கனவும் நனவும்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

எஸ் ஜெயலட்சுமி


கண்கள் மூடியபடியேயிருக்க காட்சிகள் தெரிவதையே கனவு என்கிறோம். அடி மனதின் எண்ணங்களே கனவாக வெளிப்படுகின்றன என்றும் சொல் கிறார்கள். கனவிலே கனவு காண்பவரே பங்கேற்பதும் உண்டு.

திரைப்படங்களில் கனவுக் காட்சிகளில் வெள்ளையாடை உடுத்திய தேவதைகளுக் கிடையே கதாநாயகியும் கதாநாயகனும் ஆடுவதையும்
பாடுவதையும் பார்க்கிறோம். கனவுகள் பலவகைப்படும். விசித்திரமான கனவுகளும் வருவதுண்டு. முன்பு பார்த் தறியாத மனிதர்களும் இடங்களும் வருவதுண்டு.
இறந்தவர்களும் வருவார்கள்!

திருமணம் போன்ற மங்களகர மான கனவுகளும் இறப்பு போன்ற துக்ககரமான கனவு களும் தோன்றலாம். விடியற்காலை காணும் கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக இருக்கிறது. பின்னால் நிகழப்போகும் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி யாகவும் சில கனவுகள் அமைகின்றன. அக்கனவுகள்

மங்களகரமானவைகளாக இருந்தால் மனம் சந்தோஷமடை கிறது. அவை துயரமானவைகளாக இருந்தால் மனம் சஞ்சலமடைகிறது.

இங்கு நான்கு பெண்கள் கண்ட கனவுகளைப் பார்க்கலாம். இரண்டு பெண்கள் நல்ல கனவு களை (இன்பமான முடிவு)க் காண்கிறார்கள். இரண்டு பெண் கள் தீக்கனவுகளை (துன்பமான முடிவு)க் காண்கிறார்கள்
இரண்டு கனவுகளுமே அவை நல்லதோ கெட்டதோ நனவாகி விடுகிறது. கண்ணகியும் கோப்பெருந்தேவியும் தீக்கனவு காண்கிறார்கள். திரிசடையும் ஆண்டாளும் நல்ல கனவு காண்கிறார்கள்.

கண்ணகி நிலை

கண்ணகியைப் பிரிந்துசென்ற கோவலன் மாதவியோடு ‘விடுதல் அறியா விருப்பினனாகி’
அவளுடனே வாழ்ந்து வருகிறான். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் அழகிய சிவந்த பாதங்கள் சிலம்புகளை இழந்தன மேகலையையும் நீக்கி விட்டாள். கொங்கைகளில் குங்குமம் பூசவில்லை. மங்கல நாணைத் தவிர வேறு பிற அணியை அவள் விரும்பவில்லை. காதுகளில் குண்டலங்கள்

இல்லை. கயல்மீனைப் போன்ற கண்களில் மை தீட்டப்பட வில்லை நெற்றியில் திலகம் இல்லை. கரிய கூந்தல் நெய் வாசனையை இழந்தது. இவ்வாறு எல்லா அலங்காரப் பொருட் களையும் இழந்தும் துறந்தும் சோகமே உருவாக விளங்கு கிறாள்.

அஞ்செஞ் சீறடி அணிசிலம்பொழிய
மென் துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிரிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறு வியர்பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி

என்று அவளுடைய சோகத் தோற்றத்தை வருணிக்கிறார் இளங்கோ அடிகள் இந்நிலையில் ஒருநாள் அவள் கனவு காண்கிறாள். கனவின் முடிவு அவளுக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது.

கண்ணகியைப் பார்க்க அவளுடைய தோழி தேவந்தி வருகிறாள். இவளும் தன் கணவனைப் பிரிந்திருப்பதால் சாத்தன் கோவிலுக்குச் சென்று தனக்காகவும் கண்ணகிக்காகவும் வேண்டிக் கொள்கிறாள். பின் கண்ணகியிடம் சென்று, “நீ உன் கணவனைப் பெறுவாயாக” என்று வாழ்த்துகிறாள். அது கேட்ட கண்ணகி, “உன் வாழ்த்தின் படி கணவனைப் பெறுவேன். ஆனாலும் என் நெஞ்சு ஏனோ கலங்குகிறது. நேற்று இரவு ஒரு கனவு கண்டேன்” என்று தான் கண்ட கனவைச் சொல்லத் தொடங்குகிறாள்.

கண்ணகி கண்ட கனவு

”தேவந்தி, நேற்று இரவு நான் கண்ட கனவிலே என் கணவன் வந்து என் இருகை பற்றி அழைத்துப் போனான். நாங்கள் ஒரு பெரிய நகரத்திற்குச் சென்றோம். அந்த நகரத்திலே இருந்த மக்கள் பொய்யான போலியான தேளைப்போட்டு பயங்காட்டுவது போல எங்கள் மேல் அடாத பழியைப் போட்டார்கள். அப்பழிச் சொல்லால்
கோவலனுக்குத் தீமை விளைந்தது என்று பிறர் சொல்லக் கேட்ட நான் அது பொறுக்காமல் அவ்வூர் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன்

அதனால் அவ்வரசனோடு அந்த

ஊருக்கும் தீங்கு நேர்ந்தது. தீய கனவை சொல்லக் கூடாது.
அதனால் அங்கு நேர்ந்ததை உனக்குச் சொல்லப் போவ தில்லை. அது என் தீவினைப்பயன் என்று நினைக்கிறேன். ஆனால் என் மேலோனுடன் நான் பெற்ற நற்பேற்றை நீ கேட்டால் அது உனக்கு நகைப்பைத் தரும்” என்கிறாள்.

கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என்கைப்
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டோம்
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டென் தன்மேல்
கோவலற்கு உற்றதோர் தீங்கென்றது கேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்
காவலனோடு ஊர்க்குற்ற தீங்கும்
ஒன்றுண்டால் உரையாடேன்

தேவந்தி சொன்ன பரிகாரம்.

கண்ணகியின் கனவைக் கேட்ட தேவந்தி, “கண்ணகி, நீ முற்பிறப்பில் உன் கணவன் பொருட்டுக் காக்க வேண்டிய நோன்பைச் செய்யத் தவறி விட்டாய். அதனால் உண்டான தீமை விலகட்டும். புகாருக்கு

அருகிலிருக்கும் சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கி காமவேள் கோட்டம் சென்று காம தேவனைத் தொழும் மகளிர் இம்மையில் தம் கணவரைச் சேர்ந்து வாழ்ந்து மறுமையிலும் போக பூமியில் தேவராய்ப்
பிறந்து பிரியாது இன்பம் நுகர்வார்கள். எனவே நாமும் ஒரு நாள் அங்கு சென்று நீராடுவோம் என்கிறாள். இதைக் கேட்ட கன்ணகி, “அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வம் தொழுவது எங்கள் இயல்பன்று என்று தேவந்தியின் கருத்தை ஏற்க மறுத்து விடுகிறாள்.

மதுரை செல்லல்.

இதே நேரம் ஒரு பணிப்பெண் வந்து கோவலன் வந்திருப்பதாகச் சொல்கிறாள். உள்ளே வந்த கோவலன் கண்ணகியின் வாடிய மேனியையும், அவளுடைய சோகத்தையும் கண்டு உள்ளம் வருந்துகிறான். தனது குன்றமன்ன செல்வமனைத்தையும் தொலைத்து விட்டதை எண்ணி மனம் நொந்து பேசுகிறான். கோவலனின் வருத்தத்தைக் கண்ட கண்ணகி புன்சிரிப்புடன், “என் சிலம்பு கள் உள்ளன அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அன்புடன் கூறுகிறாள். இதைக்கேட்ட கோவலன்,

“சேயிழையே! இச்சிலம்புகளையே முதலாகக் கொண்டு மதுரை சென்று முன்னர் இழந்த பொருளைத் தேடிப் பெருக்குவேன். நீயும் என்னோடு புறப்படு” என்று சொல்ல கண்ணகியும் ஒரு வார்த்தையும் (மறுப்பேதும்) சொல்லாமல்
பொழுது புலருமுன் கோவலனோடு மதுரை நோக்கிச் செல்கிறாள்.

அடாதபழி.

