புதியமாதவி, மும்பை
எஸ்தர் உடம்பு அனலாகக் கொதித்தது. டவுண் டாக்டரிடம் போய் ரத்தமெல்லாம் சோதித்து பார்த்தாச்சு. அவரு எழுதிக்கொடுத்த மருந்துகளை வாஙகி நேரம் தவறாமல் கொடுத்தாகிவிட்டது. காய்ச்சல் மட்டும் விட்டபாடில்லை. அடுப்பில் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் கங்கு போல அவள் உடல் தகித்துக் கொண்டிருந்தது. அவள் கண்கள் அமைதியாக இருந்தன. அதிலிருந்த குறுகுறுப்பு காணாமல் போய்விட்டது. ஃபாதர் ஆசிர்வாதம் வீட்டுக்கு வந்து ஜெபம் செய்துவிட்டுப் போனார்.
*பிள்ளை எங்கேயோ பயந்துப் போயிருக்கா… *நோய்வந்தா நாய்க்கும் பாக்கணும் பேய்க்கும் பாக்கனும் தெரிஞ்சுக்கா *சைத்தான் செய்யற வேலைதான் இது… *கீழத்தெரு வழியா பிள்ளைய அனுப்பாதேனு எத்தனைத் தடவை சொல்லியாச்சு.. காய்ச்சக்காரிய பார்க்கவந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களையும் தெரியாதப் பேய்க்கதைகளையும் சொல்லிவிட்டுப் போனார்கள்.
பாட்டி மாதாக்கோவிலுக்குப் போய் கழுத்தில் கட்டிக்கொள்ளும் கயிறு வாங்கிவந்துக் கட்டினாள். கறுப்புநிறக்கயிறு. அதில் கறுப்பும் வெள்ளையும் கலந்த சிலுவைத் தொங்கிக்கொண்டிருந்தது.அந்தக் கறுப்புக் கயிறைக் கைகளால் பிடித்துக் கொண்டே போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்கினாள் எஸ்தர்.
அந்தக் கறுப்புக்கயிறைத் தொடும் போதெல்லாம் உடம்பு சிலிர்த்துக் கொள்வதை அவளால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்தக் கறுப்புநிறக்கயிறு அப்படியே நீண்ட கைகளாக மாறுகிறது. அவள் முகத்தை உள்ளங்கையில் ஏந்திப் பிடிக்கிறது. அவள் சிறுமுலைகளை தன் தடித்த உதடுகளால் ஈரமாக்கி அப்படியே மயிலிறகால் தடவிக்கொடுப்பது போல தடவிக்கொடுக்கிறது. ஈரம் படப் பட அவள் சிறுமுலைகள் பெரிதாகி பெரிதாகி மலைமுகடுகளாக மாறிவிடுகின்றன. அந்த மலையில் எல்லா மரங்களும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. வேர்கள் வெளியில் தெரிகிறது கம்பீரமாக… இலைகள் பூமிக்கடியில் புதைந்துக்கிடக்கின்றன. பூவின் வாசம் வேர்களிலிருந்து .. அப்படியே மனசைக் கிறுகிறுக்கவைக்கிறது. கறுப்பு யானைகள் அந்த மலைமீது கூட்டம் கூட்டமாக … யானையின் தும்பிக்கை வேர்களை விலக்கி இலைகளைத் தோண்டி எடுக்கிறது. ஒவ்வொரு இலையிலும் யானையின் உயிர்த்துளி காடு முழுக்க யானையின் தந்தங்கள்.
..அவள் கூந்தல் விரிந்து கிடக்கிறது. கூந்தலுக்குள் முகம்புதைத்த சூடான மூச்சுக்காற்று அவள் மேனிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது. பிள்ளைக்கு காச்சல் விடமாட்டேங்குதே… என்ன செய்யப்போறேன்.. கவலையுடன் பாட்டியும் அவள் அம்மாவும் அவளருகில் உட்கார்ந்து இருந்தார்கள்.
