ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

பி. ஏ. கிருஷ்ணன்


(இந்தக் கட்டுரை காலச் சுவடு பிப்ரவரி 2006 இதழில் வெளிவந்தது. திண்ணை வாசகர்களும் இதைப் படிக்க வேண்டும்.)

I

2005 டிசம்பர் கடைசியில் நான் கெளஹாத்தியில் இருந்தேன். நான் முன்பு பார்த்த நகரத்திற்கும் இன்றைய நகரத்திற்கும் நிறைய வித்தியாசம். எல்லா இந்திய நகரங்களையும் போல கெளஹாத்தியிலும் அழுக்கும், மக்களும், புகையும் பெருகி மூச்சு விடுவதே கடினமாக இருந்தது. பிரம்மபுத்ரா நதியில் குளிர்காலம் என்பதனால் தண்ணீர் அதிகம் இல்லை. நதியில் பயணம் செய்ய ‘ஜோல் போரி ‘ (ஜோல்=ஜல்=தண்ணீர்; போரி=பரி=தேவதை) என்ற படகு காத்திருந்தது. படகு கொசுக்களின் தேவதை. ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே நம்மை அப்படியே தூக்கிச் சென்று விடுமோ என்ற அளவுக்கு மொய்ப்பு. சூரியன் மறைந்த பின் இருட்டு நதியில் படகுப் பயணம். அஸ்ஸாமிய உச்சரிப்பில் ஒருவர் ‘அந்தாஸ் ‘ படத்தில் ராஜேஷ் கன்னா விபத்தில் உயிரை விடுவதற்கு சற்று முன்னால் பாடிய பாடலை (வாழ்க்கை ஒரு நிச்சயமற்ற பயணம். நாளை இருப்போமா என்று சொல்ல முடியாத பயணம்) பாடிக் கொண்டிருந்தார். பின்னால் அபசுவரப் பக்க வாத்தியங்கள். படகிலிருந்து தண்ணீரில் குதித்து பயணத்தை அப்போதே முடித்துக் கொள்ளலாமா என்று இருந்தது.

கெளஹாத்தி எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த கெளஹாத்தியில் ஸரத் சந்திர ஸின்ஹா இருந்தார். அவர் இல்லாத நகரத்தை எண்ணிப் பார்க்கவே துயரமாக இருந்தது. நகருக்கு வந்த அன்று பத்திரிகையில் முக்கியச் செய்தி அதுதான். “ முன்னாள் முதலமைச்சர் ஸரத் சந்திர ஸின்ஹா தனது 93ம் வயதில் காலமானார்.”

II

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஸின்ஹாவை முதலில் சந்தித்த போது மிகுந்த பதட்டத்தில் இருந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அலுவலகத்தில் ஒரு உயர் அதிகாரி உல்ஃபா தீவிர வாதிகளால் கடத்தப் பட்டிருந்தார். அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டிய பணி எனது. பல மனிதர்களைச் சந்தித்து அவர்களிடம் மன்றாட வேண்டிய கட்டாயம். சந்தித்த அனைவரும் மிக நல்லவர்களாக இருந்தார்கள். நான் கூறுவதைப் பொறுமையோடு கேட்டார்கள். ஆனால் உல்ஃபா தீவிரவாதிகளை அணுகும் வழிமுறைகளைப் பற்றி அவர்கள் பயன்படும் வகையில் எதுவும் கூறத் தயாராக இல்லை. எல்லோருக்கும் வெளியே சொல்ல முடியாத ஒரு அச்சம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. அன்றைய அஸ்ஸாம் முதல் அமைச்சரான ஹிதேஷ்வர் ஸைக்கியாவை பல முறை சந்தித்தேன். அருமையான மனிதர். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரிய அதிக நேரம் ஆகவில்லை. என்ன செய்வது என்பதறியாது திகைத்துக் கொண்டிருந்தேன். எனது நண்பரும் எங்களுக்கு பெரும் உதவி செய்து கொண்டிருந்தருமான டிஐஜி சக்கரவர்த்திக்கும் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு நாள் ஹோட்டல் அறையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார்:

‘கிருஷ்ணன், நீங்கள் ஏன் ஸரத் சந்திர ஸின்ஹாவைச் சந்திக்கக் கூடாது ? ‘

‘சந்திக்கலாம். யார் அவர் ? ‘

‘எங்கள் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். உங்கள் அதிகாரி கடத்தப் பட்ட இடத்தைச் சேர்ந்தவர். அங்கு பெரும்பான்மையரான ராஜ்பொங்ஷி இனத்தைச் சேர்ந்தவர். நல்ல மனிதர். ‘

‘இங்கு எல்லோரும் நல்ல மனிதர்கள்தான். உபயோகமான மனிதராக இருப்பாரா ? ‘

‘முயற்சி செய்து பாருங்களேன். ‘

எனக்கு சிறிதளவு கூட நம்பிக்கை இல்லை.

III

ஸின்ஹாவிடம் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வீட்டிற்கு வரச் சொன்னார். வீடு பெல்தோலா பகுதியில். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெல்தோலா கெளஹாத்தியின் ஒரு புற நகர்ப் பகுதி. முன்னாள் முதலமைச்சர் இருக்கும் பகுதியாக எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு அருகே ஒரு விறகுக் கடை.

சிறிய வீடு. அவர் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். உயரமானவர். சிறிய கண்கள். என்னை பார்த்தவுடன் மலர்ந்து சிரித்தார். கண்கள் மறைந்து போயின. முகத்தில் ஆயிரக்கணக்கான சுருக்கங்கள். மத்தாப்புச் சுருக்கங்கள். பார்த்தவுடனேயே ஈர்த்து விடும் சுருக்கங்கள். வீட்டின் வரவேற்பு அறையில் பழைய சோபா. தனது மனைவியையும் மகளையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். வேலையாட்கள் யாரும் இல்லை. அவரது மனைவிதான் எனக்குத் தேநீர் தந்தார்.

வந்த காரணத்தை சொன்னேன். சிறிது நேரம் யோசித்த பின் அவர் சொன்னார்;

‘கிருஷ்ணன், கெளஹாத்தியில் இருந்து ஒரு பயனும் இல்லை. கொக்ராஜாருக்கு செல்ல வேண்டும். ஸாலாகாட்டிக்குச் செல்ல வேண்டும். அங்கே உள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் வருவீர்களா ?”

‘வருகிறேன், சார். நீங்களும் வருவீர்களா ? ‘

‘நிச்சயம். ஆனால் எனக்குச் சில நிபந்தனைகள் உண்டு. நான் வரும் போது போலீஸ் உங்களுடன் வரக் கூடாது. நீங்கள் என்னை நம்ப வேண்டும் அல்லது போலீசை நம்ப வேண்டும். நான் பெரும்பாலும் பஸ்ஸில்தான் பயணம் செய்வேன். நீங்கள் பஸ்ஸில் வருவீர்களா ?”

‘நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ அப்படியே செய்கிறேன். ஆனால் பஸ்ஸில் சென்றால் நேரம் விரயம் ஆகலாம்.”

‘எதற்கும் நான் அடுத்த வாரம் தொடர்பு கொள்கிறேன்.”

திரும்பி வரும் போது நான் என் காரை ஓட்டி வந்தவரிடம் கேட்டேன்.

‘இவர் எத்தனை வருஷங்கள் முதலமைச்சராக இருந்தார் ? ‘

‘ஏழு வருஷங்கள், சார். இன்றைய முதலமைச்சருக்கு குரு. ‘

எனக்கு வியப்பாக இருந்தது. நான் நமது ஜானகி அம்மையாரைப் போல பொம்மை முதலமைச்சராக இருந்திருப்பார் என நினைத்தேன்.

அவர் பதவி விலகிய உடனேயே கக்கத்தில் குடையை இடுக்கிக் கொண்டு அலுவலத்திற்கு வெளியே வந்து பஸ்ஸில் ஏறி வீட்டிற்குச் சென்று விட்டாராம்.