மதுரையில் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற கோவலன், அரசியின் சிலம்பு திருடிய கள்வனென்று அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். இதைக் கேள்விப்பட்ட கண்ணகி
பொங்கியெழுந்து தன் ஒற்றைச் சிலம்புடன் பாண்டிய மன் னன் முன் சென்று வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்ற வன் என்பதை நிரூபிக்கிறாள். கோவலன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், ”யானோ அரசன்? யானோ கள்வன்?” என்று உயிர் துறக்கி றான். இதனாலும் சீற்றம் தணியாத கண்ணகி மதுரையைத்
தீக்கிரையாக்குகிறாள். அதன் பின் தேவர்கள் வந்து அழைக்க அவர்களோடு விமானத்தில் விண்ணுலகம் செல்கிறாள்.

இவ்வாறு கண்ணகி கண்ட தீக்கனவு சில நாடகளிலேயே பலித்து விடுகிறது.

கோப்பெருந்தேவி

தன் கணவன் கள்வனல்லன் என்று நிரூபித்து மன்னனிடம் நியாயம் கேட்பதற்காகக் கண்ணகி பாண்டியமன்னன் அரண்மனை நோக்கிச் செல்கிறாள்.

அதே நேரம் பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி தன் தோழிகளிடம் தான் கண்ட தீக்கன வைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறாள்.

தோழி! நம் மன்னனுடைய வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழுவதாகக்
kaகனவு கண்டேன். வாயிலில் கட்டியிருக்கும் மணியின் ஓசை இடைவிடாமல் ஒலிக்கக் கனவிலே கேட்டேன். மேலும் சூரியனை இருள் விழுங்கவும் கனவு கண்டேன் மணி யோசை கேட்டபோது எட்டுத் திசைகளும் அதிர்ச்சி யடைந்தன. இரவு நேரத்தில் வானவில் தோன்றியது. பட்டப் பகலில் நக்ஷத்திரங்கள் எரியும் கொள்ளிகளாகக் கீழே விழுந் தன. இதன் பலன் என்னவாகும்? நமக்குத் துன்பம் ஒன்று

வரப் போகிறது. எனவே மன்னவனிடம் சென்று கனவைக் கூறுவோம்.” என்று மன்னனைத் தேடிச் செல்கிறாள்.

”குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் எல்லா!
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள் விழுங்கக் காண்பென் எல்லா!
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென் எல்லா!
வருவதோர் துன்பமுண்டு
மன்னவர்க்கியாம் உரைத்துமென”

கோப்பெருந்தேவி தன் தோழிகளுடனும் தன் பரிவாரங்களுட னும் செல்கிறாள். பாண்டிய மன்னனிடம் தன் தீக்கனவின்
தன்மையை எடுத்துச் சொல்ல அதனைக் கேட்டபடியே நெடுஞ்செழியன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். கோப் பெருந்தேவி சொல்லி முடித்து அதற்கு மன்னன் மறுமொழி
சொல்லு முன்பே வாயில் காப்போன் வந்து கண்ணகியின் வருகையை அறிவிக்கிறான். அதன்பின் நிகழ்ச்சிகள் வெகு வேகமாக நடந்தேறி விடுகின்றன.

கண்ணகி வழக்குரைத்ததும்
மன்னன் கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைக்

கண்ணகியிடம் கொடுக்கிறான். அதை வாங்கிய கண்ணகி ஆத்திரத்தோடு அச்சிலம்பை உடைக்க அதிலிருந்து சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்ட மன்னன் அதிர்ச்சியடைகி றான். ஏனென்றால் கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துக்
களை உடையவை. இதைக் கண்ட மன்னன், “மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது. கெடுக என் ஆயுள்” என்று உயிர் துறக்கிறான்.’தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல பாண்டிமாதேவியும் மன்னனின் இணை யடிகளைத் தொட்டு வணங்கி வீழ்ந்து உயிர் துறக்கிறாள்.

கோப்பெருந்தேவி கண்ட தீக்கனவு உடனேயே பலித்து விடுகிறது!

பாகம் 2

திரிசடை கண்ட கனவு

அசோக வனத்தில் சிறை வைக்கப் பட்டிருக்கும் சீதா தேவிக்கு உற்ற தோழியாக
இருக்கிறாள் விபீஷணன் மகளான திரிசடை. சீதை தனக்கு
நேர்ந்த அனுபவத்தைத் திரிசடையிடம் பகிர்ந்து கொள்கி றாள்.” திரிசடை, என் இடது தோளும், கண்ணும் துடிக்கின்

றன. மிதிலைக்கு இராமன் முனிவரோடும் தம்பியோடும் வந்த அன்றும் எனக்கு இடம் துடித்தது. ஆனால் இன்று இந்த இடத்தில் எனக்கு என்ன பெரிய நன்மை வரப் போகிறது? எனக்கும் ஏதேனும் நல்லது நடக்குமா?’’ என்று கேட்கிறாள்.

நன் நிமித்தங்கள்

இதைக் கேட்ட திரிசடை, ”அன்னையே! உன் காதில் பொன்னிறத்தும்பி ஒன்று ஊதிப் போனதைப் பார்த்தேன். அதனால் நிச்சயம் உனக்கு உன் கணவனிடமிருந்து நல்ல சேதி வரப் போகிறது. இன்னும் கேள். நான் ஒரு கனவு கண்டேன்.

இராவணன் சிவந்த (இரத்த)
ஆடையுடன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்கள், கழுதைகள் பூட்டிய தேரில் போகக் கண்டேன். அது மட்டுமல்ல. அவனுடைய மகன்களும், சுற்றத்தார்களும்
தென் திசையில் போகக் கண்டேன். (தென்புலம் யமனுக் குரியது) அதாவது அவர்கள் அனைவரும் மாண்டு போவார்கள்.

எண்ணை பொன்முடி தொறும் இழுகி ஈறு இலாத
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின் மேல்
அண்ணல் அவ் இராவணன், அரத்த ஆடையன்
நண்ணினான் தென்புலம்

”இன்னும் கேள். ஆயுத சாலையில் ஆயுதங்கள் எல்லாம்
தாமே போர் செய்ய ஆரம்பித்தன. கும்பங்களில் வைக்கப் பட்டிருந்த மங்கள தீர்த்தங்கள் பொங்கி வழிந்தன. நக்ஷத்திரங்கள் எல்லாம் உருவி விழவும் இரத்த மழை பொழியவும் கனவு கண்டேன்.

தோரணம் முறியுமால், துளங்கி, சூழிமால்
வாரனம் முறியுமால், வலத்த வாள் மருப்பு
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறவின் பொங்குமால்

இது மட்டுமல்ல, அரக்கி மார்களின் தாலிகள் யாரும் வாங்காமலே, தாமே இற்று வீழ்ந்தன. இராவணன் மனைவி மண்டோதரியின் கூந்தல்
நெருப்புச் சுடுவதால் எழும் சுறு நாற்றம் வீசியது. இந்த
நிகழ்ச்சிகள் எல்லாமே வரப்போகும் கேடுகளையே காட்டுகிறது.

சிங்கம், புலி, யானை, மயில்

தேவி! சற்றுமுன் வேறொரு கனவு கண்டேன். அக்கனவு ரொம்பவும் சுவாரஸ்யமானது. வலிய சிங்கங்கள் இரண்டு கிளம்பி ஒரு குன்றுக்கு வந்தன.
அவை இரண்டும் அங்கிருந்த புலிக்கூட்டங்களோடு சேர்ந்து
ஒரு காட்டில் புகுந்தன. அக்காட்டிலே நிறைய யானைகள் கூட்டங் கூட்டமாக இருந்தன. வந்த சிங்கம், புலிகள் காட்டி லிருந்த மதயானைகளோடு போர் செய்தன. அந்தப் போரில் யானைகள் மலை மலையாக வீழ்ந்தன. எங்கு பார்த்தாலும் பிண மலைகள்!

மயிலும் சிங்கங்களும்

இதைக்கேட்ட சீதை, இரண்டு சிங்கங்கள் என்றதும் அவை இரண்டுமே இராம இலக்குவர் களைக் குறிக்கிறது என்று உணர்கிறாள் யானைகள் கூட்டம் அரக்கர்களைக் குறிக்கிறது என்றும் புரிகிறது. ஆனால் புலிக்
கூட்டம் என்பது என்ன? இப்படி அவள் யோசிக்கும் போதே திரிசடி அக்காட்டிலிருந்த மயிலும் பறந்து வெளியே போய் விட்டது” என்கிறாள்

