சின்னக்கருப்பன்
சென்னையிலிருந்து திருச்சி போகும் ரயிலில் என் நண்பருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். நீண்ட பிரயாணம் நீண்ட பேச்சு. வழக்கம்போல, திராவிட இயக்கம், தமிழ்நாடு, தமிழ், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இன்ன பிற விஷயங்களில் பேச்சு சென்றது.
என் நண்பர் தீவிரமான திராவிட இயக்க ஆதரவாளர்.
என் நண்பர் பார்ப்பதெல்லாம் பிராம்மணர்களும், மற்றவர்களும்.
என் நண்பர் ஒரு திராவிட இயக்க ஆதரவாளர் என்றாலும், இன்றைய திராவிட இயக்கத் தலைவர்கள் மேலும், அல்லது ‘திராவிட ‘ என்ற அடைமொழியை முன்னே கொண்டிருக்கும் எந்த இயக்கத்துடனும் இணைப்போ பாசமோ கொண்டிருக்காதவர். ஏறத்தாழ ஒரு பழங்காலத்து காந்தியவாதி இன்றைய இந்தியாவை வருத்தத்துடன் பார்ப்பது போல பார்ப்பவர். திராவிட இயக்கத்தினர் தங்களது வாக்குறுதிகளையும் உருவாக்கிய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவில்லை என்று பார்ப்பவர். இந்தி எதிர்ப்பை முன்னிருத்தி ஆங்கிலத்தை பரப்பி தமிழை கொன்று விட்டார்கள் என்று வருத்தப்படுபவர். பிராம்மணரல்லாதார் கட்சி என்ற வகையில் அரசியல் செய்து ஆட்சி செய்து, பிராம்மணர்கள் தலித்துகளை கொடுமை செய்ததைக் காட்டிலும் அதிகமாக இன்று பிராம்மணரல்லாத மேல் ஜாதியினர் இன்று தலித்துகளை கொடுமை செய்கிறார்கள் என்று கருதுபவர். (அவரது சரியான வார்த்தைகளை நான் உபயோகிக்கவில்லை என்றாலும், அவர் உணர்வதாக நான் எண்ணுவதை எழுதியிருக்கிறேன்). அவரது நோக்கில், மேல்ஜாதியினர் தலித்துகளைக் கொடுமை செய்வதற்கும் காரணம் பிராம்மணர்களே. சமீபத்தில் ஒரு முறை கவிதாசரண் கால் கழுவும் போது தண்ணீர் முழு கால் நனைய ஊற்றச் சொல்லிக்கொடுத்ததை இன்னும் விட முடியாமல் இருப்பது போல, பிராம்மணர்கள் கற்றுக்கொடுத்ததை இன்னும் விட முடியாமல் இருப்பதால், மேல் ஜாதியினர் செய்யும்கொடுமைக்கெல்லாம் பிராம்மணர்களே காரணம் என்றும் வாதிடுபவர்.
திருமாவளவன் மற்றும் கிருஷ்ணசாமியால் இன்று இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அரசியல் செய்து முண்டியடித்து ஒரு எம்பி சீட் கூட பெற முடியாத நிலைமைக்கு எதிராக, பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் தலித் கட்சி என்ற அடையாளத்துடனேயே இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்திருப்பதை வருத்தத்துடன் பார்ப்பவர். அதுவும் பார்ப்பனக் கட்சி என்று அவர் திட்டும் பாஜகவின் உதவியுடனேயே.
என் நண்பர் ஒரு தலித் அல்ல. ஆனால் தலித்துகள் இன்று போர்க்குணம் கொண்டிருப்பதை வரவேற்பவர்.
நான் ஏறத்தாழ ஒரு காந்தியவாதி. நான் காந்தி கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு காந்தியவாதி. என் நண்பர் ஆங்கிலேயனை வெறுக்காதவர். காந்தியை வெறுப்பவர். காந்திதான் தலித்துகளின் முதல் எதிரி. பார்ப்பனியத்தின் முதல் தளபதி என்று கூறுபவர். (அதற்கு ஏராளமான காரணங்களைக் கூறுபவர்) சமீபத்தில் திருமாவளவன் நடத்திய மாநாட்டில் காந்தியை திட்டி பேசியவைகள் அனைத்தும் ஏறத்தாழ என் நண்பர் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். நான் திராவிட இயக்க எதிர்ப்பாளன் இல்லை என்றாலும், அவற்றின் நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறி விட்டது என்றும், திராவிட இயக்கத்தின் மூலம் செய்யக்கூடியவை முடிந்துவிட்டன என்று கருதும் ஆள். இன்று முக்கியமான தேவை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி அல்லவென்றும், மாறும் சமூகத்துக்கு ஏற்ப இன்று கேள்விகளும் விடைகளும் வேறானவை என்றும் கருதும் ஆள் நான். அது தலித்துகளின் உரிமைக்குரலாகவும் இன்னும் பலவாகவும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சுய பரிசோதனைகளில் உரத்த சிந்தனைகளில் பல்வேறு திசைகளில் நடக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு சில விவாதங்கள் நடக்கவே முடியாத சூழ்நிலை ஏற்படுவதை வருத்தத்தோடு பார்க்கிறேன்.
என் அப்பா திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். மற்ற திராவிட இயக்கத்து குடும்பங்களுக்கும் என் குடும்பத்துக்கும் பெரிய வித்தியாசத்தை நான் சொல்லிவிட முடியாது. ஆகவே அது இங்கு தேவையற்றது.
நான் பிராம்மணரை வெறுக்காதவன். அடிப்படையில் பிராம்மணர்களுக்கும் தலித்துகளுக்கும் மற்ற சாதியினருக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றும், யார் ஆட்சிக்கு வந்தாலும் (கட்டமைக்கப்பட்ட) ‘மற்றவர்கள் ‘ மீதான வன்முறைக்கு குறைவிருக்காது என்றும் கருதுபவன். அதற்காக இன்றைய வன்முறையை, அடக்குமுறையை எதிர்க்காமல் இருக்கக்கூடாது என்று கருதுபவன்.
நான் பெரியாரை உயர்ந்த நிலையில் வைத்து பூஜிப்பவனல்ல. திராவிடக் கருத்தாக்கங்களை நான் ஒப்புக்கொள்வதில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், எல்லா கருத்தாக்கங்களும் ஒரு குறிப்பிட்ட காரணங்களின் பொருட்டு பிறக்கின்றன. இன்னும் முக்கியமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கங்கள் எதன் பொருட்டு பிறந்தன என்று வெளிப்படையாக பேசப்படும் காரணங்கள் 5 சதவீதம் என்றால், அந்த சமூகத்தின் உள்ளே இருப்பவர் கூட உணராத காரணங்கள் 95 சதவீதமானவை. கருத்தாக்கங்கள் செயல் வடிவம் பெறுகின்றன. அந்த செயல் வடிவங்கள் தினசரி நடைமுறைகளாக ஆகின்றன. அவை மானுடவியலாக ஆராயப்பட்டு படிக்கப்படும்போதும் ஆராயப்படும்போதும், அந்த சமூகத்தின் வெளியே இருப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் புலப்படுகின்றன. அந்த சமூகத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு அவை தெளிவாக தெரிவதே இல்லை.
அந்த தேவைகள் மறைந்தாலும் கருத்தாக்கங்கள் இன்னும் பல காலம் இருக்கும். கருத்தாக்கங்கள் இன்னும் பல எதிர்பாராத விளைவை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கும். மார்வின் ஹாரிஸ் சொல்வது போல, history is a series of unintended consequences. கருத்தாக்கங்களின் தேவை முடிந்ததும், அந்த கருத்தாக்கங்கள் போக வேண்டும் என்பதற்காக ஒரு சாரார் அந்த கருத்தாக்கங்கள் மீது போர் தொடுக்கின்றார்கள். ஆனால், எந்த கருத்தாக்கமும் முழுவதுமாக இறந்துவிடுவதில்லை. அவற்றின் பாதிப்பு மெலிதாகவேணும் ஒரு சமூகத்தில், மக்களின் மனங்களில் ஓரமாக வசிக்கின்றது. ஒரு சில கருத்தாக்கங்கள் இந்த ஓர சிந்தனை மீதும் தொடர்ந்து போர் தொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அவை பின்னர். என் நண்பர் திரும்பும் திசையெங்கும் பிராம்மண பாதிப்புகளைப் பார்ப்பதை இவ்வாறே கருதுகிறேன். குணா என்ற படத்தில் தன் முகத்தையே தான் வெறுக்கும் ஒரு மனப்பிறழ்வு நிலையை சித்தரித்திருந்தார்கள். இந்த வெறுப்பு பல நாடுகளில் ‘புரட்சி ‘ என்னும் பெயரில், பல அழிவுகளுக்கு இட்டு சென்றிருக்கிறது.
திராவிட இயக்க கருத்தாக்கங்கள் புதியவை அல்ல. அவை பழங்காலந்தொட்டு பல்வேறு விதங்களில் பல்வேறு நாடுகளில் புழங்கியே வந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை/இனத்தை/ஜாதியை அடையாளப்படுத்துதல். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு எதிரான போர். அந்த வர்க்கத்தினை அன்னியர் என்று பெயர் சூட்டல். அந்த வர்க்கத்தினைப் பற்றிய கட்டுக்கதைகளை தோற்றுவித்தல். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அந்த வர்க்கமும் அந்த கட்டுக்கதைகளை நம்ப ஆரம்பிப்பது. புது வரலாறு எழுதப்படல். பழைய வரலாறுகளில் இந்த வர்க்கம்/இனம்/பிரிவு பற்றியவை பற்றிய ஆராய்ச்சி. அவை இடைச்செருகல், பொய் என நிறுவப்படுதல். அவற்றில் சதிவேலைகளைக் கண்டறிதல். ‘எதிரி ‘ வர்க்கத்திடமும் மற்றவர்களைப் பற்றிய இழிவான சிந்தனை. ‘எதிரி ‘ வர்க்கத்தின் மீதான பல்வேறு வகையான போர்கள். இன ஒழிப்பு அல்லது வாழ்வுரிமை இழிவு படுத்துதல். இதனை பழங்குடி மக்களின் இடையேயான போர்களில் ஆவணப்படுத்தி காண்பிக்கிறார் மார்வின் ஹாரிஸ்.
அப்படிப்பட்ட ஒரு பேரலை வீசிக்கொண்டிருக்கும் போது, அறிவும் தர்க்கமும் விடை பெற்றுவிடுகின்றன. உணர்வு ரீதியிலான கோஷங்களுக்கும், அடிமன உணர்வுகளுக்கும் இடையே அறிவு பேசாது. அறிவும் உணர்வுக்கு அடிமையாகி உணர்வுகளை நியாயப்படுத்தும் வேலையில் இறங்கிவிடுகின்றது.
