ஒப்பந்த மரணம்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



ஒவ்வொரு வருடமும் என் தந்தையின் நினைவு நாளன்று ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அன்று முழுவதும் அவர்களுடனே இருப்பது என் வழக்கம். அதுவே எனக்கு இதமளிக்கும் செயலாக இருந்துவந்தது.அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் மதுரையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது.வழக்கம் போல மதிய உணவுக்கும் சிற்றுண்டிக்கும் உண்டான கட்டணத்தைச் செலுத்திவிட்டு காலாற நடந்துவிட்டு வரலாம் என நடக்கத் துவங்கினேன்.எல்லா முதியோர் இல்லங்களுக்கும் சொந்தமான அதே புறக்கணிப்புகள் , அலட்சியங்கள் , தியாகக்கதைகள் மற்றும் கண்ணீருடன் காலனுக்கான அழைப்புகள். இந்த நிலைக்கான காரணம் கலாசார மாற்றமா இல்லை உள்மன குரூரத்தின் வெளிப்பாடா? என்று சிந்தித்துக்கொண்டே நடக்கையில்தான் அந்த வித்தியாசமான கூக்குரல் காதில் விழுந்தது.ஒரு வேளை எனக்குத்தான் காது சரியாகக் கேட்கவில்லையோவென அருகில் சென்று பார்த்தேன். கண்டிப்பாக தொண்ணூறு வயதிற்குக் குறைவிருக்காது ஒரு பெரியவர் படுத்திருந்தார்.பெரியவர் என்று வயதை வைத்துதான் சொல்கிறேன் ஏனென்றால் அவர் உருவம் சிறுத்து எட்டு வயதுப் பையனின் அளவில்தான் இருந்தார். தன் தளர்ந்த குரலில் “எமனே கிட்டே வராதே!! என்னை நெருங்கவே நெருங்காதே!!” என்று முடியாமல் கத்திக்கொண்டிருந்தார்.அந்த சூழ்நிலையில் எனக்கு அது மிகவும் பரிதாபகரமாகவும் , வலி நிரம்பியதாகவும் தோன்றியது.இந்த அறைகூவலுக்குப்பின் ஏதோ ஒன்று மறைந்திருப்பதாகத் தோன்றவே விசாரிக்க எண்ணி முதியோர் இல்ல பொறுப்பாளரிடம் இது குறித்து வினவினேன். அவர் சொன்ன கதை அப்பப்பா!! மிகவும் பயங்கரமானதாக இருந்தது ஆனால் அதை நம்புவதா வேண்டாமா எனப் புரியவில்லை.அந்தக் கதையை உங்களுக்கும் சொல்கிறேன் நம்பத்தகுந்ததா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சுமார் 60 வருடங்களுக்கு முன் மதுரையில் மிகப்பிரபலமான மில்லில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார் மாணிக்கவாசகம் பிள்ளை. பெரிய பங்களா , டிரைவரோடு கூடிய இரண்டு கார்கள் எனக் கிட்டத்தட்ட ஒரு சிற்றரசன் போல் வாழ்க்கை நடத்தினார். அவருக்கு மூன்று மகன்கள் ஒரே ஒரு மகள். நல்ல வளமான குறைவில்லாத இனிய வாழ்க்கை.இந்நிலையில் ஒரு நாள் அவர் காலையில் வழக்கம் போல் அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.எல்லா உடையும் போட்டாகிவிட்டது டை கட்டவேண்டியது தான் பாக்கி.அப்போது அவருக்கு யாரோ தன் இதயத்தில் கை வைத்துப் பிசைவது போல் இருந்தது.முகமெல்லாம் வேர்த்துக்கொட்டி உடல் நடுங்கியது. மனைவியையோ , மகனையோ கூப்பிட எண்ணினார். ஆனால் குரல் எழும்பவே இல்லை.மயக்கமாக வந்தது.