**
எஸ்தருக்கு ஏன் கறுப்பாக இருப்பவர்களைக் கண்டால் ரொம்பவும் பிடித்துப் போய்விடுகிறது.. தெரியவில்லை. நாவல் பழத்தின் நிறமும் மாங்கொழுந்தின் நிறமும் தான் மனிதர்களுக்கு அழகு என்பது அவள் எண்ணம். புத்தரின் சிலைகளைக் கூட மினுமினுக்கும் தங்கத்தில் டி.வி.யில் பார்த்தப்போது அவளுக்குப் பிடிக்கவில்லை. வெளு வெளுனு இருக்கும் மனிதர்களைப் பார்த்தால் அவளுக்கு வெள்ளை எலியின் நினைவுதான் வரும். கறுப்பாக இருக்கும் காகத்தையும் மைனாவையுன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எப்போதும் கறுப்புகலரில் சுடிதார் போடுவது சட்டைப்போடுவது, கறுப்பு பாடரில் இருக்கும் புடவைகள்.. கரிய மேகக்கூட்டம், அது என்னவோ தெரியவில்லை..மஞ்சள் நிறமாகட்டும், சிவப்பு நிறமாகட்டும் ஆரஞ்சு நிறமாகட்டும் ஊதாநிறமாகட்டும் கறுப்பு நிறத்துடன் கலந்தோ அருகருகில் இருந்தாலோதான் அந்த நிறங்களுக்கும் கூட ஒரு தூக்கலான கலர் கிடைக்கிறது என்று சொல்லுவாள். அதுமட்டுமல்ல கறுப்பு நிறம் தான் கம்பீரமாக இருப்பதாக அவளுக்கு நினைப்புண்டு. யானையின் கம்பீரமே அதன் உருவமல்ல… அதோட கறுப்பு நிறமாக்கும் என்று சொல்லுவாள். அவள் சொல்வதைக் கேட்டப்பின் நமக்கும் அதுதான் சரியென தோன்றும். யானை கறுப்பாக இல்லாமல் சிவப்பாகவோ மஞ்சளாகவோ செம்மண் நிறத்திலோ வெள்ளையாகவோ இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் கற்பனைச் செய்யும் போதுதான் ..’ஆமாம்.. எஸ்தர் சொல்றது சரிதான். யானையின் கம்பீரமே அதோட கறுப்பு நிறம் தான்!” அப்படினு நமக்கும் புரியும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கறப்போ வாரம் தவறாமல் சர்ச்சுக்குப் போவாள். சர்ச்சுக்குப் போகும் போது ஃபாதர் வெள்ளை அங்கியில் இருப்பது கூட அவளுக்குப் பிடிக்காது. ஃபாதருக்கு கறுப்பு அங்கியை மாட்டி விட்டு அப்புறம்தான் அவர் சொல்ற வேதாகம வசனங்களுக்குள் நுழைவாள். அவள் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறாள்… ஏசுவின் நிறம் கறுப்பு என்று. என்றாலும் என்னவோ அவளுக்கு அதில் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. கறுப்பான ஏசுவை சிலுவையில் முள் கீரிடத்துடனும் குருதி வழிய அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கறுப்புனா வீரமாக்கும்.. பாவமா கண்களில் இரக்கம் வழிய ஒரு முகத்தைக் கறுப்பாக பார்ப்பதை விட இப்படிப் பார்ப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் சர்ச்சுக்குப் போயிட்டு வரும் போதெல்லாம் கீழத்தெருவைக் கடந்து தான் வரவேண்டும். தெருக்கோடியில் இருக்கும் கருப்பண்ணசாமியை அவள் கண்கள் திருட்டுத்தனமாக பார்த்து ரசித்துக் கொண்டே வரும். என்ன கறுப்பு நிறம். அப்படியே குழைத்து எடுத்து கண்ணுக்குள் மையாக இட்டுக்கொள்கிற மாதிரி ஒரு கறுப்பு. அகன்ற மார்பு. அவள் முகம் புதைத்தாள் அப்படியே அவள் முகம் மார்புக்குள் கரைந்துவிடும். தடித்த மேலுதடு. அதற்கு மேல் முறுக்கிவிடப்பட்டிருக்கும் மீசை. முன்பக்கம் துருத்திக் கொண்டிருக்காமல் அதே சமயம் நனைந்த துணியைப் போல உடம்பில் ஓட்டிக் கொண்டிருக்காமல்… வயிறு. காலைத் தரையில் ஊன்றி நிற்கும் கோலத்தில் தொடையில் தெறித்து நிற்கும் சதைப்பிடிப்பு. எம்மடியோவ்….. தூரத்தில் நின்று பார்க்கும் போதே இத்தனைக் கம்பீரத்துடன் இருக்கும் கருப்பண்ணசாமியைப் பக்கத்தில் போய் தொட்டுப் பார்த்தால்…
