கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

இப்னு பஷீர்


நான் கேட்ட கேள்வியை விட்டு வேறு எதெதற்கோ நீளமாக பதில் சொல்லி இருக்கிறார் திரு. நீலகண்டன். சாவர்கர் என்பவர் யாரென்று எனக்கு தெரியாது. அவர் கோழையா, நீசரா என்பது பற்றி பிஜேபியும் காங்கிரஸும் முடிவு செய்யட்டும் என்று விட்டு விடலாம் என்பது என் கருத்து.

நான் கேட்டது இதுதான்: ஹிந்துவை ‘அரை வேக்காட்டு பத்திரிக்கை ‘ என்று ஒதுக்கி தள்ளிய நீலகண்டன், அதே வார திண்ணையில், அதே ஹிந்துவின் சகோதர பத்திரிக்கையான Frontline-ல் வெளியான ஒரு கடிதத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுவது ஏன் ? ஒருவேளை இது குப்பையை கிளறும்போது கிடைத்த முத்து போல உங்களுக்கு தோன்றியதோ ?

திரு. நீலகண்டன் எழுப்பிய சில கேள்விகளுக்கு விளக்கங்கள்;

‘வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே! ‘ என்பது இ ?லாத்தின் அடிப்படை. இதை புரிந்து, ஒப்புக்கொண்டு, கடைப்பிடிப்பவரே முஸ்லிம். இதன் மூலம், ஒரு மனிதர் வேறு யாரையும் / எதையும் வணங்குவதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது. இறைத்தூதர்களும் மனிதர்களே!, அவர்கள் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள், வணக்கத்திற்குரியவர்களல்ல என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:

17:70 நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியை கண்ணியப்படுத்தினோம்; இன்னும் கடலிலும், கரையிலும் அவர்களை சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம்

49:13 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.

ஆக, மனிதர்களுக்கிடையே இருக்கும் குலம், கோத்திரம், நிறம், மொழி ஆகிய வேறுபாடுகள், வெறும் அடையாளங்களே தவிர, இவற்றைக் கொண்டு உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது என்பதிலும் இஸ்லாம் தெளிவாக இருக்கிறது.

பள்ளிவாசலில் ஐவேளை தொழுகையின்போது, ஒரு முஸ்லிம் அவர் முடியாட்சி மன்னராக இருந்தாலும், மக்களாட்சி முதல்வராக இருந்தாலும், சக முஸ்லீம்களோடு தோளோடு தோள் உராய்ந்து நின்றுதான் தொழவேண்டும். அவர் நெற்றியை தரையில் வைத்து வணங்கும்போது முன்னால் இருப்பவரின் காலில் இவரது தலை உரசும். அவர் இவருக்கு முடி திருத்துபவராகவோ, வண்டி ஓட்டுபவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாம் காட்டும் சமத்துவத்திற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்