ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

சேதுபதி அருணாசலம்



ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்

துனீஷியாவைச் சேர்ந்த நெளரி பெளஸித்(Nouri Bouzid) என்ற இயக்குநரின் ‘மேக்கிங் ஆஃப்’ (2006) (Making off) என்ற திரைப்படம், எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இஸ்லாமிய இளைஞர்களை மனித வெடிகுண்டுகளாக (suicide bombers) மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஏன் சில இளைஞர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் கூறுகிறது.

அவரளித்த ஒரு பேட்டியிலிருந்து1 ஒரு கேள்வியும் அவரளித்த பதிலும்:

“நீங்கள் இயக்கிய திரைப்படம் ஒரு ப்ரேக் டான்ஸர் மனித வெடிகுண்டாக மாறும் கதையைக் கூறுகிறது. அராபிய இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுவதன் காரணம் என்ன?”

“நான் இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்காக பின் லாடனின் பேச்சுகளை ஆய்வு செய்தேன். ‘நாம் இளைஞர்களை அவர்கள் மிகவும் உதவி தேவைப்படும் நிலையிலிருக்கும்போதோ, ஏதேனும் ஆபத்திலிருக்கும்போதோ, (அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம்) நம்மிடம் இழுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் திருமணமாவதற்கு முன்பாகவே நம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒட்டுறவு இருக்காது’ என்று அவர் கூறுகிறார். இதிலிருந்து இந்த இளைஞர்களுக்கு தோல்வி, desperation, வெளிநாடு சென்று முன்னேறுவதற்கான வாய்ப்பில்லாமல் போதல் போன்ற பல தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன என்று தெரிகிறது. மேலும் பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் போன்ற புறக்காரணிகளும் இருக்கின்றன”.

****
அக்டோபர் 2004, ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரம், பெல்ஜியம்.

“முடி வெட்டிக்கப்போறேன்!”
“என்னது? முடி வெட்டிக்கப்போறயா? தனியாவா?”
நான் அதுவரையில் என் வாழ்நாளில் கூட்டமாகச் சென்று முடி வெட்டிக்கொண்டது கிடையாது. அப்பாவின் ஆஸ்தான நாவிதரிடமும் சரி, பஸ் பிடித்து வெளியூர் சென்று, ஃபேன், பவுடர், மிஷின் சகிதம் வெட்டிக்கொண்ட போதும் சரி, நான் தனியாகத்தான் போய் வந்திருக்கிறேன். ஏதோ தலையையே வெட்டிக் கொள்ளப்போவது போல் என் நண்பன் கேட்டது எனக்கு குழப்பமாக இருந்தது.
“ஏன் கேக்கறே?”
“இல்லை ஏதோ நேத்துதான் அங்கே துப்பாக்கிச்சூடு ஏதோ நடந்ததுன்னு சொன்னாங்க…. அதுதான் சொன்னேன்.”
“என்ன பெரிய துப்பாக்கிச்சூடு? அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!” திமிராகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாலும், உள்ளூர எனக்கு உதறலாகத்தான் இருந்தது. பெல்ஜியம் வந்து ஒரு சுபயோக சுபதினத்தில் என் அபார்ட்மெண்டுக்குக் குடி வந்து ஒரு மாதகாலம் ஆகியிருந்தது. பெல்ஜியத்தில் என்னைப்பார்த்து ரசிக்குமளவுக்கு யாருமில்லையென்றாலும், என்னையே அகோரமாகப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு என் அழகுணர்ச்சி செத்துவிடவில்லை. அது மட்டுமில்லாமல், ஐரோப்பாவின் முடி வெட்டும் கடைகளைப் பார்ப்போமே என்ற நப்பாசையும் இருந்தது. போகும் வழியெல்லாம், எதிரில் யாரைப்பார்த்தாலும், சுட வருபவர்கள் போலவே தெரிந்தது. ஒரு பாகிஸ்தானிய சூப்பர் மார்க்கெட், ஒரு ஜெர்மனியக்கடை அத்தனையும் தாண்டி இருக்கிறது மொராக்கர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதி.

