சேதுபதி அருணாசலம்
ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய “விலங்குப் பண்ணை’ (Animal Farm) இன்றைக்கு வெளியாகும் அனைத்து ‘சிறந்த 100 புத்தகங்கள்’ பட்டியலிலும் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நாவல். சோவியத் ரஷ்யாவும், கம்யூனிஸமும் உலகில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த நாட்களின் உச்ச கட்டத்தில் ஸ்டாலினையும் இன்ன பிற சோஷலிஸ்டுகளையும் பன்றிகளாக உருவகப்படுத்தி எழுதுவதற்கு நிஜமாகவே நிறைய துணிச்சல் வேண்டும். புத்தகமெங்கும் ஆர்வெல்லின் கிண்டலும், எள்ளலும் இழையோடி ஒரு புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.
‘கம்யூனிச எதிர்ப்பு’ என்பதை மறந்துவிட்டுப் படித்தாலும், இப்புத்தகம் எந்தவிதமான கொள்கை சார்ந்த இயக்கத்திலும் இருக்கக்கூடிய குறைகளையும், சர்வாதிகாரம் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இயக்கத்தை செல்லரித்துவிடும் என்பதையும் அழகாக விளக்குகிறது. ஆர்வெல் எதிர்பார்த்தது போலவே இப்புத்தகத்தை அச்சமயத்தில் பிரசுரிக்க எவரும் முன்வரவில்லை. அப்போது எழுந்த ஏமாற்றத்தின் உச்சத்தில் ஜார்ஜ் ஆர்வெல் தன் புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையை இங்கே மொழிபெயர்த்துள்ளேன். விரக்தியில் எழுதப்பட்டாலும், இம்முன்னுரை வெறும் உணர்ச்சிக்குவியலாக இல்லாமல், ஆதாரங்களை முன்னிறுத்தி, கம்யூனிஸ்டுகளையும், சோவியத் ரஷ்யாவைக் கண்மூடித்தனமாக ஆதரித்த பிரிட்டிஷ் பத்திரிகைகளையும் பற்றியதொரு ஆய்வுக்கட்டுரையாகவே உள்ளது. ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்ற பெயரில் ஆர்வெல் எழுதிய இந்த முன்னுரை, புத்தகத்துடன் பிரசுரிக்கப்படவில்லை. சில ஆண்டுகள் கழித்து இக்கட்டுரை இப்புத்தகத்திற்கான ஆர்வெல்லின் கைப்பிரதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பாசிஸத்தை அழிக்க அராஜகத்தைக் கையில் எடுத்ததில் கம்யூனிஸ்டுகளும் பாசிஸ்டுகளாகி விட்டனர் என்னும் ஆர்வெல்லின் கூற்று நிச்சயம் சிந்திக்க வைக்கிறது.
இக்கட்டுரையில் ஆர்வெல் சொல்லியிருப்பவை இன்றும் தமிழ்நாட்டின் பல நிகழ்வுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கின்றன. ஆர்வெல் கண்டித்து எழுதும் கண்மூடித்தனமான கொள்கைப்பிடிப்பு தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களிடமும் பரவலாகக் காணக்கிடைப்பது வருத்தமூட்டுவதாய் இருக்கிறது.
[“குறைந்தது நம்முடைய அரசை விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஸ்டாலினைத் தாக்கும் எதையும் எவரும் அச்சிட மாட்டார்கள், ஆனால் சர்ச்சிலைத் தாக்கி எழுதுவதோ ஏதும் ஆபத்தில்லாதது, எளிது. குறைந்தது நாம் அதைப் புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் காண முடியும்.”
“வெளிப்படையாக சொல்லப்போனால், ரஷ்யர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. அதையே நாம் செய்தால் அது மிகப்பெரும் பாவம். இந்தக் கருத்துவேறுபாட்டிற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்: சொந்த தேசமான இங்கிலாந்து மீதான நாட்டுப்பற்றைவிட ரஷ்யாவின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் இன்றைய சிந்தனையாளர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கவேண்டும் என்று ஒவ்வொருக்கும் இருக்கும் கோழைத்தனமான ஆசை.”
ஆர்வெல்லின் இந்த வரிகள் நம் தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் ஒரு “அறிவுஜீவி” ஆங்கில தினசரிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! விழுந்து விழுந்து குஜராத்தை நியாயமில்லாமல் விமர்சித்த அந்த தினசரி, சீன இடதுசாரிகளின் முட்டாள்தனமான செய்கைகள் ஒன்றையாவது விமர்சித்து ஒரே ஒரு கட்டுரையாவது எழுதியிருக்கிறதா?
மேலும் ஆர்வெல் “சோவியத் சேவகம்” என்று இடித்துரைப்பதற்கு ஈடாகத் தமிழகத்தில் மாவோயிசம், சீன தேசியம் ஆகியவற்றுக்கு சேவகம் செய்வதே பல ‘முற்போக்கு’ அறிவுஜீவிகளுக்குக் கடமையாகி இருக்கிறது. இதைத்தவிர இந்தியா, இந்திய ஜனநாயகம், இந்திய அரசியல் மேலும் இந்து மதம் ஆகியன தொடர்ந்து கண்டிக்கப் படுகின்றன. எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறையையும், பாசிசத்தையும், அழிப்பையும் கைக்கொள்ளும் இந்த இயக்கங்களுக்கும், அதன் அறிவுஜீவி ஆதரவாளர்களுக்கும் இந்திய அரசையோ, இந்திய ஜனநாயகத்தையோ விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது.
“அறிவுஜீவி” என்ற வார்த்தையை ஆர்வெல் இக்கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் அதே அளவு எள்ளலுடன்தான் நானும் இங்கே பயன்படுத்தியிருக்கிறேன்.]
இக்கட்டுரையில் ஆர்வெல் சொல்லியிருக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய முக்கியமான இன்னொரு விஷயம் “கருத்துச் சுதந்திரம்”. முக்கியமாகத் தமிழ் இலக்கிய வட்டத்திற்கு இது மிகவும் பொருந்தும். தன்னுடைய கருத்துக்களையோ, உண்மையான, நடுநிலையான விமர்சனங்களையோ, கொள்கை அளவினாலான எதிர்ப்பில்லாமல் தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகாமல், இங்கே எவரும் சொல்லிவிடவோ, எழுதிவிடவோ முடியாது. கண்மூடித்தனமான கொள்கைப் பிடிப்பு என்பது மட்டுமில்லாமல், விமர்சனம் செய்யும் எவரையும் ஒரு கொள்கை வட்டத்திற்குள் சிக்கவைக்காமலோ, இயக்கம் சார்ந்த முகமூடியோ மாட்டிவிடாமலோ ஓய்ந்து போவதில்லை இலக்கிய வட்டாரம். இலக்கிய வட்டாரம் ஒரு புறமிருக்க தமிழ் உணர்ச்சி, தமிழ்த்தேசியம் என்றெல்லாம் பேசி, எழுத்து, திரைப்படம், தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களிலும் பரவிவிட்ட போலி கொள்கைப்பிடிப்பு கொண்ட அரசியல் அமைப்புகளும் மிகுந்த வருத்தம் தருவதாய் இருக்கின்றன. இப்படிப்பட்ட போலி கொள்கை முகமூடி அணிந்த அமைப்புகளிடமிருந்தும், அரைவேக்காட்டு சிந்தனையாளர்களிடமிருந்தும் விடுபட்டு, மெய்யான சிந்தனையாளர்கள், இயக்கங்கள் உருவாகும் ஆரோக்கியமான சூழல் தமிழ்நாட்டில் உருவாக ஏதேனும் கட்டுரை எழுதித்தருமாறு ஆர்வெல்லின் ஆவியிடம் வேண்டிக்கொள்கிறேன்.