ஒரு சில மாமனிதர்களாலேயே அந்த வெறுப்பலையைத் தாண்டி சிந்திக்க முடிந்திருக்கிறது.தன்னையும் , தான் சார்ந்த இயக்கத்தையும், தான் கொண்டுள்ள கருத்துகளையும் விட்டு விலகி நின்று ஒரு மூன்றாவது மனிதரின் பார்வையுடன் சிந்திக்க முடிந்திருக்கிறது. அப்படிப்பட்ட சிந்தனையினால் தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தராசில் நிறுத்து அதை நிராகரிக்க முடிந்திருக்கிறது. அப்படிச் சிந்திக்க முடிந்த, தன் சிந்தனையை எந்த தயக்குமும் இல்லாமல் மக்கள் முன்வைக்கும் துணிச்சல் கொண்ட ஒருவர் கண்ணதாசன். தன்னை இந்து சொல்லிக்கொள்ள வெட்கப்படாத ஒரு நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கிய மூன்று இந்துமதப்பரப்பாளர்களில் அவர் ஒருவர். (மற்ற இருவர் கிருபானந்த வாரியார், கீரன்) அவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ புத்தகங்கள் இன்றும் பெரும்பாலான இந்து திருமணங்களில் பரிசாக அளிக்கப்படுகின்றன. காந்தி போலவே தன்னைப் பற்றிய உண்மைகளை, அவமானகரமான உண்மைகள் உட்பட, பொதுவில் வைத்தவர் அவர். தீவிரமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும் சரி, அதன் பின்னர் முழுக்க மாறி ஒரு இந்துவாக தன்னை அடையாளம் கண்டு உரத்து சொல்லியபோதும் சரி அவர் தன் நெஞ்சுக்கு உண்மையானவராக இருந்தார். அதனாலேயே அவரது கட்டுரைகளில் ஒரு நேர்மையையும் தன் அனுபவங்கள் மூலம் தான் படித்த பாடங்களையும் சொல்லும்போது ஒரு அசாதாரணமான நம்பகத்தன்மையை உணர முடிகிறது. அது பலரையும் மாற்றுகிறது.
தொ பரமசிவனார் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இனங்கள்/ஜாதிகள் ஆளும் வர்க்கமாக இருந்திருப்பதை ஆவணப்படுத்தி காண்பிக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜாதியினரும் ஒரு காலத்தில் ஆளும் வர்க்கமாக/ ஆளும் ஜாதிகளாக இருந்தவர்களே என்றே நானும் நம்புகிறேன்.
ஆனால், அதற்காக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் அரசியலை விட்டு விரட்டப்பட வேண்டும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் வாழ்வுரிமை மறுக்கப்பட வேண்டும் என்றோ நான் கருதமாட்டேன். அப்படி கருதும் ஒரு கருத்துருவாக்கத்தை, அது எந்த கருத்துருவாக்கமாக இருப்பினும் சரி அதனை எதிர்ப்பேன்.
ஆனால் எல்லா கருத்துருவாக்கங்களும் ஒன்றல்ல, எல்லா மதங்களும் ஒன்றல்ல, எல்லா புரட்சிகளும் ஒன்றல்ல, எல்லா இஸங்களும் ஒன்றல்ல என்றும் நான் நினைக்கிறேன்.
ஆனால், எது வன்மையான கருத்துருவாக்கம் என்பதிலும், எது தண்மையான கருத்துருவாக்கம் என்பதிலும் எனக்கு தெளிவு உண்டு. எது அணைத்துச் செல்லும் கருத்துருவாக்கம் என்பதிலும், எது தனியே விலக்கி வைக்கும் கருத்துருவாக்கம் என்பதிலும் எனக்கு தெளிவு உண்டு. எது மற்றவர்களின் தனி கலாச்சாரத்தையும் பண்புகளையும் மதிக்கும் கருத்துருவாக்கம் என்பதிலும், எது எல்லோருடைய கலாச்சாரங்களும் எரிந்த கரியின், சாம்பலின் மீதுதான் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவேன் என்று கூறும் கருத்துருவாக்கம் என்பதிலும் எனக்கு தெளிவு உண்டு.