IV

ஸின்ஹாவிடமிருந்து அழைப்பு சிறிது தாமதமாக வந்தது.

‘I am sorry for the delay, கிருஷ்ணன். நேரமில்லை. பஸ்ஸில் போக முடியாது. என்னிடம் கார் இல்லை. உங்களால் ஒரு வாடகைக் கார் அமர்த்த முடியுமா ? ‘

அவர் பேசியது நடு இரவிற்கு சற்று முன்னால். பயணம் தொடங்க வேண்டியது காலை ஐந்து மணிக்கு. கிடைத்த வாடகைக் கார் உயிரை விடும் நிலையில் இருந்தது. எனக்கு அந்தக் காரில் ஸின்ஹாவை அழைத்துச் செல்லத் தயக்கமாக இருந்தது. அவரிடம் சொன்ன போது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘நான் லாரியில் கூட பயணம் செய்திருக்கிறேன், கிருஷ்ணன். கவலைப் படாதீர்கள். ‘

பயணத்தின் போதுதான் தெரிந்தது நான் ஒரு கிடைத்தற்கரிய மனிதருடன் பயணம் செய்கிறேன் என்று. எண்பது வயதிற்கு மேல் ஆகியிருந்தும் அவரிடம் களைப்பே தெரியவில்லை. பிரம்மபுத்ரா பாலத்தைக் கடக்கும் போது சொன்னார்:

‘நான் படிக்கும் போது இந்தப் பாலம் கிடையாது. படகில்தான் நதியைக் கடக்க வேண்டும். ‘

‘எங்கே படித்தீர்கள் ?”

‘காட்டன் கல்லூரி. பிறகு வாராணசி ஹிந்து பல்கலைக் கழகம். ‘

பழைய காந்தீயவாதிகளின் இருந்த மென்மை, பொறுமை அதே சமயத்தில் கொண்ட கொள்கையில் பிடிப்பு போன்ற எல்லாத் தன்மைகளும் அவரிடமும் இருந்தது. தீவிரவாதத்தால் எந்த பயனும் இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உல்பாவிற்கு எதிராக உரத்த குரல் கொடுத்த மிகச் சிலரில் அவர் ஒருவர். ஆனால் அரசு உல்ஃபாவை எதிர் கொள்ளும் விதம் தவறு என்பதிலும் அவருக்கு உறுதியிருந்தது. தீவிர வாதிகளுக்கு அவர் மீது ஒரு மரியாதை இருந்தது. அவர் எல்லா இடங்களுக்கும் தனியாக, அச்சமின்றிச் செல்ல தயங்கவில்லை. தீவிர வாதிகள் அவரை தொடக் கூட மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்.

இந்திய மக்களுக்கு முழு விடுதலை சோஷலிஸம் மூலமாகத்தான் தர முடியும் என்பதில் அவர் திடமாக இருந்தார். சோவியத் யூனியனின் வீழ்ச்சி சோஷலிஸத்தின் வீழ்ச்சியல்ல என்பதிலும் அவருக்கு ஐயம் இல்லை.

நான் அப்போது Eric Hobsbawm எழுதிய The Age of the Empire புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளைப் பற்றிப் பேசும் புத்தகம் அது. அதில் இந்தியாவைப் பற்றி வந்த வரிகளை அவரிடம் படித்துக் காட்டினேன்.

India was the ‘brightest jewel in the imperial crown ‘ and the core of British Strategic thinking precisely because of her very real importance to the British Economy. This was never greater at this time, when anything up to 60 per cent of British cotton export went to India and the FarEast, to which India was the key – 40-45 percent went to India alone – and the international balance of payments of Britain hinged on the payments surplus that India provided.

இந்த வரிகள் அவருக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தன.

“45 சதவீதமா ? நம்ப முடியவில்லை. ஆனால் ஹாப்ஸ்பாம் எழுதியிருந்தா சரியாகத்தான் இருக்கும். நான் இதை காப்பி எடுத்துக் கொள்ளலாமா ?”

“புத்தகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.”

“வேண்டாம், வேண்டாம். எனக்குப் படிக்க நேரம் கிடைக்காது.”

என்னிடம் பேசிக் கொண்டே வந்தார். பேசிப் பேசி என்னுடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும் சொல்ல வைத்து விட்டார்.

சாப்பாட்டிற்கு ஒரு சாலையோர ஓட்டல் கிடைத்தது. மிகவும் சதாரணமானது. நமது பேருந்துக்கள் தேர்வு செய்யும் ஹோட்டல்களைப் போன்றது. ஸின்ஹாவைப் பார்த்ததுமே முதலாளி ஓடி வந்து விட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மலர்ச்சி. ஒரு ஓரத்தில் சிறிது சுத்தமான மேஜை கிடைத்தது.

“எனக்கு சாதமும் மீன் கறியும். கிருஷ்ணன் மதராஸி பிராமணர். சாப்பாடும் மதராஸி பிராமண சாப்பாடுதானே ? அவருக்கு நல்ல சப்ஜி கொடுங்கள். நான் உங்க பக்கத்தில உட்கார்ந்து சாப்பிடலாமா ?”

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சாப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. கடுகு எண்ணெய் குமட்டிக் கொண்டு வந்தது.

“ என்ன செய்வது கிருஷ்ணன். இங்கே எல்லாம் கடுகு எண்ணெய்தான். பிடிக்காது என்று சொல்லியிருந்தா, பிரட் பட்டர் கொண்டு வரச் சொல்லியிருப்பேனே.”

முதலாளி பணம் வாங்க மறுத்து விட்டார். மிகவும் வற்புறுத்தி நான் சாப்பிட்ட பங்கிற்காவது பணம் வாங்கிக் கொள்ள வைத்தேன்.

“கிருஷ்ணன், அந்த புத்தகத்தைக் கொடுங்கள். காப்பி செய்து கொள்ள வேண்டும்.”

சாப்பாடு மேஜையில் ஹாம்ஸ்பாம் புத்தகத்தை வைத்துக் கொண்டு தன்னிடம் உள்ள குறிப்பேட்டில் நிதானமாக அந்த வரிகளைப் பதிவு செய்து கொண்டார். யாரிடம் சொல்லப் போகிறார் ? எந்தக் கூட்டத்தில் இந்த புள்ளி விவரங்களை அடுக்கப் போகிறார் ? நம்பிக்கைக்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை என்று அன்று எனக்குப் புரிந்தது. சோஷலிஸத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை மனதில் துளிர் விட்டது.

V

கொக்ராஜார் ஊரில் பலரைச் சந்தித்தோம். ஸாலாகாடி ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்குச் சென்றோம். எல்லோருக்கும் ஸின்ஹாவிடம் பரிச்சயம் இருந்தது. அவரை ஒரு முந்தைய முதலமைச்சர் போலவே மக்கள் நடத்தவில்லை. தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு முதியவருக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார்களோ அவ்வளவு மரியாதை அவருக்குக் கொடுத்தார்கள். அவரும் வீட்டு மனிதர்களைப் போலவே நடந்து கொண்டார். கொடுத்ததை எல்லாம் சாப்பிட அவர் வயிற்றில் இடம் இருந்தது. பூரணம் வைத்த சுசீயன் போன்ற ஒரு தின்பண்டம் அனேகமாக எல்லா வீடுகளிலும் கிடைத்தது.

“இவர் பெயர் கிருஷ்ணன். சொந்த ஊர் கன்யாகுமரி பக்கம். இங்கே அவர் விருந்தாளியாக வந்திருக்க வேண்டும். ஆனால் அவரது நண்பரைத் தேடி வந்திருக்கிறார். உங்கள் பையன்களிடம் சொல்லுங்கள். அவரைப் பிடித்து வைத்திருப்பதால் எந்த உபயோகமும் இல்லை என்று. பணம் கிடைக்கும் வாய்ப்பே இல்லை. சர்க்காருக்கு ஒரு ஆள் குறைந்தால் லாபம்தான். ஒரு பைசா கூட பெயராது. வெளியில் விட்டால் நான் சொல்லி ஒரு ஐம்பது பேருக்காவது வேலை ஏற்பாடு செய்கிறேன்.” பேசியது அவரது மொழியில். பேசியவுடன் அவரே எனக்கு மொழிபெயர்த்தார்.