பள்ளிக்கூடத்திலிருந்து வரும் போதும் போகும் போதும் கீழத்தெருவைக் கடந்துதான் வரவேண்டும். அம்மா தான் அடிக்கடி இந்துக்கோவில்கள் பக்கமே போயிடாதே, சைத்தான் இருக்கு, பாவம் ப்டிக்கும் என்று சொல்லி அனுப்புவாள். அப்புறம் ஒருநாள் அம்மா அவளிடம் ரொம்பவும் ரகசியமா சொன்னாள். வீட்டுக்கு விலக்கம் வந்திருக்கும் போது கருப்பண்ணசாமி கோவில் பக்கதிலேயெ போயிடாதே, அது ப்டிச்சுக்கும், அதுவும் கன்னி கழியாதப் பொண்ணுகனா அதுவிடாதாம்… அம்மா சொல்லச் சொல்ல அவளுக்கு ரொம்பவே சிரிப்பு வந்துவிட்டது. வீட்டுவிலக்கம் வந்து 3 வருடம் ஆகப்போகிறது. எத்தனைத் தடவை அந்த நாட்களிலும் கருப்பண்ணசாமி பக்கத்தில் உட்கார்ந்து தாயம் விளையாடி இருக்கிறோம், பாண்டி விளையாடி இருக்கிறோம்.. அம்மாவும் அம்மாவின் கதைகளும்…
கீழத்தெரு பசங்க படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் விளையாட்டில் அவர்கள் தான் எப்பவுமே பர்ஸ்ட். அது என்னவோ கீழத்தெரு பசங்க எல்லோருமே கறுப்புதான். அதிலும் மாசானம் ரொம்பவே கறுப்பு. அதனாலேயே பொம்பளைப் பிள்ளைங்க அவனைக் கறுப்பசாமினு கூப்பிடுவாங்க. அதுக்காக அவன் என்னைக்குமே கோவிச்சுக்கிட்டதில்லே. எப்பவும் பளீர்னு வெள்ளைப்பல் தெரிய அவன் சிரிக்கிறப்போ கறுத்த வானத்தில் மல்லிகைப்பூவை வளைவா அடுக்கி வச்ச மாதிரி இருக்கும். படிப்பில் அவனும் சுமார்தான். ஸ்கூல் ஆண்டுவிழாவில் எஸ்தர் வெள்ளை உடுப்பில் கையில் ஸ்டாரை வைத்துக் கொண்டு தேவதை வேடத்தில் ஏசு பிறந்தக் கதையில் நடித்தாள். மாசானம் சாமி வேடத்தில் மாறுவேடப்போட்டியில் வந்து ஆடினான். கருப்பண்ணசாமி அணியும் கறுப்பும் சிவப்பும் கலந்து தைத்த கால்சராய். இடுப்பில் மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. கைவிரல்களை விரித்து வைத்திருப்பது மாதிரி தலையில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது அவன் தொப்பி. இடுப்பில் கட்டியிருந்த மணிகள் ஒலிக்க அவன் ஆடிய ஆட்டம் , அவன் காலசைவு, முகத்தில் தெரிந்த கம்பீரம், வெள்ளைச்சிரிப்பு எல்லாமாக சேர்ந்து அவனுக்கு நிறைய கைதட்டல்களை வாங்கிக்கொடுத்தது. ஆண்டுவிழாவுக்கு வந்திருந்த கலைக்டர் அவன் ஆடிய ஆட்டத்தை ரொம்பவும் புகழ்ந்துப் பேசினார், மனிதனின் இயல்பான வாழ்க்கையும் ஆசாபாசங்களும் உணர்வுகளும் நம் தொன்மக்கடவுளின் அடையாளங்களில் இருப்பதாக என்னென்னவோ பேசினார். எஸ்தருக்கு அவருடைய பேச்சின் சாரம்சம் முழுவதும் புரியாவிட்டாலும் கலைக்டர் கருப்பண்ணசாமியை விலக்கி வைக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்துவிட்டது. அவளுக்கு கலைக்டரையும் பிடித்திருந்தது. அவர் பேசியதும் அவரும் கறுப்பாக இருந்ததும்…