எந்த கருத்துருவாக்கங்கள் பழைய வரலாற்றை தீய காலம் என்றும், புதிதாய் உருவாக்குவதாய் கூறிக்கொள்ளும் எதிர்காலத்தை பொற்காலம் என்றும் கூறும் என்பது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட ‘புரட்சி ‘களில் எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை. எனது மூதாதையர்கள் குரங்குகள்தாம். அதற்காக என் மூதாதையர்களுக்காக நான் வெட்கப்படப் போவதில்லை. என் மூதாதையர்கள் ஒரு செல் உயிரியாக மரபணுக்குளத்தில் நீந்தி வந்தவர்கள்தாம். அதற்காக எனக்கு எந்த வெட்கமும் இல்லை. ஒரு செல் என்பது மகத்தானது. அது இந்த உயிர்வெளியின் விதை. அது வணங்கத்தக்கது. சாலிக்கிராமத்தை விஷ்ணுவின் அவதாரமாக பூஜிப்பதை நான் வியந்து வணங்குகிறேன்.
ஒரு இந்துவால் மட்டுமே காந்தியாக முடியும் என்றே நான் கருதுகிறேன். அந்த காந்திதான், அவரது மகத்தான ஆளுமைதான், திராவிட இயக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தது என்றும் நம்புகிறேன். அந்த மகத்தான ஆளுமையால் கூட முஸ்லீம் லீகை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
பழிக்குப்பழி என்பது அறம் போலத் தெரியலாம். அது அறமல்ல, பழிக்குப் பழியைத் தாண்டி மனிதன் செல்லவேண்டும், அவ்வாறு செல்வதுதான் மனிதம் என்று உரைத்தவர் காந்தி. அந்த காந்தியின் பாதிப்பு நெல்சன் மண்டேலாவாக, மார்டின் லூதர் கிங்காக, டெஸ்மாண்ட் டுடுவாக உலகெங்கும் விளைகிறது.
பழிக்குப் பழி என்பது ஆழ்மன மனித குணம் என்பதை நான் மறப்பதில்லை. அதைக் கடந்து செல்லவேண்டும் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பழிக்குப் பழி வாங்கிவிடுவதில், நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற உணர்வு வந்துவிடுகிறது. அதுவே ‘வெற்றி ‘ ‘தோல்வி ‘ என்ற இரு வார்த்தைகளின் பொருளையும் நிர்ணயிக்கிறது. இறுதி முடிவே முக்கியம் என்ற உணர்வு வருவதன் காரணம் இதுவே. இதனால், போகும் வழி முக்கியமற்றதாக ஆகிவிடுகிறது.
முடிவை விட போகும் வழி முக்கியம் என்று கூறுகிறார் காந்தி. போகும் வழி அறவழியாக இருந்தால்கூட போதும், முடிவு எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறுகிறார் காந்தி. போகும் வழியே காந்தியின் போராட்டத்தின் ‘வெற்றி ‘, ‘தோல்வி ‘ வார்த்தைகளின் பொருளை நிர்ணயிக்கிறது. அதுதான் சாரிசெளரா நிகழ்ச்சியின் போது, காந்தியை போராட்டத்தை வாபஸ் வாங்க வைக்கிறது.
இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு என அமிர்தசரஸ் படுகொலைகளைச் சொல்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில், சாரிசெளரா நிகழ்ச்சிதான் இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியமான நிகழ்வு. அது எந்நாளும் சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு நிகழ்வையும் உரசிப்பார்க்கும் நிகழ்ச்சியாக நிலைத்து நிற்கிறது.
இந்திய மக்கள் எந்த நிகழ்ச்சிகளை ஆதரிப்பார்கள் எந்த நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்கள் என்பதன் உரைகல் அது. ஆளுபவர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் ஒவ்வொரு நகர்வையும் அந்த நிகழ்ச்சியிலேயே உரசிப் பார்க்க வேண்டும். இறுதி முடிவு ஒன்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அறமற்ற ஒரு செயலைச் செய்யப்போகிறோமா அல்லது இறுதி முடிவு இரண்டாம் பட்சமாக, போகும் ஒவ்வொரு படியும் நேர்மையானதாக, அறமுள்ளதாக இருக்கிறதா என்ற கேள்வியின் உரைகல் அது. மணிப்பூரில் ராணுவம் படுகொலை செய்வதாக இருக்கட்டும், தமிழகத்தில் பத்திரிக்கையாளர் மீதான அரசு நடவடிக்கைகள் வழக்குகளாக இருக்கட்டும், அனைத்தும் அதனதன் நேர்மை உரசிப்பார்க்க வேண்டியது சாரிசெளரா நிகழ்ச்சியிலேயே.
