ஏமாளிகள்

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

ஆர்.அம்பலவாணன்


ஜுன் மாதம் 12ந் தேதி சனிக்கிழமை மாலை. டி வி யில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தேன். செல்போன் இசைத்தது.
“ஹலோ!”
“சார், தனபால் பேசறேன். ’ஜாய்’ ப்ராஜக்டில் இரண்டாவது தளம் கம்பி வேலை நாளை முடிந்து விடும். திங்கட்கிழமை காங்க்ரீட் போட ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். நீங்கள் நாளைக்கு வந்து செக் செய்ய முடியுமா?”

தனபால் பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில்லில் கட்டிட காண்ட்ராக்டர். நீண்ட நாட்களாகப் பழக்கம்.

“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சே. பர்சனல் வேலை நிறைய இருக்கு. திங்கட்கிழமை காலை சீக்கிரமாகக் கிளம்பி 10-மணிக்குள் ஆரோவில் வந்துவிடுகிறேன். காங்க்ரீட் வேலை நடக்கும்போதே செக் செய்து விடலாம்”

“சரி சார். திங்கட்கிழமை காலை கட்டாயம் எதிர்பார்க்கிறேன். வேலை ஆட்களை ரெடி செய்து விடுகிறேன்”

பணி ஓய்வுக்குப்பின் தனியார் கம்பெனி ஒன்றில் கட்டிட டிசைன் கன்சல்டண்டாக வேலை பார்துக்கொண்டிருக்கிறேன். அலுவலகம் போய்வர, மற்றும் கட்டுமானப்பணி இடங்களைப்பார்வை இட கார் ஒன்று ட்ரைவருடன் கொடுத்திருக்கிறார்கள். ஆரோவில் வேலை இந்தக் கம்பெனியைச்சார்ந்தது அல்ல. எனவே, கம்பெனி டைரக்டருடன் பேசி காரை உபயோகித்துக்கொள்ள அனுமதி பெற்றேன். அலுவலக மேலாளருக்கும் தகவல் சொன்னேன். ட்ரைவர்
தாமஸை செல் போனில் அழைத்தேன். அவர் வழக்கமாக அலுவலகம் செல்ல திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மேல்தான் எங்கள் வீட்டிற்கு வருவார்.

“தாமஸ், திங்கட்கிழமை நான் ஆரோவில் போகவேண்டும். காலை ஏழு மணிக்கு வந்து விடுஙகள். கஷ்டம் ஒன்றுமில்லையே?”

“சரி சார். போகலாம். ஆனால் வண்டில பெட்ரோல் குறைவாக இருக்கும் போல”
”வழக்கம் போல பாண்டிச்சேரில போட்டுக்கலாம். அது வரைக்கும் போகலாம்ல?”
”போகும் சார்.”
“பத்து மணிக்கெல்லாம் அங்கே இருக்கணும். டீ குடித்த உடன் கிளம்பலாம். வழியில் டிபன் சாப்பிட்டுக்கொள்ளலாம்”

“சரி சார்.”
திங்கட்கிழமை விடியற்காலை, ஆறேமுக்கால் மணிக்கெல்லாம் கிளம்ப தயாராக இருந்தேன். தாமஸ் வந்து நிற்கும்போது ஏழேகால் மணி.

“சார், கொஞ்சம் லேட்டாயிடுச்சு”

“பரவாயில்லை. ட்ராபிக் அதிகமாகுமுன் சிட்டி எல்லையைக் கடந்து விட்டால் நல்லது”

தியாகராய நகரின் குறுக்கே கடந்து, சைதாப்பேட்டை, ம்த்திய கைலாஷ், டைடல் பார்க், திருவான்மியூர் தாண்டி கிழக்குக் கடற்கரை சாலையில் கார் ஓடும் போது மணி எட்டு. உத்தண்டி டோல் கேட்டில் எட்டரை.

எண்பத்தைந்து ரூபாய் சுங்கம் கொடுத்து
“அப் அண்ட் டௌன் பாண்டி குடுங்க”
கூண்டுக்காரர் ப்ரிண்ட் அவுட் தந்தார்.
“நியூஸ் பேப்பர் தருவீங்களே?”
“தீந்து போச்சுங்க”
இரண்டு லேன் மட்டுமே உள்ள சுங்கச்சாலை. மத்தியில் மஞ்சள் கோடு போட்டு நன்றாகப்பராமரிக்கப்படும் தரமான சாலை. இருந்தாலும் ரூ85 அதிகம்தான். 80 என்று எழுதப்பட்ட போர்டுகள் வேகத்தின் அளவைக்காட்டின.. எண்பதைத்தொடுமுன்னரே ‘விபத்துகள் நிகழும் இடம். கவனமாகச்செல்லவும்’ என்று எழுதப்பட்ட தடைகள்.

மாமல்லபுரத்தை தாண்டி புதுப்பட்டிணத்தில் நிறுத்தி டிபன் சாப்பிட்டோம். மணி ஒன்பதரை.
செல்லில் தனபால் கூப்பிட்டார்.
“புதுப்பட்டிணம் தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். எப்படியும் இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகி விடும். காங்க்ரீட் ஆரம்பித்து சந்தேகம் இல்லாத இடஙகளில் போடுங்கள். மற்ற இடஙகளை நான் வந்து செக் செய்த பின் போடலாம்”
“சரி சார்.”
சிறிது தூரம் சென்றிருப்போம். எத்ரில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த
பையன் கையை வேகமாக அசைத்து
“வண்டியை நிறுத்துங்க. ஏதோ ஆக்சிடெண்ட்டாம். கல் வீசி கண்ணாடியெல்லாம் உடைக்கிறாங்க” என்றான்.
கார் ஓரங்கட்டப்பட்டது. தாமஸ் இறங்கிப்போய் விசாரித்து வந்தார்.

“சார், யாரோ மோட்டார் சைக்கிளில் போன பையன் பள்ளிக்கூடம் போன ஒரு பெண் சாலையைக் கடக்கும்போது மோதி விட்டானாம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இம்மாதிரி விபத்து நடந்ததம். போலீஸ் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதனால் கிராமத்து மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். பெரிய கும்பல் சார். ஏதாவது மாற்று வழியில் செல்லலாமா?”

“எனக்குத் தெரிந்து அப்படி ஒன்றும் இல்லை. காத்திருந்து பார்ப்போம்”

அரை மணி, ஒரு மணி என்று நேரம் கடந்து கொண்டிருந்தது.

“தனபால், புதுப்பட்டிணம் தாண்டி ஒரு இடத்தில் சாலை மறியலில் மாட்டிக்கொண்டிருக்கிறோம். வருவதற்கு நேரமாகும்போல் இருக்கிறது.”

போலீஸ் வான்கள் கடந்து சென்றன. பேச்சு வார்த்தை நடந்து மறியல் நீக்கிக்கொள்ளப்பட்டது. வண்டிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன. மணி 11-15. ”சந்தோஷ” செய்தியை தனபாலிடம் தெரிவித்தேன்.
பாண்டிச்சேரி எல்லையைக்கடந்தவுடன் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ஒன்றில் தேவையான பெட்ரோல் போட்டுக்கொண்டோம்.
(தமிழ் நாட்டைவிட லிட்டருக்கு ஐந்து ரூபாய்க்குமேல் விலை குறைவு)

ஆரோவில் போய் இறங்கும்போது மணி 12-45.

”சார், வாங்க! ரொம்ப பேஜாராப்போச்சா சார்? சோலார் கிச்சனில் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு சைட்டிற்குப்போகலாம்”

“காங்க்ரீட் நடந்து கொண்டிருக்கிறதா?”

“இல்ல சார். நீங்க பார்த்த பிறகு ஆரம்பிக்கலாம்”

மதியம் இரண்டு மணிக்கு சாரத்தில் ஏறி கம்பி கட்டிய இடங்களைச்சரி பார்த்தேன். தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு காங்க்ரீட் போடும் வேலை தொடங்கியது. மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்குள் முடிய வேண்டிய வேலை ஆறு மணியைத்தாண்டி நடந்து கொண்டிருந்தது. என்னுடைய காலந்தாழ்த்தலே காரணம்.

“சார், நீங்க கிளம்புங்க. காங்க்ரீட் முடிய ராத்திரி பத்து மணி ஆய்டும். நீங்க வர லேட்டாவுதுன்னு தெரிஞ்சதுமே லைட் எல்லாம் ஏற்பாடு செய்து விட்டேன். இப்ப கிளம்பினாத்தான் நீங்கள் போய்ச்சேர பத்து மணி ஆய்டும்”

திரும்பவும் சென்னை பயணம். சாலை மறியல் நடந்த இடத்தில் பாதி சாலையைத்தடுத்து தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இது அநேகமாக ஒன்பது அல்லது பத்தாவது தடுப்பாக இருக்கலாம். மீண்டும் உத்தண்டியைக் கடக்கும்போது மணி ஒன்பது. கூண்டுக்காரர் சீட்டை வாங்கிப்பார்த்து குறுக்கே கோட்டைக்கிழித்து திருப்பிக்கொடுத்தார்.

“சார், காலையில் சாலை மறியல் நடந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? டோல் தொகையில் கழிவு ஏதேனும் உண்டா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் பின்னாடி வண்டிகள் காத்திருப்பது தெரியவில்லை? நகருங்கள்” கைகாட்டி தூக்கி நின்றிருந்தது. நகர்ந்தோம்.
சரியான பைத்தியம் என்று நினைத்திருப்பார்.

இரவு பத்து மணி வாக்கில் வீடு சேர்ந்தவுடன் தனபாலுக்குப் போன் செய்தேன்.

“இப்போதுதான் வேலை முடிந்தது. ஓவர் டைம் என்பதால் ஒரு நாள் கூலி அதிகம் கொடுக்க வெண்டி வரும். பரவயில்லை சார். வேலை நல்லபடியாக முடிந்துவிட்டது”

கணக்கு பார்த்தேன். தோரயமாக ரூ3500 அதிகச்செலவு செய்திருப்பார். மனம் உறுத்தியது. என்னால்தானே இந்த அதிகச்செலவு.

கன்சல்டேஷன் பில் அனுப்ப, கம்ப்யூட்டரிலிருந்த பழைய பில்லை எடிட் செய்தபோது முதலில் ஈசிஆர் டோல் ரூ85ஐ டெலிட் செய்தேன். கொஞ்ச யோசனைக்குப்பின்னால் ரூ1500ஐ கன்சல்டன்சி சார்ஜிலிருந்து குறைத்தேன். ப்ரிண்ட் அவுட் செய்து அனுப்பினேன். மன உறுத்தல் குறைந்த மாதிரி இருந்தது.

சில நாட்கள் கழித்து நண்பரிடம் இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
அவர் சொன்னார் “ ஈசிஆர், வளைவுகள் அத்கம் உள்ள சாலை. ட்ராபிக் பல மடங்கு அதிகரித்து விட்டது. அதுவும் மிக்சட் ட்ராபிக். அதனால் தினமும் விபத்துகள். தடுப்புகளை அதிகரிதுக்கொண்டே போவதால் எந்த பயனும் கிடையாது. இரண்டே லேன் உள்ள அதற்கு சுங்கச்சாலை என்ற தகுதியே கிடையாது. ஆனாலும் சுங்க வசூலை நிறுத்த மாட்டான். வசூலில் பங்கு உயர் மட்டம் வரை செல்கிறதாம். ரயில் போக்கு வரத்தைப் பாருங்கள். சூப்ப்ர் பாஸ்ட் என்று அதிகக் கட்டணம் வசூல் செய்கிறான். மணிக்கு ஐம்பது, ஐம்பத்தைந்து கிலோமீட்டர் வேகம் இந்தக்காலத்தில் சூப்பர் பாஸ்டா? மேலும் இந்த சூப்பர் பாஸ்டுகள் பெரும்பாலும் குறித்த நேரத்திற்கு வந்தது கிடையாது. எப்போதாவது சூப்பர் பாஸ்ட் கட்டணத்தைத் திருப்பித்தந்தது உண்டா? சிட்டி பஸ் போக்கு வரத்தைப் பாருங்கள். கட்டணத்தை அதிகரிக்க வித விதமாகப் பேர் வைக்கிறார்கள். ஆடு, மாடுகள் போல அடைந்து நின்று கொண்டே போவதில் என்ன “சொகுசு”? அரசே, மக்களை வணிகக் காரணங்களைக் காட்டி ஏமாற்றுகிறது. உண்மையில் பார்த்தால் ஊழல்தான் அடிப்படைக் காரணம். இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் நீடித்த, நிலைத்த முன்னேற்றம் கானல் நீர்தான்.”

Series Navigation

ஆர்.அம்பலவாணன்

ஆர்.அம்பலவாணன்