ஒன்று பட்டால்…

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

ராமலக்ஷ்மி


உள்ளத்தை

உணர்த்துகின்ற

ஒலி வடிவே-

மொழி என்றால்

உலகம்

உய்த்திருக்க

ஒரு வழிதான்

ஒரு மொழிதான்.

அதுவே

அன்பு மொழி.

**

வாழ்க்கைக்கு

வழி காட்டும்

ஒளி விளக்கே-

மதம் என்றால்

வையகத்தை வாழ்விக்க

‘ஒன்றே குலம்

ஒருவனே தேவன் ‘

என்பதுவே

வேதம். ‘

**

மொழிக்குப் பற்பல

ஒலி வகை இருந்தாலும்-

பண்பெனும்

பாதையிலே அம் மொழிப்

பாதங்கள்

பயணிக்கையிலே

பாஷைகளின்

ஓசைகள் கூடப்

பாசமாகி

நேசமாகி-

தேசத்தின்

ஒருமைப் பாட்டைக்

காக்கின்ற

கரங்களாகிப் போகின்றன.

**

மதங்களிலே

இதிகாசங்கள் எடுத்துரைத்த

இந்து மதமும்;

விவிலியம்

கற்பிக்கும்

கருண வடிவாம்

கர்த்தரின் வாழ்வும் போதனையும்;

குர்ஆன்

உரைக்கும்

உயர் நெறிகளும்;

மாற்றானை நேசிக்கவும்-

மனசாட்சிக்கு பயப்படவும்-

மனித நேயம் வளர்க்கவும்-

வலியுறுத்தும்

வழிகாட்டிகளாய்த்தான்

விளங்குகின்றன!

**

சமுத்திரத்தில்

சங்கமமாகும் போது

சகல நதிகளின்

சிறப்புச்

சரித்திரங்களும்

சமத்துவமாகி விடுகின்றன.

ஆர்ப்பரிக்கும்

அலைகளுக்கிடையே-

அந்நதிகளின்

அமுத நீர்

இன்னதென்று

பிரித்தறிந்திட

இயலுமோ ?

**

வார்த்தைகளால்

வர்ணிக்க வாராது-

விவரிக்க விவரிக்க

வியப்பேற்றும்-

வரலாற்றுச் சிறப்புகள்

ஒவ்வொரு மொழிக்கும்-

ஒவ்வொரு மதத்துக்கும்-

உண்டென்றாலும்

இந்திய சரித்திரமெனும்

மகா சமுத்திரத்தில்

சங்கமிக்கையில்

அவற்றினிடையே

பேதம் பார்ப்பது

பேதமையன்றோ ?

**

கடலிலே கலந்திட்ட

மழைத் துளியைக்

கண்டெடுப்பது

எளிய காரியமா ?

அன்புக் கடலிலே

மக்கள்

கலந்து விட்டால்

அவர்களைப்

பிரிக்கத்தான் முடியுமா ?

**

பாஷைகள்

பலவானால் என்ன ?

மதத்தால்

மாறுபட்டால் என்ன ?

பார்க்கின்ற பார்வையிலே

பாசத்தைப் படர விட்டால்

வாழ்கின்ற வாழ்க்கை

வசந்தம் ஆகாதோ ?

தேசத்தில் ஒற்றுமையுணர்வு

தேனாறாய் ஓடாதோ ?

**

தெள்ளூ தமிழும்

தெலுங்கு மொழியும்;

மணக்கும் மலையாளமும்

கவிமிகு கன்னடமும்;

தெற்கே தெவிட்டாது

ஒலித்திருக்க-

வடக்கே வேரூன்றி விட்ட

குஜராத்தியும் மராத்தியும்;

பஞ்சாபியும் பெங்காலியும்;

உருதும் இந்தியும்;

இன்னுமிருக்கும்

இதர மொழி யாவும்-

இந்தியத் தாயின்

இனிய குழந்தைகளே!

இந்துவும் முஸ்லிமும்;

கிறிஸ்துவரும் சீக்கியரும்;

என்றென்றும் உடன் பிறவா

சகோதரர்களே!

**

எந்தத் தாயும்

தன் குழந்தைகள்

ஒன்று பட்டு வாழ்வதை

விரும்பிடல் இயல்பு.

பாரத மாதாவும்

அதற்கில்லை

விதி விலக்கு.

**

நம் போல

வேற்றுமையிலே

ஒற்றுமை கண்டிட-

வேறெரு தேசம்

இனிப் பிறந்துதான்

வர வேண்டும்-என

பெருமிதமாய் பேசிக்

களித்திருந்த

கணங்கள் யாவும்-

இன்று

கனவுக் காட்சிகளோ எனக்

காற்றோடு காற்றாய்

கரைந்து போயின.

இந்தியத் தாயின்

கண்ணீருக்கு

மெளன சாட்சிகளாய்-

மண்ணோடு மண்ணாய்

மறைந்து போயின.

மனம் வலித்தாலும்

மறுக்க முடிகிறதா ?

**

ஆம்;

கணக்கிட்டால்

நாம்

களித்திருந்த கணங்களை

விடவும் மனம்

வலித்திருந்த கணங்களே

அதிகம்.

**

பாபர் மசூதி

விவகாரத்தில்-

தேசமே

திகைத்துத்

திணறியது-

ஒரு நேரம்.