ஈராக் போருக்கு அமெரிக்கா செல்லும் போது சொன்ன காரணம் நல்ல காரணம்தான். ‘அங்கே ஜனநாயகத்தை கொண்டுவரபோகிறோம் ‘. ஏன் மக்கள் அதனை ஆதரிக்கவில்லை ? ஒரு பக்கம் அமெரிக்காவின் கடந்தகால வரலாறு நம்பிக்கை தருவதாக இல்லை. மற்றொரு பக்கம், ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளும் அறமுள்ளவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அறமுள்ள காரியங்களை அமெரிக்கா இதுவரை செய்யவில்லை என்பது வரலாறு.
எல்லா போர்களும் அறத்தின் பேரிலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது கூட ஹிட்லரும் ஸ்டாலினும் சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் தங்கள் தங்கள் படைகளை அறத்திற்காகவே போர் என்று நம்பவைத்திருக்கிறார்கள். வரலாற்றில் நடந்த மோசடிகளை சரி செய்வதற்கும், எதிர்கால நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும், நம் இனத்தின் ஆளும் வர்க்க நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கும் என்றே அனைத்து தரப்பிலும் போர் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இன்றும் போர்கள் தொடர்ந்து நடக்கின்றன. தன் சுயலாபத்துக்காகவும், தங்கள் இனத்தின் எதிர்கால வாழ்வுக்காகவும், ஆன்மீக வாழ்வுக்காகவும் போர்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் போகும் வழி சரியில்லாத போர்கள், அப்பாவிகளையும் பொதுமக்களையும் கொல்லும் போர்கள் இன்று உலகெங்கும் கண்டனம் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் பொதுமக்களும் அப்பாவிகளும் கொல்லப்படுவதற்கான நியாயப்படுத்தல்களும் குறையில்லாமல் செய்யப்படுகின்றன.
சமாதானத்துக்காக ஐந்து வீடுகளைக் கேட்டான் தருமன். ஐந்து ஊசி குத்தும் நிலம் கூட கிடையாது என்ற பின்னரே மாபாரதப்போர் தொடங்கிற்று. சகாதேவன் மாபாரதப்போர் நிற்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொன்னான். கர்ணனுக்கு முடிசூட்டு, அர்சுனனைக் கொல், திரெளபதிக்கு மொட்டை, கண்ணனுக்கு கட்டு என்றான். என்னைக் கட்டிவிட முடியுமா என்று கேட்டான் கண்ணன். கண்ணன் காலில் விழுந்து கட்டிக்கொண்டான். இதோ கட்டிவிட்டேன் என்றான் சகாதேவன். ஒப்புக்கொண்டேன் என்றவாறு காலை விலக்கிக்கொண்ட கண்ணன் தன் விசுவரூப தரிசனத்துக்குச் தயாரானான்.
திராவிட இயக்கத்துக்கு எதிரான போர் பற்றி மேலே பேசவில்லை. அது எப்போதோ முடிந்துவிட்டது. முடிந்த விவாதங்களை பேசி பயனில்லை. இது வேறொரு போர். கண்ணன் காலில் விழுந்து இதனை நிறுத்திவிட முடியுமா என்று தெரியவில்லை. நிறுத்த முடியாவிட்டாலும், அது காந்தியின் அறப்போராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
*
karuppanchinna@yahoo.com
*
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- குருவிகள்
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- துணை – பகுதி 3
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை