கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

மஞ்சுளா நவநீதன்


கலைஞர் மு கருணாநிதியை அல்லது தென்னரசுவை அசோகமித்திரன் அல்லது தி ஜானகிராமன் அல்லது பூமணி அளவுக்கு இலக்கியகர்த்தாவாக சொல்வாரா என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஞாநியிடமிருந்து. ஞானக்கூத்தன் அடுத்து ஜெயலலிதாவின் குட்டிக்கதைகளுக்கு புல்லரிப்பார் என்றும், கலாப்பிரியா அம்புலிமாமா படித்து வளர்ந்ததை வைத்து புல்லரிப்பார் என்றும் வெகுவிரைவில் திண்ணை நகைச்சுவைப் பக்கங்களில் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு இலக்கியம் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அரசியல் நிச்சயம் புரிகிறது.

ஜெயமோகன் ரஜினிகாந்த்தை முன்னிறுத்தி அரசியல் செய்யக் கூடாது என்று எழுதியபோது யாரும் ஜெயலலிதாவின் ஆதரவிற்கு ஜெயமோகன் ஆசைப் படுகிறார் என்று எழுதவில்லை. ஆனால் கருணாநிதியின் இலக்கிய சிறப்புப் பற்றிப் பேசும்போது ஜெயலலிதா ஆள் என்று தூற்றப்படுகிறார்.

பா ஜ கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு , தனக்கும், தன் நண்பர்களுக்கும், தன் உறவினர்களுக்கும் மந்திரி பதவி மற்றும் வசதிகளை அனுபவிக்கிற கருணாநிதியை, வைகோவை, பா ம க ராம்தாஸை இந்துத்துவ ஆள் என்று இவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் ஆர் எஸ் எஸ்-இல் இருந்து பிறகு விலகிய பிறகும் கூட ஜெயமோகனை இந்துத்துவ ஆள் என்பார்கள்.

‘கருணாநிதியின் படைப்புகள் இலக்கியமாகாது அவை பிரசாரம் என்று அவர் வெளியிட்ட கருத்து அவரது சொந்தக் கருத்தல்ல. இலக்கியச் சிற்றிதழ்களின் அரசியலில் வெறு சில உள்நோக்கங்களுக்காக நெடுங்காலமாக உதிர்க்கப் பட்டு வரும் கருத்து, க நா சு போன்றவர்கள் திருக்குறளையே இலகீயமாக ஏற்க மறுத்தவர்கள். ‘ என்று மாலன் தன்னுடைய சொந்தக் கருத்தை எழுதுகிறார். சிற்றிலக்கியக் காரர்களுக்கு என்ன உள்நோக்கம் இஇருந்தது என்று தெரிவித்தால் பலன் உண்டு.

கருணாநிதியின் இலக்கிய மரபு தமிழ் மரபு என்றால் ஜெயமோகனின் மரபு என்ன மரபு ? தமிழ் மரபில்லையா ?

ஜெயமோகன் இலக்கியகர்த்தா அல்லது கலைஞர் இலக்கியகர்த்தா என்று சொல்லாமல் வெறுமனே காலம் பதில் சொல்லும் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லாது. எத்தனையோ சிறந்த இலக்கியங்கள் காலத்தாலும் ரசனை கெட்டவர்களாலும், சர்வாதிகாரிகளாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. தொகுக்கப் பட்டு புறநானூறு அகநானூறு கவிதைகள் தொகுத்தவரின் ரசனையையும் தொகுக்க ஆதரவளித்தவரின் ரசனையையும் காட்டுமே அன்றி, அன்றைய சிறந்த கவிதைகளைக் காட்டாது. அந்த சிறந்த கவிதைகளில் ஒரு நூறு ஒருவேளை இந்தத் தொகுப்புக்களில் இருந்திருக்கலாம். கலைஞர் எழுத்து பிரச்சார எழுத்து என்பதை மறுக்கவியலாதவர்கள், எல்லா இலக்கியத்திலும் பிரச்சாரம் இருக்கிறது என்று விதண்டாவாதம் புரிந்து கலைஞர் எழுத்தை தாங்கிப்பிடிக்க முனைகிறார்கள். எல்லா இலக்கியமும் பிரசாரம் என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் எல்லாப் பிரசாரங்களும் இலக்கியமாகிவிடுவதில்லை.

ஐம்பதுகளிலேயே காலாவதியாகிப் போனது இந்தக் கருத்து. எல்லா இலக்கியமும் பிரசாரம் என்று சொன்ன சோஷலிச யதார்த்தம் முடிந்து போன பின்பு, ‘எல்லா எழுத்தும் பிரதி ‘ என்று பின் நவீனத்துவக் குரலாய் புனர்ஜென்மம் பெற்றுள்ளது. (ஆனால் கருணாநிதி எழுத்து பற்றியும், சிறு பத்திரிகை எழுத்து பற்றியும் காலம் ஏற்கனவே பதில் சொல்லி விட்டது. ஆனால் அந்த பதிலைக் கேட்க முடியாதபடி மாலன், ஞாநியின் அரசியல் தடுக்கிறது.)

ஜெயமோகன் மீது எனக்கு இரண்டு விமர்சனங்கள் உண்டு. னொது மேடையில் கலாப்ரியா, ஞானக்கூத்தன், வண்ணதாசன் பற்றிப் பேசியிருக்கக் கூடாது. அவர்கள் கருத்து தவறு என்றாலும் அவர்களுக்கு -அப்துல் ரகுமான், இளைய பாரதி போல் – இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருந்ததாய்த் தெரியவில்லை.

இரண்டாவதாக, துக்ளக்கில் இது பற்றி பேட்டி அளித்திருக்கக் கூடாது. துக்ளக் கருணாநிதி மீது அரசியல் விமர்சனம் என்ற எல்லையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் வரம்புகள் அற்று திராவிட இயக்கத்தின் மீதும் , கருணாநிதி மீதும் முறையற்ற தாக்குதல்கள் நிகழ்த்துகிற, நடுநிலையற்ற அரசியல் ஏடு. இதில் ஜெயமோகன் தன் கருத்தைப் பதிவு செய்தது, அவரை அரசியல்வாதியாய்க் காட்டக் கூடிய ஒன்று.

வேறு பல நோக்கங்களை முன்னிறுத்தி கருணாநிதி எழுத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இஇன்னொரு ராஜாஜி-கல்கி கூட்டு அரங்கேறுவதை உறுதி செய்கிறார்கள். ராஜாஜியின் இஅரசியலில் கொண்ட ஈடுபாடுஇ காரணமாக ராஜாஜியைத் தூக்கி நிறுத்திய கல்கியைப் போல் பல கல்கிகள் ஞாநி வடிவிலும், மாலன் வடிவிலும், அப்துல் ரகுமான் வடிவிலும் கருணாநிதிக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால் ராஜாஜியின் இலக்கிய இடம் எது என்று இபோது எல்லோருக்கும் தெரியும். அதே போல் கருணாநிதியின் இலக்கிய இடம் எது என்பதும் எல்லோரும் அறிவார்கள்.

எழுதப் படும் எழுத்து எல்லாமே இலக்கியமாய்த் தான் இருக்க வேண்டும் என்ர அவசியம் இல்லை. கருணாநிதியின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் பணம் பண்ணுகின்றன. கருணாநிதியை பெரும் இலக்கியவாதியாய்க் கொண்டாட லட்சக் கணக்கான கழகக்கண்மணிகள் இருக்கிறார்கள். ஜெயமோகனின் அங்கீகாரம் ஏன் கருணாநிதிக்கு அவ்வளவு முக்கியமாய்ப் படுகிறது ?

திராவிட இயக்கங்களின்ன் எழுத்துக்கு 100 ஆண்டுக்காலம் வரலாறு இருக்கிறது. அதனைத் தொகுத்துப் பார்க்கிற எல்லோருக்கும் நிச்சயம் தெரியும் செய்தி: காலம் புதுமைப் பித்தன்- ஜெயமோகன்களின் பக்கம் தான். காலத்தின் பதிலுக்குக் காத்திருப்பதை ஞாநி நிறுத்திவிடலாம்.

*** manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்