பது வருத்தமளித்தது. நடிகைகளுக்கான பாதுகாப்பு இல்லாத போதும் இலக்கியவாதிகள் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தவாறு இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு விஷயத்தின் பல்பரிமாணங்ங்களையும், நுண்ணரசியலையும் அவதானித்துக் கொண்டு அதன் பின் அது குறித்துப் பேசலாம் எண்று சிலர் கருதலாம். உடனடியாக ஒரு விஷயம் குறித்து எல்லோரும் கருத்துக்களைப் பதிவு செய்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அப்படி செய்யாதவர்கள் குறித்து உள்நோக்கம் கற்பிப்பதும் சரியல்ல. தவிர, எத்தனை பேர்களுக்கு பத்திரிகைகள் இடமளிக்கின்றன என்பதையும் எண்ணிிப் பார்க்க வேண்டும்.

‘மழைவெள்ளப் பெருக்கால் மக்கள் அல்லாடிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் எதுவும் கூறாமல் சர்வதேசத் திரைப்பட விழாவில் சுஹாசினிக்கு ‘தமிழர்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதைப் பற்றி மட்டுமே பேசத் தெரிகிறது ‘, என்று அவரைக் குற்றம் சாட்டினார்கள் மேற்படி விவாதத்தில் கலந்து கொண்ட ஆண்களில் சிலர். அதையே தான் நாமும் சொல்கிறோம். முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் எத்தனையோ இருக்க குஷ்பு வெளியிட்ட ஒரு கருத்தை இத்தனை பூதாகாரமாக்கிக் கொண்டிருப்பது தேவையில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களும் வார்த்தைகளை ‘அளந்து ‘ பேசப் பழக வேண்டும். போலியோ சொட்டு மருந்தை மனோரமா, ரஜினிகாந்த் ஆகியோர் விளம்பரப்படுத்தியதால் தான் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதாய், திரைப்படவுலகைச் சேர்ந்தவர்களின் தாக்கம் பற்றி சுட்டப்பட்டது ஓரளவே உண்மை. போலியோ சொட்டு மருந்தாகட்டும் , பெண்ணின் கற்பு ஆகட்டும்-தங்களுக்காக யோசிக்கத் தெரிந்தவர்கள் மக்கள். ஆமாம், மக்கள் முட்டாள்கள் அல்ல..

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்