எஸ் அரவிந்தன் நீலகண்டன்
மதிப்பிற்குரிய திரு.சோதி பிரகாசம் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பான அடைமொழிகளுக்கு நன்றி. ஏனோ தெரியவில்லை தற்சமயம் நமது மார்க்ஸிய நண்பர்கள் திண்ணையில் எனக்கு அன்புடன் வாரி வழங்கும் பல பட்டங்களையும் அடைமொழிகளையும் ஏற்க தகுதியில்லாதவனாக நான் இருந்து வருகிறேன். திண்ணியம் நிகழ்ச்சி குறித்து ஒரு வார்த்தை – ஒரு வரி நீ எழுதியிருக்கிறாயா ? இதுதான் உனக்கு ஹிந்து சமுதாயத்தின் மீது இருக்கும் பற்றா ? நீ எழுத மாட்டாய். ஏனென்றால் வயிறு முட்ட சோறு தின்று வேலையத்து போய் கொழுப்பேறி மதவாதம் பேசக்கூடிய வர்க்கத்தை சார்ந்தவனல்லவா நீ. நீ எப்படி திண்ணியம் குறித்து எழுத முடியும் ? நீ இதைக்குறித்து எழுதமாட்டாய் என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் மார்க்ஸ் அளித்த முரண்பாட்டியங்கியல் சமன்பாடுகளின் படி அதை எழுத உனது வர்க்க இயற்கை விடாது. ஏனென்றால் நீ சிற்றுடைமைவாதக்காரன். – இதுதான் சோதி பிரகாசம் முன்வைக்கும் கேள்வி. கேள்வி கூட அல்ல முடிவு.
வயிறு முட்ட சோறு தின்று எவ்வித உடலுழைப்பும் இல்லாமல் தின்ற சோறு செரிக்காத கொழுப்பால் தினவெடுத்து சிற்றுடைமைவாத வகுப்புவாத விஷத்தை திண்ணையில் கக்குபவனாக எனக்கு அளிக்கப்படும் முற்போக்கு சித்திரத்தை தலைமேல் தாங்க எனக்கு மிகுந்த விருப்பம்தான். அதுவும் ஸ்டாலினின் தேசிய இனங்கள் குறித்த கிஞ்சித்தும் அடிப்படையற்ற உளறல்களை ஏதோ தெய்வீக கோட்பாடாக தம் தலையுள் சுமக்கும் ஒரு நபர், இத்தகையதோர் பட்டத்தை எனக்கு அளிப்பாராகின் அதை ஏற்பதைக் காட்டிலோர் பெரும் பாக்கியம் வேறெதுவுமில்லை. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. இந்த பட்டத்தை எனக்கு அளிக்க அன்னார் தரும் காரணமும் அக்காரணத்தை அவருக்கு லபித்த முரண்பாட்டியங்கியலும் துரதிர்ஷ்டவசமாக பொய்ப்பிக்கப்படுகிறது (ஆனால் முரண்பாட்டியங்கியல் பொய்ப்பிக்கப்படும் சாதாரண தளத்தில் இயங்கும் சாதாரண கோட்பாடல்ல. உழைப்பாளி வர்க்கத்திற்கு அருளப்பட்ட போராட்ட கருவியல்லவா! பெட்டிக்கடை வாணலியில் கொப்பளிக்கும் கோழி போல கொப்பளிக்கும் போராட்ட அறவுணர்வுகளால் சித்திக்கப்பட்ட இறையியலையொத்த புனித உண்மையல்லவா! அதை பொய்ப்பிக்கவா முடியும். என்றாலும் இந்த பாசிஸ்ட் மடையன் இது தெரியாமல் திண்ணியம் நிகழ்ச்சி குறித்து எழுதித்தொலைத்திருக்கிறான். என்ன செய்யட்டும் தோழர்! இந்த பாசிஸ்ட் மடையனுக்கு அவன் எழுத்துக்கள் முரண்பாட்டியங்கியலுக்கு முரணாக இருக்கக் கூடாது என்பதுகூட தெரியவில்லை.
