கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

முனைவர் மு, பழனியப்பன்



தத்துவ ஞானி, கற்பனைத் திறம் மிகுந்த கவிஞர், செஞ்சொற்புலவர் வானியல் அறிஞர் உலகியலும், பெரியோர் இயல்பு முற்றும் உணர்ந்த மூதறிஞர் எனப் பல பெருமைகளுக்கு இருப்பிடமாக விளங்கும் கவிஞர் கம்பர் ஆவார். இவர் படைத்த இராமாயணத்தில், ஆராய்வதற்குப் பல செய்திகள் இன்னமும் இருக்கின்றன. இக்கட்டுரை கம்பராமாயணத்தில் இடம்பெறும் சாபங்களையும், மீட்சிகளையும் ஆராய முற்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்ற போது சில உண்மைகள் தெரிய வருகின்றன. கம்பர் படைத்த சாபங்கள், சாபங்களுக்கான மீட்சிகள் ஆகியனவற்றைக் கொண்டு, அவர் பெரியோரைப் போற்றிய திறம், பெரியோரின் மீது கொண்டிருந்த மதிப்பு ஆகியனவற்றை அறியமுடிகின்றது.

1. பெரியோரின் பெற்றி
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளர்,
மற்று அது வினையின் வந்ததாயினும் மாற்றல் ஆற்றும்,
பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர்¢ அரியநூலும்
கற்றவர் மானம்நோக்கின் கவரிமா அனையநீரார் (மந்திரப்படலம்.6)
என்று பெரியோர் பெருமையினைப் பேசுவார் கம்பர். பெரியோரின் வலிமையை வள்ளுவர்

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத் தொழுகுவார் (குறள்-896)
என்று உரைப்பார். ஒருவன் தீயினால் முழுதும் உண்ணப்பட்டாலும் கூட பிழைக்க வழி ஏற்படலாம். ஆனால் பெரியாரைப் பிழைத் தொழுகுபவர் உயிர் பிழைக்கமாட்டார் என்பது வள்ளுவரின் தீர்ப்பாகும். ஏனென்றலால் பெரியோரைப் பிழைப்பதால், அவர்க்கு எழும் கோபம் தீ¢ரா மொழிகளைச் சாபங்களைப் பிறர்க்கு விளைவித்திடும். அம்மொழிகள் சத்தியமானவை. நிச்சயம் நிறைவேறும் என்பதால் அவற்றைத் தீயோடு ஒப்பிட்டார் வள்ளுவர்.

2. சாபம்
சாபம் என்பது என்ன என்ற கேள்விக்கு அபிதான சிந்தாமணி ஒரு விளக்கம் தருகின்றது. இது பெரியோரை அவமதித்தல் முதலியவற்றால் உண்டாகும் கோபத்தின் பயன் என்று அஃது உரைக்கும்.
பெரியோர் தரும் சாபம் எவரையும் தாக்கும் இயல்பினது. தேவர் முதல் அரக்கர் வரை எவரும் சாபம் பெற்றால், அதனை அனுபவித்தே முடித்துள்ளனர். பெரியோரின் சொற்களுக்கு அத்தனை வலிமையுண்டு.

பெரியோரின் சொற்கள் பலிக்கும் நிகழ்ச்சிகளைக் கம்பர் தன் காப்பியத்தின் இடையிடையே புகுத்தி உள்ளார். அவை சாப வரலாறுகளாக நிகழ்ந்து, படிப்போரையும், பெரியோர்பால் பெருமை கொள்ளச் செய்கின்றன. அவ்வாறு அவன் படைத்த சாப வரலாறுகளைத் தொகுத்துக் காணும் போது,
1. கம்பன் பெரியோர் மேல் கொண்டிருந்த வலிமையான பெருமை
2. பெரியோர் தந்த சாபங்களின் தன்மை ஆகியன புலப்படுகின்றன.
2. 1. தேவர்கள் பெற்ற சாபம்.
வான் உலகை ஆளும் தேவராயினும், அவர்க்கும் அடக்கம் வேண்டும். பெரியோரிடத்தில் அவர் அடங்கி நடக்க வேண்டும். அடங்கி நடக்காது ஆசை கொண்டொழுகின் இந்திரனே சரி, அவனும் தண்டிக்கப்பட சாபம் எழும்.

2.1. 1. தேவர்தலைவன் பெற்ற சாபம்
அகலிகை, தவவலிமை கொண்ட கௌதமரின் மனைவி ஆவாள். இவளின் அழகெனும் வேலும், மன்மத சரமும் பாய இந்திரன் இவளை அடைய முனைந்தான். மாமுனிக்கு அற்றம் செய்து. பொய்யிலா முனிவன் தன் உருவமே கொண்டு, அகலிகையோடு, காமம் எனும் தேன் உண்டான். உண்ணும் நிலையில் வந்தது தன் கணவன் அல்ல என அவள் உணர்ந்த போதும், அவள் தக்கது அன்று என்று ஓராள். முக்கண்ணன் அனைய ஆற்றல் மிக்க முனிவனும், தவறு நிகழ்ந்தது அறிந்து, இல்லம் வர, தீவிழி சிந்த நோக்கி, ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி இந்திரன் பெறச் சபித்தான். உணர்வைத் திருப்பதாதிருந்த அவளுக்கு விலைமகள் அனைய நீயும் கல் இயல் ஆதி (அகலிகைப்படலம் . 21) என்று சபித்தான்.
இவ்வரலாற்றில் தேவர் கோமான் ஆயினும் பெரியார் பிழைக்கின் சாபம் பெறுவான், அச்சாபம் அவனையும் ஒறுக்கும் என்று உணர முடிகின்றது. மேலும் தன் மனைவியின் பால் இன்னொருவன் கண்ட இன்பம் என்ற இச்செயல், தன் பெருமைக்கு சற்று ஊறு விளைவிக்குமே அன்றி, உயிருக்கு ஊறானது அல்ல எனக்கருதிய முனிவன், இருவரையும் உயிர் போகுமளவிற்குத் தண்டிக்காமல் ஊர் பேசுமளவிற்கு தண்டித்துள்ளான் என்று முடிய இயலுகின்றது.
இச்சாபத்தில் மீட்சி முக்கியமானதாகும். ஏனென்றால் சாபம் பெற்றோர் உயிர் துறக்குமளவு சாபம் பெறவில்லை. அதனால் மீட்சி அவசியமாகின்றது.
தழைத்து வண்டு இமிரும் தண்தார் தசரதஇராமன் என்பான்
கழல்துகள் கதுவ இந்தக்கல் உருதவிர்தி (அகலிகைப்படலம் 23)
என முனிவன் மீட்சி தருகின்றான். இராமனின் வருகையை முன் வைத்துக் கம்பர் நெஞ்¢சினால் பிழைப்பிலா அகலிகையைக் கௌதமரிடம் இணைத்து மகிழ்ந்திருக்கின்றார். இக்காட்சி இராமாயணத்துன் முதல் சாப- மீட்சி நிகழ்ச்சியாக அமைந்து சிறக்கின்றது.

2.1. 2. தேவனொருவன் பெற்ற சாபம்.
விராதன் என்பான் ஒரு காலத்தில் தேவருலகத்தில் வீணைவாசிக்கும் தும்புருவாக இருந்தான். அப்போது ஒரு முறை அரம்பையுடன் அவன் காம விகற்பம் கொள்ள, சாபம் பெற்றான். குபேரன் அதனால் இவனை அரக்கனாகும்படி சாபமிட்டான்.

கரக்க வந்த காமநோய்
துரக்க வந்த தேமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன். (விராதன் வதைப்படலம். 64)
அரக்க உருவம் பெற்ற இவன், இராமபிரான் சீதையோடு கானகம் வந்துற்ற காலத்து சீதையைக் கவர்ந்து கொண்டு போனான். அரக்கனான, பின்பும் அவனின் காமப்பசி அடங்கவில்லை. கொடிய காட்டுப் பூனையிடம் சிக்கிய கிளி போல சீதை இவனிடம் சிக்கிக் கொள்ள, இராமன் போர் தொடுக்கிறான் கைகளை அறுத்து மண்ணில் இவனைப் புதைத்துப் பாழ்படுத்த, அரக்க உடல் மறைந்து, தேவன் மெய்யுடல் பெற்றான்.
இத்தேவன் தன்னினும் பெரியவனான குபேரனுக்குக் கோபம் வரும்படி நடந்து, சாபம் பெற்றுள்ளான். இவனும் உயிர் போகுமளவு சாபம் பெறவில்லை அரக்கனாக பிற உருவம் பெற்று தண்டிக்கப் பெற்றுப் பின் ஆட்கொள்ளப்படுகின்றான்.
மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளையும் காணும் போது சில முடிவுகளுக்கு வர இயலும். காமத்தால் எழுந்த, பெரியோரைப் பிழைக்கும் இழிசெயல் தண்டனைக்கு உள்ளாகும் ஒன்றுதான். ஆனால் சிறியோர் தரும் இப்பிழையால் பெரியோர்க்கு உயிர் போகுமளவு துயரம் வராமல் இருப்பதால், இப்பிழை கொடிய குற்றமாக கருதப்படவில்லை எனலாம். மேலும் காமத்தால் சாபம் பெற்றோர் மீண்டு வந்துள்ளனர் என்பதும் நோக்கத் தக்கதாகும்.