மொராக்கோ ஆப்பிரிக்காவின் வடமேற்கு மூலையில் ஐரோப்பாவின் மிகப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு. ஆப்பிரிக்காவின் ‘உலகப் புகழ்பெற்ற’ பொருளாதாரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பக்கத்திலேயே இருக்கும் ஐரோப்பாவிற்கு நிறைய மொராக்கர்கள் இடம்பெயர்ந்து விட்டார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்கள் இருக்கும் பகுதிக்குப் போவதற்குதான் அத்தனை உள்ளுதறல். ஆனால் மொராக்கர்கள்தான் கம்மி விலையில் முடி வெட்டி விடுகிறார்கள். ஐரோப்பியர்களின் சலூனுக்குப்போனால் பஞ்சப்படி, பயணப்படி எல்லாத்தையும் எழுதி வைத்தாக வேண்டும். அதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் மொராக்கர்களின் சலூன்கள் கொஞ்சம் பிரபலமாகவே இருக்கின்றன.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை, மொராக்கர்கள் மேல் அத்தனை பயமும், கவனமும் ஐரோப்பிய மக்களுக்கு இருந்ததில்லை. ஆனால், ஆப்பிரிக்க இளைஞர்களின், வேலையில்லாத் திண்டாட்டத்தை சில தீவிரவாத இயக்கங்கள் பயன்படுத்திக்கொள்ள (முக்கியமாக அல்-கொய்தா), கறையான் புற்று போல இங்கொன்றும் அங்கொன்றுமாய் மொராக்கோவில் “ஆள் சேர்க்கும்” அலுவலகங்கள் ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மொராக்கர்கள் மேல் ஐரோப்பியர்களுக்கு இருக்கும் நன்மதிப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இப்படிப்பட்ட கொள்கை வீரர்கள் ஐரோப்பாவெங்கும் ஊடுருவி விட்டார்கள். முக்கியத் தொழில்: “எக்ஸ்டஸி” (ecstacy) எனப்படும் போதைப்பொருளை விற்று, ஜிஹாத் எனப்படும் “புனிதப் போருக்கு” காசு சேர்த்தல்.

அப்படிப்பட்ட ஒரு போதை மருந்து வியாபாரிதான் “எல் சினோ” என்று செல்லமாக அழைக்கப்படும் ஜமால் அஹ்மிதான். ஹோட்டலில் தன் ஆட்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த, தனக்குப் பணம் தரவேண்டிய மற்றொரு கஞ்சா வியாபாரியை சர்வசாதாரணமாக சுட்டுவிட்டு வந்த “எல் சினோ”வை ஏதோ பொடிப்பையன் என்றுதான் போலிஸ் நினைத்திருந்தது. 2004ஆம் வருடம் மார்ச் மாதம் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் (Real madrid) நகரத்தில், நான்கு ட்ரெயின்களில் தொடர்ந்து வெடித்த குண்டுகளில்2 ஏற்பட்ட உயிர்ச்சேதம் 192. இறந்தவர்களில் நிறைய பேர் பாட்டாளி வர்க்கத்து ஸ்பானியர்கள், மேலும் வெள்ளையர் அல்லாத குடியேறி மக்கள்- மொராக்கர்களையும் சேர்த்துத்தான்!