‘பத்திரிகைச் சுதந்திரம்’
(விலங்குப்பண்ணை – Animal Farm நாவலுக்கு ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய வெளியிடப்படாத முன்னுரை)
இந்தப் புத்தகத்திற்கான கரு கிட்டத்தட்ட 1937-ஆம் ஆண்டே உருவாகி விட்டிருந்தாலும் 1943-ஆம் ஆண்டு இறுதி வரை இதை நான் எழுதவில்லை. ஆனால் எழுதும்போதே இதை பதிப்பிப்பது மிகவும் கடினம் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. (இத்தனைக்கும் புத்தகம் என்று எதை வெளியிட்டாலும் விற்குமளவுக்கு புத்தகத் தட்டுப்பாடு இருந்த காலம் அது!) முடித்ததை ஏற்கனவே நான்கு பதிப்பாளர்கள் நிராகரித்து விட்டிருக்கிறார்கள். இந்த நால்வரில் ஒருவருக்குத்தான் அதற்கு கொள்கை ரீதியிலான காரணம் இருந்தது. புத்தகத்தை நிராகரித்த மற்ற மூவரில் இருவர் ஏற்கனவே நிறைய ‘ரஷ்ய எதிர்ப்பு’ புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றனர். மற்ற ஒருவருக்கு எந்த விதமான அரசியல் சார்பும் இருக்கவில்லை. ஒருவர் பிரசுரிப்பதற்கு ஒப்புக்கொண்டு வேலைகளை ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட அச்சடிக்க ஆரம்பிக்கும்போது அவருக்கு ஒரு சந்தேகம் – எதற்கும் இருக்கட்டுமென்று ‘தகவல் அமைச்சகத்தை’ (Ministry of Information) ஒரு வார்த்தை கேட்டுவிடுவதன்று கடிதமெழுதிப் போட்டார். புத்தகத்தை வெளியிட்டால் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றி கிட்டத்தட்ட மிரட்டி, ஒரு ‘அறிவுரை’க் கடிதத்தை அமைச்சகம் பதிலாக அனுப்பியது.
அதன் பிறகு அந்த பதிப்பாளார் எனக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி:
“விலங்குப் பண்ணை புத்தகத்தைப் பற்றி தகவல் அமைச்சகத்தின் ஒரு முக்கிய அலுவலரின் கருத்துகளை உங்களிடம் சொல்லியிருந்தேன். அவர் கருத்துகள் எனக்குள்ளும் இது குறித்து நிறைய சிந்தனைகளைத் தூண்டியிருக்கின்றன என்பதை நான் இங்கு ஒப்புக் கொள்கிறேன். … தற்போது வெளியிடுவதற்குத் தக்கதல்ல இந்தப் புத்தகம் என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விலங்குகளின் நீதிக்கதை பொதுப்படையாக சர்வாதிகாரம் மேலும் சர்வாதிகாரிகளைப் பற்றியதாக இருந்திருந்தால் அதை பொதுமக்கள் படிப்பதற்காக வெளியிடுவது சரியானதாக இருக்கும். ஆனால் கதையின் போக்கு, இப்போது எனக்குப் புரிகிற வகையில், ரஷ்யக் கூட்டு அரசுகளின் (சோவியத்துகள்) மேலும் அவற்றின் இரண்டு சர்வாதிகாரிகளின் போக்குகளை அவ்வளவு முற்றாகக் கவனிக்கிறது. இதர சர்வாதிகார அமைப்புகளை விலக்கி ரஷ்யாவுக்கு மட்டுமே இதைப் பொருத்த முடியும் வகையில் இருக்கிறது. இன்னொன்று – கதையின் முக்கிய சமூகம் பன்றிகளாக இல்லாதிருந்தால் அவ்வளவு மோசமாகத் தெரியாது. (திருத்தத்துக்கான இந்த யோசனை அப்பதிப்பாளரின் சொந்தக் கருத்தா, இல்லை அமைச்சகத்தில் துவங்கியதா என்பது தெளிவாகவில்லை. ஆனால் அதிகாரத் தொனி இதில் ஒலிக்கிறது- ஆர்வெல்லின் குறிப்பு.) ஆளும் சமுகமாகப் பன்றிகளைத் தேர்ந்தெடுத்தது ஐயமேதும் இல்லாமல் பலரையும் வருத்தும். தொட்டாற்சிணுங்கிகளான எவரையும் புண்படுத்திவிடும். ரஷ்யர்களோ அப்படிப்பட்டவர்கள்தான்.”
இந்த விஷயம் ஒரு நல்ல அறிகுறியே அல்ல. தன்னால் ஊக்கப்படுத்தப்படாத(sponsored) ஒரு புத்தகத்தின் வெளியீட்டைத் தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருப்பது விரும்பத் தக்கதல்ல. (போர்க் காலத்தில் பாதுகாப்புக்கான தணிக்கை இருப்பதற்கு பொதுவாக எதிர்ப்பு இராது.) ஆனால் இந்த நேரத்தில் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தின் மிக முக்கிய எதிரி தகவல் அமைச்சகமோ அல்லது அரசுடைய வேறு அமைப்பின் நேரடித் தலையீடு இல்லை. வெளியீட்டாளர்களும் பதிப்பாசிரியர்களும் சில விஷயங்களை அச்சில் வராமல் பார்த்துக் கொள்ள தனி முயற்சி எடுத்துக் கொள்வதற்குக் காரணம் அவர்கள் அரசாங்கத்தால் தண்டிக்கப் படுவார்கள் என்பதல்ல. மாறாக பொதுமக்களின் கருத்தைப் பற்றிய பயமே.
இந்தப் போர்க்காலத்தில் தணிக்கையில் அரசாங்கத்தின் தலையீடு அத்தனை மோசமானதாக இல்லை என்பது நடுநிலைச் சிந்தனை உள்ள எந்தப் பத்திரிகையாளருக்கும் தெரிந்திருக்கும்.. இந்தக் கட்டத்தில் இயல்பானதே என்று நாம் கருதக்கூடிய அடக்குமுறை நோக்குள்ள ‘ஒருங்கிணைப்பு’ எதுவும் நம் மேல் சுமத்தப் படவில்லை. பத்திரிக்கையாளருக்கு நியாயமான ஒரு சில மனக்குறைகள் இருப்பினும், பொதுவாகப் பார்த்தால் அரசாங்கம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும் சிறுபான்மைக் கருத்துகளை வியப்பு தரும் வகையில் பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறது. இலக்கியத் தணிக்கையைப் பொறுத்த மட்டில் மோசமான உண்மை என்னவென்றால் இங்கிலாந்தில் இது பெருமளவும் தன் முனைப்பால் நடக்கிறது. மக்களுக்கு உவப்பில்லாத கருத்துகள் வாயடைக்கப் படுவதும், உறுத்தலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் அரசாங்கத்தின் தடைகள் ஏதும் இல்லாமலே சாத்தியமாகியிருக்கிறது.
முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டுப் பிரசுரமாகி மிகவும் பிரபலமாகியிருக்கக் கூடிய பல விஷயங்கள் பிரிட்டிஷ் பத்திரிக்கைகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன என்று வெளிநாட்டில் நீண்ட காலம் வசிக்க நேரிட்ட எவருக்கும் தெரிந்திருக்கும். இதற்குக் காரணம் அரசாங்கத்தின் தலையீடு அல்ல. மாறாக இவற்றை வெளிப்படுத்துவது உகந்ததல்ல என்ற மறைமுகமான உடன்பாடுதான் காரணம். நாளிதழ்களைப் பொறுத்தமட்டில் இந்தப் போக்கு எளிதில் புரியக்கூடிய ஒன்று. பிரிட்டிஷ் பத்திரிகை உலகு மிகவும் மையப்படுத்தப் பட்டிருக்கிறது. இங்கு நாளிதழ்களில் பெருமளவு பெரும் செல்வந்தர்கள் கையில் சிக்கி உள்ளது. முக்கியமான விஷயங்களில் நேர்மையற்று நடக்க அத்தனை உள்நோக்கமும் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் இதே வகை திரைமறைவுத் தணிக்கை புத்தகங்கள், சஞ்சிகைகள், மேலும் நாடகங்கள், திரைப்படங்கள், வானொலி போன்ற பிற ஊடகங்களிலும் கூட நடைபெறுகிறது. நேராகச் சிந்திக்கும் எந்த மனிதரும் கேள்வி ஏதும் இன்றி ஒப்புக் கொள்ளக் கூடிய வகையான கருத்துத் தொகுப்பு ஒன்று இருப்பதாக ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒரு மரபு வாதிகளின் கூட்டம் கருதுகிறது. இதையோ அதையோ பேசக் கூடாது என்று வெளிப்படையான தடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் ‘இதையெல்லாம் நாம் பேசுவதில்லை’ என்ற பூடகமான நடத்தை இருக்கிறது. உதாரணமாக விக்டோரிய அரசியின் காலத்து நடுவில், ஒரு கண்ணியமான பெண்ணின் முன்னே ஆண்களின் கால்சட்டையைப் பற்றிப் பேசக்கூடாது என்று ஒரு வழக்கம் இருந்தது. இப்படிப் பட்ட மரபு சார்ந்த கட்டுப்பெட்டிப் பழக்கங்களுக்கு எதிராகப் பேசும் எவரும் வியப்பூட்டும் வகையில் முழுமுற்றாகவே வாயடைக்கப் பட்டு விடுகிறார்கள். உண்மையிலேயே மரபுகளில் இருந்து முற்றும் விலகிய எதிர்க்கருத்துக்கோ மக்கள் ஆதரவுள்ள நாளேடுகளிலோ, உயர்மட்டத்துக்கான இதர பத்திரிகைகளாலோ சிறிதும் இடம் கிட்டுவதில்லை.
இன்று அத்தகைய ஒரு மரபு எல்லாரையும் செய்யச் சொல்லும் ஒரு செயலோ- சோவியத் ரஷ்யாவை விமர்சனம் ஏதும் இன்றிப் புகழ்ந்து தள்ளுவது. எல்லாருக்கும் இது தெரியும், கிட்டத் தட்ட ஒவ்வொருவரும் இந்த வலியுறுத்தலுக்குப் பணிகிறார்கள். தற்போதைய சோவியத் ஆட்சி பற்றிய முனைப்புள்ள எந்த விமர்சனமோ, சோவியத் அரசு மறைத்து விடவே விரும்பக் கூடிய உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சியோ அச்சேறவே முடியாது எனலாம். இப்படி நம்முடைய தோழமை நாட்டைப் போலியாகப் புகழ்ந்து தள்ளுவதன் பின்னணியில் இருப்பது ‘சகிப்புத்தன்மை’ என்ற போர்வையில் நாடு தழுவி நடைபெறும் கூட்டுச் சதி. ஏனெனில், சோவியத் அரசை விமர்சிக்க நாம் அனுமதிக்கப் படுவதில்லை என்றாலும், குறைந்தது நம்முடைய அரசை விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஸ்டாலினைத் தாக்கும் எதையும் எவரும் அச்சிட மாட்டார்கள், ஆனால் சர்ச்சிலைத் தாக்கி எழுதுவதோ ஏதும் ஆபத்தில்லாதது, எளிது. குறைந்தது நாம் அதைப் புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் காண முடியும்.
போர் நடந்த ஐந்தாண்டுகளில், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நாம் நம் நாடு பிழைத்திடவே போராடியிருந்த போது, அமைதியை நாடி எந்த சமரசத்தையும் செய்து கொள்ளச் சொல்லி எண்ணற்ற அளவில் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கட்டுரைகள் எந்தத் தடையோ தலையீடோ இன்றி வெளி வந்தன. அதற்கும் மேலாக எந்த கண்டனத்தையும் தூண்டாமலே அவை வெளியிடப் பட்டன. சோவியத் ரஷ்யாவின் பெருமையைத் தொடாத வரையில், இங்கே கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த பங்கமும் வரவில்லை. இது போலவே ‘சொல்லப்படக்கூடாத’ மற்ற விஷயங்களும் இருக்கின்றன, அவற்றில் சிலவற்றை இங்கே நான் சொல்கிறேன். ஆனால் ரஷ்யாவைப் பற்றி நிலவும் மனப்பாங்குதான் மிகவும் மோசமானது. அது மேல் பார்வைக்கு தன்னிச்சையாக அமைவது போலத் தோன்றுகிறது, எந்த குழுவாலும் வலியுறுத்தி முன்வைக்கப் படாதது போலவும் தெரிவது.
