சுகுமாரன்
மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்திப் பேச எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது வாய்ப்பு இது.’காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டஅவருடைய மூன்றாவது தொகுப்பான ‘இடமும் இருப்பும்’ நூலை அறிமுகம் செய்து பேசியது முதல் வாய்ப்பு. அதே நூலுக்கு ‘இந்தியா டுடே’யில் மதிப்புரை எழுதியது இரண்டாம் வாய்ப்பு.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய ஆறாவது தொகுப்பான ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ நூலை வெளியிடும் தருணத்தில் மூன்றாவது வாய்ப்பு.இந்த எல்லா வாய்ப்புகளுக்கும் நன்றி.
என்னுடையதல்லாத கவிதைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி உண்டு.கொஞ்சம் சுயநலம் கலந்த மகிழ்ச்சி.காரணம் பிறருடைய கவிதைகளை வாசிக்கிற சந்தர்ப்பங்களில் நான் எங்கே இருக்கிறேன் என்று சோதனை செய்துகொள்ள முடிகிறது. தவிர நான் இயங்கும் மொழியின் நிகழ்கால அடையாளங்களை இனங்காண்பது எனக்கு எளிதாகவும் இருக்கிறது.இந்தமகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருகிற சில கவிஞர்களில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர்.
மனுஷ்யபுத்திரன் கவிதைகளைப் பேச எடுத்துக்கொள்வதில் எனக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன.அதற்குக் காரணமும் அவர்தான்.
அவரைப் பாதித்த கவிஞர்களில் ஒருவராக என்னையும் அவர் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.சந்தோஷம் தரக் கூடிய இந்தக் காரியம் சமயங்களில் தொந்தரவும் கூட.மனுஷ்யபுத்திரன் கவிதைகளை வாசிக்கும்போதெல்லாம் என்னுடைய சாயல் எங்காவது தட்டுப்படுகிறதா என்று மோப்பம் பிடிக்கிற பழக்கத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது.நம்முடைய தொழில் ரகசியத்தை இவர் கண்டு பிடித்து விட்டாரே என்ற அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியாக அவருடைய முறையில் எழுதிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.அப்படியான ஒரு கவிதையை இங்கே வெளியிடப்பட்ட என்னுடைய தொகுப்பில் பார்க்கலாம்.அதே மாதிரியான கவிதையை மனுஷ்ய புத்திரனின் தொகுப்பிலும் பார்க்கலாம்.ரயில் பயணத்தின்போது கையசைக்கிற ஒரு குழந்தையின் படிமத்திலிருந்து இரண்டு கவிதைகளும் உருவாகியிருக்கின்றன. ஆனால் இரண்டும் வேறுபட்டவை என்பது வாசித்தவுடன் புரிந்து விடுகிறது.
இது இரண்டு செய்திகளை எனக்கு உணர்த்தியது. பாதிப்பு என்பது தூண்டுதல் மட்டுமே.அதிலிருந்து ஒரு கவிஞன் தன்னை உருவாக்கிக் கொள்வது அவனுடைய மனப்பாங்குக்கு ஏற்பத்தான்.இது எனக்குக் கிடைத்த முதல் செய்தி.ஓர் உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். பாரதியைப் பற்றி அண்மையில் வாசித்த ஒரு கட்டுரையில் – ‘காலச்சுவடு’ டிசம்பர் இதழில் ப.சரவணன் எழுதியுள்ள ‘வள்ளலாரும் பாரதியும்’ கட்டுரையில் – ராமலிங்க வள்ளலாரின் பாதிப்பு பாரதியிடம்இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டும் வெவ்வேறு கவியாளுமைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த நோக்கில் கவிஞர்களை மீறி கவிதைக்கு ஒரு பொதுமொழி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.கவிதை இயங்கும் மொழியின் பங்களிப்பு அது.பாரதிக்கும் எனக்குமோ பிச்சமூர்த்திக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமோ பொதுவான பார்வை கிடையாது.படைப்பு சார்ந்த அணுகுமுறையும் பொதுவானதல்ல.ஆனாலும் அவர்களுடைய கவிதையின் தொடர்ச்சியான ஒரு பொதுமொழியையே நாங்களும் கையாளுகிறோம். அதுதான் சாயல்களை வெளிப்படுத்துகிறது.இது இரண்டாவது செய்தி.
இவ்விரு செய்திகளையும் இப்படி விளக்கலாம்.கர்த்தரின் நாணயமும் சீசரின் நாணயமும் வேறு வேறு.ஆனால் இரண்டுக்கும் செலாவணி மதிப்பு என்ற ஒன்று உண்டு.
இன்று தமிழ்க் கவிதை கிட்டத்தட்ட வெகுசன ஊடகமாகிவிட்டது.அதன் குறையும் நிறையும் கவிதைகளிலும் காணப்படுகின்றன. இந்த வார்த்தைச் சந்தையில் தனி அடையாளத்துடன் தெரிய கவிஞன் அரும்பாடு படவேண்டியிருக்கிறது.தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. கவிஞன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது என்பது தான் வாழும் காலத்தையும் சூழலையும் நுட்பமான அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்கிறது என்று கருதுகிறேன். புதிய தலைமுறை கவிஞர்களுடன் இணைந்து நிற்கவும் இந்த நடவடிக்கை அவசியம். தன்னைப் புதுப்பித்துக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிற கவிஞர்களில் ஒருவர் மனுஷ்யபுத்திரன்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த அவருடைய முதல் தொகுப்பிலிருந்து இன்று இங்கே வெளியிடப்பட்ட தொகுப்புவரையிலான கவிதைகள் அதற்குச் சான்று.இந்தப் புதுப்பித்தலை இரண்டு வழிகளில் மனுஷ்யபுத்திரன் வசப்
படுத்தியிருக்கிறார் என்று கருதுகிறேன்.
ஒன்று – தன்னையே மீறிச் செல்வது. இரண்டு – தனது கவிதை மொழியை மறுவார்ப்புச் செய்வது.
என் படுக்கையறையில் யாரோ ஒலிந்திருக்கிறார்கள் தொகுப்பில் இடம் பெறும் ‘அம்மா இல்லாத ரம்ஜான்’ கவிதையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ‘சில பிரிவுகள் கவிதையும் மனவெறுமையின் காட்சிகள்.ஆனால் அவை உணரப்பட்டதும் எழுதப்பட்டதும் வித்தியாசமான முறையில்.இரண்டுக்குமான இடைவெளியில் இந்த மீறலைக் காண முடியும்.
கவிதை வாசிப்பின்போது சற்று நுட்பமாகப் பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண்பட்டதும் அதே சமயம் பரஸ்பரம் முழுமை செய்வதுமான மொழிகளைப் பார்க்கலாம்.அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற ஒரு மொழி.அனுபவத்திலிருந்து
பெற்றவற்றைப் புனைந்து முன்வைக்கிற ஒரு மொழி.மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது”,மணலின் கதை’,’கடவுளுடன் பிரார்த்தித்தல்’ ஆகிய மூன்று தொகுப்புகளும் அனுபவத்தின் புனைவை ஆதாரமாகக் கொண்டவை என்று வகைப்படுத்தலாம்.இது சற்று சிரமமான வேலை.சங்கீதத்தைப் போலவே அதனிடையே நிலவும் மௌனத்தையும் இசையாக்குவதற்குச் சமமானது. இந்த சாத்தியம்தான் மனுஷ்யபுத்திரன் கவிதைகளைப் பொருட்படுத்திப் பேச அடிப்படையாக அமைகிறது.
மனுஷ்யபுத்திரன் கவிதைகளை கவனிக்க நேர்ந்த போதெல்லாம் நான் வந்து சேர்ந்த ஒரு கருத்து-கவிதைத் தருணங்களை வார்த்தையால் நிரப்ப வேண்டியிருக்கிறதே என்ற சோகம் கவிதைகளில் இழையோடுகிறது என்பது. இது ஒரு சவால்.இதை இவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை ஆர்வத்துடன் கவனித்து வந்திருக்கிறேன்.சொல்லுக்கும் சொல்லப்படாததற்கும் இடையில்
வாசிப்பவன் புரிந்து கொள்வதற்குத் தோதான மனவெளியை உருவாக்குவதன் மூலம் இந்தச் சவாலை வெற்றிகொண்டிருக்கிறார் என்பதை அண்மைக்காலக் கவிதைகள் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக ‘இந்த அறையில்’ கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.
இந்த அறையில்
கொல்லப்பட்ட மனிதனின் ரத்தக்கறைகளைக் கழுவ
எனக்கு
ஒரு பக்கெட் தண்ணீர் போதும்.
இந்த அறையில் ஒரு மனிதனை நிராகரித்துச் சென்ற
ஒருவரின் பிம்பங்களைக் கழுவ
எனக்கு
ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்.
ஆனால் இந்த ரீதியிலான கவிதையாக்கம் கவிஞனையும் வாசிப்பவனையும் கவிழ்த்துவிடக் கூடிய ஆபத்தைகொண்டிருப்பது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.சாமியார்கள் பிதற்றுவது கூட ஆன்மீக உபதேசமாக அருள்வாக்குகளாகக் கருதப்படுவது போன்ற ஒரு நிலையுடன் இதை ஒப்பிடலாம்.
கவிதைத் தருணங்களை வார்த்தையால் நிரப்ப வேண்டியிருக்கிறது என்பது கவிதையின் சோகம் மட்டுமல்ல.வாழ்க்கையின் சங்கடமும் கூட.அதுதான் வார்த்தையில் பிரதிபலிக்கிறது என்று சொல்வது தவறாகாது. கவிதைத் தருணம் என்று நான் குறிப்பிடுவது மனோகரமான முகூர்த்தங்களை அல்ல; தீவிரமான மனநிலையை. தீவிரமான வாழ்க்கைச் சிக்கலை.தீவிரமான
பருவத்தை.கவிதையின் தீவிரமான காலத்தை.
அந்த நோக்கில் நமது காலத்தோடு ஒட்டிய பல்வேறு பொருட்களை இந்தக் கவிதைகள் கொண்டிருக்கின்றன.பெரும்பாலும் அவற்றின் துக்கத்துடனும் வன்மத்துடனும். அவற்றை மீறிய அன்பான, அமைதியான, இதமான சூழலுக்கு வாழ்க்கையை நகர்த்திச் செல்ல முடியாதா என்ற பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. ‘ பிரியத்தோடு தந்த விஷத்திலும் இல்லாமல் போகவில்லை கொஞ்சம் பிரியம்’ என்கிறது ஒரு கவிதை.
மனுஷ்யபுத்திரன் கவிதைகளை வாசிக்குபோது எப்போதும் ஒரு காட்சி தென்படும்.அவருடைய தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் அவரே சித்தரித்த காட்சி.யாரோ ஒரு விளக்கை ஏற்றிவைப்பது போலவும் அவர்களே அதை ஊதி அணைத்துவிட்டுப் போவது போலவுமான ஒரு காட்சி. கொஞ்சம்சிந்தித்தால் நம் எல்லாருடைய தனி வாழ்க்கையிலும் நம் அனைவருடைய
சமூக வாழ்க்கையிலும் இந்த வெளிச்ச விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.வெளிச்சம் நிரந்தரமாக ஒளிரும் காலச் சூழலுக்காக மனுஷ்யபுத்திரனுடன் சேர்ந்து கடவுளுடன் பிரார்த்திக்கலாம்.
(டிசம்பர் 10 ஆம் நாள் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் உயிர்மை பதிப்பகம் ஒருங்கமைத்த ஏழு கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் மனுஷ்யபுத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பை முன்வைத்து நிகழ்த்திய உரை.)
nsukumaran@gmail.com
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.