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகள் கை நீட்டியது, “எல் சினோ”வை நோக்கி! இப்போது போலிஸுக்கு நிஜமாகவே ரோஷம் வந்து, அவனைக் கைது செய்யப்போன போது, அவனும் மற்ற எட்டு தீவிரவாதிகளும் (அதில் ஆறு பேர் மொராக்கர்கள்.), வட்டமாக நின்று, புனித நூலில் இருந்து வாசகங்களை சொல்லிக்கொண்டே வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டின் விசையை அழுத்த…. சர்வ நாசம்! எல் சினோ வைத்திருந்தது போலி பெல்ஜியன் பாஸ்போர்ட். இத்தனைக்கும் இதற்கு முன்னரே போதைப்பொருள் விற்றதற்காக ஒரு முறை கைது செய்து சிறையில் அவனை வைத்திருந்தது ஸ்பெயின் போலிஸ். விடுதலையாகி நாடு கடத்தப்படுவதற்கு முன், “திரும்பி வருவேன்… வந்து உங்க எல்லாரையும் கொல்லுவேன்!” என்று சொன்னவனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டது போலிஸ். திரும்பி வந்தவனுக்கு அல்- கொய்தாவின் ஆதரவு இருந்தது ஸ்பெயின் மக்களின் துரதிர்ஷ்டம். ரியல் மாட்ரிட் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஐரோப்பா முழுக்க கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் மொராக்கர்கள். தீவிரவாதச் செயல்களுக்காக பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டவர்களில் (2003-ல் இருந்து இதுவரை), 90% பேர் மொராக்கர்கள். இப்போதெல்லாம் அமெரிக்கா, ஐரோப்பாவின் அத்தனை தீவிரவாத ஒழிப்பு இயக்கங்களும் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருப்பது மொராக்கர்களை. ‘செப்டம்பர் 11’ குண்டுவெடிப்பில் கூட ஒரு மொராக்கருக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

இது ஏதோ 2003, 2004 ஆண்டுகளைச் சேர்ந்த அரதப் பழசான ஒரு விஷயம் என்றெண்ண வேண்டாம். 2007-இல் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி3, ஐரோப்பாவிலிருக்கும் ‘ஜிஹாதிகள்’ எனப்படும் புனிதப்போராளிகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது மொராக்கர்கள் (19.22%) (இதில் பாகிஸ்தானியர்களுக்கு ஐந்தாம் இடம் 4.89%). ஐரோப்பாவின் மொத்த போதைப் பொருள் சப்ளையில் முதலிடம் வகிப்பதும் மொராக்கோதான்.

ஒரு விதத்தில் இன்று ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அனுபவிக்கும் தீவிரவாத வெறிச்செயல்களுக்குக் காரணம் அவர்களேதான். ரஷ்யாவை எதிர்ப்பதற்காக, பின் லேடனை ஆப்கானிஸ்தானில் கொம்பு சீவி விட்டது அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடப்பதாய் நினைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளுக்கு உதவிசெய்ய ஆள் அனுப்பியது மொராக்கோ! இரண்டாம் உலகப்போர் வரை மொராக்கோவை தொடர்ந்து சூறையாடியிருக்கின்றன ஸ்பெயின், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள். ஐம்பது வருடங்கள் கழித்து அதே மொராக்கர்கள் சப்ளை செய்யும் போதைப்பொருட்களில் சீரழிந்து அவர்கள் வீசும் குண்டுகளில் ஸ்பானியர்கள் பலியாக வேண்டியிருப்பது ஒரு குரூரமான நீதி என்று ஆப்பிரிக்கக் கொடுமைகளைப் பற்றி நினைத்தால் தோன்றுகிறது.

நகக்கண் அளவே இருக்கும் பெல்ஜியத்தின் லியோபொல்ட் (Leopold) நடத்திய அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! தந்தம் மற்றும் ரப்பர் கொள்ளை; அடிமைத்தொழில், சுரண்டல், குறைந்த கூலி, பசி, பட்டினி என அவன் கொன்றுபோட்டது பத்து மில்லியன் காங்கோ மக்களை. அதே ஆப்பிரிக்காவின் மொராக்கர்கள்தான் இன்று பெல்ஜியத்திலிருக்கும் மிக அதிகமான குடியேறிகள். இந்த மொராக்கர்களுக்கு ஐரோப்பாவின், ஏன் மொத்த மேற்குலகின் தீவிரவாத மையமாக இருப்பது பெல்ஜியம்.

பெல்ஜியத்தில் யூதர்கள் மிக அதிகமாக இருப்பது ஆண்ட்வெர்ப் நகரத்தில். (ஆண்ட்வெர்ப்பின் வைர வியாபாரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்). இஸ்ரேல் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி யூதர்களை மிரட்டி வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கும் மொராக்க முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதும் அதே ஆண்ட்வெர்பில்தான்!

நான் இலேசான படபடப்புடன் முடிவெட்டக்கொள்ள கிளம்பிப்போனது அந்த ஆண்ட்வெர்ப்பின் மொராக்கப் பகுதிக்குதான். சரியாக ஒரு மாதம் கழித்து நவம்பர் 2004-இல் ஆண்ட்வெர்ப்பிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவிலிருக்கும் ஆம்ஸ்டர்டாமில் ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார் இஸ்லாமியர்களைத் தீவிரமாக விமர்சித்து வந்த டச்சு இயக்குநர் தியோ வான் கா4 (Theo van Gogh). நெஞ்சில் கத்தியைச் சொருகி அதில் எச்சரிக்கைக் கடிதத்தைக் குத்தியிருந்தான் கொலை செய்தவன். அத்தோடு நில்லாமல் மிகக்குரூரமாக அவர் தொண்டையை மட்டும் தனியே அறுத்து எடுத்துச் சென்றுவிட்டான்.

தொடர்ந்து நடைபெறும் தற்கொலைப்படைத் தாக்குதல்களிலும், குண்டு வெடிப்புகளிலும் கலகலத்துதான் போயிருக்கிறது ஐரோப்பா. புதிதாக இடம்பெயரும் ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் மீது வெறுப்பும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. யார் மீதும் ஒரு சந்தேகப்பார்வையும், புருவ உயர்த்தலும் இருக்கிறது.

இந்த வெறுப்பு, ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், கருப்பின மக்கள் மீதான இனவெறி, ஐரோப்பியர்களிடம் காலம் காலமாக இருக்கிறதே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஃபாஸ்பைண்டர் (Werner Fassbinder) என்ற ஜெர்மானிய இயக்குநரின் ‘Ali fear eats the soul’ என்ற 1973 – இல் வெளிவந்த பிரபலமான திரைப்படத்தின் அடிநாதமே இந்த இனவெறிதான்5. ஒரு மொராக்கரைத் திருமணம் செய்து கொண்டதால் ஒரு ஜெர்மானியப் பெண் சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவதாகக் காட்டியிருக்கிறார் ஃபாஸ்பைண்டர்.

அல்ஜீரியர்கள், அராபியர்கள், துருக்கியர்கள் மேலும் ஆசிய முஸ்லிம்கள் மீது ஐரோப்பியர்களில் பல நாடுகளில் மிக்க பயம் கடந்த ஐம்பதாண்டுகளாகவே இருந்து வருகிறது. இதைத்தான் எட்வர்ட் சயித் (Edward Said) தனது புகழ் பெற்ற ‘Orientalism’ என்ற ஆய்வு நூலில் அக்கக்காகப் பிய்த்து உதறி ஐரோப்பிய அறிவு ஜீவிகள் மேலும் மேலை அறிவு ஜீவிகள் மனதில் ஒரு குற்ற உணர்வை முதல் முறையாக வெற்றிகரமாகப் பதிவு செய்தார். இடது சாரியினரின் நடுவே இது ஒரு புனித நூல் போல மதிப்பு பெற்றது. இந்த நூலுக்கே இப்போது நிறைய விமர்சனம் இருக்கிறது என்றாலும் அது ஒரு முக்கியமான் நூலதான். மேலும் காம்யுவுடைய புகழ் பெற்ற ‘ The Outsider’ (அந்நியன்) என்ற நூலே பற்றிய அச்ச உணர்வான xenophobia பற்றியதுதான். அதில் வேறு பல உளவியல் சார்ந்த நீரோட்டங்கள் இருந்தன என்றாலும், அதன் மையப் பாத்திரமானவனின் அதீதமான அன்னியப் படுதல் மூலம் எப்படி அராபியர் மனிதராகப் பார்க்கப் படவில்லை, அடையாளம் அற்ற எதிரி சக்திகளாகப் பார்க்கப் படுகிறார் என்று காம்யு சுட்டுகிறார்.

அல்ஜீரியப் போரில் ஃபிரான்ஸ் சிக்கி இருந்த காலத்தில் வந்த நூல் இது. இதே போலப் பல ஐரோப்பிய நூல்களை நாம் சொல்லலாம். இவற்றிற்கு மாறாக அலெக்சாந்தர் புஷ்கின் மற்றும் அவருடைய தாத்தாவிற்கு ரஷ்ய ஜார் மன்னர்களின் சபையில் ஏகோபித்த வரவேற்பு இருந்தது என்பது ஐரோப்பியரின் நடுவே ஆப்பிரிக்க/ மாற்று இன மக்களின் மீது ஒரே மாதிரியான வெறுப்பு இல்லை என்பதைச் சுட்டுகிறது. புஷ்கினுடைய தாத்தா ஒரு ஆப்பிரிக்கர் (மூர் என்று அழைப்பார்கள். இவர் ஜாருக்கு வலது கை போல இருந்த ஒரு ராணுவத் தளபதியாகவும், மதியாலோசகராகவும் இருந்தார். புஷ்கினும் கருப்பர் ஆனால் ஐரோப்பியக் கருப்பர்- இவருடைய நூல்கள் ரஷ்ய இலக்கியத்தின் சிகரங்களென இன்றும் கருதப் படுகின்றன.)

இது போன்ற பல்வேறு விஷயங்களைக் கொண்டு பார்க்கும்போது மொராக்கர்களால் தம் தேசியப் பாதுகாப்பிற்கே ஆபத்து வரும் என்று ஐரோப்பியர்கள் பயந்து இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. ஆனால் அவர்களால் தம் பண்பாடும் சமுகமும் சீரழிந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு வெகு நாட்களாகவே உண்டு.

இந்த இனவெறி சார்ந்த வெறுப்பு, பயம் இவையெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு இந்த ஜிஹாதிகள் மீதான அச்சம் ஐரோப்பாவெங்கும் விரவியிருக்கிறது. பெரும்பாலான இடதுசாரிகள் விமர்சிப்பது போல் கி.பி.2000 -ஆம் வருடத்துக்கு முந்தைய ஐரோப்பிய இனவெறி சார்ந்த வெறுப்பும், இப்போது நிலவும் ஜிஹாதிகள் மீதான பயமும் ஒன்றே என்று சொல்வது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.

ஆனால் உண்மையாலுமே நன்றாக உழைக்கும், அடிமட்ட வேலைகளை மிகக்குறைந்த கூலிக்கு செய்து தரும் மொராக்கோ, துருக்கி, கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளின் குடியேறிகளும் ஃபிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற பணக்கார நாடுகளுக்குத் தேவையாக இருக்கிறார்கள். ஆபத்தான நிலக்கரி சுரங்கங்களில் கடினமான வேலை செய்வதற்காகத்தான் 1950-களில் நிறைய மொராக்கர்கள் பெல்ஜியத்தில் குடியேறினார்கள். மகா சோம்பேறிகளான ஃப்ரான்ஸ் தொழிலாளிகள் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதை எதிர்ப்பதன் முக்கிய காரணம் துருக்கியின் குறைந்த கூலிக்கு நிறைய வேலை பார்க்கும் தொழிலாளிகள். துருக்கியின் மத அடிப்படைவாதமெல்லாம் இரண்டாம் பட்சமான சாக்கு போக்குதான்.