1941-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த ரஷ்யாவின் தொடர்ந்த பிரச்சாரத்தை அப்படியே விழுங்கியதோடு நில்லாமல் அதைத் தாமும் பரப்பி வரும் ஆங்கிலேய அறிவாளிகளின் அடிமைத்தனம் மிகவும் ஆச்சரியமூட்டுவதாய் இருக்கிறது. ஆனால் முன்னாலும் பல தருணங்களில் அவர்கள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள், எனவே வியப்படைய அவசியம் இல்லைதான். அடுத்தடுத்து பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் ரஷ்யாவின் நிலைப்பாடு எந்தவித கேள்வியும் கேட்கப்படாமல் முட்டாள்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. வரலாற்று உண்மைக்கும், அறிவுலக நேர்மைக்கும் புறம்பாக விளம்பரப்படுத்தப்பட்டும் வருகிறது. உதாரணமாக, BBC வானொலி நிலையம் செஞ்சேனையின் (Red Army) 25வது வருடத்தை ட்ராட்ஸ்கியைப் (Trotsky) பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கொண்டாடியது. இது நெல்சனைப் பற்றி எதுவும் சொல்லாமல் ‘ட்ர·பால்கர் போரை’ப் (Trafalgar war) பற்றிச் சொல்வதற்கு சமம், ஆனால் இந்த இருட்டடிப்புக்கு ஆங்கில அறிவாளிகளிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டுக்கலவரங்களைப் பற்றி எழுதும்போது கூட பிரிட்டிஷ் பத்திரிகைகள் ரஷ்ய சார்புடைய அணியை மட்டுமே ஆதரித்து எழுதுகின்றன, மற்றைய அணிகளின் மீது ஆதாரமற்ற அவதூறுகளை வெளியிடுகின்றன. அதற்காக சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைப்பதற்குக் கூட இவை தயங்குவதில்லை.
கண்ணை உறுத்தும் ஒரு சமீபத்திய சம்பவம்- யூகோஸ்லாவிய செத்னிக் (Jukoslov Chetnik) தலைவர் கர்னல் மிஹைலோவிக் (Colonel Mihailovich) இவர்கள் வெளியிட்ட செய்திகள்.
யூகோஸ்லோவியாவில் தாம் ஆதரித்த மார்ஷல் டிடோவுக்கு உதவுவதற்காக ரஷ்யர்கள் டிடோவுடன் போட்டியிட்ட மிஹைலோவிக் மீது அவர் ஜெர்மனிக்கு ஆதரவாக நடப்பதாக குற்றம் சாட்டினர். பிரிட்டிஷ் பத்திரிகைகள் இந்தக் குற்றச்சாட்டை வாகாகக் கையில் எடுத்துக்கொண்டன. மிஹைலோவிக்கின் ஆதரவாளர்களுக்கு அவதூறுக்குப் பதில் சொல்ல எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. இந்தப் பொய்க்கு எதிரான (மிஹைலோவிக் தரப்பு) உண்மைகள் மறைக்கப்பட்டு அச்சில் வராமல் பார்த்துக் கொள்ளப் பட்டன. ஜுலை 1943-இல் மார்ஷல் டிடோவைப் பிடித்துத் தருபவர்களுக்கு 100,000 தங்க க்ரெளன்களை பரிசாகத் தருவதாக அறிவித்த ஜெர்மனி, இதே அளவு பரிசை மிஹைலோவிக்கைப் பிடித்துத் தருபவருக்கும் அறிவித்தது. பிரிட்டிஷ் பத்திரிகைகள் மார்ஷல் டிட்டோவிற்கு அறிவிக்கப்பட்ட பணயத்தொகை பற்றிய செய்திகளை பெரிய செய்தியாக அள்ளித் தெளித்தன, ஆனால் அதே சமயம் மிஹைலோவிக்குக்கு அளிக்கப் பட்ட பணயத்தொகை பற்றி மறந்தும் வெளியிடவில்லை. ஒரே ஒரு செய்தித்தாள் மட்டுமே மிஹைலோவிக் பற்றிய செய்தியை வெளியிட்டது. (அதுவும் சிறு எழுத்துகளில்). ஆனால் ஜெர்மானியருடன் ஒத்துழைப்பவர் மிஹைலோவிக் என்ற அவதூறு மட்டும் தொடர்ந்து பிரசுரமாயிற்று.
இதே போன்ற நடத்தைதான் ஸ்பானிய உள்நாட்டுக்கலவரத்தின் போதும் காணக்கிடைத்தது. ஸ்பெயின் நாட்டுச் சர்வாதிகாரியை எதிர்த்துப் போரிட்ட குடியரசுக்கட்சியில் இருந்த ரஷ்யாவுக்கு எதிரான குழுக்களை அழித்து விட ரஷ்யா முழு மூச்சாக முயன்று கொண்டு இருந்தது என்பதால் அக்குழுக்களைப் பற்றி சகிக்கமுடியாத அளவுக்கு அவதூறுகளை எழுதின பிரிட்டிஷ் இடது சாரிப் பத்திரிகைகள். இப்பத்திரிகைகள் அக்குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்த அல்லது அவற்றின் தரப்பு வாதங்களை முன்வைத்த கட்டுரைகள் மட்டுமல்ல, கடிதங்களைக் கூடப் பிரசுரிக்க மறுத்தன.
தற்போது இப்பத்திரிகைகள், ரஷ்யா பற்றிய எந்த விமர்சனத்தையும் கண்டனத்துக்குரியதாகக் கருதுவதோடு நிற்காமல், அவை எதுவும் வெளியிடப் படாமலும் பார்த்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ட்ராட்ஸ்கி தான் இறப்பதற்கு சிறிது காலம் முன்னால் ஸ்டாலினின் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதினார். அது கறாரான நடுநிலைமையோடு எழுதப்படவில்லை என்றே நாம் கருதினாலும், அது கண்டிப்பாக வெளியிட்டு விற்கப்படத் தகுந்த புத்தகம்தான். ஒரு அமெரிக்க நிறுவனம் பதிப்புரிமை வாங்கி அச்சடிக்கக்கூட ஆரம்பித்துவிட்டது. விமர்சகர்களுக்கான முன்பிரதிகள் கூட அனுப்பப் பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். அந்நேரம் பார்த்து ரஷ்யா உலகப்போரில் இறங்கவும், உடனடியாக அந்தப்புத்தகப் பிரசுரம் ரத்து செய்யப் பட்டது. அப்படி ஒரு புத்தகம் எழுதப்பட்டதையோ, வெளியிடப்படாமல் அது அமுக்கப்பட்டதையோ பற்றி மூச்சுகூட விடவில்லை பிரிட்டிஷ் பத்திரிக்கைகள். குறைந்தது அப்படி ஒரு புத்தகம் வர இருந்ததும், இறுதியில் ரத்து செய்யப் பட்டதும் ஒரு செய்தியாகவாவது வெளியிடப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களே.