ஒரு உண்மையான தலைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை அன்று நான் சற்று புரிந்து கொண்டேன். பல இளைஞர்கள் அவரைச் சந்தித்தார்கள். சிரிப்பும் கோபமும் கலந்த பேச்சு. ஸின்ஹாவிடம் சிரிப்பு மட்டும். கொக்ராஜார் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி அவரை வந்து சந்தித்தார். போகும் போது என்னிடம் அவரைப் பிரிந்து தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.

திரும்பி வரும் போது வாடகை வண்டி இறந்து போனது. நடு இரவு. வானம் தெளிவாக இருந்தது. தில்லியில் தெரியாத பல நட்சத்திரங்கள் அன்று தெரிந்தன. எனக்கு அப்போதுதான் பயம் வந்தது. உல்பாவின் கோட்டை எனக் கருதப் படும் இடம் அது. கார் ஓட்டுபவர் ஒரு லாரியில் ஏறி பக்கத்து ஊரிலிருந்து மெகானிக்கை அழைத்து வரச் சென்று விட்டார். ஸின்ஹா கொண்டு வந்திருந்த கம்பளிகளில் ஒன்றைப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டார். எனக்குத் தூக்கம் வரவில்லை. வெளிச்சம் தெரிந்தாலே வயிற்றில் புளியைக் கரைத்தது.

கார் ஓட்டுபவர் மெகானிக்கை அழைத்து வந்து காரைச் சரி செய்ய இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. கெளஹாத்தி வரும் போது விடியும் நேரம்.

ஸின்ஹா அவர் வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்திய போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தார்.

VI

ஸின்ஹாவின் முயற்சி வெற்றி அளிக்கவில்லை. அவரும் பல தடவை முயன்றார். பல தடவை எங்களுக்காக கொக்ராஜார் சென்றார். அரசியல் பொருள் ஆதாயங்கள் ஏதும் இல்லாமல் ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அந்த முதியவர் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்.

எங்கள் அதிகாரி திரும்பி வந்ததும் அவரிடம் நன்றி தெரிவிக்க மீண்டும் அவரது இல்லம் சென்றேன். திரும்ப அந்த மத்தாப்புச் சுருக்கங்கள்.

“மிக்க மகிழ்ச்சி, கிருஷ்ணண். உங்களைத்தான் பாராட்ட வேண்டும். இது நடந்திராத ஒன்று.”

அவர் மிகைப்படுத்துகிறார் என்பது எனக்குத் தெரியும். நான் கொண்டு வந்திருந்த சால்வையை அவருக்குப் போர்த்த முயன்றேன். பிடிவாதமாக ஏற்க மறுத்தார். கடைசியில் நான் அவரிடம் சொன்னேன், ‘சார், நான் உங்கள் மகன் மாதிரி. தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள். ‘

சால்வையைப் போர்த்தும் போது கிழவர் குனிந்து கொண்டார். என் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. திரும்ப வரும் போது டிரைவர் சொன்னார் ஏறக்குறைய என் வயதுள்ள அவரது மகன் சமீபத்தில் இறந்து போனதாக.

காந்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது C.F. ஆண்ட்ரூஸ் குறிப்பிடுகிறார்: (In Gandhi) it was passion for others that was supreme.

ஸின்ஹா காந்தியின் உண்மையான மிகச் சில சீடர்களில் ஒருவர் என்று எனக்குத் தோன்றுகிறது.

பி.ஏ. கிருஷ்ணன்.

—-

tigerclaw@gmail.com

Series Navigation

பி ஏ கிருஷ்ணன்

பி ஏ கிருஷ்ணன்