ஒரு கறுத்த ஆள் அவரருகில் நெருங்கி வருவது தெரிந்தது.அதிசயமாக அவனோடு மட்டும் பேசமுடிந்தது அவரால்.” யார் நீ ?” என்றார். வந்தவன் சற்று திடுக்கிட்டாற்போல இருந்தது.எதையோ முணுமுணுத்தபடி அருகில் வந்த அவன் பிள்ளையை நோக்கி “உன் கணக்கு முடிந்து உன்னை அழைத்துப்போக வந்திருப்பவன் நான். எமன் என்பார்கள் என்னை”என்றான்.அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது பிள்ளைவாளுக்கு. ” நீ கறுப்பாக இருப்பதால் இந்த வேலைக்கு வந்தாயா? அல்லது இந்த வேலை செய்வதனால் கறுப்பாகி விட்டாயா?”என்று கேட்டார். அதிர்ந்து சிரித்தான் எமன்.”எனக்கு உருவமே கிடையாது ! சிறு வயதிலிருந்து உன் மனதில் எமன் கறுமை நிறத்தவன் என்று பதிந்து போயிருப்பதால் நான் உனக்கு இப்படித்தெரிகிறேன்” என்று பதில் சொன்னவன் அடுத்த கேள்வியை எதிர் நோக்கியவன் போல பிள்ளைவாளை நோக்கி கையமர்த்திவன் தொடர்ந்து பேசினான். “உன் ஆழ்மன வலிமையால் உன் இறுதியை நீ உணர்ந்து கொண்டாய்! கலங்காமல் என்னுடன் புறப்படு “என்று கை நீட்டினான் காலன்.உடனே பிள்ளைவாள் எமனை நோக்கி “உன் வரவையே உணரும் சக்தி என் ஆழ்மனத்திற்கு உண்டென்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தியும் இருக்கும் அல்லவா அதன் படி நான் இப்போது உன்னுடன் வரப்போவதில்லை எனக்குப் பல கடமைகள் உள்ளன , மகன்களை ஒரு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் , மகளுக்கு ஊர் மெச்சும்படி திருமணம் செய்விக்க வேண்டும் , பேரன் பேத்திகளைப் பார்க்கவேண்டும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது எனவே என்னை விட்டு விட்டு நீ மட்டும் செல்”என்றார்.எமனின் பார்வையில் பரிதாபம் தெரிந்தது.பிள்ளையவர்கள் தன் வாதத்திறமையை மெச்சிக் கொண்டார்.ஆனால் எமன் போவதாக இல்லை. அவன் ” நீ தவறு செய்கிறாய் இயற்கையை மீறுவதால் பல குழப்பங்கள் நேரும் , மேலும் நிபந்தனையின் பேரிலேயே நான் இப்போது உன்னை விட்டுச் செல்ல முடியும் , என்ன சொல்கிறாய் “என்று தூண்டில் போட்டான் எமன்.மாணிக்க வாசகம் பிள்ளையா மாட்டுவார். அவர் எமன் விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் தான் தயார் என்றார்.எமன் போட்ட நிபந்தனை இதுதான் .”இனி வாழும் வாழ்வின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சாவை விரும்பி அவர் வரவேற்கக்கூடாது , அப்படி அவர் நினைத்தாலோ , பேசினாலோ அவருடைய வாழ்வு மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிக்கப்படும்”. பிள்ளையவர்கள் மனம் இதை ஒரு வரம் என்றே நினைத்து சம்மதித்து பிழைத்தும் விட்டார்.எமன் அவரை விட்டு நீங்கும்போது ஏனோ அவன் கண்களில் கண்ணீர் தெரிந்தது.

பிழைத்து எழுந்த முதல் ஐந்து வருடங்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றிக் கழிந்தது.கிட்டத்தட்ட அந்த சம்பவத்தையே அவர் மறந்து விட்டார். அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.பிறகு தான் ஆரம்பித்தன அவருடைய வாழ்க்கையில் வேதனைகளும் ,சோதனைகளும்.மனைவி காலமானார் , பெயர் தெரியாத ஏதோ ஒரு வியாதிக்கு மூத்த மகன் பலியானான்.இரண்டாவது மகன் சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இவருடைய கண்டிப்பும் நச்சரிப்பும் தாளாமல் எங்கோ ஓடிப்போனான்.மகள் புகுந்த வீட்டில் சுகப்படவில்லை.எந்த நேரமும் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நகையோ பணமோ வாங்கிக் கொண்டு போவாள்.இந்த சோகங்கள் எல்லாம் அவரை காலனை விரும்பி அழைக்கச் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். மூன்றாவது மகனுக்கு படிப்பு ஏறவில்லை ஆனால் வீட்டோடுதான் இருந்தான்.அப்போதிருந்த வசதிக்கு ஏற்றபடி ஒரு ஏழைபெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அது ஒன்றே பிள்ளையின் வாழ்க்கையில் ஓர் ஆறுதலான அம்சம்.காலம் மாணிக்கவாசகம் பிள்ளையை போட்டு உருட்டிய உருட்டலில் அவர் எத்தனை முறை தனக்கு சாவு வர வேண்டும் என்று விரும்பினாரோ தெரியாது. ஒரு வேளை தான் எமமைச் சந்தித்ததையே மறந்து விட்டார் போலும். இதோ இன்று மகனும் பேரனும் இறந்த நிலையில் தான் அவருக்கு தான் செய்த தவறு புரிந்தது. கொள்ளுபேரன் கொண்டு வந்து அவரை இந்தக்காப்பகத்தில் சேர்த்துவிட்டுப் போனான் நான்கு வருடங்கள் முன்பு. அந்த சாபம் ஞாபகம் வரும்பொதெல்லாம் எமனை “போ போ” என்று விரட்டுகிறார் அப்படியாவது இரண்டு வருடங்கள் வாழ்வில் குறையாதா என்று. எப்படியும் அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும் என்று நீண்ட கதையை கூறி முடித்தார் முதியோர் இல்லப் பொறுப்பாளர். நான் கேட்ட சில கேள்விகளுக்கு அவரிடம் விடையில்லை.

மீண்டும் ஆறு வருடங்களுக்குப் பிறகு அதே முதியோர் இல்லத்துக்கு என் நண்பரோடு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணிக்கவாசகம் பிள்ளையின் குரல் கேட்கவில்லை.அவர் உயிரோடு இருந்தாலும் பேசும் நிலையில் இருப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு ஆவல் மிகுதியாக இருந்தாலும் அவரைப் பற்றி விசாரிக்க பயமாக இருந்தது.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்