ஒருவிதமான இக்கட்டான சூழலில் ஐரோப்பா, குறிப்பாக பெல்ஜியம் சிக்கிக்கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது. பெல்ஜியம் ஒருபுறம் கடுமையான இனவெறிக்கெதிரான சட்டங்கள், தண்டனைகள் மூலம் இனவெறியிலிருந்து விடுபட்ட பரந்த மனப்பான்மை கொண்ட நாட்டைப் போன்று காட்சியளிக்கிறது. வேற்று நாட்டு மக்களுக்கு வீடு வாடகைக்குத்தர மறுத்தவர், ‘ஆப்பிரிக்க மருத்துவரிடம் செல்ல மாட்டேன்’ என்று வம்பாகப் பேசியவர், விபத்து நடந்தபோது வெள்ளை பெல்ஜியப் பிரஜைக்கு ஆதரவாக நடந்து கொண்ட போலிஸ் அதிகாரி எனப் பல்வேறு வழக்குகளில் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு புறம் புதிய, புதிய, எதிர்பாராத ரூபங்களில் ஜிஹாதிகள் கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

மார்ச் 2004-இல் உடைந்த ஹெட்லைட்டுடன் வந்ததற்காக ஒரு லாரியை ஏதேச்சையாக பெல்ஜியம் போலிஸ் நிறுத்த, ஓட்டி வந்த டிரைவர் காலித் பெளலோதோ (Kalid Bouloudo) என்ற ஒரு நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த இஸ்லாமியத் தீவிரவாதி என்று தெரிந்தது6. இவர் முற்குறிப்பிட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்ய வந்த ஒரு மொராக்கரின் மகன். பெல்ஜியத்திலேயே பிறந்து வளர்ந்தவர். 2003-இல் மொராக்கோவின் காஸாபிளாங்கா (Casablanca) நகரில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இவருக்குத் தொடர்பிருந்தது தெரியவந்தது.

ஆக, இடம் பெயர்ந்த மொராக்கர்கள் மீது மட்டுமில்லாமல் அவர்கள் வாரிசுகளான பெல்ஜியப் பிரஜைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பெல்ஜியம் அரசாங்கம். ரியல் மாட்ரிட், காஸாபிளாங்கா இங்கெல்லாம் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தியது GICM என்று அறியப்படும், அல்-கொய்தாவிடமிருந்து பண உதவி பெறும் ஒரு ஐரோப்பிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மொராக்கர்கள், அல்லது அவர்களுக்குப் பிறந்த ஐரோப்பிய பிரஜைகள்.

இது கூடப் பரவாயில்லை. ஒரு முஸ்லிமல்லாத, பிறப்பால் மொராக்கோவுடன் தொடர்பே இல்லாத ஒரு பெல்ஜியப் பெண்மணியே மனித வெடிகுண்டாகத் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் அதிர்ந்து போயிருக்கிறது பெல்ஜியம்.

முரியல் டெகாக் (Murielle Degauque)என்ற அந்த பெல்ஜியப் பெண்மணி ஐசாம் கோரிஸ் (Issam Goris) என்ற பெல்ஜியத்திலிருந்த மொராக்கரைக் காதலித்து அவருடனே மொராக்கோவுக்கும் சென்றுவிட்டார்7. மொராக்கோவில் முஸ்லிமாக மதம் மாறிய அவருக்கு பர்தா கொடுக்கப்பட்டது; மத அடிப்படைவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் கிளம்பி நேரே ஈராக் சென்று அமெரிக்கப் படைகள் மேல் இடுப்பில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.

ஆக, மொராக்கர்கள், அவர்கள் பிள்ளைகள் மட்டுமில்லாமல், அந்த பிள்ளைகளைக் காதலிப்பவர்களையும் கண்காணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலிருக்கிறது பெல்ஜியம். இப்படியாக ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு நாடு என்று கொஞ்சம் கொஞ்சமாக இந்த தீவிரவாத வலை விரிந்து கொண்டே வருகிறதோ என்ற் கவலையும் ஏற்படுகிறது.

முரியல் டெகாக் தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் கழித்து 2005-இன் கிறுஸ்துமஸ் விடுப்பில் நான் அயர்லாந்திலிருந்து என் நண்பர்களைச் சந்திப்பதற்காக பெல்ஜியம் போனேன்.

