கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

காளி நேசன்


பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; ‘நல்லுருத்திரன் பாட்டு’ எனவும் பாடம்.
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
*******************
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

” (சோழன் நலங்கிள்ளி, புறநானூறு-73);
மேற்குறித்த சங்க கால கவிதை வரிகள் வீரயுகக்கவிதையாயினும், காதலையும், அறத்தையும், மறத்தையும் இணைத்து பாடப்பட்ட ஒரு பாடல் ஆக இருப்பினும், இந்த கவிதையில் உள்ள உவமைகளும், சொற்பதங்களும் வாழ்க்கை குறித்த பல ஆழ்ந்த கேள்விகளை விளம்புவது போல இருப்பதால், இந்த கவிதையை ஒரு ஆழ்ந்த தத்துவ நோக்கிலான சித்தர் வழி பாடலாகவும், இருத்தலியல் குறித்த கவிதையாகவும், எந்த ஒரு சித்தாந்தத்திலும், கருத்திலும் சிக்காமல் நழுவிக்கொண்டிருக்கும் பிறப்பு, இறப்பு, வாழ்க்கைக்கு இடையிலான ஒரு போராட்டத்தை குறிக்கும் கவிதையாகவும் பார்க்க விரும்புகிறேன். இந்த கவிதையில் உள்ள “ஆற்றல்” என்னும் சொல் எதிலும் இன்னும் சிக்காமல் இருந்தபடி, பிறப்பு, இறப்பு, மற்றும் வாழ்வினை இயக்கிகொண்டிருக்கும் ஒரு “இன்மையினை” (இல்லாத ஒன்று-Noumenon) வெல்ல விழையும் வீரத்தை குறிக்கும் பதமாக இருப்பின், இந்த கவிதை பல உன்னத சித்தாந்தங்களை உணர்த்த கூடும் என தோன்றுகிறது. இந்த சர்வ-வல்லமையும்(omni-potent), சர்வ-இருப்பும்(omni-present), சர்வ-ஞானமும்(omni-scient) மிக்க, ஆனால் இல்லாத “இன்மையினை” உணர்ந்து அதை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளாத நிலையில் (அறிய முடியாதெனினும்) மனிதனது வாழ்க்கை தூங்கும் வேங்கைப்புலியின் மீது இடறி விழுந்த கண் பார்வையற்றவனின் பரிதாப நிலையினைப் போன்றதெனவும், அத்தகைய இல்வாழ்க்கை நூல் அறுந்த பட்டம் போல சபிக்கபட்ட ஒன்றாக அமையும் என கருத்தற்ற வாழ்வு குறித்து இந்த கவிதை உரைப்பதாகவும் பொருள் கொள்ளலாம்; அல்லது வேறுவிதமாக உரைப்பின், வாழ்க்கை பயனற்றுவிடும் என உரைப்பதாகவும் சொல்லலாம். மேலும் இந்த பாடல் நல்லுருத்திரன் பாட்டு எனவும், பாடலின் துறை வஞ்சினக்காஞ்சி எனவும் உள்ளது. நல்லுருத்திரன் என்பது சிவதாண்டவாத்தை குறிக்கும் சொல்லாகவும் வஞ்சின காஞ்சி வாழ்வை வெல்ல விழையும் தீவிர யாகமாகவும் (அல்லது ரௌத்திரம்) பொருள் கொள்ள முடியும். பொதுவாக நம்மில் பெரும்பாலானவருக்கு கருத்தற்ற வாழ்வு நிலையில்தான் வாழ்க்கையின் பெரும்பகுதியை கடத்த வேண்டியுள்ளது. நாம் இயக்குவதற்க்கு பதிலாக, இந்த சர்வ வல்லமை படைத்த மாயையின் மரூவு ஆக விளங்கும் புற வாழ்க்கை, நம்மை இயக்குகிறது. இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டு, இந்த சாபத்திலிருந்து எப்படி தப்பி கருத்துடன் வாழ்வது?
இந்த சர்வ வல்லமை பொருந்திய “இன்மையினை” (emptiness) உணரும் நிலையில், வாழ்க்கை சமனிலையோடு இயங்குவதாகவும், சாரம் மிக்கதாகவும் அமையும் எனலாம். இந்த இன்மையினை சித்தர்கள் தங்களது கவிதையில் “வாலைப் பெண்”, குதம்பை பெண் என்றும், “காளி” என்றும் குறியீடாக சொல்வதுண்டு. அத்தகைய இன்மையை உணர்ந்த மோன நிலையினை (conscious-of-unconsciousness) “சிவனாகவும்” குறிப்பதுண்டு. இந்த இன்மையும், மோன ஞானமும் சேரும் நிலையில் பிறக்கும் ஆற்றல் அளவிடர்க்கரிது. இந்த நிலையினை பிறப்பையும் இறப்பையும் வெற்றி கண்டு எழும் உன்னத வாழ்வு நிலையென கூறலாம். இத்தகைய சிந்தையை-மன ஆற்றலை- மேற்கத்திய மதம் மற்றுவ தத்துவ உலகில் உள்ள “கடவுள் சிரசு(“Meister Eckhart’s God-Headedness”) ஆகியவற்றுக்கு இணையாக சொல்லலாம். ஓடிசியும், கிக்லமெஷ் காவியமும் இந்த நிலையினை குறிக்கும் இலக்கியங்களாகவும் பொருள் கொள்ள முடியும். திருவாசகமும், தேவாரமும் சக்தியும் சிவனும் இசைந்து காலத்தை வென்று நிற்கும் “பித்தா பிறை சூடி” பெருமாளே என இந்த நிலையை உரைக்கின்றன எனலாம்.
வீரயுக சங்க பாடலை மேற்சொன்னபடி ஒரு சித்தாந்த பாடலாகவும் தத்துவ பாடலாகவும் பொருள் கொள்வதில் பலன் என்ன? இந்திய இதிகாச, இலக்கிய கதைகள் நூல்கள் எல்லாமும் கடந்த ஒரு 1000 ஆண்டுகளில் மிகைப்படுத்தபட்ட புராண, வீர புருஷ (புருடா!) கட்டுக்கதைகளாக சிதைந்து விட்டன. இந்த இலக்கியங்களிலுள்ள ஆழ்ந்த தத்துவங்களும், தந்திர, எந்திர நுணுக்கங்களும் (Mystic), வாழ்க்கை நெறிகளும், அனுபவங்களும் மறக்கடிக்க பட்டு, அவைகள் வெறும் தாலாட்டு, பொழுதுபோக்கு அம்சங்ககளாக திரிந்துவிட்டன எனலாம். இந்த நோக்கில், இந்திய மரபு இதிகாசங்களும், புராணங்களும், கவிதைகளும் மறுவாசிப்பிற்கு உள்ளாக வேண்டும். அவைகளில் பொதிந்துள்ள தத்துவங்களும், நெறிகளும் ஆராய்வுக்கும், நவீன சிந்தனைக்கும் தளமாக அமையவேண்டும்.

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்