கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

மலர்மன்னன்


சோனியா காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, விவரம் அறியாமலேயே கச்சத்தீவு பற்றி மீண்டும் தவாறன கருத்தைத் தெரிவித்து இலங்கைக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பொதுவாகவே, சோனியா காங்கிரஸ் தலைமையிலும், தி.மு.க.வின் உறுதியான பக்க பலத்துடனும் நடைபெற்றுவரும் மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் விவரம் தெரியாமலேயே எல்லாம் அறிந்தவர்கள் போலப் பேசுகிறவர்களாகவும், சிறிதும் தயக்கமின்றி ஊழல்களில் துணிந்து ஈடுபடுகிறவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். சோனியா காங்கிரசின் பினாமி பிரதமர் மன்மோகன் சிங்கே ஊழல்களை அனுமதிப்பது கூட்டணி தர்மம் என்று தமது சமீத்திய ஊடக மாநாட்டில் நியாயப்படுத்திவிட்ட பிறகு இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

அண்மையில் ஊடகத்தினரிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தாம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் என்கிற மயக்கத்தில் கச்சத்தீவு பாரதத்தால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் ஒரு முடிந்துபோன விஷயம் என்றும் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டார்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமாகிவிட்ட நிலையில் சர்வ தேச விதிமுறைகளை ஒட்டியும், வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலும் அதனைத் திரும்பப் பெறுவது இயலாத காரியம் என்று கூறியிருக்கிறார், கிருஷ்ணா. இவர் முன்னரே இவ்வாறு மக்களவையிலேயே பேசியிருக்கிறார். திரும்பவும் அவர் இவ்வாறு பேசுவது வருங் காலத்தில் இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடைபெறும் சந்தர்ப்பம் கிட்டுமானால் அப்போது பாரதத்தின் நிலைபாட்டுக்கு பாதகமாக இருக்கும் என்கிற விவஸ்தை கூட சோனியா காங்கிரஸ் வெளியுறவு அமைச்சருக்கு இல்லை!

வரலாற்று அடிப்படையில் பார்த்தால் கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமாகவும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாகவும் காலங் காலமாக இருந்து வந்துள்ளது எனபதற்கு இன்றளவும் சமஸ்தான ஆவணக் காப்பகத்தில் ஆவணம் உள்ளது. பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தியில் ராமேஸ்வரதிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கச்சத்தீவு உள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்துக் கடலோர மீனவர்களும், புதுக்கோட்டை, நாகைப் பகுதி கடலோர மீனவர்களும் காலங் காலமாகக் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடற் பகுதியில் மீன் பிடித்தும் கச்சத்தீவை வலைகளை உலர்ததவும் ஓய்வுகொள்ளவும் பயன்படுத்தியும் வருகின்றனர். இது அவர்களின் பாரம்பரிய உரிமையாகும்.

1974-ல் திருமதி இந்திரா காந்தி பிரதமராகவும், தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராகவும் இருந்த காலகட்டத்தில், ஜூன் 28 ஆம் நாள் கச்சத்தீவை பாரதம் இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையொப்பமாகியது. இது கடல் எல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்தமேயன்றி, நமக்குச் சொந்தமான நிலப் பரப்பை முற்றிலுமாக தாரை வார்க்கும் ஒப்பந்தம் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஒப்பந்த விதிகளுள் ஏதேனுமொன்று மீறப்பட்டால்கூட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட முடியும்.

கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்க முடிவு செய்யுமுன்பு அது குறித்து அதனால் பாதிக்கப்படக் கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. கருத்தறியும் வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. கச்சத்தீவு வெறும் மணல்வெளி என்றும், அங்கு அந்தோனியாருக்கு ஓர் ஆலயம் மட்டுமே இருப்பதாகவும், அதுவுங்கூட ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவுக்குத்தான் தமிழ் நாட்டில் கிறிஸ்தவ மதம் சார்ந்த தமிழக மீனவ மக்கள் வந்து செல்வார்கள் என்றும் மற்றபடி கச்சத்தீவுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை என்றும் சொல்லப்பட்டது. ஆகவே இலங்கையுடன் சுமுகமான உறவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா காந்தி முன்யோசனை இன்றித் தம்மிச்சையாகக் கச்சத் தீவின் மீதான நமது பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுக்க முன் வந்தார். இந்திரா காந்தியுடனான சுமுக உறவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு கருணாநிதியும் தமிழக மீனவர்களுக்கு பாதகமான முடிவுக்குத் தெரிந்தே தலை வணங்கினார்.