அயர்லாந்திலிருந்து இந்தியப் பாஸ்போர்ட்டில் பெல்ஜியத்துக்கு வரும் இந்தியப் பிரஜை.

இந்த ஒரு காரணம் போதாதா?

விமானத்திலிருந்து இறங்கி பாஸ்போர்ட்டைப் பார்த்ததும் இமிக்ரேஷன் பரிசோதனையிலிருந்தவர் கையிலிருந்த வாக்கி-டாக்கியில் இன்னொருவரைக் கூப்பிட்டார்.

காரைக்குடி வீடுகளின் கதவு போல அகலமாக இருந்த ஒருவர், என்னிடம் அன்பாக, “கொஞ்சம் என்னுடன் வாருங்கள்” என்றார். எனக்குப் பின்னால் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லாம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு ஆட்டுக்குட்டி போல அந்த அகல மனிதர் பின்னால் போனேன்.

ஒரு தனியறையில் வைத்து என்னைக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தார். என்னுடைய பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போடாத குறையாய் பரிசோதித்தார். என்னுடைய கிரெடிட் கார்ட் உபயோகத்தில் இருக்கிறதா என்று பார்த்தார். நான் சென்று தங்கப்போகும் இடம், சந்திக்கவிருந்த நபர்கள் அத்தனை பேருக்கும் ஃபோன் செய்து உறுதிப்படுத்தினார். கையிலிருந்த பையை பிரித்துப் போட்டார்.

அரை மணி நேரத்தில் இத்தனையும் செய்து விட்டு, “நீங்கள் போகலாம்” என்றார்.

கொஞ்சம்போல் தைரியம் வந்து “என்னை மட்டும் தனியே கூப்பிட்டு இப்படி விசாரிக்க என்ன காரணம்?” என்றேன்.

அகல மனிதரின் பதில்:
“அதோ உங்கள் பஸ் அங்கே நின்று கொண்டிருக்கிறது. இந்த வழியாகப் போக வேண்டும். நன்றி”.

****
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பேட்டியிலிருந்து இன்னொரு கேள்வியும், அதற்கு பெளஸித் சொன்ன பதிலும்.

“உங்களுடைய ஆய்வின் போது துனீஷியாவிலிருந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் பேசினீர்களா?”

“துனீஷியர்களிடம் பேசவில்லை. ஆனால் பெல்ஜியத்திலும், மொராக்கோவிலும் அவர்கள் தடை செய்யப்படுவதற்கு முன் பேசியிருக்கிறேன். அதாவது லண்டன் தாக்குதல்களுக்கு முன்பு. அவர்களிடம் பேசியதில்தான் இந்த முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அனுப்பப்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர்களில் நிறைய பேர் படித்தவர்கள் அல்லது படிப்பதற்காக பெல்ஜியம் சென்றவர்கள். அடிப்படைவாதிகள் ஜெயிலில் இருக்கும் இளைஞர்களையோ அல்லது போதை மருந்துடன் தொடர்புடைய இளைஞர்களையோ தங்கள் இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள். பெல்ஜியத்தில் இது போன்ற இளைஞர்களின் குடும்பங்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பத்தாயிரம் டாலர்கள் அந்த இளைஞர்கள் தங்களுடன் சேருவதற்காகக் கொடுக்கிறார்கள். அந்தக் குடும்பங்களும், தங்கள் குடும்பத்துக்கு ஒரு இழுக்காகிவிட்ட இளைஞர்களை விட்டொழிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”.