3. காந்தருவன் பெற்ற சாபம்.
தனு என்பான் ஒரு காந்தருவன். இவன் ஒரு முறை தூலசிரசு என்கிற முனிவரிடம் சென்று அவரைத் தன் கோர வடிவத்தால் பயங்கொள்ளச் செய்துக், கேலி செய்கிறான். உடனே அவர் கோபித்து அவனை அரக்கனாவாய் எனச் சாபமிட்டார். உடனே இவனும் அரக்கானாகி மண்ணுலகு வர, அக்காலத்தில் இந்திரன் இவனை வச்சிராயுதத்தால் தண்டிக்கிறான். அதனால் இவன் தலை வயிற்றினுள் அமிழ்ந்தது. கவந்தன் – வயிற்றில் தலை உடையவன் என அப்போதிருந்து இவன் அழைக்கபட்டான்.
இவனுக்கு கரங்கள் ஒரு யோசனை தூரமுடையது. இவன் காட்டில் வருவோர் போவோரை அச்சுறுத்தி விழுங்கி வரும் போது, சீதையைப் பிரிந்த, இராம இலக்குவர்கள் இவனிடம் சிக்கிக் கொள்கின்றனர். இருவரும் இவனுடன் போர் புரிந்து இவனை வென்று இவனுக்குப் பழைய நிலை தந்தனர்.
ஆளும் நாயகன் அம்கையின் தீண்டிய அதனால்
மூளும்சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் (கவந்தன்படலம்,38)
என்று கம்பர் இவனின் சாபமீட்சியைப் போற்றுவார். இந்நிகழ்ச்சியால் ஒருவர் பெரியோரை எவ்வாறு பிழை செய்தாரோ, அது போன்றே தண்டிக்கப் பட சாபம் பெற்றுள்ளனர் என்பதை உணரமுடிகின்றது.

4. அரசர்கள் பெற்ற சாபம்.
4. 1. தயரத மன்னன் பெற்ற சாபம்
தாயொக்கும் அன்பினையும், தவமொக்கும் நலத்தினையும் கொண்ட தயரத மன்னன் வான் மாயக் கேகசி வாக்கால் துயருற்ற போது, தான் பெற்ற சாபத்தினை நினைத்துக் கோசலைக்குக் கூறுகின்றான்.

எவர்க்கும் தாயான தயரதன், ஒரு முறை வேட்டை நோக்கிக் கானகம் சென்ற போது, நதியொன்று இடைப்பட்டது. நதியிலே களிறு நீர் அருந்தும் ஓசை போலொன்று கேட்க, தயரத மன்னன் கணை வீசினான்.
ஒரு மாமுனிவன், மனைவியோடு திருமாமகனேத் துணையாகத் தவம் புரிந்து கானகம் வரும் வழியில் மகனைப் புனல்கொண்டு வர அனுப்ப, புனல் கொண்டு வர வந்த மைந்தனைக் கணை சாய்த்தது. அவனின் குரல் கேட்டு, யானை அல்ல மகனொருவன் குரல் எனத் தயரதன் தௌ¤ந்து அவனிடம் சென்றான். அவனோ, இபம் தனை உணராது ஊழின் வழி, என்னை உன் அம்பு சாய்த்தது எம் பெற்றோர்க்குத் தாகம் தீர்த்தல் செய் எம் சாவும் உரைத்து, தொழுது, அவரை எண்ணியபடியே உயிர் விட்டேன் என்று கூறுவாய் என்றான்.
மைந்தன் வரவை எதிர்நோக்கி இருந்த கண்ணற்ற பெற்றோர், மகன் இறந்த செய்தி கேட்டு ஆறாத்துயர் எய்தினர். கண்ணின் மணியாம் மகவை இழந்து, யாம் மட்டும் உயிர் வாழ உண்ணுநீர் பருகுதல் உலக முறையாமோ யாமும் விண்ணின் தலை சேருதும் எம்போல் விடலை பிரிய பின்னும் பரிமா உடையாய் அடைவாய் உணர்வான் என்று சாபம் இட்டனர்.
கடிய சாபம் கருதேம்
ஏவா மகவைப் பிரிந்து இன்று எம் போல இடர் உற்றனை நீ
போவாய் அகல் வான்ஸ்ராஸ்ரா (நகர் நீங்கு படலம். 86)
என்று தாம் செய்த பிழைக்குத் தயரத மன்னன் சாபம் பெற்றான். ஆனால் அவனோ பெற்ற சாபம் கேட்டு மகிழ்ந்தான் . பெரியோர் சொல் பலிக்கும் என்பதால் மகவிலா நான் மகப்பேறு பெறுவேன். அம்மகவால் யான் இறப்பது பிறகு இருக்கட்டும் . மகவு எனக்குப் பிறக்குமே என்று மன்னன் மகிழ்ந்தான்.