இதைக் கேட்ட சீதை அந்த மயில் தன்னைத்தான் குறிப்பதாக நினைக்கிறாள். அந்த மயில் காட்டிலிருந்து போவது, தான் அசோகவனச் சிறையிலி ருந்து மீளுவதைக் குறிக்கும் என்று சந்தோஷமடைகிறாள்.
அந்த மயில் இரண்டு சிங்கங்களைச் சென்று சேர்ந்ததா? என்று அறிய மிகவும் ஆவலாக யிருக்கிறாள்

திரிசடை மேலும் சொல் கிறாள்.”ஆயிரம் விளக்குகள் அடங்கிய அடுக்கு விளக்கை ஏந்திக் கொண்டு திருமகள் இராவணன் அரண்மனையிலி ருந்து வீடணன் கோயிலுக்குச் சென்றாள். அந்த சமயத்தில் நீ என்னை எழுப்பி விட்டாய்” என்கிறாள். இதைக் கேட்ட சீதை தன் சந்தேகம் தீராத நிலையில், “அன்னையே! இன்னும் கொஞ்சம் தூங்கி மீதிக் கனவையும் காண்” என்று
இரு கைகூப்பி வேண்டிக் கொள்கிறாள்.

திரிசடை கண்ட கனவும் பலிக்கிறது. திரிசடை சொன்னது போல ராமதூதனான அனுமன் கொஞ்ச நேரத்திலேயே வந்து கணையாழி காட்டி ராமனின் சேதி சொல்கிறான். அதன் பின் ஒரு மாதத் திலேயே கடலில் அணை கட்டி ராம இலக்குவர்கள் வானர

சேனையுடன் வந்து இலங்கையில் போர் செய்து அரக்கர் களை அழித்து சீதையை மீட்கிறார்கள். இராவணன் குலம் முழுவதும் அழிகிறது. கனவில் வந்தது போல் ராஜ்யலக்ஷ்மி வீடணனை வந்தடைகிறாள்.

இப்படி திரிசடை கண்ட கனவு நிகழ்ச்சிகள் சீதைக்கு நன்மையாகவே நடைபெறுகிறது

கோதை கண்ட கனவு.

அடுத்ததாக பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியான ஆண்டாள் கனவு காண் கிறாள். அரங்கணையே கைப்பிடிப்பதாகவும், திருமனம் நடப்பதாகவும் கனவு காண்கிறாள். அத்திருமண நிகழ்ச்சி களையெல்லாம் தோழியிடம் சொல்கிறாள்.

தோழி! ஸ்ரீமன் நாராயண நம்பி வாத்தியங்கள் முழங்க ஆயிரம் யானைகள் சூழ்ந்துவர எழுந்தருளுகிறான். நகரம் முழுவதும் தோரணங்கள் நாட்டி
யிருக்கிறார்கள். பொன்மயமான பூரன கும்பங்கள் வைத்திருக்கவும் கனவு கண்டேன்

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி!
நான்.
மணமகன் வருகை

தோழி! நாளை திருமணம் என்று நிச்சயம் செய்திருந்தார்கள். மணப்பந்தலில் பாளை களோடு கூடிய பாக்கு மரங்களால் அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. மாதவன், கோவிந்தன், நரசிம்மன் என்ற நாமங்களை
யுடைய காளை போன்றவனான மாயவன் பந்தலில் நுழைவ
தாகக் கனவு கண்டேன்.

கூறை உடுத்தல்

தோழி! அந்தத் திருமணத்திற்கு யாரெல்லாம் வந்திருந்தார்கள் தெரியுமா? தேவர்கள் எல் லோருமே தங்கள் தலைவனான தேவேந்திரனுடன் வந்தி ருந்தார்கள் அவர்கள் தான் என்னை மணப் பெண் சார்பாகப் பேசினார்கள். வேத மந்திரங்களால் பரிசுத்தம் செய்யப்பட்ட

கூறைப்புடவையை துர்க்கை (நாத்தனார் ஸ்தானத்தில்) உடுத்தி விட்டாள்

இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்

காப்பு நாண்

தோழி! இதையும் கேள். விவாகச் சடங்குகளை முறைப்படி செய்யும் வேதியர்கள் நான்கு திசைகளிலிருந்தும் புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங் களைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து பலவகைப் பூக்கள் அணிந்த கண்ணனோடு என்னை இணைத்துக் காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்

தோழி! அழகிய இளம் பெண்கள் மங்கள தீபங்களையும், பொற் கலசங்களையும் ஏந்தி எதிர் கொண்டு அழைத்தார்கள். மதுரை மன்னனான கண்ணன் பூமி அதிரும் படி எழுந்தருள நான் கனவு கண்டேன்.