****
பாகிஸ்தானியர்கள் நான் தங்கியிருந்த ஆண்ட்வெர்ப் நகரம் முழுவதும் STD பூத் வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த டெலிஃபோன் கடைக்குள் வேண்டுமானாலும் நுழைந்து தாரளமாய் ஹிந்தியில் பேசலாம். ஒவ்வொரு ஞாயிறும் நாங்கள் (நான் மற்றும் என்னைப்போல் கணிப்பொறி வேலை செய்ய வந்த இந்தியர்கள்), அருகிலிருக்கும் பூங்காவில் கிரிக்கெட் விளையாடச் செல்வோம். அவ்வப்போது பாகிஸ்தானிய இளைஞர்களும் எங்களுடன் சேர்ந்துகொள்வார்கள்.

“இந்தியாவிற்கு சீக்கிரம் திரும்ப வேண்டும். கிரிக்கெட் தொடர் இருக்கிறது” – என்னுடன் கிரிக்கெட் விளையாட வந்த பாகிஸ்தானிய இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
“என்னால் அது முடியாது”
“ஏன்?”
“நான் வேலை தேடி போர்ச்சுகலில் இருந்து வந்திருக்கிறேன். இதுவரை வேலை கிடைத்தபாடில்லை. மீண்டும் போர்ச்சுகல்லுக்கே திரும்ப வேண்டும். சென்ற முறை பாகிஸ்தான் போயிருந்தபோது அம்மா நிறைய அழுதாள். அப்பாவின் ரேடியோ கடையை அடாவடியாய் போலீஸ் பறித்துக்கொண்டுவிட்டது. அந்தப்பக்கம் ஆஃப்கானிஸ்தான். இந்தப்பக்கம் தீவிரவாதிகள். உள்ளூரில் ராணுவம் – போலிஸ். சண்டைக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உங்களுக்கு அப்படியில்லை. ஆங்கிலம் படித்துவிட்டு, கம்ப்யூட்டரில் பணம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை அமைதியானது”.

முதல் முறையாக ஒரு பாகிஸ்தானியன் ஒரு இந்தியனிடம் தன் நாட்டைப் பற்றி வழக்கமான வறட்டு கெளரவமும், பெருமிதமுமில்லாமல் அப்படிப் பேசியதைக் கேட்டேன். அவன் முகத்தில் நாடு, மதம் இதையெல்லாம் தாண்டிய ஒரு கசப்பான விரக்தியைக் கண்டேன். பெளஸிதின் பேட்டியைப் படித்தபோது என் நினைவுக்கு வந்தது அந்த இளைஞனின் விரக்திதான். பணத்துக்காகவோ, இல்லை மத அடிப்படைவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டோ அவன் தீவிரவாத இயக்கங்களின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாதே என்று இப்போது கவலையாக இருக்கிறது.

நானும், அவனும் நீண்ட நேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் நண்பர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பேட்டிங் செய்ய என் முறை வந்தபோது குளிர்கால பெல்ஜியத்தில் மெதுவாக இருள் கவிழத் தொடங்கியிருந்தது.

****
sethupathi.arunachalam@gmail.com

****
குறிப்புகள்:
1) நெளரி பெளஸித் பேட்டி.
http://www.commongroundnews.org/article.php?id=21387&lan=en&sid=1&sp=0
2) ரியல் மாட்ரிட் குண்டுவெடிப்புகள்:
http://en.wikipedia.org/wiki/11_March_2004_Madrid_train_bombings
3) ஐரோப்பிய ஜிஹாதிகள் பற்றிய சர்வே:
http://www.sofir.org/sarchives/005965.php
4) தியோ வான் கா பற்றிய மேல்விவரங்கள்:
http://en.wikipedia.org/wiki/Theo_van_Gogh_(film_director)
5) Ali fear eats the soul திரைப்படம் பற்றிய விவரங்கள்:
http://en.wikipedia.org/wiki/Ali:_Fear_Eats_the_Soul
6) காலித் பெளலோதோ பற்றிய விவரங்கள்:
http://www.iht.com/articles/2005/10/09/news/belgium-5413344.php
7) முரியல் டெகாக் பற்றிய விவரங்கள்:
http://www.independent.co.uk/news/europe/girl-next-door-who-became-a-suicide-bomber-517797.html

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்