மலையாள மனோரமா ஆண்டு இதழ் (தமிழ் பதிப்பு) 2003 இல் 2002 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்ச்சிகளை குறித்து வெளியானக் கட்டுரையில் (பக்கம் 16) ‘(தமிழகம்) தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் திருச்சி மாவட்ட திண்ணியம் கிராமத்தில் மே 21 – இல் மானுடத்தன்மையற்ற தாழ்வு நிலையில் மேலும் ஒருபடி கீழிறங்கியது. ஊர் பிரமுகரிடம் பணம் கொடுத்து ஏமாந்த தலித் ஒருவர் அதனைத்திருப்பிக் கேட்ட போது அவரும், மற்றொருவரும் தாக்கப்பட்டு மலம் தின்ன வைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தின் அருகிலேயும் கோவில் திருவிழா காரணமாக தலித்களிடையேயும் வன்னியர்களிடையேயும் தகராறு ஏற்பட்டது. தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இக்கொடுமைகளுக்கு காரணமாக விளங்கும் தலித் மக்களின் பொருளாதார வலிமையின்மை மற்றும் கல்வியறிவுத்தேவை ஆகியவற்றை நீக்கி அவர்களை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடி சங்கரலிங்க கிராமத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித்களை தமிழக முதல்வர் பார்த்து நிவாரணங்கள் வழங்கியது போன்ற துரித நடவடிக்கைகள் தலித் மக்களுக்கு நம்பிக்கை தருவன. ‘ என்று எழுதிய நபரின் பெயர் ‘எஸ்.அரவிந்தன், நாகர்கோவில் ‘ என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அரவிந்தன் நீலகண்டனின் பாசிஸ தந்திரம் என்பதில் ஐயமில்லை. கவலைப்படாதீர்கள்.இதனை நமது முற்போக்கு கணிப்பின் மூலம் இருவிதமாக விளக்கிவிடலாம்.
ஒன்று. இது எஸ்.அரவிந்தன் தானேயொழிய எஸ்.அரவிந்தன் நீலகண்டன் இல்லை என அடித்துக் கூறலாம். ஏனென்றால் முரண்பாட்டியங்கியல் ஜாதகம் பொய்யாக முடியாதல்லவா ?
இரண்டு. நன்றாக பாருங்கள். தலித்கள் மீதான வன்முறைக்கு தலித்களே காரணம் என அவன் கூறுகிறான் பார்த்தீர்களா என்று ‘தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு ‘ என்கிற வாசகத்தை வசதியாக மறைத்துவிட்டு கூறி முரண்பாட்டியங்கியல் ஜாதகத்தின் கணிப்புக்கு ஏற்படும் பிழையை நிவர்த்தி பண்ணலாம். இல்லையென்றால் பேசாமல் மார்க்சிய பேரகராதியிலும் சோவியத் மகா கலைக்களஞ்சியம் போன்ற பேரருளாரால் உருவாக்கப்பட்ட திருமொழிகளிலுள்ள கடைந்தெடுத்த வசை மொழிகளால் அரவிந்தன் நீலகண்டனை திட்டித்தீர்க்கலாம்.கூடவே இதனை வெளியிட்டதால் திண்ணையின் நம்பகத்தன்மை எவ்வளவு குறைந்து விட்டதென்பதையும், ஸ்டாலினிய அளவுகோல்களால் சுட்டிக்காட்டலாம். இப்படியெல்லாம் ‘தாம்-தூம் ‘ பண்ணினால் போதும் தோழர்வாள். திண்ணியத்தை பற்றி எழுதினாயா என்கிற கேள்விக்கு அவன் பதிலளித்திருப்பது வாசகர்களுக்கென்ன அவனுக்கே மறந்து போகும். மேலும் அப்பாவிகளின் இரத்தத்தாலும் பிணங்களாலும் கட்டப்பட்ட சோவியத் உடைந்த போது நீங்கள் அடைந்த துன்பத்தை பங்களாதேஷில் ஹிந்து தலித்கள் அவர்கள் ஹிந்துக்கள் என்கிற காரணத்தாலேயே துரத்தப்பட்டு வீடிழந்து அவர்கள் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டு, இன்று விலங்குகள் கூட வசிக்கத்தயங்கும் சூழலில் வாழ்கிறார்களே அதற்காக நீங்கள் அடைந்தீர்களா என நான் ஒரு சிற்றுடைமைவாத கேள்வியை கேட்கப்போவதில்லை என்றாலும் பதிலை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். எதுவானாலும் மார்க்சிய ஜாதகம் பொய்ப்பதில்லை என நிரூபித்துவிடலாம்தான்.
ரவி ஸ்ரீனிவாஸுடன் ஒப்பிடுகையில் எனக்கு திரு.சோதி பிரகாசம் அவர்களின் கருத்தியல் நேர்மையிலும் அவரது பொதுவாகவே அவரது அக-நேர்மையிலும் மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு எதிராக இவ்விதம் எழுத நேர்ந்ததில் கூட எனக்கு வருத்தம்தான். மேல் கூறிய என் எதிர்வினையில் ஏதுவும் அவரது தனிப்பட்ட நேர்மையை தாக்குவதல்ல. அது தாக்க முடியாத அளவு அப்பழுக்கற்றது. அதே நேரத்தில் இத்தகையதோர் மனிதர் கூட மார்க்ஸீய சித்தாந்தம் மூலம் சக மானுடனை எவ்விதம் முன்முடிவு கொண்ட மனச்சித்திரம் மூலம் நோக்குகிறார் என்பதைக் காட்டுவது என் நோக்கம். மார்க்ஸியம் ஒன்றும் இடதுசாரிகள் கூறுவது போல் அறவுணர்வு அடிப்படைக் கொண்டதல்ல. மாறாக, அறவுணர்வுச் சீற்றங்களை முதலாக்கி அரசியல்-அதிகார சந்தையில் வெறுப்பியலை விற்பனை செய்யும் ஒரு சித்தாந்தம்தான் என்பதை மீண்டும் நிறுவ வாய்ப்பளித்தமைக்கு சோதி பிரகாசம் அவர்களுக்கு நன்றி.
நான் ஹிந்துத்வ இயக்கத்தைச் சார்ந்திருப்பவன். இடதுசாரிகளால் பாசிஸ இயக்கம் நாசி இயக்கம் என பழிக்கப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவன் நான். அதில் எனக்கு பெருமைதான். (இந்த வரிகள் இனி என்றென்றும் எனக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பிரச்சார ஆயுதங்களாக விளங்கும் என்பதையும் நான் அறிவேன். அதை குறித்து எனக்கு எவ்வித கவலையுமில்லை.) இன்றுவரை இந்த வசைபாடல்களுக்கும் சில மூன்றாந்தர பிரச்சார பொய்களுக்கும் அப்பால் நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் செயல்பாடுகளில் எவ்வித பாசிஸ-நாசி செயல்பாடுகளையோ அல்லது வெறுப்பியல் சித்தாந்தங்களையோ நான் கண்டதில்லை. நான் எதிலும் மதத்தை காண்பதாக தோழர் கூறியிருந்தார். இன்றைய தேதியில் மதத்தின் மதப்பண்பாட்டின் வலிமையை வெறும் குறுங்குழு வாதமாக மதிப்பிட முழுமையாக நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளுக்கு குருடாக்கிக் கொண்டால்தான் இவ்வாறு கூறமுடியும். பல வளரும் நாடுகளின் பட்ஜெட்களைக் காட்டிலும் அதிக அளவில் பணம் மதமாற்றங்களுக்காக இந்நாட்டில் இறக்கப்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடக்கும் மதமாற்றங்கள் பெரும்பாலும் எவ்வாறு உள்ளன ? தலித்கள் மதமாற்றங்களை எவ்வாறு எதிர்க்கின்றனர் ? ஆகியவற்றினை திரு சோதி பிரகாசம் சிறிதாவது உணர்ந்திருப்பாரா ? தமது முன்னோருக்கு நினைவு நாளன்று படைத்த படையலை சொந்த மகன் ‘பேய்க்கு போட்டதை சாப்பிட மாட்டேன் நான் கர்த்தரின் குழந்தை ‘ எனச்சொல்லும் போது மேல் சாதியினரால் அறியாமைக்கு உட்படுத்தப்பட்டு, தம் வீட்டிற்குள் நீளும் அமெரிக்க பாப்டிஸ்ட் சர்ச்சின் கலாச்சார ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தலித் தகப்பனாரிடம் போய் சொல்லுங்கள் “இப்படியெல்லாம் வேதனைப்படுவது சிற்றுடைமை சிந்தனை எனவே ஒரு ‘இந்து ‘ என்கிற முறையில் உன் மகளை/மகனை மதம்மாற விடு“ என்று. தமது மகளின் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டபின் நீங்கள் குடும்பத்துடன் மதமாறுவதுடன் ஒரு வருடம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனைக்கு வரவேண்டும் , குடும்பத்தில் யாரும் பொட்டு வைக்கக் கூடாது, வீட்டிலுள்ள தெய்வப்படங்களை வெளியே எரிந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் திருமணத்தை ரத்து செய்துவிடுவோம் என கூறி மதமாற்றப்பட்ட தலித் பெண்மணி (இந்த மதமாற்றத்தால் அவர் கணவர் எங்கோ சென்றுவிட்டார்) ஒருவர், தலித்பஸ்திக்கு சேவாவுக்கு சென்ற ஸ்வயம்சேவகரிடம் ‘நீங்க மட்டும் ஒரு ஆறுமாசம் முன்னால் இங்க வந்திருந்தா என் பொட்டும் பூவும் இன்னைக்கும் இருந்திருக்குமையா ‘ என்று அழுத நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கிறேன். இத்தகையதோர் அசுர சக்தியுடன் எமது சகோதரர்கள் குடும்பங்கள் உடைத்தெறியப்படுகையில் இதற்கு எதிராக திண்ணை இணைய தளத்தில் எழுப்பப்படும் அரவிந்தன் நீலகண்டனின் எவ்விதத்திலும் உபயோகமற்ற சிறு முனங்கலையொத்த குரலுக்கு நமது மார்க்ஸீய ஞனத்தின் ஒட்டுமொத்த குத்தகையாளர் அளிக்கும் பெயர் – வயிறு முட்ட சோறு தின்று வேலையற்று போன கொழுப்பில் எழுப்பப்படும் சிற்றுடமைச் சிந்தனை.
இந்த ஆக்கிரமிப்பு நான் இப்போது கூறியது ஒரு தனிப்பட்ட கதையல்ல. இன்றைய தினம் பாரதம் முழுவதும் இலட்சக்கணக்கான நலிவுற்றோர் வீடுகளில் நிகழும் ஒரு சமுதாய நிகழ்வு. இதனால் வேதனையும் பிளவும் அடைந்த குடும்பங்கள் ஏராளம். மதம் மாறிய பின்னர் ஒரு தலித் அல்லது மதம் மாறிய எவருமே தமது தோல்வியை வெற்றியாக மாற்ற முயல்கின்றனர். இதற்கு கூறப்படும் காரணங்கள் முழுமையாக பொய்யல்ல. ஆனால் இவை அல்ல/அல்லது இவை மட்டுமே அல்ல முதன்மை காரணங்கள். மதமாற்றம் நிகழ்கையில் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகள் பதிவுசெய்யப்படாத, நமது சமூகவியலாளர்களின் ஆராய்ச்சி புலன்களின் அறிதல் புலங்களுக்கு அப்பால் கேட்கும் ஓலக்குரல்கள். தலித்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் ஒருவித உச்சமாகவே நான் இதை காண்கிறேன். மிசினரிகளின் ஆக்கிரமிப்பை விட அவலமானது மேல்சாதியினர் மற்றும் படித்த ஹிந்துக்கள் இந்த ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் ஒரு குடும்பத்தை ‘அது அவனது சுதந்திரம் – மதம் மாறுவது அவனது கடமை ‘ எனச் சொல்வதன் மூலம் இந்த கலாச்சார ஆக்கிரமிப்புக்கும் கடுமையான மனப்போராட்டத்திற்கும் தலித்களை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது திண்ணியம் நிகழ்வின் மற்றொரு தள நிகழ்வுதான். இரண்டிற்குமே ஒரு ஹிந்து என்கிற முறையில் நான் பொறுப்பேற்கிறேன். நான் ஒரு ஹிந்து என்கிற முறையில் தலித் மற்றும் வனவாசி சகோதரர்களுக்கு எதிராக இந்நாட்டில் இந்நாள் வரை நடத்தப்பட்ட நடக்கும் வன்கொடுமைகளுக்கு பொறுப்பேற்கிறேன். அதற்காக வேதனைப்படுகிறேன். அதற்கு பிராயசித்தமாக இந்நாள் வரை அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்விகளை அவர்களுக்கு மறுக்கப்பட்ட சேவைகளை அவர்களிடம் கொண்டு செல்கிறேன். என்னைப் போலவே என் ஹிந்துத்வ இயக்க சகோதரர்களும் கட்டாயமாக சொல்லமுடியும். ஆனால் இடதுசாரி அறிவுஜீவிகளின் நிலை என்ன ? இன்றைக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளில் பெரும்பாலானோர் மேல்சாதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தமது சமுதாய மேல்நிலையை பெறக்காரணமாக இருந்த அமைப்பின் அடிமட்டத்திலிருக்கும் மக்களுக்கு கடன்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் செய்வது என்ன ? இந்த பொறுப்புகளிலிருந்து விடுபட இவர்கள் ஒரு பொதுமையான பார்ப்பனீயம் (collective brahmninism) என்பதன் மேல் பழியை போட்டுவிட்டு இன்றைக்கு தமது தனிப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்கிறார்கள். தனிவாழ்வில் தம் சொந்த புதல்வர்-புதல்வியருக்கு குலம்-கோத்திரம் பார்த்து திருமணம் செய்துவிட்டு இன்று முற்போக்கு மடாதிபதிகளாக வலம் வரும் குடும்ப இலக்கியவாதிகளை நான் அறிவேன். தமது சொந்த திருமணத்தை அம்மா சொல் கேட்டு கோத்திரம் குலம் பார்த்து திருமணம் நடத்தி அனைத்து சடங்குகளிலும் பங்கெடுத்துவிட்டு பின் இன்று குறுந்தாடியுடன் அறிவுஜீவி இதழ்களை நடத்தும் இடதுசாரிகளை நான் அறிவேன். நூற்றுக்கு 90 இடதுசாரிகள் இன்று இடதுசாரிகளாக இருப்பது வாணிக-வர்த்தக-சமுதாய அந்தஸ்து இவற்றிற்காக மட்டுமே. இந்த கூட்டத்தில் நிச்சயமாக சோதி பிரகாசம் இல்லை என்பது என் திடமான நம்பிக்கை. இதுதான் இந்திய இடதுசாரி இயக்கத்தின் ஒழுக்கவியல் இலட்சணம். இந்நிலையில் நீங்கள் என்னை குறுங்குழு ஒழுக்கம் எனச்சாடும் முன் எனது எழுத்துக்களை சிறிதே படித்துப்பாருங்கள். மதத்தின் வேர்கள் உற்பத்தி உறவுகளிலிருந்து முளைக்கும் மேல்கட்டுமானங்களில் இல்லை மாறாக மானுடத்தின் ஆழ்ந்த உயிரியல் கூறுகளில் அது வேர்கொண்டுள்ளது என்பதில் தொடங்கி மதத்தின் பல தன்மைகளை என் கட்டுரைகள் தொட்டுள்ளன. மதங்களை ஒற்றைப்பார்வையில் குறுக்காமல் ஆபிரகாமிய மதங்களில் அந்த மதங்களின் அதிகார பீடங்களினாலேயே நசுக்கப்பட்ட பரிமாணங்களை நான் திண்ணையில் எழுதியுள்ளேன். (சாமி சத்தியமாக இப்படி பட்டியல் போடுவது எனக்கே அவமானமாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ நான் மதவெறி பிடித்து காலையில் சாப்பாட்டுக்கு இரண்டு கிறிஸ்தவர்களையும் மாலையில் இரண்டு முஸ்லீம்களையும் சாப்பிடும் அரக்க விலங்கு போலவும் மாக்சிஸ்ட்கள் மற்றும் இடதுசாரிகள்தாம் சிறுபான்மையினரின் knights in shining armour போலவும் செய்யப்படும் சித்திரத்தால் வந்த வினை இது.) கத்தோலிக்க துறவியான தெயில் சார்டினும், மகதலேனின் ஞான விவிலியமும், சூஃபி இஸ்லாம் மேற்கத்திய உளவியலுடன் நடத்திய ஆழமான உரையாடலும் அதனால் உளவியல் அடைந்த விரிவும் எனது கட்டுரைகளில் சில. என்றாலும் நான் மதவெறியன்தான் சிற்றுடைமைவாதிதான். ஏன் ? ஏனென்றால் ஆபிரகாமிய விரிவாதிக்க மதங்கள் பாரதத்தில் நடத்தும் ஆக்கிரமிப்பு ஓர் உண்மை. அதற்கு மார்க்ஸியர்கள் துணை போவதும் ஓர் உண்மை. அதற்காக அவர்கள் எவ்வித அறிவியல் எதிர்ப்பு கற்காலத்திற்கும் போக தயங்கமாட்டார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவற்றை வெளிப்படையாக கூறினால் அதன் பெயர் சிற்றுடைமைவாதம். அடல் குறித்த தங்கள் செய்திக்கு நன்றி. உண்மையிலேயே புதிய தகவல்தான். விளக்குவீர்களென நம்புகிறேன். வாழ்க மார்க்சியம் அல்லது மார்க்ஸியம். வாழ்க புரட்சி. ஒழிக பாசிஸ்ட் அரவிந்தன் நீலகண்டனின் ‘வயிறு முட்ட தின்ற சோற்றால் கொழுப்பேறிய ‘ வகுப்புவாத பொய்கள்.
பணிவன்புடன்
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்
[அண்மையில் ஒரு தலித் பஸ்தியில் சேவை நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொண்டிருந்தோம். அங்கு ஆங்கிலமும் கணிதமும் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதென முடிவாயிற்று. இரண்டு வாரங்கள் இது தொடர்ந்த பின் ஒரு நாள், வகுப்பு முடிந்த பின்னொரு சிறு பெண் – செளந்தர்யா (வகுப்பு மூன்று) – தயங்கி தயங்கி வந்தாள். ‘அண்ணா! சாமி பாட்டு சொல்லிக் கொடுப்பீங்களா சாமி கதை சொல்லித்தருவீங்களா ‘ என்று கேட்டாள். பொதுவாக ஒரு சேவா காரியம் செய்கையில் இன்னொன்றுக்கு தாவுவது காரியகர்த்தர்களால் அத்தனைக்கு வரவேற்கப்படுவதில்லை. எனவே ‘சாமி பத்திதான் எல்லோருக்கும் தெரியுமே படிப்புதானே முக்கியம்“ என்றெல்லாம் பதில் சொல்லி சமாளிக்கப்பட்டது. அதன் பின் இந்த கோரிக்கை பெருகியது. ஒரு கட்டத்தில் குழந்தைகள் மிகப்பிடிவாதமாக ‘எங்களுக்கு சாமிப்பாட்டு சொல்லி தராட்டா நாங்க படிக்க வரல்லை ‘ என்று சொல்லுகிற அளவுக்கு இது வளர்ந்தது. இந்நிலையில் ஊர்தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் எங்களிடம் கூறினார், ‘எல்லா மதத்துலயும் அவுங்கவுங்க சாமிய குழந்தைகளுக்கு சொல்லி தாராங்க. இந்த பிள்ளைகளை கூப்பிட்டு பக்கத்து ஊர் சர்ச்ல ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘நீ பேய கும்பிடற கல்ல கும்பிடற. கர்த்தர் தான் உண்மையான தேவன் ‘ அப்படாங்கறாங்க. எங்களுக்கு சாமிய பத்தி சொல்லி தர யார் இருக்கா ? உங்களுக்கு முடியும்னா சொல்லி கொடுங்க. புண்ணியமா போகும். ‘ என்றார். சாட்டையால் பளீரென அடித்த மாதிரி இருந்தது. ‘அற்பபுழுவே நீ யாரடா அவர்களுக்கு வேண்டியது இதுதான் என்று முடிவு செய்ய. அவர்கள் சொன்னதை கேளடா. இவர்கள்தான் வேத கால முனிவர்களின் நேரடி சந்ததிகள். ‘ என்று உள்ளே உணர முடிந்தது. சேவா காரியத்தின் இயற்கை மாற்றப்பட்டு சமய வகுப்பு ஒரு மணிநேரமும் பள்ளிப்பாடங்கள் ஒரு மணிநேரமுமாக என மாறியது. [பக்கத்து ஊர் பாஸ்டரினால் மிரட்டப்பட்டது வேறு கதை] போன வாரம் போகமுடியவில்லை. அந்த சேவா பஸ்தியின் எதிர்ப்புற கடையிலிருந்து 26.12.2004 காலை 11-12 மணிக்குள்ளாக அங்கு செல்லும் இரு சங்க சேவகர்கள் வீட்டிற்கும் போன் வந்திருந்தது. கீச்சுக்குரல் அவர்கள் நலமாக உள்ளார்களா என்று. விசாரித்தது. அந்த கீச்சுக்குரல் நபரின் பெயர் – செளந்தர்யா.
சோதி பிரகாசத்திற்கு எழுதப்பட்ட இந்த எதிர்வினையை செளந்தர்யாவுக்கும் அவளைப்போன்று இத்தேசம் முழுவதுமாக ஞான கங்கை தம் வீட்டுவாசல்களுக்கு வர ஏங்கி நிற்கும் சகோதர சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். சித்தாந்த சுகபோகங்களுக்கு அப்பால் ஞானகங்கையின், சேவாகங்கையின் பகீரதர்களாக மாற திண்ணையை வாசிக்கும் சகோதர-சகோதரிகளை வேண்டுகிறேன்.]
—-
- கடிதம் ஜனவரி 6,2005
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- tsunami aid
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமி உதவி
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- ‘சுனாமி ‘
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்