கைத்தலம் பற்ற.

மத்தளங்கள் முழங்கின. வரி சங்கங்களை ஊதினார்கள். முத்துச் சரங்களால் அலங்கரிக் கப்பட்ட பந்தலில் நம்பி மதுசூதனன் வந்து என் கைப்பிடித்து என்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டேன்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தான நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி
நான்

இதன் பின் வைதிகர்கள் சிறந்த வேத மந்திரங்களை ஓத கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு மணமேடையில் இருந்த ஹோம
குண்டத்தை (அக்கினியை) வலம் வருவதைக் கண்டேன்.
இப்பிறவியில் மட்டுமல்ல ஏழேழ் பிறவிக்கும் நமக்குப் புகலான, நமக்குத் தலைவனான நாராயணநம்பி தனது திருக் கையால் என்காலைப் பற்றி அம்மி மீது எடுத்து வைக்கக்

கண்டேன்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நன்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழி! நான்

லாஜஹோமம்,

தோழி! என் தமையன்மார்கள் ஓம குண்டத்தில் இருந்த அக்கினியை நன்றாக ஜொலிக்கச் செய்தார்கள். அந்த ஓம குண்டத்தின் முன் என்னை நிறுத்தி சிங்கம் போன்றவனான கண்ணனுடைய திருக்கையின் மீது என் கையை வைத்து லாஜ ஹோமம் செய்யப் பொரிகளை ஓம குண்டத்தில் போடக் கனவு கண்டேன்.

மஞ்சனமாட்டல்

இந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின் குங்குமக் குழம்பை உடம்பெல்லாம் பூசி, குளிர்ந்த சந்தனத்தையும் தடவி யானைமேல் என்னையும்

கண்ணனையும் உட்கார வைத்து வீதிகளில் ஊர்வலம் வரச் செய்தார்கள். ஊர்வலம் வந்தபின் ஏலம், பச்சைக்கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், போன்ற வாசனைத் திரவியங்கள் ஊறிய வாசனை மிகுந்த நீரில் எங்கள் இரு
வரையும் திருமஞ்சனம் செய்விக்கக் கனவு கண்டேன்.

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்றங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழி! நான்

இப்படி தான் கண்ட கனவை யெல்லாம் விரிவாகத் தோழியிடம் சொல்கிறாள் ஆண்டாள்.
தான் கனவு கண்டபடியே ஆண்டாள் கண்ணனையே (அரஙக
னையே) கணவனாக அடைகிறாள். அரங்கனுடன் ஐக்கிய மாகி விடுகிறாள்

இங்கு நான்கு பெண்கள் கனவு கண்டதைப் பார்த்தோம். இரண்டு பெண்கள், கண்ணகியும் கோப்பெருந்தேவியும் தீக்கனவு காண்கிறார்கள். கோப்பெருந் தேவியின் கனவு உடனே பலித்து நனவாகி விடுகிறது.

கண்ணகியின் கனவு அவள் மதுரை சென்றவுடனேயே பலித்து நனவாகி விடுகிறது

திரிசடை கண்ட கனவும் ஒரு மாத காலத்துக்குள் பலித்து நனவாகி விடுகிறது. இராவணன் குலத்தோடும் நாசமடைகிறான். ராஜ்யலக்ஷ்மி வீடணனிடம் சேர்கிறாள் திரிசடை சொன்ன நன்னிமித்தமாக சிறிது நேரத் திலேயே அனுமன் வந்து கணையாழி காட்டிச் சீதைக்கு நம்
பிக்கை ஊட்டுகிறான். ஒரு மாதத்திற்குள்ளாகவே ராம ராவண யுத்தம் நடந்து சீதை மீட்கப் படுகிறாள். திரிசடை கனவு கண்டது போலவே அரக்கர்கள் மாண்டு போகிறார்கள்

ஆண்டாளும் கனவு கண்டது போலவே அரங்கனையே மணாளனாக அடைந்து அவனோடு ஐக்கியமாகி விடுகிறாள்.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி