ஒரே ஒரு வழிதான்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

புகாரி


உன்னைப் பிரிந்து நான்
தூரமாய்ச் செல்லச் செல்ல
மனதுக்குள் மூச்சு முட்டும்
ஏதோ ஒரு பாரம்
தன் எடையை
அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது

O

உன் நினைவுகள்
ஒன்றிரண்டாய் வந்து வந்து
என்னை
உசுப்பிவிட்டது போக

இன்று
மாநாடே கூட்டி
வா… வா… என்றழைக்கும்
மரண வாயிலைத்
திறந்து விடுகின்றன

O

என் மூச்சுக் காற்று
என்னை
வாழவைத்ததெல்லாம்
பழைய கதை

இன்று
அந்த மூச்சுக் காற்றே
என் மூச்சை நிறுத்த வந்த
நெருப்புக் காற்றாகி விட்டது

O

இப்போதய என் விழிகள்
திறந்தபோதும் நீ
மூடிய போதும் நீ

O

இன்று
தெரிந்து கொண்டேன்
நான் என்னை
மொத்தமாகவே உன்னிடம்
இழந்து விட்டேன்
என்ற உண்மையை

O

நீயென்
அருகில் இருந்த போது
திடாரென்று விரித்துக்கொண்ட
என் சிறகுகளுக்குத்தாம்
எத்துணை வலிமை

என்னைத் தூக்கிக் கொண்டு
நான் கண்டறியாத
ஏதேதோ
சொர்க்க வெளிகளிலெல்லாம்
அலைந்தனவே

இன்று
தேடிப் பார்த்து
சிறகுகளைக் காணாத
என் பார்வை
நிலைகுத்தி நிற்கிறது

O

விசித்திரம் தான் !

உன்னை விட்டு நான்
தூரமாய்
நடக்க நடக்க
சிறுமுட் பரப்பாய்த் துவங்கிய
என் பாதை
நெருப்பு முட்காடாய்
விசுவரூபம் எடுப்பது

O

ஆச்சரியம்தான் !

உன்
விழிகளின் ஒளிக்கீற்று
என்னை
இவ்வளவு தூரம்கூட
விடாமல் துரத்தி வந்து
தாக்குவது

O

இவற்றிலிருந்து
தப்பித்துக் கொள்ள
என்ன வழி ?

ஒரே ஒரு வழிதான்
எனக்குத் தெரிகிறது

அன்பே !
நீளமான
உன் கார் கூந்தலை
என்பால் அவிழ்த்துவிடு

அதன்
நுனியில் தொற்றிக்கொண்டு
மீண்டும் நான் உன்
அந்தப்புரத்துக்குள்ளேயே
வந்து
விழுந்துவிடுகிறேன்.

*
அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி