கண்ணுக்குட்டி

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

ஆர் பாலா



மழை பெருமழையாய் மாறும் போலத்தோன்றியது.பாட்டியும் நானும் ஜன்னல் இடுக்கின் வழியே பார்த்துக்கொண்டிருந்தோம். பாட்டியின் வாய் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது கடவுள்கள் எல்லோரையும் துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தாள் பாட்டி. நாங்கள் அடுக்களையில் நின்று கொண்டிருந்தோம் எனக்கு ஜன்னல் வழியாக பார்ப்பதற்கு சரியாக தெரியவில்லை.மழைத்துளியின் சத்தம் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருந்தது.பாட்டி அழ ஆரம்பித்துவிட்டாள்.இல்லையில்லை அழுவது போல் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.பசு இன்னும் படுக்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் குட்டி போட வேண்டிய பசு இன்னும் நின்று கொண்டிருக்கிறது அதனால்தான் பாட்டி புலம்பிக்கொண்டிருக்கிறாள்..
அந்த நேரம் பார்த்து தாத்தா என்னிடம்,” இங்க என்னல செய்யுத அடுக்களைல,புஸ்தகத்த எடுத்து படில” என்றார்.இந்த உலகத்தில் நான் பயப்படும் ஒரே ஆள் தாத்தாதான். அவரு எப்போ எப்படி என்ன குணத்துல இருப்பார்னு யாருக்கும் தெரியாது. இராமபுரம் தாஸன்பிள்ளை ‘சர்ச்’க்கு போகும்போது இல்லைன்னா திருப்பி வரும் போது செட்டியார் கடைல ‘பக்கடாவும் காப்பி’யும் வாங்கித்தருவாரு.அதே சமயம் வீட்டுக்கு வந்ததும் படிக்கலைன்னா அடி உரிச்சுருவாரு.ஆனா தாத்தாவ சில சமயம் ஆச்சி ஏசுவா.”சின்னபய மூணாம்கிளாசுதான் படிச்சுகிட்டு இருக்கான்.அவன போட்டு இந்த அடி அடிக்கேரே”.ஆச்சி வந்து தாத்தாவிடம் சொன்னாள்,’பசு படுத்துட்டு”.சொன்னதும் மீண்டும் அடுக்களை ஜன்னலுக்கு சென்றுவிட்டாள்.திடீரென பசு பெருங்குரலில் கத்தியது. தாத்தா குடையைக்கூட எடுக்காமல் பாய்ந்தோடினார்.
“லேய்,மக்கா உங்க வீட்டுல இருக்க கண்ணுக்குட்டிய எனக்கு காட்டுவியால”
“செரி”
பள்ளிமுடிந்ததும் எல்லா பையன்களும் எனது வீட்டின் சுவரிடுக்கின் வழியே கண்ணுக்குட்டியை பார்த்தனர்.
ஒருவன் மட்டும் கத்தினான்.”எங்க வீட்டு கண்ணுக்குட்டி இத விட பெரிசு.உன் கண்ணுகுட்டிய ஒரே குத்துல குத்தி தூக்கி எறிஞ்சுரும்”
எல்லா பையன்களும் சிரித்துக்கொண்டும் ஊளையிட்டுக்கொண்டும் ஓடினர்.
புஸ்தக பையை வைத்துவிட்டு தொழுவத்திற்கு ஓடிச்சென்றேன்.கண்ணுக்குட்டி வளைந்து துள்ளியபடி ஓடியது.வேகமாய் என்னருகில் வந்து திடீரென முன்னங்கால்களை முன்நீட்டி நின்று திரும்பிதுள்ளிக்குதித்தோடியது.பசுவின் மடியில் வாய் வைப்பதும் துள்ளி விளையாடுவதுமே அதன் முக்கிய வேலையாய்ப்பட்டது.
தாத்தா என்னை அழைத்து பெரிய பொறுப்பை கொடுப்பது போன்ற பாவனையுடன் சொன்னார்.’லேய் கண்ணுக்குட்டி மண்ணுல வாய வச்சா சொல்லுல”.
இரண்டொரு நாட்களில் பாட்டி ‘கடம்பு’ காய்ச்ச ஆரம்பித்துவிட்டாள்.எனது நண்பர்கள் மாலையில் பள்ளிமுடிந்ததும் கண்ணுக்குட்டியை பார்க்க வந்துவிடுவார்கள்.இதில் ஒருவன் பள்ளி வாத்தியாரிடம் சொல்லிவிட்டான். இதனால் எனது வீட்டு கண்ணுக்குட்டி விரைவில் பிரபலம் ஆகிவிட்டது.
வரவர அதன் அழகும் வனப்பும் கூடிக்கொண்டே சென்றது.அது மண்ணை நக்காமல் இருப்பதற்காக சிறிய கூடை முடைந்து வாயில் மாட்டப்பட்டது.கூடையின் கயிறுகள் அலங்காரமாய் இருந்தன. அவை கழுத்தில் மாட்டப்பட்டன.சிறிய கழுத்துக்கயிறும் சிவப்பு வண்ணத்தில் அழகாயிருந்தது. பெரும்பாலும் அது கட்டப்படுவதேயில்லை.சிறு குழந்தையைப்போல் அதிக உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தோடியபடியிருந்தது.

இதற்கு மேலும் கதையை இழுக்க விரும்பவில்ல.ஒருநாள் காலையில் கண்ணுக்குட்டி துள்ளி விளையாடாமல் பலவீனமாய் படுத்திருந்தது. ஆச்சி தாத்தாவை மருந்து வாங்கிவரச்சொன்னாள்.மாலையில் நான் பள்ளிவிட்டு வரும்போது ஆச்சி அழுதுகொண்டிருந்தாள். இரண்டுபேர் சாக்கில் ஏதோ தூக்கிச்சென்றனர்.
ஓடிச்சென்று கண்ணுக்குட்டியை தேடினேன்.காணவில்லை.பசுவின் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. அது அவ்வப்போது பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டிருந்தது.
பின்குறிப்பு:இரெண்டொரு நாட்களில் கண்ணுக்குட்டியின் தோலினுள் வைக்கோலை வைத்து தைத்து பொம்மைபோல கண்ணுக்குட்டி வந்தது.ஆச்சி பால் கறக்கும் போதும் இன்ன பிற நேரங்களிலும் பசுவின் முன் வைத்தாள்.பசுவும் முதலில் தன் நாவால் கண்ணுக்குட்டியை வாஞ்சையுடன் நக்கியது. சில நாட்களுக்கு பின் கண்ணுக்குட்டியை திரும்பியே பார்ப்பதில்லை.ஆனால் பால் கொடுத்துக்கொண்டுதான் இருந்தது.ஆனால் கண்களில் வழிந்த நீர் வழிந்தபடிதான் இருந்தது.

balurbala@hotmail.com

Series Navigation

ஆர் பாலா

ஆர் பாலா