கச்சத்தீவு கைமாறிப்போனால் பிற்காலத்தில் நமது பாதுகாப்பிற்கே ஆபத்து விளையலாம் என்பது கூட அப்போது எண்ணிப்பார்க்கப்படவிலை! இப்போது அங்கு சீன நடமாட்டம் இருப்பதாகத் தெரிகிறது!

கச்சத்தீவு இலங்கையின் வட கிழக்கில் உள்ள யாழ்ப்பாண தீப கற்பத்தினை ஒட்டியிருக்கும் சிறு சிறு தீவுக் கூட்டங்களிலிருந்து சிறிது விலகி, ராமேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். எனவே அது இலங்கையைக் காட்டிலும் பாரதத்தின் கடல் எல்லைக்கு உட்பட்டதாகக் கொள்வதே பொருத்தமாகும்.

கச்சத்தீவு குறித்த கடல் எல்லை ஆதிக்க ஒப்பந்தத்தின் ஐந்தாவது விதியில், பாரதத்திலிருந்து மக்கள் கச்சத்தீவுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றிச் சென்று வரலாம் என்றும் கச்சத்தீவுக்குச் செல்ல பாஸ்போர்ட்டோ இலங்கையின் வீஸாவோ அவர்களுக்குத் தேவையில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆறாவது விதி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வரலாம் என்று தெரிவிக்கிறது. இவ்விதிகளுக்கு உடன்பட்டுத்தான் கச்சத் தீவை இலங்கை தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக்கொண்டது.

கச்சத்தீவு கடல் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தான சமயம் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கூட, தமிழக
மீனவர்கள் தமது பாரம்பரிய உரிமையாகக் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வருவதற்கு ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று மக்களவையில் தெளிவு படுத்தினார்.

கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் டைகர் ப்ரான் எனப்படும் பெரிய வகை இறால் அபரிமிதமாகக் கிடைத்து வருகிறது. இதற்கு மீன் சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. தமிழக மீனவர்கள் காலங் காலமாகக் கச்சத்தீவு கடல் பகுதிக்குச் சென்று இவ்வகை இறால்களைப் பிடித்துப் பயனடைந்து வருகிறார்கள். 1983 வரை தமிழக மீனவர்களுக்கு இதில் எவ்வித இடையூறும் இருக்கவில்லை. அதன் பிறகு ஈழப் போராளிகள் கரம் வலுத்துவிட்டதைக் காரணங் காட்டி இலங்கை அரசு கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் நடமாட்டத்திற்குத் தடை விதித்தது. அதுமுதலே கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கப் பாரம்பரிய உரிமையுடன் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஈவிரக்கமின்றித் தாக்கப் படுவதும், கொல்லப்படுவதும், பிடித்த மீன்களையும் வலைகளையும் அவர்கள் கைப்பற்றிகொள்வதும் படகுகளை சேதப் படுத்துவதும் தொடர்கதையாகிவிட்டன.

இன்று இலங்கையில் நிலைமை முற்றிலும் மாறிவிட்ட போதிலும் தமது பாரம்பரிய உரிமையுடன் ஒப்பந்த விதியின் பிரகாரம் கசத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது நீடிக்கிறது. இந்த அடாத செயலை நமது சோனியா காங்கிரஸ் மத்திய வெளியுறவு அமைச்சர் விவரம் புரியாமலேயே நியாயப் படுத்திப் பேசுவதும், நமது முதல்வரும் தவறு ஏதோ நம் தமிழக் மீனவர்களிடம்தான் உள்ளது என்பதுபோல் உபதேசம் செய்வதும் கொடுமையிலும் கொடுமை!

ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே கடலில் ஒன்பது கிலோ மீட்டர் வரை வெறும் பாறைகள்தாம் உள்ளன. அதன்பிறகு 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலங்கையின் கடல் எல்லை வந்துவிடுகிறது. ஆக, அங்கு பாரதத்திற்கென்று மீன் பிடிக்கத் தக்கதாகக் கடல் பகுதியே இல்லை. இந்நிலையில் எங்கு போய் மீன் பிடிப்பது என்று தங்களின் பாரம்பரிய உரிமையை இழந்த ராமேஸ்வரத்து மீனவர்கள் கேட்கிறார்கள்.

தமிழக மீனவர்களின் உயிர் வாழும் உரிமைக்கான பிரச்சைனையை நாடாளுமன்றத்தில் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரின்போதே எழுப்பித் தமிழக மீனவர்கள் சார்பில் போராடப் போவதாக பாரதிய ஜனதா உறுதி கூறியுள்ளது. மக்களவையில் அதிகாரப் பூர்வ எதிர்க் கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜே அண்மையில் இவ்வாறு பா.ஜ.க. சார்பில் உறுதி கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது. பா.ஜ.க. மத்தியில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றால் கச்சத்தீவின் மீதான கடல் எல்லை உரிமையைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்!

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்