ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

சின்னக்கருப்பன்



நண்பர் ராஜன் குறையில் “இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்” என்ற கட்டுரையை முன்வைத்து சில அவதானங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
காலனியாதிக்கத்தின் உப விளைவுகளாகவும் அதன் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு உருவாகும் சிந்தனைப்போக்குகளின் சமகால ஓட்டங்கள், தொடர்ந்து நம்மை காலனியாதிக்கத்தின் நெடுங்கால விளைவுகளை சிந்திக்க வைக்கின்றன. அது ஒரு பரந்த தளத்தில் மக்களோடு மக்கள் ஊடாடும் ஒரு தொடர் நிகழ்வின் சாதாரணமான பெயர்ச்சொல்லாகவே காலனியாதிக்கமும் இருந்துவிடுகிறது என்ற என் கருத்தை பல முறை காலனியாதிக்க பிரச்சாரத்தின் சமகால விளைவுகள் மறூ பரிசீலனை செய்யவைக்கின்றன. காலனியாதிக்கம் கொண்டுவரும் விளைவுகளை பின்காலனியாதிக்க காலத்தில் புரிந்துகொள்ள காலனியாதிக்கத்துக்கு முந்தைய கலாச்சார கூறுகளும் வரலாற்று உணர்வும் பின் காலனியாதிக்க காலத்திலும் எச்சமாக இருப்பதன் மூலமே சாத்தியமாகும். அப்படிப்பட்ட ஒரு எச்சத்தை இந்திய வரலாறு கொண்டிருப்பதன் காரணமாகவே, காலனியாதிக்கத்தையும் அதன் விளைவுகளையும் நம்மால் பரிசீலித்து பார்க்க இயலுகிறது.
ஆயினும் காலனியாதிக்கம் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிற மனச்சாய்வுகளும், “சரியான அரசியல் பார்வைகளும்” நிர்த்தாட்சண்யமாக நமது முந்திய வரலாற்றை சரியாக கண்கொண்டு பார்க்க அனுமதிப்பதில்லை. எட்வர்ட்ஸ் சையதின் ஓரியண்டலிஸத்தின் விமர்சனப்பார்வையை இங்கே நாம் நினைவுக்கூற வேண்டியுள்ளது. சையதின் ஓரியண்டலிஸத்தின் விமர்சனப் பார்வையே முழுமையான கிழக்கு பார்வையாக இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருப்பாரா என்பதும் அய்யமே. காலனியாதிக்கம் விட்டுச்சென்ற பல மேட்டிமைச் சிந்தனைகளின் ஒரு கூறே ஐரோப்பிய மையப் பார்வை. இது ஐரோப்பிய மையப்பார்வையை மறுப்பவர்களிடமும் இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.
தனிப்பட்ட இருப்பு என்ற தோற்ற உறுதி நவீனக்காலத்தின் விளைவு என்பதே இன்னொரு ஐரோப்பிய மையப்பார்வை. எதனை பார்க்கவிரும்புகிறோமோ அதுமட்டுமே கண்களுக்கு தெரிபடும் என்பதாக, கோவில்கள் கட்டிய சிற்பிகளை போற்றாததை கையில் எடுத்துக்கொண்டு தனிப்பட்ட இருப்பு என்பது இந்தியாவில் இல்லை என்று ம்றுதலிக்கும் அதே நேரத்தில் சங்கப்புலவர்கள் சொந்தப்பெயர் போட்டு சொந்தக்கதையை புலம்பிய கவிதைகளும், அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்று இரங்கி பாடியதும், தனிப்பட்ட இருப்புகள் இல்லையா என்ற கேள்விகளுக்கு மௌனமோ அல்லது அவற்றை பார்க்க விரும்பாத ஒரு சிந்தனைப்போக்கும், தனிப்பட்ட இருப்பு என்பதன் நீண்ட ஐரோப்பிய வரலாறும் என் முன் வைக்கப்படும். உலகளாவிய மானுட வரலாறு என்று ஒன்றும் இல்லை. எது ஐரோப்பாவில் மையக்கருத்தாகவும், கலாச்சார வரலாறாகவும் இருக்குமோ அதனையே உலகெங்கும் பொருத்தி பார்க்கும் ஒரு ஐரோப்பிய மைய கருத்தாக்கத்தின் விளைவுகளே இவைகள். இந்திய தத்துவ வரலாறும், இந்திய கலாச்சார வரலாறும் தனிப்பட்ட இருப்பு பற்றிய எக்ஸிஸ்டென்ஸியலிஸ கேள்விகளை ஒரு முக்கியமானதொரு சிந்தனைப்போக்காக அங்கீகரிக்காமல் இருக்கலாம். அதற்கு அதற்கு தேவையான வரலாறு இல்லாமல் இருக்கலாம். ஒரு நாட்டில் ஒரு காலகட்டத்தில் எந்த தத்துவங்கள் பிரபலம் பெறுகின்றன என்பதும், அதன் காரணிகள் என்பதும் அதன் வரலாறையும் cathartic அனுபங்களை பொறுத்தது. காட்டில் வேட்டையாடி குழுவாக உண்ணும் ஒரு பழங்குடி சேர்ந்தவனிடம், ஐரொப்பியன் சென்று தனிப்பட்ட இருப்பு என்பது தான் இன்று அங்கீகரிக்கப்பட்ட கருத்தாக்கம், அது நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் மீது திணிக்கப்படும் என்று சொல்வது போன்றது. அதனை விமர்சிக்கும் விமர்சகன், ஐரோப்பியனிடம், தனிப்பட்ட இருப்பு அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான் ஆனால், அது தீயது என்று சொல்வது போன்ற ஐரோப்பிய மையவாதமே ராஜன் குறையிடம் காண்கிறேன்.
தோற்ற உறுதிகளின் சுகத்தில் மறதி கொள்ளும் மனிதப் பிரக்ஞையே திறப்பின் சுட்டுதல்களை இழக்கின்றது என்று சரியாகவே இதனை இனம் கண்டிருக்கிறார் ராஜன் குறை. பிரச்னை அவர் அதனை தனக்குத்தானே பிரயோகித்துக்கொள்ள மறந்துவிடுகிறார்.
மீண்டும் வார்த்தைகளிலும் ஐரோப்பிய மையவாதத்திலும் சிக்கிக்கொள்ளும் தவறை “வெற்றுக்குறியான பணத்தை ஒயாமல் பெருக்கலாம் எனக் கண்டதன் மூலம் இருப்பின் மீதான மட்டற்ற ஆக்கிரமிப்பை துவக்கியது முதலீட்டியம்.” என்ற வார்த்தைகளிலும் காணலாம். முதலீட்டியம் என்பது இத்தனாம் தேதி இந்த நாள் உருவானது என்ற ஐரோப்பிய மைய சிந்தனை, பொருள் பணம் பொருள் என்று இருந்ததை பணம் பொருள் பணம் என்று மாற்றியது என்று எழுதிக்கொண்டு, அதனை கண்டிபிடித்தது நாந்தான் என்ற விமர்சனத்தோடு தானே உருவாக்கிகொண்ட பெருமையையும் சேர்த்துக்கொள்கிறது. (நான் கெட்டவன் என்று ஆண்டிஹீரோ சினிமாவில் சொல்வது போல) . எப்போது குறி என்பது உருவானதோ அன்றே பணம் பொருள் பணமும் உருவாகிவிட்டது என்பதை புரிந்துகொள்ள மறுக்கும், அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கும் ஐரோப்பியமையவாதத்தின் நீட்சியே. அவ்வாறு ஒப்புக்கொள்ளும்போது, காலனியாதிக்கம் என்பது தொடர்ந்த மனித வரலாற்றில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரு விஷயமே அன்றி, ஐரோப்பா உருவாக்கியது அல்ல என்பதையும் புரிந்துகொள்வார்கள். கருத்துருவாக்க ரீதியில் ஹான் சீனர்கள் சீனாவை ஆக்கிரமித்ததும், அங்கு அங்கங்கே சிதறிக்கிடக்கும் ஹான் சைனீஸ் அல்லாதவர்கள் ஹான் சைனீஸின் காலனியாதிக்கத்தின் கீழ் வந்ததும், ஸ்வாஹிலி பேசுபவர்கள் ஸ்வாஹிலி பேசாதவர்களை தீவுகளாக ஆக்கியதும் நம் மனித வரலாற்றின் அங்கங்களே. ராஜராஜன் ஜாவ சுமத்ராவில் தென்னிந்திய கலாச்சாரத்தை புகுத்தியதும் காலனியாதிக்கமே. அதன் தூண்டுதலாக இருந்ததும் வியாபார நோக்கமே என்பது நம் கண்கள் முன்னால் இல்லாமல் போயிருக்கின்றன். அறைகுறையாய் கிடைக்கும் வரலாற்றுதுகள்கள் வரலாறு இல்லை என்பதன் நிரூபணம் அல்ல.
சிறுகோவிலின் முன்னே பெருங்கோவில்கள் பிம்பப்பெருக்கமே. அது அன்றைய மனிதனை முழுக்கடித்திருக்கும்தான். ஆனால், மனிதனின் தொடர்ந்த வரலாற்றில் இவற்றையெல்லாம் கடந்து மிக நுண்ணிய, அதே நேரத்தில் மிகவும் சிக்கல் பொருந்திய கலாச்சார, பண்பாட்டு தளங்களை மனிதன் விரித்துக்கொண்டேதான் செல்கிறான். அதே போல, இன்று நடக்கும் விஷய வெள்ளத்தையும் அவன் நீந்துவான், மாறுவான்.
மானுடத்தின் சமகால முரண்கள் பெரும்பாலும் அகவயமானவையே, அதுவும் வரலாறுக்கும் உண்மைக்கும் பொருந்தாத பிம்பங்களை தகர்ப்பதையே நம் முன் வைக்கின்றன என்பதன் இன்னொரு நிரூபணம் ராஜன் குறையின் கட்டுரை.
—-

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்