**
ஒவ்வொரு நாளும் விடியல் அவளுக்கு எரிச்சல் தந்தது. வெளிச்சம் அவளுக்கு என்னவோ பிடிக்கவில்லை. கறுப்புநிறத்தைப் பூசிக்கொண்டு வரும் இரவுதான் அவளுக்கு கிளர்ச்சி ஊட்டியது. மையிருட்டுதான் கருப்பண்ணசாமி அவளருகில் இருக்கும் அனுபவத்தை விதம் விதமாக ஒவ்வொரு இரவிலும் புதிது புதிதாக அவளிடம் வாசித்தது. இருட்டுதான் கம்பீரமாக எல்லா கதவுகளையும் தாண்டிக்கொண்டு வந்து அப்படியே அவளைக் கட்டிலுடன் சேர்த்து வானத்தில் தூக்கிக்கொண்டு பறந்தது. அவள் உடல் கனம் குறைந்து குறைந்து மெல்லிய துகிலாக வானத்தில் அவள் விரிந்து கிடந்தாள். கரிய மேகங்கள் கச்சிதமாக அவள் மேனியில் கவிந்து விழுந்தன. இடி இடித்த பின்னிரவில் ஒவ்வொரு உயிர்த்துளியும் பூமி மடியில் விழுந்து…. பூமி எங்கும் உயிர்த்துளிகளின் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லா உயிர்களிலும் கருப்பண்ணசாமியின் அடையாளம் மயிர்க்கால்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு மட்டுமே அந்த அடையாளத்தை இருட்டு ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு எழுத்தாக எழுதிக்கொண்டிருக்கிறது. எழுத்துகளுக்குள் இருப்பது என்னவென்று அவளுக்கு இப்போதுதான் புரிகிறது. கட்டுக்கடங்காத காமத்தைப் போல ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் கட்டுக்கடங்காத அனுபவங்கள் காலம் தோறும் காலம் தோறும் யுகம் யுகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன..
**
எஸ்தர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று அவள் அம்மா கையில் வேதாகமத்துடன் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு நடக்கிறாள். புனிதமேரி, கன்னிமாதா கையில் குழந்தை ஏசுவைச் சுமந்து கொண்டு காலம் காலமாக தனியாகத்தான் நிற்கிறாள். கருப்பண்ணசாமி இடுப்பு மணிகள் ஒலிக்க ஆடிக்கொண்டிருக்கிறார்.
- ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு
- கோநா கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4
- அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
- வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்
- பல்வலி என்பது யாதெனில்…!
- திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்
- மக்கள் கலை இலக்கிய விழா
- பந்தயங்கள்
- சிலை பேசினால்
- மௌனம்
- முதிர் இளைஞா…
- ரசிப்பு
- தொலைவின் தூரம்
- ஆங் சான் சூ கீ
- அருவி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
- பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
- மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!
- சத்யானந்தன் கவிதைகள்
- இன்னுமொரு முறை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- மீண்டுமொரு மழைக்காலம்
- தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..
- பேச மறந்த குறிப்புகள்
- ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.
- இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்
- பரிமளவல்லி 25. திருத்தங்கள்
- முள்பாதை 60
- பூவா…தலையா…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9
- எஸ்தரும் கருப்பண்ணசாமியும்