சார்புள்ள குழுக்கள் சில நேரங்களில் அமல்படுத்தும் தணிக்கைக் கட்டுப்பாட்டுக்கும், இங்கிலாந்தின் அறிவுஜீவிகள் வெளியார் தலையீடின்றித் தங்கள் மேல் தாங்களே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாட்டுக்குமுள்ள வித்தியாசத்தை உற்றுக் கவனிப்பது இங்கே அவசியமாகிறது. மோசமான விதமாக, சுயநலக் கும்பல்கள் சிலவற்றின் ஆதிக்கத்தால் சில விஷயங்களைப்பற்றிப் பொதுவில் விவாதிப்பது சாத்தியமில்லாமலே போகிறது. இதற்கு ஒரு ஒரு சிறந்த உதாரணம் ரகசியத் தயாரிப்பு என்று விற்பனை உரிமை பெற்ற மருந்துகளின் (Patent medicine racket) விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததே. இன்னொன்று, கத்தோலிக்க தேவாலயம் பத்திரிக்கைகள் மேல் வலுவான ஆதிக்கம் செலுத்துகிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் கத்தோலிக்கப் பாதிரியார் பற்றி ஒரு போதும் செய்தி வருவதில்லை. ஆனால் தப்பு செய்தது ஆங்கிலேய சர்ச்சைச் (Anglican Church) சார்ந்த பாதிரியாராக இருந்தால் அது நிச்சயம் தலைப்புச்செய்தியாகி விடுகிறது. உதாரணமாக ஸ்டி·ப்கி நகரைச் (Stiffkey) சேர்ந்த வட்டப் பாதிரியாரைப் (Rector of Stiffkey) பற்றி எழுதப்பட்ட செய்திகள். கத்தோலிக எதிர்ப்பு விஷயம் எதுவாக இருந்தாலும் அது மேடையிலும் சரி திரைப்படத்திலும் சரி – அரங்கேறுவதேயில்லை. கத்தோலிக்க மத அமைப்பை விமர்சிக்கும் அல்லது கேலி செய்யும் ஒரு நாடகமோ அல்லது திரைப்படமோ அவை விலக்கப் படவேண்டிய ஒன்றாக அறிவிக்கப் படுவதும் அதனால் தோல்வி அடைவதும் உறுதி என்று எந்த நடிகரும் உங்களுக்குச் சொல்லுவார். ஆனால் இதெல்லாம் கூட அவ்வளவு பாதகமான விஷயங்களல்ல. ஏன் இப்படி நடக்கிறது என்று நமக்குப் புரியவாவது செய்யும்.
ஏனெனில் எந்த ஒரு பெரிய நிறுவனமும் தன்னுடைய நலன்களை தன்னால் முடிந்த வரை பாதுகாத்துக்கொள்ளவே செய்யும். மேலும் வெளிப்படையான (சுயநலப்) பிரசாரத்திற்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது பொருளற்றது. எப்படி ‘டெய்லி ஒர்க்கர்’ (Daily Worker) தினசரி சோவியத் ரஷ்யாவிற்கெதிரான செய்தி வெளியிடுமென்று எதிர்பார்க்கமுடியாதோ, அதேபோல்தான் ‘கதோலிக் ஹெரால்ட்’ (Catholic Herald) பத்திரிகையும் போப்பை எதிர்த்து எழுதுமென்றும் எதிர்பார்க்கமுடியாது!
ஆனால் சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் கதோலிக் ஹெரால்ட், டெய்லி ஒர்க்கர் இரண்டும் எப்படிப்பட்ட பத்திரிக்கைகள் என்று தெரியும். ஆனால் இப்படி கொள்கைப் பரப்பு நிறுவனங்களுக்குக் கடமைப்படாத, அவற்றின் பிடிவாதங்களுக்கு இடம் கொடுத்துத் தம் கருத்துகளைப் பொய்மைப் படுத்தத் தேவை இல்லாதவர்களான தாராளப் போக்கு உள்ள எழுத்தாளர்கள் (Liberal writers) கூட சோவியத் ரஷ்யாவைக் குறித்த சாதாரணமான உண்மையைக் கூட எழுத முடியாதவர்களாக உள்ளது மிக வேதனையான நிலை. ஸ்டாலின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர், மிகவும் புனிதமானவர். அவர் கொள்கைகளைப் பற்றி நாம் எந்தக் கேள்வியும் கேட்ககூடாது என்ற விதியை 1941-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தவறாமல் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. ஆனால் உடனே தெரியாத உண்மை என்னவென்றால், இந்த நிலையை விடக் கூடுதலான வாய் பொத்தி இருப்பது, இன்னும் பத்தாண்டுகள் முன்னிருந்தே கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது என்பதுதான். அந்தப் பத்தாண்டுகள் முழுதும் அப்போதைய சோவியத் அரசு மீது இடது சாரிகளே வைத்த எல்லா விமர்சனங்களும் மிக்க இடருக்குப் பிறகே சிறிதளவு கேட்கப் பட்டன. அப்போது ரஷ்யாவிற்கு எதிராக ஏகப்பட்ட எழுத்துகள் பிரசுரமாயின என்பது உண்மை, ஆனால் அவை பெரும்பாலும் பழமைவாதப் பார்வையிலிருந்து உருவானவை; மேலும் வெளிப்படையாகவே நேர்மையற்றவை, காலாவதி ஆனவை, மேலும் சொல்லவே கூச்சம் தரும் வகையில் மோசமான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. மறுபுறமோ, இவற்றிற்கு சம அளவில் நேர்மையற்ற ரஷ்ய ஆதரவு வெளியீடுகளும் பெருக்கெடுத்தன. இவற்றின் விளைவு என்ன? வளர்ந்தவராகவும் பொறுப்புள்ள முறையிலும் எவரும் கேட்க விரும்பும் மிக முக்கியமான கேள்விகளை சர்ச்சை ஏதுமின்றியே இவை புறக்கணித்து ஒதுக்கின.
அப்போதுமே ஒருவர் ரஷ்யாவிற்கு எதிரான புத்தகங்களை எழுதி பதிப்பித்திருக்க முடியும். ஆனால் அப்படிச்செய்வது தன்னைத் தானே குழி தோண்டிப் புதைத்துக் கொள்வதற்கு சமம். பத்திரிகைகள் உங்களைத் தவறாகவே வெளிக் காட்டும். நீங்கள் செய்வது ‘ஏற்கப் பட முடியாதது’ என்று தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் உங்களுக்கு எச்சரிக்கை வரும். நீங்கள் சொன்ன விஷயம் ஒரு வேளை மிகச்சரியாகவே இருக்கலாம். ஆனால் அதை வெளியிடுவதற்கான காலம் அதுவல்ல, வெளியிட்டதன் மூலம் நீங்கள் ஏதோ ஒரு ‘பிற்போக்கு சக்தியின்’ கைப்பாவையாக மாறிவிட்டீர்கள் என்று தூற்றப்படுவீர்கள்.
பன்னாட்டு அரசியல் நிலையும், அன்று ஆங்கிலேய- ரஷ்ய போர்க் காலக் கூட்டுறவு ஒன்று உடனே ஏற்படுவதற்கான அவசியம் இருப்பதும் காரணமாகக் காட்டப்பட்டு இத்தகைய வாயடைப்பு தேவையாகச் சுட்டப் பட்டது. ஆனால் அது ஒரு சப்பைக் கட்டு நியாயம் என்பது மிகத் தெளிவு. ஆனால் அதையும் தாண்டி இன்றைய இங்கிலாந்தின் சிந்தனையாளர்கள், அல்லது அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யா மீது ஒரு தேசப் பற்றை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ஸ்டாலின் நடத்தை மற்றும் கொள்கைகளைப் பற்றி எந்த சந்தேகம் கொள்வதோ அல்லது அதை எழுதுவதோ கடவுள் நிந்தனைக்குச் சமம். ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்களும், உலகில் பிற பகுதிகளில் நடக்கும் விஷயங்களும் வெவ்வேறு தராசுகளில் அளக்கப் பட வேண்டுமாம். 1936-38 சமயங்களில் ரஷ்யாவில் முடிவே இல்லாது தொடர்ந்து நடந்த அதிகார ரீதியான அரசியல் படுகொலைகள் (executions) ஆண்டாண்டு காலமாய் தூக்குதண்டனையை எதிர்த்து வந்த இவர்களால் கொண்டாடப்பட்டது! (பிரிட்டனால் ஆளப்படும்) இந்தியாவில் பஞ்சம் என்றால் ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கும் இவர்கள், உக்ரைனில் இருந்த பெரும் பஞ்சத்தை மறைக்க முயற்சி செய்கிறார்கள். போருக்கு முந்தைய நிலைமையே இப்படியென்றால் போருக்குப் பின்னரும் அறிவுலகில் ஏதும் நிலையில் முன்னேற்றமில்லை!