இந்நிகழ்வால், பெரியோர் இட்ட சாபம் தவறாது நிகழும் என்பது உறுதியாகின்றது. மகவிலா ஒருவனுக்கு மகவால், அவன் பிரிவால் இறப்பாய் என்று சாபமிட்டதால், அவனுக்கு மகவு பிறப்பது உறுதியானது. மேலும் எச்சூழலில் தயரத மன்னன் அப்பெரியோர்க்கு தீங்கு இழைத்தானோ, அதே சூழல் அவனுக்கும் வந்தது. இதுவரை கம்பர் காட்டிய சாபங்கள் உயிரை எடுக்கவில்லை. ஆனால் இந்நிகழ்வில் பெரியோர் இறந்துபடும் அளவிற்கு தயரதன் துன்பம் செய்ததால், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல உயிர்க்கு உயிர்தனைப் பறித்தது சாபம் என்பது தௌ¤வாகின்றது. உயிர் போவது என்பதால், சாபத்திற்கு மீட்சியும் இல்லாமல் போனது.

4. 2. திரிசங்கு மன்னன் பெற்ற சாபம்.
அயோத்தியில் அந்நாளில் வாழ்ந்த மன்னன் திரிசங்கு ஆவான். அவன் தன் துணையாக விளங்கும் வசிட்ட மாமுனிவரை அணுகி ஓர் உதவி புரியக் கேட்டான். தனுவொடும் துறக்கம் எய்த இன்று எனக்கு அருள்க என்று கேட்க வசிட்டர் வெகுண்டார், முடியாது என்றார். இருப்பினும் திரிசங்கு, உம்மால் முடியாவிட்டால் சரி நீள் நிலத்து யாவரெனும் எனக்கு இனியாரை நாடி வகுப்பன் யான் வேள்வி என்றான்
குருவின் துணையை நாடியவன் அவரின் சொல்லை மதிக்காது அவரை அவமதித்தது முதல் தவறு. அவரால் செய்ய இயலாது என இகழ்ந்தது இரண்டாம் தவறு. பிறர் ஒருவரை நாடுவேன் என்றது மூன்றாவது தவறு. முன்னர்த் தேசிகர் பிழைத்தது, வேறு ஓர் நினக்கு இதன் நாடி நீன்றாய். நீசன் ஆய்விடுதி (மிதிலைக்காட்சிப்படலம் 109) என்று முனிவர் சாபம் தர, அவனும் நீசன் ஆனான்.
பின்னாளில் கௌசிக முனிவன் உதவி பெற்று நீசனாக துறக்கம் செல்ல முயன்றான் என்றாலும் அவனின் நீச உருவம் மாறினதாகவே தெரியவில்லை. இந்நிகழ்வில் சாபம் பெற்றோன், மீண்டும் இரங்கி சாபம் தந்தோனிடம் தாழ்ந்து வணங்கி மீட்சிப் பேற்றைக் கேட்கவில்லை என்பதால் , மீட்சியே இல்லாது சாபம் நீட்சி அடைகின்றது என்பது தெரிய வருகின்றது.

4. 3. அரக்கன் பெற்ற சாபம்.
வாரணம் பொருத மார்ப்பும், வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும், மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும் கொண்ட இராவணனும் பெரியோரைப் பிழைத்ததாலே உயிர் துறக்கும் நிலை பெற்றான். அவனுக்கு ஏற்பட்ட சாபங்கள் இரண்டாகும்.

4. 3. 1. வேதவதியிடம் பெற்ற சாபம்
ஒருகாலத்து இராவணன் வேதவதி என்னும் கற்பினாளை வலிதில் தீண்ட அவள் தீயில் வீழ்ந்தாள். வீழ்ந்த அவள், இராவணனை பின்னொரு காலத்து அழிப்பேன் என்று சொல்லிய சொல் இராவணன் பெற்ற முதல் சாபமாகும்.
தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அடுதின் தோன்றினாள்
(இராவணன்மந்திரப் படலம் 81) இவ்வாறு இவன் செய்த தீசெயல் சாபம் ஆனதை ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத் தீண்டான் அயன் மேல் உரை செயா (இராவணன் சூழ்ச்சிபடலம் 72) என மற்றுமொரு இடத்தில் கம்பர் விவரிப்பார். பெண்ணைத் தொட்டு நின்றதால் அவள் தீ குளித்தாள். அவ்வாறு தீக்குளித்த அவள் பொருட்டே இவன் மாய்வான் என்று எழுந்த சாபம் பின்னாளில் இராவணனைக் கொன்றது.

4. 3. 2. நந்தி தந்த சாபம்.
முன்னொரு காலத்து இராவணன், வானின் வழி ஏகி, மேருமலையைக் கடக்க முனைந்தான். அப்போது நந்தி அவனைத் தடுத்து இஃது இறைவன் உறையும் இடம் பணிந்து செல் என்று கூற இராவணன் நந்தியாரை, குரங்கு முகம் எனப்பழித்தான்.
மேல் உயர் கயிலை எடுத்த மேலைநாள்
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூலவான் குரங்கினால் குறுகும் கோளது
வாலிபால் கண்டனம் வரம்பு இல் ஆற்றலாய் (மந்திரப்படலம். 80)
என்று வீடணன் நந்தியால் பெற்ற சாபம் குறிப்பான். குரங்கு முகம் நந்தி தேவரைப் பழித்த காரணத்தால், நந்தி தேவர், இராவணனுக்கு குரங்குகளால் அழிவு உண்டாகும் என சாபமிட்டார்.
இவ்விரு நிகழ்வுகளில் முதல் சாபத்தில் பெண் இறந்துபடும் நிகழ்வு காரணமாக இராவணன் இறப்பை நாடும் சாபம் பெற்றதை உணரமுடிகிறது,

முடிவுகள்
இவ்வாறு தேவர், காந்தருவர், அரசர், அரக்கர் என்ற பல நிலையினரும் பெரியோரைப் பிழைத்ததால் சாபம் பெற்றுள்ளனர் என்பதை உணரமுடிகின்றது. தேவர், காந்தருவர், அரசர் , அரக்கர் என்ற நான்கு நிலையினரும் தந்தமக்கு ஏற்ப சக்தி, புகழ் பெற்றிருப்பினும் கூட அவர்களால் பெரியோர் சாபத்திலிருந்து விலக இயலவில்லை. பெரியோரைப் பிழைத்தோர் பிழையால், பெரியோர் உயிர் விட நேரின், பிழைத்தோரும் அதே சூழலில் உயிர் விடும் அளவிற்குக் கொடுமையான சாபத்தைப் பெற்றுள்ளனர். அதற்கு தயரத மன்னனின் சாப நிகழ்ச்சி சான்றாகும். பெரியோரின் உயிருக்கு ஊறு செய்யாமல் பிழைப்பினைப் பிழைத்தோர் செய்யின், பிழைத்தோருக்குப் பலரும் இகழப்படும் சூழலை சாபம் வருவிக்கின்றது. காமம் கருதி பெரியோருக்குப் பிழைத்தல் நேரினும் கூட அப்பிழைத்தல் உயிருக்கு ஊறு செய்யாதவரை, பிழைத்தோருக்கும் உயிர் விடும் அளவிற்குச் சாபம் தரப்படவில்லை. இந்திரனின் சாப நிகழ்ச்சி இதற்குச் சரியான சான்றாகும். சாபத்திற்கான மீட்சி, உடலும் உள்ளமும் தூய ஒருவர் காரணமாகவே நிகழ்கின்றது. இராமகாதையைப் பொறுத்தவரை, அத்தகையவனாக இராமன் கொள்ளப்பட்டு, அவனின் காலடி துகள் படல், கரங்கள் படல் ஆகியன மீட்சிப் பகுதிகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
சாபத்திற்கான மீட்சி கூட, சாபமிட்ட பெரியோரைச் சாபத்திற்குப் பின் தொழுது வணங்கிய பின்னே கிடைக்கின்றது. எடுத்துக்காட்டு அகலிகை வரலாறு ஆகும். பெரியோரைச் சாபத்திற்குப் பின்னும் வணங்காது நின்றால், சாபம் சாபமீட்சி இல்லாது சாபமாகவே தொடர்கின்றது என்பதைத் திரிசங்கு சாப வரலாறு உணர்த்துகின்றது. பெரியோரைப் பிழைத்தல், தெரிந்து அல்லது தெரியாமல் நடந்தாலும் கூட பிழைத்தல் பிழைத்தவாகவேக் கருதப்பட்டு உள்ளது.

muppalam2003@yagoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்