கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
நாணல் புதர்ப்பக்கம்
தவளைக் கச்சேரி
குழலிசை கூடவே
2
கதை வேணாம்
தூங்கி விட்டது குழந்தை
தூக்கம் வராத பாட்டி
3
ராஜகுமாரன் வந்து
தூக்கிப் போனான் ராணியை
மிட்டாய்க் கடைக்கு
4
அரசியல்வாதி பிறந்தநாள்
தெருவெங்கும் போஸ்டர்
வாழ்த்தும் நகர மாடுகள்
5
வருத்தமாய் மரம்
வேறெங்கோ வழி கேட்கிறது
மேகம்
6
கூடிவாழ்ந்தால் கோடிநன்மை
கூடாமல் வாழ்ந்தால்?
கேடிக்கு நன்மை
7
உயிரையும் கொடுப்பேன்
என்றவன் உயிர்
இப்போது அவள் வயிற்றில்
8
எங்கோ கேட்கும் ஒப்பாரி
தண்ணீர்க் குழாயிலிருந்து
ஒரு சொட்
9
ஐவிரலில் ஒன்றைத் தொடு
பட்டாம்பூச்சியே
பூங்கொத்தை நீட்டும் மரம்
10
புள்ளி நிலவாகி
மீண்டும் விலகிச் சுருங்கும்
கார் வெளிச்சம்
11
எல்லாமே காணாமல்
போய்விட்ட இரவு
ஓ நீரோடைச் சலசலப்பு
12
கடுங்கோடை
இருண்ட கிணறு
காலி வயிறு
13
பிச்சைக்காரனின்
ஓழுகும் குடிசை
தட்டில் சொட்
14
வலைக்குள்ளே
மாட்டிக் கொண்டது
சிலந்தி
15
நேற்று குடை கொணர்ந்தேன்
இன்று வந்திருக்கிறாய்
சரி வா மழையே
16
உதிரும் சிறு பூவை
ஓடி எட்டுமுன்
அந்தோ விழுந்துவி†டது
17
எத்தனை அழகு அவள்
தாண்டிப் போகுமுன்
கண்ணை மூடிக்கொண்டான்
18
பொம்மைக் குதிரையின்
மேலே குழந்தை
பிரபஞ்சம் சிறியது
19
அழும் வீட்டுக்குழந்தை
தொழுவத்தில்
பால்சிந்தும் பசு
20
ஜவுளிக்கடையில் பரபரப்பு
திருடு போய்விட்டது
ரகசிய கேமெரா
21
பஸ் வர
கரையும் கூட்டம்
மீண்டும் தெருநாயின் தனிமை
22
கடும் வெயில்
செருப்பில்லாமல் பிச்சைக்காரன்
கூட ஒடி வரும் நாய்
23
சிகெரெட் பிடித்தபடி
அப்பாவிடம் பேசும் மகன்
ஹலோ
24
மரத்தில்
பெரிய பட்டாம்பூச்சி
சிக்கிக்கொண்ட பட்டம்
25
மலையுச்சியில்
அவள் வீடு
கொண்டையூசி வளைவுகள்
26
உயரமாய் மலை அழகு
மலையில் பூத்த சிறு பூ
அதுவும் அழகு
27
மலைமேலமர்ந்த
முருகக் கடவுள்
மூட்டுவலி அறியாதவர்
28
கடவுள் ஏன் தலைகீழாய்
கவலைப்பட்டன
வௌவால்கள்
29
கூடவே ஓடிவரும்
புழுதி
நிற்காமல் போகும் பஸ்
30
நேற்று பெய்த மழை
புதிதாய் முளைத்த புல்
அடியில் தவளைக்குஞ்சு
31
புல்லுக்கு வெளிச்சம்
எறும்புக்கு நிழல்
கடவுள் அருள்வடிவம்
32
மரம் உதிர்த்த சருகுகள்
பெருக்கிவிட்டு அமர்கிறாள்
மிட்டாய் விற்கும் கிழவி
33
காட்டுக்குள்
உறுமும் புயல்
பதுங்கும் புலி
34
வீட்டுக்கொரு
மரம் வளர்ப்போம்
மரத்தடியே எங்கள் வீடு
35
ஓட்டப்பந்தயம்
கடைசியாக வந்தான்
நடுவர் கடன் கொடுத்தவர்
36
மூணு விக்கெட்டும் சரித்ததும்
அம்பயர் காட்டினார்
மூன்று விரல்
37
அம்மா என்றான்
பிச்சைக்காரன்
முறைக்கும் குழந்தை
38
காலி பள்ளிக்கூடம்
வாசல் மொட்டைமரம்
கோடை விடுமுறை
39
சவப்பெட்டி புறப்பட
முன்னோடும் நாய்
கல்லறை நோக்கி
40
மழை அழகு
வானவில் அழகு
அதைவிட அழகு கண்கள்


Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்