இப்பொழுது மீண்டும் என் புத்தகத்திற்கு வருவோம். இந்தப் புத்தகம் குறித்தான இங்கிலாந்து சிந்தனையாளர்களின் கருத்து எளிதான ஒன்று – “இந்தப்புத்தகம் வெளிவந்திருக்கக் கூடாது”. இயல்பாகவே, பிறரை மட்டம்தட்டும், சிறுமைப்படுத்தும் கலையில் தேர்ந்த விமர்சகர்கள் இப்புத்தகத்தை அரசியல் ரீதியான காரணங்களுக்காக இல்லாமல், இலக்கிய ரீதியான காரணங்களுக்காக எதிர்ப்பார்கள். மட்டமான சுவாரசியமற்ற, உப்பு சப்பில்லாத குப்பை என்று விமர்சிப்பார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு புத்தகம் இலக்கியத்தரம் இல்லாதது என்ற காரணத்தால் அது பிரசுரமாகியிருக்கூடாது என்று எவரும் சொல்வதில்லை. இத்தனைக்கும் தினந்தோறும் நம்மைச்சுற்றி ஏக்கர் கணக்கில் குப்பைகள் பிரசுரிக்கப்படுகின்றன. யாரும் கவலைப்படுவதில்லை. ஆங்கில சிந்தனையாளர்களோ, அல்லது அவர்களுள் பெரும்பாலானோர்களோ, இந்தப்புத்தகம் இவர்கள் தலைவரை விமர்சனம் செய்கிறது, (அவர்கள் பார்வையில்) இது இவர்கள் முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கிறது என்ற காரணங்களுக்காக எதிர்ப்பார்கள். ஒருவேளை அதற்கு எதிர்மாறானதாக இந்தப்புத்தகம் இருந்திருந்தால் இவர்கள் குறை சொல்வதற்கு ஒன்றும் இருந்திருக்காது. (ஒரு வேளை அது பன்மடங்கு இலக்கியத்தரம் குறைவானதாக இருந்திருந்தால் கூட.) நான்கு – ஐந்து வருடங்களாக இடதுசாரி புத்தகக்குழுவிற்கு கிடைத்து வரும் வெற்றி, இவர்கள் கேட்க விரும்பியதை சொல்லும்வரையில் பிரச்சாரத் தன்மை, பொறுப்பின்மை இரண்டையும் சகித்துக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம்.
இங்கிருக்கும் பிரச்சினை மிகவும் எளிதான ஒன்று: “ஒரு கருத்து, எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமா? வேண்டாமா?” இன்றைய இங்கிலாந்தின் இலக்கியவாதிகளிடம் இக்கேள்வியை இப்படியே கேட்டால் அனைவரின் பதிலும் “வேண்டும்” என்பதாகவே இருக்கும். ஆனால் அந்தக்கேள்விக்கு முழு வடிவம் கொடுத்துக் கேளுங்கள் – “அந்த வாதம் ஸ்டாலினைப் பற்றியது!” என்று அடுத்து சொல்லிப்பாருங்கள். அனைவரும் ஒரே குரலில் “வேண்டாம்” என்று சொல்வார்கள். இந்த விவாதத்தில், இன்றைய பழமைவாதக் கருத்துக்கள் (Orthodoxy) கேள்விக்குள்ளாவதால், இவர்களின் கருத்து சுதந்திரக் கொள்கையும் காணாமல் போகிறது.
ஒருவர் பேச்சு மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை வேண்டும்போது, கட்டுப்பாடற்ற, வரம்பற்ற சுதந்திரத்தை வேண்டுவதில்லை. விதிகளுக்குட்பட்டு இயங்கும் எந்த ஒரு இயக்கத்துக்கும், சமுதாயத்திற்கும் ஒரு அளவிற்கு தணிக்கைக் கட்டுப்பாடுகள் இருந்தே ஆகும் – இருக்க வேண்டியதும் அவசியம். அது “சுதந்திரம் என்பது உனக்கு மட்டுமல்ல; அடுத்தவனுக்கும்” என்று ரோஸா லக்ஸம்பர்க் (Rosa Luxemburg) சொன்னது போல் இருக்க வேண்டும். இதே தத்துவம்தான் “நீ சொல்லும் கருத்தை நான் வெறுக்கிறேன். ஆனால் அதை சொல்வதற்காக உனக்கிருக்கும் உரிமையை சாகும்வரை ஆதரிப்பேன்” என்ற வால்டைரின் (Voltaire) பிரபலமான மேற்கோளில் அடங்கியிருக்கிறது. அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வரையில், தான் நினைப்பதை அச்சாக்குவதற்கும், சொல்வதற்குமான உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே, சந்தேகத்திற்கிடமில்லாமல் மேற்கத்திய தத்துவங்களின் தனிச்சிறப்பம்சமாக விளங்கும் சிந்தனைச் சுதந்திரக் (Intellectual Liberty) கோட்பாட்டின் அர்த்தம். மேற்கத்திய சோஷலிசமும், முதலாளித்துவ மக்களாட்சித்தத்துவமும் இக்கருத்தை சிறிதும் மதிப்பதில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நமது அரசாங்கம் இக்கருத்தை ஓரளவிற்காவது மதிக்கிறது. இது போன்ற விவாதங்களில் பெரிதும் விருப்பமில்லாத பொதுமக்களும், ‘ஒவ்வொருவரும் தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது’ என்று நினைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். பிரச்சினையெல்லாம் இது போன்ற உரிமைகளுக்கெல்லாம் காவலாய் இருக்கவேண்டிய இன்றைய அறிவாளிகள் மற்றும் சிந்தனையாளர்களிடம்தான். அவர்கள்தான் இந்த எழுத்து மற்றும் கருத்துரிமையை எழுத்தளவிலும், நடைமுறையளவிலும் எதிர்க்கொண்டிருக்கிறார்கள்.
புரட்சியாளர்களின் வரம்புமீறிய வன்முறை இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சம். மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு அராஜகம் மட்டும்தான் ஒரே வழி என்ற கருத்து இன்று ஊரெங்கும் பரவலாக உள்ளது. மக்களாட்சித் தத்துவத்தை விரும்புபவர், மக்களாட்சிக்கு எதிராக இருப்பவர்களை என்ன வழியை வேண்டுமானாலும் மேற்கொண்டு வெற்றி கொள்ளலாம் என்ற எண்ணமும் இங்கே பலரிடமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மக்களாட்சித் தத்துவத்திற்கு அதை வெளிப்படையாக கொள்கை அளவில் எதிர்ப்பவர்கள் மட்டுமே எதிரிகள் அல்ல; திரிக்கப்பட்ட கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் மக்களாட்சிக் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் கூட அதன் எதிரிகளே. மக்களாட்சியைக் காப்பாறுவதற்கு கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்க வேண்டும். இந்த வாதம் ரஷ்யப்படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது. ரஷ்யாவைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் கூட அங்கே படுகொலையானவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள் என்று மிகக் குறைந்த அள்வில்தான் நம்பினார்கள். ஆனால் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய கொள்கைகள் காரணமாக ஆட்சிக்கு பங்கம் விளைவித்தார்கள். அதனால் அவர்களைக் கொலை செய்தது மட்டுமில்லாமல், பொய் குற்றச்சாட்டுகளின் மூலமாக அவர்களை சிறுமைப்படுத்துவதும் சரியான செயலே. இதே வாதம்தான் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது ட்ராட்ஸ்கியைப் பற்றியும் இதர குடியரசு சிறுபான்மைக்கட்சியினரைப் பற்றியும் மனதறிந்து வெளிப்படையாக பல பொய்யான செய்திகளைப் பரப்பிய இடதுசாரிப் பத்திரிகைகளுக்கு உதவியாக இருந்தது. இதே வாதம்தான் மோஸ்லி (Mosley) 1943-இல் விடுதலையான போது, அவருக்குக் கிடைத்த ‘ஹேபியஸ் கார்பஸ்’-இற்கு (Habeaus Corpus) எதிராக இவர்கள் கூச்சலிட்டதற்கும் ஆதரவாக இருந்தது!
வன்முறையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் இவர்கள், இதே வன்முறை இவர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் நாளும் வரும் என்று புரிந்துகொள்வதேயில்லை. விசாரணையில்லாமல் பாசிஸ்டுகளை சிறையில் அடைக்கும் பழக்கம் வெறுமனே பாசிஸ்டுகளுடன் நின்றுவிடாது. ‘டெய்லி ஒர்க்கர்’ செய்தித்தாள் மீதான தடை அகற்றப்பட்ட கொஞ்ச நாட்கள் கழித்து, தெற்கு லண்டனில் (South London) இருக்கும் ‘உழைக்கும் மக்கள்’ (Workingmen’s) கல்லூரியில் உரையாற்றிக்கொண்டிருந்தேன். கேட்க வந்தவர்களில் பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கம் மற்றும் கீழ்-மத்தியதர வகுப்பைச்சேர்ந்த சிந்தனையாளர்கள். இடதுசாரி புத்தகக்குழுவின் கிளைகளுக்கு வருகை தருவது போன்ற கூட்டம். என்னுடைய உரை கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியும் தொட்டுப் போனது. எனக்கு மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் “டெய்லி ஒர்க்கர் மீதான தடை நீக்கப்பட்டது மிகப்பெரும் தவறு என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்று நிறைய பார்வையாளர்கள் கேட்டார்கள். ஏன் என்று கேட்கையில் போர்க்காலத்தில் இது போன்ற கேள்விக்குரிய, நம்பகத்தன்மையற்ற பத்திரிக்கை மிகவும் ஆபத்தானது என்றார்கள். கடந்த காலங்களில் தன்னுடைய வழியிலிருந்து விலகிச்சென்று என்னைப் பற்றித் தாக்கி எழுதியிருந்தாலும் ‘டெய்லி ஒர்க்கர்’-ஐ ஆதரித்து அவர்களுக்கு பதில் சொன்னேன். எனக்குள்ள கேள்வியெல்லாம் இந்தவிதமான எதேச்சதிகாரமான மனப்போக்கு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதுதான். கண்டிப்பாக இவர்கள் இதை கம்யூனிஸ்டுகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்! சகிப்புத்தன்மையும், நாகரிகமும் இங்கிலாந்தில் ரொம்பகாலமாக ஊறிப்போன விஷயம். ஆனால் அவை அழிக்கமுடியாதவையும் அல்ல. மனத்தளவில் சகிப்புத்தன்மை கொண்டிருப்பது மட்டுமே அது உயிர்ப்புடன் இருக்க ஒரே வழி. எதேச்சதிகாரத்தை பரவலாக்குவது இந்த மனநிலையை அழிக்கச்செய்கிறது. மோஸ்லி விஷயம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 1940-இல் மோஸ்லி செய்த குற்றத்தைப் பற்றிய சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும் சிறையில் அடைத்தது சரி. நாம் அப்போது நம் உயிர்களுக்காகப் போரிட்டுக்கொண்டிருந்தோம். போர் சமயத்தில் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை சுதந்திரமாக விட்டுவைப்பது பெரும் ஆபத்து. ஆனால் 1943-லும் விசாரணையில்லாமல் மோஸ்லியை சிறையில் வைத்திருப்பது பெரும் தவறு. இன்றைய பொதுமக்கள் இதை இன்றுவரை உணராமல் இருப்பது ஒரு மோசமான அறிகுறி. ஆனால் இன்று காணக்கிடைக்கும் பாசிஸத்தை நோக்கிய நகர்வில் எத்தனை சதவிகிதம் கடந்த பத்து வருடங்களாக நாம் கொண்டிருக்கும் பாசிஸ எதிர்ப்பு நிலைப்பாடும், அதன் பின்விளைவான நேர்மையின்மையும் காரணம்?
ஊரெங்கும் பரவியிருக்கும் ‘ரஷ்ய மேனியா’ மேற்கத்திய தத்துவங்களின் சுதந்திரக் கோட்பாடுகள் நலிவடைந்து வருவதையே காட்டுகிறது. ஒருவேளை தகவல்தொடர்புத் துறை நேரடியாகத் தலையிட்டு இந்தப்புத்தகத்தை தடை செய்திருந்தாலும், இங்கிலாந்தின் சிந்தனையாளர்கள் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். குற்றங்களைப் பொருட்படுத்தாத சோவியத் ரஷ்ய நாடுகளின் மீதான விசுவாசம்தான் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பழமைவாதம் (Orthodoxy). சோவியத் ரஷ்யாவின் நலன்கள் தொடர்புடைய விஷயங்கள் எனில் இன்றைய இங்கிலாந்தின் சிந்தனையாளர்கள் எந்தவிதமான தணிக்கை முறையையும் பொறுத்துக்கொள்வது மட்டுமில்லாமல், தேவைப்பட்டால் வரலாற்றைத் திரித்துப்பேசுமளவிற்குப் போவதற்கும் தயங்குவதில்லை. ஒரு உதாரணம்: ரஷ்யப் புரட்சியை நேரடியாகப் பார்த்த அனுபவத்தில் எழுதப்பட்ட உலகை உலுக்கிய பத்து நாட்கள் (Ten days that shook the world) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஜான் ரீட் (John Reed) இறந்த பின் அந்தப்புத்தகத்தின் பதிப்புரிமை ப்ரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிடம் வந்தது. (ஜான் ரீட் விருப்பப்பட்டுதான் அதை செய்தார் என்று நம்புகிறேன்). சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை எவ்வளவு சிதைக்க முடியுமோ அவ்வளவு சிதைத்து ப்ரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. அப்புத்தகத்திலிருந்து ட்ராட்ஸ்கியைப் பற்றிய பகுதிகள், லெனினின் முன்னுரை ஆகியவை நீக்கப்பட்டிருந்தன. ஒருவேளை இங்கிலாந்தில் நேர்மையான அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் இருந்திருந்தால் அத்தனை இலக்கியப் பத்திரிக்கைகளும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும். நடந்தது போலவே அதற்கு யாரிடமிருந்தும் ஒரு எதிர்ப்பும் வரவில்லை. நேர்மையின்மை மீதான ஆங்கிலேயர்களின் இந்த சகிப்புத்தன்மை இன்றைய நாட்களில் வழக்கமாக இருக்கும் ரஷ்ய ஆதரவைக் காட்டிலும் மோசமனதாக இருக்கிறது. ஆனால் இந்த நிலை நீண்ட நாட்கள் தொடராது. ஒருவேளை இந்தப் புத்தகம் வெளியாகும்போது, சோவியத் அரசாங்கம் பற்றிய என்னுடைய கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதனால் என்ன பயன்? ஒரு செக்குமாட்டுத்தனத்திலிருந்து இன்னொரு செக்குமாட்டுத்தனத்திற்கு மாறுவதற்குப் பெயர் முன்னேற்றம் அல்ல. மனநிலை என்னும் கிராம·போனைத்தான் மாற்ற வேண்டுமே தவிர, அதில் ஓடிக்கொண்டிருக்கும் இசைத்தட்டையல்ல.
கருத்துச் சுதந்திரம் இருக்க முடியாது – இருக்கக்கூடாது என்பவர்கள் அதற்கு ஆதரவாகக் கூறும் வாதங்கள் எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும்! கடந்த நானூறு வருடங்களாக நம் சமுதாயம் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறது என்பதே அவர்களுக்கான எனது பதில். ரஷ்யாவில் நடந்துவரும் அரசாங்கம் மிகவும் கொடூரமான ஒன்று என்பதே கடந்த பத்தாண்டுகளாக எனது கருத்து! நாம் போரில் ரஷ்யாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறோம்; அந்தப் போரில் நாம் வெற்றிபெற வேண்டும் – என்று நான் விரும்புகிறபோதிலும் இதுவே எனது கருத்து. எனது நிலைப்பாட்டை ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் மில்டனின் பின்வரும் வரியைக் கூறுவேன்.
“தொன்றுதொட்டு நிலவிவரும் சுதந்திரத்தின் மூலமாக நாம் அறிந்திருக்கும் விதிகளின்படி.” (By the known rules of ancient liberty)
‘தொன்றுதொட்டு’ என்னும் வார்த்தை கருத்துச் சுதந்திரம் நம்மிடம் பல்லாண்டு காலமாக வேரூன்றிய தத்துவம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதிலிருந்து இன்றைய சிந்தனையாளர்கள் வெளிப்படையாக விலகிச்செல்கிறார்கள். ஒரு புத்தகம் வெளியிடப்படுவதும், தடைசெய்யப்படுவதும், அப்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பொருத்துதான் இருக்கிறது – அதன் தரத்தைப் பொருத்ததல்ல என்ற கொள்கையினையும் இவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உள்ளூர விரவியிருக்கும் அச்சத்தின் காரணமாக மறுப்பேதும் சொல்வதில்லை. இல்லையென்றால் போரின் ஒவ்வொரு கட்டத்திலும் போர் நிறுத்தப்படவேண்டும், அமைதி ஒப்பந்தம் அமலாக்கப்படவேண்டும் என்று சொன்ன நடுநிலையாளர்கள், சோவியத் ரஷ்யாவின் ‘சிகப்புப் போரின்’ (Red War) போதுமட்டும் ஏன் அமைதியாக இருக்கவேண்டும்?
வெளிப்படையாக சொல்லப்போனால், ரஷ்யர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. அதையே நாம் செய்தால் அது மிகப்பெரும் பாவம். இந்தக் கருத்துவேறுபாட்டிற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்: சொந்த தேசமான இங்கிலாந்து மீதான நாட்டுப்பற்றைவிட ரஷ்யாவின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் இன்றைய சிந்தனையாளர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கவேண்டும் என்று ஒவ்வொருக்கும் இருக்கும் கோழைத்தனமான ஆசை. இந்தக் கோழைத்தனத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் இன்றைய சிந்தனையாளர்களிடம் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அதை ஆதரித்து அவர்கள் சொல்லக்கூடிய வாதங்கள்கூட எனக்கு மனப்பாடமாகத்தெரியும். பாசிஸத்தை எதிர்த்து சுதந்திரத்தை நிலைநாட்டப்போகிறோம் என்ற முட்டாள்தனமான வாதத்தையாவது இவர்கள் கைவிடவேண்டும். மக்கள் கேட்க விரும்பாத விஷயத்தையும் சொல்வதற்கான உரிமையைத் தருவதும் சுதந்திரம்தான். இன்றைய பொதுமக்களாவது ஓரளவிற்கு இக்கருத்தை ஆதரிப்பவர்களாகவே உள்ளார்கள். ஆனால் நம் நாட்டில் – நம் நாட்டில் மட்டுமே: – ·ப்ரெஞ்சுக் குடியரசு, இன்றைய அமெரிக்கா (1945!) போன்ற நாடுகளிலெல்லாம் இல்லை – சிந்தனையாளர்கள் மட்டுமே தங்கள் அறிவின் மீது தாங்களே சேறு பூசிக்கொள்வது. போராளிகள் மட்டுமே சுதந்திரத்தை எதிர்ப்பது: இதைப்பற்றிய ஒரு கவன ஈர்ப்பு முயற்சியாகவே இந்த முன்னுரையை நான் எழுதியுள்ளேன்.
sethupathi.arunachalam@gmail.com
(இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம் இத்தளத்தில் இருக்கிறது:
http://www.orwell.ru/library/novels/Animal_Farm/english/efp_go )
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- மூடு மணல்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கிளைதாவி வரும் மின்னல்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கவிதைகள்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- ராட்டடூயி
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- “மலர்கொடி”
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- ஒரு ராஜா ஒரு ராணி
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- அன்புள்ள கிரிதரன்
- கத்தி குத்திய இடம்…
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- “அலமாரி”
- கடிதம்
- வேட்டை நாய்
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வருவதுதான் வாழ்க்கை
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- நண்பன்
- 27வது பெண்கள் சந்திப்பு
- யார் இவர்கள்?
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- கவிதைகள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- கவிதைகள்