தீர்வே தெரியாத

காவேரிப் பிரச்சனையில்-

இழந்த உயிர்கள்

எவ்வளவு எனக் கேட்டால்-

ஏராளம்.

**

ஆஸ்திரேலிய நாட்டு

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை

இரக்கமின்றி அக்னிக்கு

இரையாக்கியது

இந்தியர்-

என்பது

எத்தனை பெரிய-

அவமானம்.

**

கோவையிலே தொடர்

குண்டு வெடிப்பு;

குஜராத்திலிருந்து

கோவில் கட்ட

கிளம்பியோரை

ரயில் கூண்டோடு

கொளுத்திய கொடுமை;

அக் கொடியவரைப்

பழி வாங்குவதாய்

கூறிக் கொண்டு

அம் மதம் சார்ந்த

அப்பாவியரை- பேக்கரியில்

அவித்தெடுத்த

அவலம்- ஒரு

அநியாயம்.

**

அவர்

தம் மொழியினரே;

ஆயினும்

தம் மதம்

இல்லையென-

அடித்துக் கொள்கிறார்.

அவர்

தம் மதத்தவரே;

ஆயினும்

தம் சாதி

இல்லையென-

வெட்டி வீழ்த்தவும்

விழைகிறார்.

**

இன்னாரின் தொழில்

இதுவென்று அறிய

அன்னாளில் தோன்றியதே

சாதி.

திறமையிருந்தால்

எந்தத் துறையிலும்-

எவரும் பிரகாசிக்க-

வாய்ப்புக்கள்

வரிசை கட்டி

நிற்கின்ற

இந்த

இருபத்தோராம் நூற்றாண்டிலும்-

சாதி எனும் சங்கடத்தைப்

பாரமாய்ச் சுமந்து

திரிய வேண்டுமா ?

**

நீ இந்த இனம்

நான் அந்த இனம்-

என்று

உயர்வு

தாழ்வு பார்ப்பது-

நம்மை நாமே

இழிவு படுத்தல் ஆகாதா ?

தாமிர பரணியில்

கொட்டிய குருதி போதாதா ?

****

‘சுதந்திரம் ‘- என்ற

குறிக்கோளுக்காக

அன்று

ஒன்று பட்டு

நின்றதால்தான்

‘இந்தியா ‘வை

முழுமையாகப்

பெற்றோம்.

இன்று

சிதறி விடுவோமோ-

என்கின்ற

அச்சம் ஒன்றே-

மிச்சமாகி

நிற்கின்றோம்.

**

சுனாமி நம்மை

சூறாவளியைப் போல

சூரையாடிய போது-

மொழி மதம் இனம்

மட்டுமின்றி-

தேசமும் தாண்டிய

மனித நேயம்- பார்த்து

மலைத்துப் போனோமே!

**

அந்த நேயம் கண்டு

நெஞ்சுருகி நின்றவரும்-

‘மனிதம் ‘ கற்ற

மகத்தான நேரமது;

இந்திய இதயங்களிலும்…

ஈரம் முற்றிலுமாய்

வற்றி விடவில்லை- என

நம்பிக்கை

விதைகள்

விழுந்த தருணமது.

**

இயற்கையின்

சீற்றத்தால்-

இழப்புக்கள்

நேர்வது விதி.

மனிதனின்

சீற்றத்துக்கு-

மனிதன்

பலியாவது வலி.

**

வந்து போன சுனாமி

மற்றுமொரு

வரலாற்று வேதனை- எனக்

குறிப்பெழுதி

ஒதுக்கி விடாமல்;

வரும் நாளில்-

கற்றுணர்ந்த மனிதத்தை

கண நேரமும்

மறவாதிருப்போம்.

**

பலி வாங்கும்-

பழி வாங்கும்-

பாவ காரியங்களுக்கு…

பலம் கொடுப்பதில்லை-

படை திரட்டுவதில்லை- என

பத்திரம் எழுதிடுவோம்.

**

விவேகத்தை

வளர்த்துக் கொண்டால்-

விரோத நினைப்புக்கள்

விடை பெறும்;

துவேஷத்தைத்

துடைத்து விட்டால்-

துர் எண்ணங்கள்

தோற்று விடும்;

மாசற்ற மனமே-

பாசம் வளர்க்கும்.

தேசம் தாண்டியும்-

நேசக் கரம் நீட்டும்.

**

நம்

‘மக்கள் சக்தி ‘ கண்டு

மாபெரும் தேசம் யாவும்

மருண்டு-

மலைத்து-

வியந்து- நிற்கின்றன.

நம்

உதவியில்

உயர

உவந்து வருகின்றன;

உதவிய படியே- நம்மையும்

உயர்த்திக் கொள்ள-

உன்னத நேரமிது.

**

இன்று

உலகமே- நம்

ஒவ்வொரு அசைவையும்

கூர்ந்து கவனிக்கிறது.

இழை பிசகினாலும்

இந்தியாவுக்கு

இறங்கு முகமே!

வேண்டாமே அந்த

வேதனை.

கடந்து வந்த சோதனைகள்-

கற்பித்தப் பாடங்கள்-

போதுமே.

**

வரும் நாளில்- இந்தியா

வல்லரசாய்

வளர்ந்திட-

தெளிவோடு

ஒன்று பட்டால்-

சாதனைகள்

சத்தியமாய்

சாத்தியம்;

சிகரத்தை எட்டிடலாம்

சீக்கிரம்!

****

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி